22 June 2014

பத்துக் கேள்விகள் ஒரு கொத்துக் கேள்விகளாய்...
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்ற தலைப்பில் பத்துக் கேள்விகள் ஒரு கொத்துக் கேள்விகளாய் பதிவர்களை வலம் வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள். அந்த தொடர் சங்கிலியில் என்னையும் இணைத்துள்ளனர் தோழி மைதிலியும் நண்பர் சொக்கனும்.

அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பதான பெருமையுடன் அவர்களுக்கு நன்றி சொல்லி கேள்விகளுக்கான பதில்களை இங்கு தருகிறேன்.

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

வாழும் தலைமுறையும் வரவிருக்கும் தலைமுறையும் இப்படி ஒருத்தி இருந்தாள் என்பதை நினைவில் வைத்திருந்து, ஒரு நிமிடம் மனத்தால் எண்ணி பெருமிதம் கொண்டால் போதுமானது.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பார்க்கும் ஒவ்வொரு மனிதரும், உயிர்களும் இயற்கையும் அன்றாடம் போதித்துக்கொண்டிருக்கும் ஏராளமான வாழ்வியல் பாடங்களில் இயன்றவற்றையேனும்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இப்போது அரைமணி நேரத்துக்கு முன்னால். மகளின் கல்லூரி அனுபவமொன்றைக் கேட்டு.

4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் நேரங்களில் புத்தகம் வாசிப்பேன். மாலை வேளைகளில் என்னுடைய ஐபாடில் இருக்கும் பழைய பாடல்களை சன்னமாக பின்னணியில் ஓடவிட்டபடி குடும்பத்தினர் அனைவரும் கூடி உரையாடிக்கொண்டிருப்போம். இப்போது வளர்ந்துவிட்ட என் பிள்ளைகளுக்கு இது போன்ற தருணங்களில் அவர்களது குழந்தைக்கால அனுபவங்களைக் கேட்பது மிகவும் பிடிக்கும்.
 
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுப்பதும் மனம்விட்டுப் பேசுவதும் வாழ்க்கையில் உண்டாகும் பல சிக்கல்களைத் தவிர்க்கும் என்னும் சூத்திரத்தை நினைவுபடுத்துவேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

உலகமெங்கும் ஆங்காங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் மனம் பதைக்கவைக்கும் நிகழ்வுகளான, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைதான் நான் கையிலெடுக்கும் பிரதானப் பிரச்சனை. விபரீதக் கொடுமையை வித்திலேயே அழிப்பதற்குண்டான வழி என்னவென்று யோசித்து நடைமுறைப்படுத்துவேன்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பிரச்சனையை ஒரு தாளில் எழுதி அதன் சாதக பாதகங்களைப் பட்டியலிட்டாலே போதும், பெரும்பாலான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உபாயம் தென்பட்டுவிடும். அப்படியும் முடிவெடுக்க இயலாத நேரங்களில் என் மாமனாரின் உதவியை நாடுவேன். அனுபவசாலியான அவர் நிச்சயம் உதவுவார்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

சரியான புரிதலின்மைதான் காரணம் எனில் அதற்கான விளக்கத்தைக் கூறி தெளிவுபடுத்துவேன். தெரிந்தே பரப்பப்படும் தவறான தகவல் எனில் அசட்டை செய்துவிட்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவேன்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இந்தியாவில் இருக்கும் என் தோழியின் கணவர் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்துவிட்டார். இன்னும் அந்த நிகழ்வை என்னால் சீரணிக்க இயலவில்லை. இதுவரை தோழியுடன் பேசவில்லை. வாய் வார்த்தைகளால் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆறுதலுக்கு மீறிய அவலம் அல்லவா அது? அருகில் இருக்க நேர்ந்திருந்தால் ஒரு அன்பான அரவணைப்பைத் தந்திருப்பேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

எழுதவேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருப்பவை எக்கச்சக்கமாய் இருக்கின்றன. வாசிப்பதும் எழுதுவதுமாய் நேரம் பறந்துவிடும். தனியாய் இருக்கிறோம் என்ற உணர்வே தோன்றாது.

