நரிக்குறவர்களின்
இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம்
இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள்,
வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் தந்துள்ளார் புதுவை
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவி கரசூர் பத்மபாரதி அவர்கள்.
இவர் புதுவை பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழிற்புலத்தில் முதுகலை மற்றும்
இளமுனைவர் பட்டங்கள் பெற்றவர்.
இந்நூலுக்கு கிட்டத்தட்ட
எட்டுப்பக்கங்களுக்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் (மானிடவியல் துறை
– புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி)
அணிந்துரையிலிருந்து
ஒரு பத்தி…
\\இந்திய ஆரிய மொழிச் சமூகமான நரிக்குறவர்
இந்தியா முழுமைக்கும் புலம்பெயர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ள அசைவியக்கத்தை இந்த
இனவரைவியல் முனைப்புடன் எடுத்துரைக்கிறது. மேலும் கருத்தூன்றி நோக்குவோமானால் ஒரு சமூகத்தையும்
பண்பாட்டையும் நுட்பதிட்பத்துடன் அறிய விழைவோருக்கும் இந்நூல் ஓர் அரிய கைவிளக்காக
அமைகிறது. பழமைச் சமூகங்களின் வாழ்வு முறையும், சமூக, பொருளாதார, சமய, கலை, அறிவியல்
முறைகள் இத்துணைக் கண்டத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் எவ்வாறான தன்மைகளைக் கொண்டிருக்கின்றன
என்னும் புரிதலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் ‘நரிக்குறவர் இனவரைவியல்’ அமைகிறது\\
நரிக்குறவர் இனவரைவியல்
குறித்த தன் ஆய்வுகளின் போது தனக்கேற்பட்ட அனுபவங்களை கீழ்க்கண்டவாறு முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் கரசூர் பத்மபாரதி அவர்கள்.
\\தொடக்கத்தில்
பணம், பொருள், கடன் வசதி என எதையாவது எதிர்பார்த்து தரவுகளைக் கூற ஆரம்பித்த நரிக்குறவர்கள்
பழகிய உடன் உறவுக்காரர்களைப் போல் பாசத்துடனும் பண்புடனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி
மணிக்கணக்கில் அமர்ந்து என்னுடன் பேசினார்கள். செய்திகளைத் தந்தார்கள். வேட்டையாடினால்தான்
அன்றைய பிழைப்பு என்றாலும், நான் அவர்களுடைய குடியிருப்புப் பகுதிக்குச் சென்றுவிட்டால்
படிக்கிற பெண் நம்மைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறதே என்று எண்ணி தங்கள் வருமானத்தைக்
கூட ஒரு பொருட்டாகக் கருதாது என்னுடன் அமர்ந்து பலமணி நேரம் பேசினர்.
எனக்கும் அவர்களுடைய
நாகரிகமற்ற நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவை குமட்டலைத் தந்து வாந்தியெடுக்கும்
உணர்வை ஏற்படுத்தியது என்றாலும் சகிப்புத்தன்மை வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்தேன்.
அதை எனக்குக் கற்றுத்தந்தவர்கள் நரிக்குறவர்கள். மேலும் சுறுசுறுப்பு, கடின உழைப்பு,
கூடி மகிழும் இயல்பு, பொறுமை, இருக்கும் சூழலில் இன்புற்று வாழும் நிலை போன்றன பிடித்தமான
செயல்கள். கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு மிருகங்களைப் பலியிட்டு பச்சை இரத்தம்
குடிப்பது அச்சத்தை உண்டாக்கும் செயல்கள். பண்பாட்டுச் சார்புடைமை (cultural
relativism) படித்ததால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு களப்பணி செய்தேன்.\\
இந்நூலில் பரவலாகக்
காணப்படும் பல தகவல்கள் நரிக்குறவர் வாழ்க்கை பற்றிய ஒரு முழுமையானக் கண்ணோட்டத்தை
நமக்கு வழங்கக்கூடியவை எனலாம். நாம் முற்றிலும் அறிந்துகொள்ள விரும்பாது ஒதுக்கியும்
உதாசீனப்படுத்தியும் வைத்துள்ள ஒரு சமூகத்தை, அதனுள் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத்
தருவதுடன் வாசித்து முடித்ததும் அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் நமக்கு உண்டாவது
உண்மை.
