19 July 2012

மடந்தை நிலா

 

நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;

நிலவின் தன்மையும்தமிழின் இனிமையும்,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்
நிலைகொண்ட உனக்கிட்டேன்,
அப்பெயரினை, அன்பு மகளே!
வெண்ணிலா!
சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ, பாசத்தின் வெள்ளமடி!

என்னைத் தாயாக்கிய பெண்ணே,
நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!

கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
 தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும், குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல் பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும் குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

பள்ளியிலே சிறப்புற்று  பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!

 'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி  பெண்ணே, உன்னால் பேரின்பம்!
இத்தனையும் செய்துமுடித்தபின்
போனால் போகிறதென்று
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய் வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான், பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினாறாம் ஆண்டில் பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும் தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே! பல்லாண்டு நீ வாழி!
******************

(இரண்டு வருடங்களுக்கு முன் நிலாவின் பதினாறாம்  பிறந்தநாளுக்கு அம்மாவின்  பரிசென  எழுதி  தமிழ்மன்றத்தில்  பதிவிட்ட கவிதை இது. )

படம் உதவி: இணையம். 

12 July 2012

மங்கை நிலா'என்ன பெண் இவள்!'
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவாரமாய் விடிகிறது,
என் ஒவ்வொரு காலைப்பொழுதும்!

தலைக்குமேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரியவில்லை என்று
கடுகடுத்தால் போதும்;
தன் இடுப்பளவுக் கூந்தலை
இரண்டேகால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே,
கலவரப்படுத்துகிறாள் என்னை!

வெந்நீர் கூட வைக்கத் தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்
சமையற்கலை அறிந்தவனை மணமுடிப்பேன் என்று
  சாவகாசமாய்ச் சொல்கிறாள்!

வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு! என்றால்,
'அடுக்குமாடிக் குடியிருப்புக்கு,
வாசற்கோலம் எதற்கு?' என்கிறாள்!

'எதிர்ப்பேச்சு பேசாதே!' என்றால்,
'ஏனம்மா பேசக்கூடாது?' என்று,
எதிர்க்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோடு சொல்கிறேன்,
'நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்கவேண்டும்;
அப்போது தெரிய வந்திருக்கும் அத்தனைக் கலைகளும்!'

ஆசையாய் என் தலைகோதிச் சொல்கிறாள்,
'பாவம் அம்மா, நீ! அன்பு மகளாய் வளராது,
அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!
அன்னையின் வடிவில் ஓர்
ஆசிரியையைப் பெற்றிருக்கிறாய்!

நானோ,
அன்னையெனக் காண்பது, என்
அன்புத் தோழியை அன்றோ?'

தோழி மட்டுமா?
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
'என் செல்ல அம்மா! என் பட்டு அம்மா!' என்று
என்னைக் கொஞ்சும் தருணங்களில்
தன் மகவாயன்றோ மாற்றிவிடுகிறாள்,
இப்பொல்லாதப்பெண்!

'என் அருமை மகள் இவள்!'
என்ற இறுமாப்பு மேலோங்க,
அழகாய் விடைபெறுகிறது,
என் ஒவ்வொரு நாளும்!
 ******************

(பேதை, பெதும்பைப் பருவங்களில் நிலாவின் சேட்டையை ரசித்து மகிழ்ந்த அனைவரும் மங்கை, மடந்தைப் பருவங்களிலும் அவளை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். மங்கை என்பது பெண்களின் 12 முதல் 14 வயது வரையிலான பருவம்.)

படம் உதவி: இணையம்

8 July 2012

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் திரும்பிய புத்தகம்1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது மெக்கியின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொன்னது தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி, அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’  என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.


  youtube இணைப்பு கொடுத்திருக்கிறேன். முழுத்திரைப்படமும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. 

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?
 ----------------------------------------------------------------------------------------------------