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒருநிமிடம் நிதானித்து நம்மை சுய அலசல் செய்துகொள்ள உதவும் கேள்விகளை முன்வைத்த தோழமைகளுக்கு நன்றி. 

இந்த தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்...


  

இவர்களில் சிலர் முன்னரே வேறு நண்பர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் என்னுடைய இந்த அழைப்பையும் ஏற்றுக்கொள்வதோடு மேலும் பத்து பதிவர்களைத் தொடரக் கேட்குமாறு அன்புடன் வேண்டிகொள்கிறேன். நன்றி.   
18 June 2014

சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 4


மறுபடி சென்னைத்தமிழுக்கு வருவோம். மதராஸப் பட்டிணம் என்றழைக்கப்பட்ட சென்னையில் ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம்தெலுங்கு போன்ற பலவித மொழிபேசும் மக்களும் கலந்துவாழ்ந்த, வாழ்கிற காரணத்தால் தமிழோடு அம்மொழி வார்த்தைகளும் கலந்து சென்னைத் தமிழ் என்றொரு தனிப்பாணி உருவானதை அறிவோம்.சென்னையில் சாவுகிராக்கி, பேமானி, சோமாரி, கஸ்மாலம் போன்ற சில வசைச்சொற்கள் பிரசித்தமானவை. சென்னைவாழ் மக்களோடு இரண்டறக் கலந்து பழகியவர்களுக்கு அவை பரிச்சயமாகியிருக்கும். அப்படியான வாய்ப்பு அமையப் பெறாதவவர்கள் திரைப்படங்களில் பார்த்து அறிந்திருப்பார்கள். 

இந்தியில் நேர்மையற்றவன் என்ற பொருள்படும் பே-ஈமான் பேமானியாகிவிட்டது. முட்டாள் என்று பொருள்படும் பேவகூஃப் பேக்கு என்றாகிவிட்டது. கபோதி என்றால் கண்பார்வையற்றவன் என்று பொருள். அறிவுக்கண் இல்லாதவனை ஏசுவதற்கு உதவுகிறது அவ்வார்த்தை.


கஸ்மாலம்? ‘சம்ஸ்கிருதத்தில் மனநோயை கச்மலம்' என்று சொல்வார்கள். இதுவே, கஸ்மாலம் என்றாகிவிட்டது. ஒருவரைத் திட்டுவதற்கு இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சென்னைவாசிகள்தான் கஸ்மாலம்' என்று இச்சொல்லை அதிகமாக உபயோகிப்பார்கள். இதற்கு மோசமான மனதைக் கொண்டிருப்பவன்' என்று பொருள்என்று தன்னுடைய வழக்குச் சொல் விளக்கம்நூலில் குறிப்பிடுகிறார் சி.என்.துரைராஜ் அவர்கள்.


ஜல்தி, ஜரூர், நாஷ்டா, ஜோர், தமாஷ் போன்றவை இந்தியிலிருந்தும் ரீல் (reel), ரசீது (receipt), அக்கிஸ்டு (accused), ராங் (wrong), கரீட்டு (correct), பிகிள் (bugle) போன்றவை ஆங்கிலத்திலிருந்தும் டப்பு, நைனா, துட்டு போன்றவை தெலுங்கிலிருந்தும் வந்தவை என்று அறியமுடிகிறது. ‘சோறு, மெய், வலி (இழு), கடாசு போன்ற தூயதமிழ் சொற்களோடு இஸ்கூல், இஷ்டார், கிஷ்ணாயில் போன்ற புதிய வார்த்தைகளையும் அறியமுடிகிறது. பட்டாசுதான் டப்பாசு என்பது புரிகிறது. பேஜார் என்பது தொல்லைஎன்ற பொருள்படும் இந்தி வார்த்தை என்று நான் நினைத்திருக்க badger என்னும் ஆங்கில வார்த்தை என்கிறது விக்கிபீடியா.