பொதுவாக குறவர்கள்
என்று வழங்கப்படும் இனத்துக்கும் இந்த நரிக்குறவர் இனத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த
பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ்
இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். முருகக்கடவுள்
குறத்தியாகிய வள்ளியை மணந்துகொண்ட கதை பலரும் அறிவர். ஆனால் நரிக்குறவர்கள் என்பவர்கள்
வேறுவகையானவர்கள். அவர்கள் நாடோடிகள். தமிழகத்தில் குடியேறிய சமூகத்தினர். இந்நூலிலிருந்து
நரிக்குறவர் வாழ்வியல் குறித்து நான் அறிந்துகொண்ட சில தகவல்களை இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
நரிக்குறவர்கள்
குஜராத், மேவார் போன்ற பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்கலாம் என்பது
அவர்களுடைய பூர்வீகக் கதைகளின் மூலம் தெரியவருகிறது. முகலாயப் படையெடுப்பின் பிறகு
அவர்களுக்குப் பயந்து காடுகளில் வசிக்கத் தொடங்கிய அவர்கள் காடுகளைச் சார்ந்தே தங்களுடைய
வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர்.
தமிழகத்தில் ஏறக்குறைய
எழுபது வகையான குறவர்கள் இருந்தாலும் தொழில் அடிப்படையில் பூனைகுத்தும் குறவர், உப்புக்
குறவர், மலைக்குறவர் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. நரிகளை வேட்டையாடி அவற்றின்
இறைச்சியை உண்பதாலும் நரித்தோல், நரிப்பல், நகம் வால் கொம்பு முதலியவற்றை விற்பதாலும்
குறிப்பிட்ட இனத்தை நரிக்குறவர் இனம் என்பதாகத் தெரிகிறது.
நரிக்குறவர்களின்
பேச்சுமொழியான வாக்ரிபோலிக்கு எழுத்துவடிவம் கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் வாழாமல்
ஊர் விட்டு ஊர் சென்றுகொண்டே இருப்பதால் அந்தந்த இடத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி
இவற்றைத் தங்கள் வாழ்க்கையோடு கலந்துவிடுகின்றனர். இவர்கள் பேசும் மொழியில் தமிழ்,
தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது, குஜராத்தி உள்ளிட்ட இருபத்துநான்கு மொழிகள் கலந்துள்ளனவாம்.
ஒரு வரியில் குறைந்தபட்சம் மூன்று மொழி வார்த்தைகள் கலந்திருக்குமாம்.
நரிக்குறவர்கள்
அவர்கள் வணங்கும் கடவுளைக் கொண்டும் பலியிடும் மிருகங்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
ஆட்டுக்கடாவைப் பலியிடுவோர் ஒரு வகை. எருமைக்கடாவைப் பலியிடுவோர் இன்னொரு வகை. துர்க்கை,
காளி, மாரியம்மன் என்று சக்தியின் வடிவங்களைத் தெய்வங்களாக வணங்குகின்றனர்.
நரிக்குறவர்கள்
கூட்டமாகவே வாழ்கின்றனர். மற்ற சமூகத்தினருடன் கலந்து உறவு வைத்துக்கொள்வதில்லை. தங்கள்
குழந்தைகளை தங்களுடைய பாரம்பரிய வழிமுறையின்படியே வளர்க்கின்றனர். ஆண்கள் வேட்டையாடியும்
பெண்கள் ஊசி, பாசிமணி, சீப்பு போன்றவற்றை விற்றும் தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான பொருளீட்டுகின்றனர்.
வெற்றிலை புகையில் போட்டுக்கொள்வர். கள், சாராயம் குடிப்பது வழக்கம். இக்கூட்டத்தில்
முதியவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. முதியவர்கள் வகுத்துள்ள கட்டுப்பாட்டை
அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் திருமணத்துக்கான செலவைத் தாங்களே சம்பாதித்து
சேர்த்துக்கொள்ளவேண்டும். பதினான்கு பதினைந்து வயதிலிருந்தே ஆண் பிள்ளைகள் தங்கள் திருமணத்துக்காக
சேமிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
நரிக்குறவர் சமூகத்தில்
பெண்களின் நிலை உயர்வாகவே உள்ளது. பெண் குழந்தைகளை விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர்.
திருமணத்தின் போது பெண்ணுக்கு ஆண் வீட்டாரே பரிசப்பணம் தந்து மணம் முடிக்கவேண்டும்.
சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்விக்கப்படுகிறது. கணவன் இறந்தால் பெண்கள்
உடனடியாக மறுமணம் செய்துகொள்ளலாம். அது மட்டுமல்ல… எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு
திருமணம் நடைபெறலாம். ஆனால் முந்தைய கணவனை விவாகரத்து செய்திருக்கவேண்டும். இது பெண்ணுக்கும்
ஆணுக்கும் பொருந்தும். வயதான பின்னும் கூட திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் நரிக்குறவர்களிடத்தில்
உள்ளது.
இவர்களினத்தில்
குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட நியதிகள் அதிகம். ஒரு பெண்ணோ ஆணோ அடுத்த ஆண்மகனின்
குடுமியை தொட்டு இழுப்பது குற்றம். ஒருவர் இறந்தால் உறவினர்கள் சாவுக்கு வராமலிருப்பது
குற்றம். சாமி சொத்துள்ளவர்கள் குடுமியை எடுப்பது குற்றம். ஒரே பிரிவுக்குள் மணமுடிப்பது
குற்றம். பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது குற்றம். குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை
விதிக்கப்படுகிறது. தண்டனைகளுள் பெரிய தண்டனை கூட்டத்திலிருந்து ஒருவரை ஒதுக்கிவைப்பதுதான்.
நரிக்குறவர்களிடம்
சகுனம் பார்க்கும் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. நாயின் காதுகள் படபடவென அடித்துக்கொண்டால்
அது கெட்டசகுனம். வானத்தில் காக்கா கூட்டம் வட்டம் அடித்துக்கொண்டிருந்தால் அது நல்ல
சகுனம். நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால் அப்பிணத்தை தூக்கிச்
சென்றவர்கள் பன்னிரண்டு நாள் வரை குடிசைக்குத் திரும்பிவரக்கூடாது. அப்படி வந்தால்
இறந்தவர் ஆவியாக வந்து மிரட்டுவார் என்று நம்புகின்றனர். இறந்தவரின் தலைக்கடியில் ஒரு
கல்லும் காலுக்கடியில் ஒரு கல்லும் வைக்கப்படுகிறது. இது மூன்று தடவை தலைக்கல் காலுக்கும்
காலின் கல் தலைக்குமாக மாற்றி வைக்கப்படுகிறது. அப்படி செய்தால் சுடுகாடு சென்ற ஆவிக்கு
வீட்டுக்கு செல்ல வழி தெரியாது என்று நம்புகின்றனர். இறந்தவரின் ஆவிக்காக தினமும் ஒரு
பிடி சோறு வைத்து வணங்குகின்றனர். இறப்புக்குப் பின் சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள்
இவர்களிடமும் உண்டு.
தெய்வத்தின் மீதும்
அது தொடர்பான சடங்குகளின் மீதும் அதிக அளவு நம்பிக்கை கொண்டவர்கள் நரிக்குறவர்கள்.
இவர்களுக்கென்று கோவில்கள் கிடையாது என்றாலும் ஒவ்வொரு நரிக்குறவ குடும்பத்தார்க்கும்
சாமிமூட்டை என்ற ஒன்று இருக்கிறது. இதில் தாம்பாளத்தட்டு, தூபக்கால், வெள்ளியால் செய்யப்பட்ட
சாமி உருவங்கள், கருஞ்சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவில் அமைந்த பை போன்ற துணிகள்,
இரத்தம் தோய்ந்த சாமிப்பாவாடைகள், சலங்கைகள், போன்றவை இருக்கின்றன. இதனை பெண்கள் தொட்டால்
பாவம் என நம்புகின்றனர். பூசை போடும்போதும் சடங்குகள் செய்யும்போதும் மட்டுமே திறக்கப்படும்
இம்மூட்டையை மற்ற நேரங்களில் திறந்துகாட்டவோ வெளியே எடுத்துப் பார்க்கவோ பயப்படுகின்றனர்.