சரி, இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஆஸி ஆங்கிலம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா? ஆஸி ஆங்கிலத்திலத்திலும் இதுபோல் கலந்துருவான வேற்றுமொழி வார்த்தைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம் இப்போது.ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பிலும் அதைச் சுற்றியுள்ள தீவுகளிலுமாக கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளாக பல்வேறு குழுக்களாகவும், பல்வேறு வாழ்க்கைமுறைகளையும் கலாச்சாரங்களையும் பின்பற்றுபவர்களாகவும் வாழ்ந்திருந்த பூர்வகுடி மக்களிடையே 300-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக ஐரோப்பியக் குடியேற்றத்தின் ஆரம்பகால ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல்வேறு பூர்வகுடி மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் கலந்துவிட்ட பல வார்த்தைகளில் சிலவற்றை இங்கு அறிந்துகொள்வோம்.

ஆஸ்திரேலிய விலங்குகள்பறவைகள்மரங்கள் பலவற்றின் பெயர்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு


கங்காருப்ரோல்கா

வாம்பேட்


பில்பிகாலா


கூக்கபரா
கங்காரூ, கோவாலா, கூக்கபரா, வாம்பேட், டிங்கோ, காலா, வல்லபி, வல்லரூ, நம்பேட், ப்ரோல்கா, பில்பி, பட்ஜரிகர், பாராமுண்டி (ஒரு வகை மீன்) போன்ற பல.

இவற்றுள் சிலவற்றைப் பற்றி ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் தொடரின் மூலம் முன்பே அறிந்திருப்பீர்கள்.

காலா (galah) என்னும் ஆஸ்திரேலிய பூர்வகுடி வார்த்தை காக்கட்டூ பறவையைக் குறிக்கும் அதே வேளையில் எதையும் எளிதில் முடிக்கும் சாமர்த்தியமற்ற அசமஞ்சங்களையும் குறிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பல இடங்கள் அவற்றுக்கான பூர்வகுடிப் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு

பாராமட்டா, இலவாரா, ஜீலாங், குல்காங், பல்லாரட், டூவூம்பா, வாகா வாகா, டேன்டனாங் போன்ற ஏராளமானவை...

இவை தவிர ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள சில பூர்வகுடி வார்த்தைகள்

பில்லபாங் 

பில்லபாங் (billabong) ஆற்றில் வெள்ளம் கரைமீறும்போது அல்லது மழை பொழியும்போது மட்டும் நீர்நிறையும் ஆற்றோர குட்டைகள்.

பூமராங்
பூமராங் (boomerang) வேட்டைக்கும் விளையாட்டுக்கும் பயன்பட்ட மரத்தாலான பல்வேறு வடிவங்களிலான உபகரணம். எல்லா வகை பூமராங்குகளும் எறிந்தவரிடம் திரும்பி வருவதில்லை. குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள சில பூமராங்குகள் குறிப்பிட்ட திசையில் செலுத்தப்படும்போது வட்டப்பாதையில் பயணித்து எறிந்தவரின் கரங்களை மீண்டும் வந்தடைகின்றன. பெரும்பாலானவை இலக்கைக் குறிவைத்துத் தாக்கப் பயன்படுபவை.

ஹம்ப்பி
ஹம்ப்பி (humpy) – பூர்வகுடிகள் வாழ்ந்த, மரப்பட்டைகளால் ஆன சின்னஞ்சிறு குடிசை.

வில்லி வில்லி (willy willy) – சூறாவளி புழுதிப்புயலுக்குப் பூர்வகுடிப் பெயர். (சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?)

பேன்டிகூட்
பூர்வகுடி பெயர்கள் தவிர தெலுங்கு வார்த்தை ஒன்றும் ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. என்ன தெரியுமா? பேன்டிகூட் என்பதுதான் அது. தெற்காசியப் பெருச்சாளிகளைப் போன்ற தோற்றத்திலிருந்தமையால் பேன்டிகூக்கூ என்னும் தெலுங்கு வார்த்தை பேன்டிகூட் ஆனதாம்.

காஸோவரி, காக்கட்டூ இவற்றின் மூலம் மலாய மொழி என்றால் ஈமு வந்தது அரபு மொழியிலிருந்தாம். அரபு மொழியில் மிகப்பெரிய பறவை என்று பொருளாம்.