பிரசவத்துக்காக
குறத்தி, தாய்வீட்டுக்குப் போவதில்லை. குறவன்தான் வேறொரு தனியிடத்தில் தாயையும் சேயையும்
வைத்துக் காப்பாற்ற வேண்டும். தீட்டு கழித்தலின்போது பச்சை, சிவப்பு, வெள்ளை, கறுப்பு
போன்ற எட்டு நிறங்களில் பன்னிரண்டு சோற்று உருண்டையை உருட்டி பெரிய தட்டில் வைத்து
சாமிக்கு படைத்துஅதனை மாலை ஆறு மணியளவில் தூர எறிந்துவிடுவார்கள். இதனால் குழந்தைக்குப்
பட்டிருக்கும் கண்ணேறு கழிந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.
நரிக்குறவர்கள்
தங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு. சாத்துக்குடி சாப்பிடுபோது
பிறந்த குழந்தைக்கு சாத்துக்குடியான் என்ற பெயரும் மணிபர்ஸ் திறக்கும்போது பிறந்த குழந்தைக்கு
மணிபர்ஸ் என்றும் பிச்சையெடுக்கும்போது பிறந்த குழந்தைக்கு பிச்சைக்காரி என்று பெயரிடுவதும்
சுவாரசியம்தானே.. ஊரின் பெயர், பொருளின் பெயர், தெய்வத்தின் பெயர், குடும்ப முன்னோர்களின்
பெயர், நாகரிக வளர்ச்சிக்கேற்ப நவீனப்பெயர்
என்று பலவிதமாக பெயர் சூட்டுகின்றனர். தாம்பரத்தான், தட்டாஞ்சாவடியான், விழுப்புரத்தான்
என்பது போன்ற ஊர்ப்பெயர்களை சிலர் வைத்திருப்பதைப் பார்க்கலாம். அதே சமயம் கமல், ரஜினி,
விஜய், அஜீத், சிம்ரன், குஷ்பு என்று திரைப்படத்தின் தாக்கமும் பெயர்களில் தொணிப்பதைக்
காணமுடியும்.
இவையெல்லாம் அவர்களுடைய
வாழ்க்கைமுறை குறித்த சில மாதிரிகள்தாம். இதுபோல் ஏராளமான தகவல்களை விரிவாகவும் சுவையாகவும்
எடுத்துரைக்கிறது இந்நூல். நரிக்குறவர் இனம் குறித்து மேலும் அறிந்துகொள்ள விழைவோர்
மட்டுமல்ல, சமுதாயத்தின் பார்வையில் புறக்கணிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தைப் பற்றிய மதிப்பையும்
அறிவையும் வளர்த்துக்கொள்ளவும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது. நரிக்குறவர்
வாழ்க்கையை சித்தரிக்கும் பல புகைப்படங்கள் அவர்கள் அனுமதியுடன் எடுக்கப்பட்டு ஆங்காங்கே
இணைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு.
270 பக்கங்களைக்
கொண்ட இந்நூலின் விலை ரூ.160\- இதை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு
டிசம்பர் 2004 இல் வெளிவந்துள்ளது..
&&&&
( நான்கு பெண்கள் தளத்தில் வெளியானது.)
அருமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
Deleteகுழந்தைக்குப் பெயர் வைப்பது உட்பட பல விசயங்கள் சுவாரஸ்யமானவை...
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு நன்றி...
ஆமாம் தனபாலன். புத்தகம் முழுவதுமே சுவாரசியமானத் தகவல்கள் இறைந்துகிடக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteபுராதனக் கலைகளும், நாடோடி மனிதரும் நவீன வாழ்வியலின் தாக்கத்தில் காணாமல்போய்விடும் ஒருகாலகட்டத்தில் கரசூர் பத்மபாரதியின் ஆய்வு நூல் வரவேற்கத் தக்கது. நூலாசிரியருக்கும், தமிழினி பதிப்பகத்துக்கும், பதிவிட்ட உங்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteவாய்ப்பு அமைந்தால் வாசித்துப் பாருங்கள். நரிக்குறவர் வாழ்க்கை பற்றி நிறைய தகவல்களை அறியமுடிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏகாந்தன்.