காக்கட்டூ
காஸோவரி
ஈமு

ஆனால் 1800 முதல் புழங்கப்படும் ஆஸ்திரேலிய மார்சுபியல் குட்டிகளைக் குறிக்கும் வார்த்தையான ஜோயி (joey)-ன் மூலம் எதுவென்று இன்னும் அறியப்படவில்லை.

நேரடியான வசைச்சொற்களாக இல்லாவிடினும் ஒருவனது குணாதிசயங்களைக் குறிக்கும் சில புதிய வார்த்தைகள் 1800-களில் ஆஸி ஆங்கிலத்தில் இடம்பெற்றன.

போகன் (bogan) – தறுதலை

லாரிக்கின் (larrikin) – பொறுப்பிலி

சன்டோனர் (sundowner) – சோம்பேறி (காலை முதல் மாலை வரை வேலை எதுவும் செய்யாமல் போக்கு காட்டிவிட்டு மாலையில் உணவுநேரத்தில் சரியாக வந்து சேர்ந்துகொள்பவர்

ரவுஸபவுட் (Rouseabout) – கத்துக்குட்டி

ஜாக்கரூ (Jackaroo) – பண்ணைகளில் வேலைசெய்து அனுபவமில்லாத புதிய வந்தேறி இளைஞர்கள்.

ஜில்லரூ (Jillaroo) – ஜாக்கரூவுக்கு பெண்பால்.

ஃபோஸிக்கர் (Fossicker) – கைவிடப்பட்ட சுரங்கக்குழிகளில் ஏதாவது கிடைக்குமா என்று கிளறித் தேடுபவர்கள். நம் நாட்டில் நகைக்கடை இருக்கும் தெருக்களில் சாக்கடைகளில் சாக்கடை நீரை அரித்து தங்கம் தேடுபவர்களைப் போன்றவர்கள் எனலாம்.

குறுங்காட்டுப் பகுதியில் பிறந்துவளர்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் bush man, bush woman, bush children என்று குறிப்பிடப்பட்டனர்.

swagmen
நமக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால்உடனே உன் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு கிளம்புஎன்போம். இப்படித்தான் பெட்டி படுக்கையுடன் திரிந்திருக்கிறார்கள் ஆரம்பகால ஐரோப்பிய வந்தேறிகள். ஆனால் பெட்டி கிடையாது. படுக்கையினுள் தன்னுடைய அன்றாடத் தேவைக்கானப் பொருட்களையும் சில உணவுப் பொருட்களையும் வைத்து சுருட்டி ஒரு மூட்டை போல் முதுகில் சுமந்தபடி வேலை தேடி குறுங்காட்டிலும் மேட்டிலும், பாலையிலும் கால்நடையாக பயணித்திருக்கிறார்கள் அவர்கள். அந்த முதுகுப்பை அல்லது மூட்டை swag எனப்பட்டது. அதைச் சுமந்து செல்பவர்கள் swagman எனப்பட்டனர்

billy
அவர்கள் தங்களுடன் முதுகுப்பை அல்லாது billy எனப்படும் மூடியும் பிடியும் கொண்ட தகரக் குவளையையும் எடுத்துச் செல்வர். நாள்கணக்கான, வாரக்கணக்கான நடைப்பயணத்தில் தாங்கள் செல்லும் வழிகளில் கிடைக்கும் மரக்குச்சிகள் மற்றும் மரப்பட்டைகளைக் கொண்டு தீமூட்டி நெருப்புக்கு மேலாக யூகலிப்டஸ் மரக்கிளைகளை ஊன்றி அவற்றில் இந்தக் குவளையைத் தொங்கவிட்டு தேநீர் தயாரித்தனர்.

இரண்டு வழிப்போக்கர்கள் சந்தித்துக் கொண்டால் இரவு நேரங்களில் ஏதேனும் மரத்தடியில் தங்கி தங்கள் கதைகளைப் பரிமாறிக்கொள்வர். அது  Yarning எனப்பட்டது. நேரடியாக பொருள் கொண்டால் சரடு திரித்தல் எனலாம். கதை கட்டுதல், புனைதல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் முற்கால ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் அது ஒருவருக்கொருவர் இடையிலான உரையாடலைக் குறிக்கும். அதில் புனைவுகளை விடவும் உண்மை நிகழ்வுகளே இடம்பெற்றிருந்தன.

ஆஸி ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் நாம் நினைப்பதற்கு மாறான பொருளைத் தருவதும் உண்டு.

சூதாடி என்ற பொருள்படும் Spieler என்ற ஜெர்மானிய வார்த்தை ஆஸி ஆங்கிலத்தில் மோசடிப் பேர்வழியைக் குறிக்கும்.

டிங்கோ நாய்கள்
டிங்கோ என்பது காட்டில் வேட்டையாடி உணவுண்ணும் நாயினம். This morning, I had dingo’s breakfast என்று எவராவது சொன்னால், டிங்கோ போல் வயிறு புடைக்க உணவுண்டுவிட்டு வந்திருக்கிறான் என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அது தவறு. காலையுணவாக எதுவுமே உண்ணவில்லை என்பதுதான் சரியான பொருள்.

இதை எழுதும்போது எழுகிறது பள்ளிக்கால ஞாபகம் ஒன்று. சகமாணவி ஒருத்தி தினமும் காலையில் ஐஸ் பிரியாணி சாப்பிட்டேன் என்று சொல்லும்போது தினமும் பிரியாணியா என்று பொறாமையாக இருக்கும். ஆனால் அவள் குறிப்பது பழைய சோற்றை என்று தெரியவந்தபோது பொறாமை பரிதாபமாக மாறியது.

Curly என்று வழுக்கைத் தலையரையும் bluey என்று செம்மயிர்த் தலையரையும் குறிப்பது முற்காலத்தில் வழக்கத்திலிருந்திருக்கிறது.

இதைப்போல இன்னொரு முரண்வேடிக்கை கையில் பந்தை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை கால்பந்து என்பது.

socceroos
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியை உலகமே ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை அறிவோம். ஆஸ்திரேலியர்கள் football- ‘footy’ என்று சொல்வார்கள் என்று பார்த்தோம் அல்லவா? இரண்டும் ஒன்றுதானே என்றால் இல்லை, இல்லை அதுவேற இதுவேற என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை football என்றால் Australian Ruels Football எனப்படும் ஆஸ்திரேலியக் கால்பந்து விளையாட்டு மட்டும்தான்.  இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு soccer என்ற பெயரால் மட்டுமே அறியப்படும். இதில் கலந்துகொள்ளும் ஆஸ்திரேலிய அணியின் பெயர் Socceroos.

Aussie Rules Footy
ஆஸ்திரேலிய கால்பந்தாட்டத்தின் பந்து, ரக்பி பந்தைப் போன்று நீள்வட்டமாக இருக்கும். விளையாடப்படும் மைதானமும் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். பதினெட்டு வீர்ர்களைக் கொண்டு விளையாடப்படும் இவ்விளையாட்டில் இரண்டு உயரமான கம்பங்களுக்கிடையில் பந்தை உதைத்து அனுப்புவதன் மூலம் வெற்றிக்கான புள்ளிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. கால்பந்தாட்டம் என்ற பெயர்தானே ஒழிய பெரும்பான்மையான நேரம் Rugby விளையாட்டைப் போல பந்தைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாதாரண கால்பந்தாட்டத்தை விடவும் ஆஸி ரூல்ஸ் ஃபூட்டிக்கும் ரக்பிக்கும் தான் இங்கு ரசிகர்கள்  அதிகம்.