Deleteமிகவும் அருமையான பகிர்வு. ரஸித்துப்படித்து இன்புற்றேன்.
ReplyDeleteஇதன் நூலாசிரியர் அவர்களுக்கும் தங்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
ஏற்கனவே ஒரு பிரபல எழுத்தாளர் [அவரின் பெயரும் எதில் நான் படித்தேன் என்பதும் என் நினைவில் இப்போது இல்லை] இந்த நரிக்குறவர்கள் பற்றி எழுதியிருந்ததை நான் படித்துள்ளேன். அதில் ஓர் விஷயம் மட்டும் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அது இங்கும் ஓரளவு TALLY ஆகிறது.
அதாவது தினமும் இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர்கள் என்பதால் ஆங்காங்கே தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்த ஊரின் பெயரில் சில வரிகளை முதலிலும், ’கோன்’ அல்லது ’கோனி’ என்ற சொல்லினை இறுதியிலும் வைத்துவிடுவார்களாம்.
உதாரணமாக ’திண்டிவனம்’ என்ற ஊரில் இவர்கள் சுற்றித்திரியும் போது, பிரசவம் நிகழ்ந்து, அது ஆண் குழந்தையானால் ‘திண்டிக்கோன்’ என்றும், பெண் குழந்தையானால் ‘திண்டிக்கோனி’ என்றும் வைத்துவிடுவார்களாம்.
’கோன்’ என்றால் அரசன் என்றும் ‘கோனி’ என்றால் அரசி என்றும் பொருள் உண்டு என்றும் அதில் அவர் எழுதியிருந்ததாக எனக்கு ஞாபகம் உள்ளது.
இதன் அடிப்படையில்தான் கோவையின் அரசி என்ற பெயரில் ’கோனி அம்மன்’ என்ற மிகப்பிரபலமான கோயில் கோவையில் இன்றும் உள்ளது. இது மட்டும் என் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பாகும் :) அன்புடன் கோபு.
கோன் அல்லது கோனி என்ற சொல்லினை ஊர்ப்பெயரோடு சேர்த்துவைக்கும் வழக்கமும் அதற்கான காரணமும் வியப்பளிக்கின்றன. கூடுதல் தகவல் பகிர்வுக்கு நன்றி கோபு சார். கோவையில் கோனி அம்மன் பெயர்க்காரணம் உங்கள் ஆராய்ச்சிப்படி நீங்கள் குறிப்பிட்டது போலதான் இருக்கும். சுவாரசியமான தகவல்களுடன் இட்டப் பின்னூட்டத்துக்கு நன்றி கோபு சார்.
Deleteநல்ல நூலை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி. இவ்வாறான, ஒரு குறிப்பிட்ட துறையில் அரிதாக வெளிவருகின்ற, நூல்களே சமுதாயத்திற்கான இன்றைய தேவை. நன்றி.
ReplyDeleteசமுதாயத்தில் கவனிக்கப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறை எவ்வளவு தனித்துவமான தகவல்களை உள்ளடக்கியது என்று அறியும்போது வியப்பாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteசுவாரசியமான தகவல்கள். நூலைப் படிக்கத் தூண்டும் பதிவு கீதமஞ்சரி, பகிர்விற்கு நன்றி
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தால் வாசிங்க கிரேஸ். நானும் இங்கு நூலகத்தில்தான் எடுத்துப் படித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
Deleteநல்லதோர் நூல் அறிமுகம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteபல விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteத ம 5
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மணவாக்குக்கும் மிக்க நன்றி செந்தில்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteExcuse me. Technical error.
Deleteஅவசியம் படிக்க வேண்டும்மா...ஆவலைத்தூண்டி விட்டீர்கள்....உண்மைதான் இவர்களை நாம் ஒதுக்கி தான் வைத்திருக்கிறோம்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநானும் கரசூர் பத்மபாரதி அவர்கள் எழுதிய, நரிக்குறவர் – இனவரைவியல் என்ற இந்த நூலை, எங்கள் மாவட்ட நூலகத்தில் எடுத்து படித்து இருக்கிறேன். சிறந்த எழுத்தாளரான உங்களது இந்த நூலினைப் பற்றிய விமர்சனம் நன்றாகவே திறம்பட உரைக்கப்பட்டுள்ளது.
ReplyDelete