ஆஸி ஆங்கிலத்தின் சுவாரசியங்களில் மாதிரிக்கு சிலவற்றை இதுவரை பகிர்ந்துகொண்டேன். அனைவரும் ரசித்தீர்கள்தானே? ஊக்கம் தரும் கருத்துக்களை உடனுக்குடன் வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் நன்றி

************
(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து பெறப்பட்டவையே. உரிய தளங்களுக்கு நன்றி)

16 June 2014

இரண்டாவது சுற்று விமர்சனப் போட்டிகளில் கன(பரிசு)மழை
வலையுலகில் இதுவரை எவரும் எண்ணியிராத வகையில் ஒரு புதுமையான போட்டியாக தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியை அறிமுகப்படுத்தி அதை இன்றுவரை தொய்வில்லாது, சிறு தடங்கலில்லாது சிறப்புற நடத்திவரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு என் முதற்கண் நன்றி.தனியொருவராய் இச்சாதனையை நிகழ்த்திவரும் கோபு சார் அவர்களுடைய சிரத்தையும் திட்டமிடலும் உழைப்பும் நேரமேலாண்மையும் நம்மை வியப்பிலாழ்த்துவது உண்மை. இந்த வயதுக்கான அயர்வு, உடல்நிலை, குடும்பக் கடமைகள், பிற பணிகள் இவற்றுக்கிடையே குறிப்பிட்டப் பதிவுகளை ஒரு இராணுவக் கட்டுக்கோப்புடன் குறித்த நேரத்தில் குறித்தபடி பதிவிடும் அவருடைய அசாத்தியத் திறன் கண்டு வியக்கிறேன். அவருக்கு நம் அனைவரின் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.  


நம் கண்களுக்குப் புலப்படாது, இப்போட்டியின் நடுநாயகமாக அமர்ந்து போட்டிக்கு வரும் ஏராள விமர்சனங்களை வாசித்து, உரிய காலத்தில் அவற்றுள் பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்து அளித்து கோபு சாரின் திட்டமிடலுக்கேற்பத் தானும் திட்டமிட்டு நேரம் வகுத்து, மேற்கொண்ட பொறுப்பை சிரமேற்கொண்டு சிரத்தையுடன் செயல்பட்டுவரும் நடுவர் அவர்களுக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.சிறுகதை விமர்சனப் போட்டியின் மூலமாக பல புதிய பதிவர்களையும் புதிய விமர்சகர்களையும் நம்மால் அடையாளங்காண முடிகிறது. பரிசு பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும், பெறவிருக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். 


விமர்சனம் என்றாலே அது நமக்கு கைவராத கலை என்று காத தூரம் விலகிநின்ற நான் இதுவரையிலான போட்டிகளில் அதிகப் போட்டிகளில் பரிசுபெற்று உயரிய பரிசுத்தொகைக்கு உரியவளாகியிருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. பரிசுமழையில் தொடர்ந்து நனைந்து இப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்களித்துக் கொண்டிருக்கிறேன். 20 போட்டிகளில் 18 போட்டிகளில் கலந்துகொண்டு 14 போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன் என்பது எனக்கே மலைப்பு தரும் செய்தி. 
போட்டிகளுக்கு முன்பு அறிவித்திருந்த பரிசுத்தொகை அல்லாது ஹாட்ரிக் பரிசு, போனஸ் பரிசு போன்ற ஊக்கப்பரிசுகளையும் அளித்து மேலும் மேலும் நம்மை உற்சாகப்படுத்தும் கோபு சார் அவர்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றி. இதுவரையிலான ஹாட்ரிக் பரிசு பெற்றவர்களின் விவரத்தை கீழே காணலாம்.என்னுடைய மீள்பார்வைக்காக, இதுவரையில் நான் பரிசு பெற்ற விமர்சனங்கள் மற்றும் அவற்றுக்கான கதைகளின் சுட்டிகளைப் பதிவு செய்துகொண்டு வருகிறேன். பதினொன்று முதல் இருபது வரையிலான அடுத்த பத்துப் போட்டிகளில் நான் பரிசு பெற்ற விமர்சனங்கள் மற்றும் கதைகளுக்கான சுட்டிகளை இப்போது பதிகிறேன். 

தொடர்ந்து பரிசுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் சூட்சுமம் என்னவென்று தெரிவித்தால் போட்டியில் கலந்துகொள்ளும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமென்று ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்த திரு. இளங்கோ ஐயா மற்றும் திரு. ஜீவி சார் இருவரின் வேண்டுகோளை ஏற்று அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே என் பதிலைத் தெரிவித்திருந்தேன். வாசிக்காதவர்கள் கவனத்துக்காக.. மறுபடியும் இங்கே பதிவிடுகிறேன்.

\\விமர்சனம் எழுதுவதில் நான் ஒன்றும் வித்தகி இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். தேர்ந்த விமர்சகர்கள் பலர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும் தி.தமிழ் இளங்கோ ஐயா மற்றும் ஜீவி சார் இருவரின் வேண்டுகோளை ஏற்று நான் விமர்சனம் எழுதும் முறையைச் சொல்கிறேன்.

சிறுகதை வெளியானவுடனேயே அதை ஒருமுறைக்கு இருமுறை ஊன்றி வாசித்துவிடுவேன். அதற்குப்பிறகு அதைத் திரும்பியும் பார்க்கமாட்டேன். விமர்சனம் எழுதுவதற்கு ஒருவார கால அவகாசம் உள்ளதேஆனால் அந்த நேரத்தில்வீட்டு வேலைகள் செய்யும்போதும், நடை பயிலும்போதும், ஓய்வாயிருக்கும்போதும் உள்ளுக்குள் அந்தக் கதையைப் பற்றிய அலசலை மேற்கொள்வேன். என்ன விமர்சனம் எழுதலாம், எப்படி எழுதலாம், கதையின் சிறப்பம்சங்கள் என்ன, குறை என்ன, வித்தியாசம் என்ன, கதாசிரியர் சொல்லவிரும்புவது என்ன, பாத்திரப் படைப்புகளின் குணாதிசயம், எழுத்துநடை போன்றவற்றை அசைபோட்டபடியிருப்பேன்.

தொடர்போட்டிகள் என்பதால் ஒரேமாதிரி இல்லாமல் ஒவ்வொரு முறையும் சிற்சிறு மாற்றங்களுடன் எழுதினால் சுவாரசியமாக இருக்கும் என்பதால் அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொள்வேன். எல்லாம் மனத்துக்குள் முடிவானதும் மறுபடி ஒருமுறை கதையை வாசித்து என் எண்ணக்கோர்வையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுத ஆரம்பிப்பேன். கிட்டத்தட்ட முதல் முயற்சியிலேயே நான் எண்ணியவற்றை சீராக எழுதிவிடமுடியும். அப்படித்தான் இதுவரை செய்கிறேன். 

வேறெந்த சிறப்புப் பயிற்சிகளோ, முயற்சிகளோ இல்லை... பலரும் இப்படித்தான் யோசித்து விமர்சனம் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லாதவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படும் எனில் மிகவும் மகிழ்வேன். பரிசு பெறும் மற்றவர்களது விமர்சனங்களையும் வாசிக்கும்போது இன்னும் சில யுத்திகள் கிடைக்கின்றன. அவற்றையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்வதால் வெற்றி கிட்டும்.

எழுதத் தூண்டிய திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் ஜீவி சார் அவர்களுக்கும் எழுதவைக்கும் கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.\\


என்ன நண்பர்களே… என்னுடைய இந்த பதில் உங்களுக்கு ஏற்புடையதுதானே? 
முயற்சி செய்யுங்கள்.. முயன்றால் முடியாதது உண்டோ? 
முயற்சிக்கும் உழைப்புக்கும் முன்னுதாரணமாய் நம் கண்முன்னே நிற்கிறாரே வை.கோபாலகிருஷ்ணன் சார்!


முன்னே ஓடிக்கொண்டிருக்கிறேன் உண்மைதான்.. 
என்னைத் தொட்டுவிடும் தூரத்தில்தானே நீங்களும்… 
சோர்வுறாது ஓடி வந்து இணைந்துகொள்ளுங்கள். 
சேர்ந்தே சிகரம் தொடுவோம்.
(படங்களுக்கு நன்றி: கோபு சார்
கடைசி படம்: நன்றி இணையம்)