27 February 2015

மண்ணும் மரமும் ஓவியங்களாய்...

மரங்களின் பட்டைகளில் 
மண்ணின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட 
ஆஸ்திரேலிய பூர்வகுடி ஓவியங்கள்.
(படங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்) 










 







(சிட்னி கலையகத்திலிருந்து...)

ஒண்ட வந்த பிடாரிகள் - 2 (ஒட்டகங்கள்)




நாடாளவந்த ஐரோப்பியரின் வசதிக்காக ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளுள் ஆடு, மாடு, நாய், பூனை, நரி, கழுதை, குதிரை இவற்றின் வரிசையில் ஒட்டகமும் அடங்கும்.  சாலைவசதியில்லாத அப்போது போக்குவரத்துக்கென ஐரோப்பியர்கள்  அரேபியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் முதன்முதலாய் 1840 இல் கொண்டுவந்த ஒட்டகங்களின் எண்ணிக்கை வெறும் 24. அதற்கடுத்த ஐம்பதாண்டுகளில் மொத்தமாய் இறக்கப்பட்டவை பன்னிரண்டாயிரம் இருக்கலாம்.


சாலை வசதியில்லாத காலத்தில் போக்குவரத்துக்காகவும், தந்திக்கம்பங்கள், தண்ணீர்க்குழாய்கள், உணவுப்பொருட்கள் போன்று பெரும்பாரங்களைத் தூக்கிச்செல்லவும் பயன்பட்ட அவை, சாலைகள் போடப்பட்டு வாகனங்கள் வழுக்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்தபின், தேவையற்றுப் போயின. பல ஒட்டகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.  

இன்றுவளர்ப்பாரும் மேய்ப்பாரும் இல்லாமல் ஆஸ்திரேலியப் பாலையில் திரியும் ஒட்டகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து இலட்சத்தைத் தொட்டிருக்கலாம் என்று 2012 இல் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. 2020 இல் இது இருமடங்காகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.



பாலையில் பெரும் வறட்சி நீடிக்கும் காலங்களில் ஆற்றோரப்பகுதிகளை நாடி வரும் ஒட்டகங்கள் அங்கிருக்கும் விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடுகின்றன என்று அரசுக்குப் புகார்கள் குவிகின்றனவாம். செயற்கைக்கோள் மூலம் அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்ததில் ஒரு ஒட்டகம் ஒரு நாளில் கிட்டத்தட்ட 60,000 சதுர கி.மீ பரப்பளவில் சுற்றித்திரிகிறது என்றும் சுமார் 50 கி.மீ. தூரம் பயணிக்கிறது என்றும் தெரிகிறதாம்.   

காடுவாழ் ஒட்டகங்கள் சில உணவுக்காகவும், பந்தயங்களுக்காகவும், போக்குவரத்துப் பயன்பாட்டுக்காகவும் சில அரேபிய நாடுகளுக்கு அவ்வப்போது ஏற்றுமதியாவது வழக்கம் என்றபோதும் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்கா நிலையில் ஒட்டுமொத்தமாய் வேட்டை நடத்தப்படுவது ஆஸ்திரேலிய வழக்கம். ஒட்டகம் என்றில்லை.. கங்காருக்களின் எண்ணிக்கை கூடினாலும் அவற்றைக் கட்டுப்படுத்த கங்காரு அறுவடை என்ற பெயரில் வேட்டை நடத்தப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் தேவைகளுக்காக விலங்குகளை வேட்டையாடிய காலம் போய் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வேட்டையாடும் காலமாகிவிட்டது. இப்போது. 2009 இல் கிட்டத்தட்ட 1,60,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன. ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டங்கள் மேலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அரசு தரப்பில் கிட்டத்தட்ட 19 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 92 கோடி 35 இலட்சம்) இதற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

ஒட்டகங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்குப் பெருக என்ன காரணம்? முதலாவது ஆஸ்திரேலியக் கண்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு பாலைதான். ஒட்டகங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் பாலையில் வளரும் அபரிமிதமான கள்ளிச்செடிகளும் இருக்கையில் இனம் தழைக்க சொல்லவேண்டுமா என்ன?

இரண்டாவது காரணம் ஆஸ்திரேலியாவில் சிங்கம், புலி போன்ற வேட்டையாடக்கூடிய பெரிய அளவிலான மாமிச உண்ணிகள் கிடையாது. இங்கிருப்பவற்றிலேயே பெரிய மாமிச உண்ணி என்று சொல்வதானால் டிங்கோ நாய்களைச் சொல்லலாம். மற்றபடி நம்பேட், க்வோல், டாஸ்மேனியன் டெவில் போன்ற மாமிச உண்ணிகள் வீட்டுப்பூனையை விடவும் அளவில் சிறியனவாகத்தான் இருக்கும். பாலைவாழ் கங்காருக்களையும் துரத்தியடித்துவிட்டு ஏகபோக ராஜாங்கம் செய்துகொண்டிருக்கின்றன இந்த பாலைவனக்கப்பல்கள்.

அடுத்த பதிவில் தென்னமெரிக்கத் தேரைகளின் அட்டகாசம் பற்றிப் பார்ப்போம்.

(தொடரும்)
(படங்கள்: நன்றி இணையம்)

20 February 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 1 (ஐரோப்பியர்)



ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல் என்று சொல்வார்கள். அது ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை பல விஷயங்களில் உண்மை. ஆஸ்திரேலிய மண்ணின் சொந்த உயிரினங்கள் அல்லாது பிற கண்டங்களிலிருந்து இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு தங்கள் இனத்தைத் தக்கவைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் அநேகம். மனிதர்களும் விதிவிலக்கல்ல.

அறுபதாயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணைத் தெய்வமாய்த் தொழுது, தங்களுக்கென்று தனித்த மொழி, கலை, பாரம்பரியம், கலாச்சாரம், தொழில், வணிகம், வாழ்க்கை முறை என்று வாழ்ந்துவந்த சுமார் ஏழு இலட்சம் பூர்வகுடி மக்களை இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கி, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ஐரோப்பியரிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. வந்திறங்கிய நாளிலிருந்தே அபகரிப்பு ஆரம்பமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவின் வளமிக்க கடற்கரையோரப்பகுதிகள் பூர்வகுடியினரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு குடியேற்றங்கள் நிகழ்ந்தன. பூர்வகுடிகளின் எதிர்ப்புகள் முறியடிக்கப்பட்டன.  எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டனர். மீறியவர்கள் கொத்து கொத்தாய் சுடப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.



வாழ்விடத்தோடு அம்மக்களின் அமைதியான வாழ்க்கையும் பறிபோனது. தாய்மார்களிடமிருந்து குழந்தைகள் பலவந்தமாய்ப் பறிக்கப்பட்டனர். ஒரு தலைமுறையே கொள்ளையடிக்கப்பட்டது. Stolen generation என்ற பெயரில் வரலாற்றில் இடம்பிடித்தது, ஒருநாளும் திருத்தியெழுத இயலாத அம்மாபெரும் தவறு.

ஐநூறு மொழிகளைத் தோற்றுவித்த ஆதிகால மக்களால் அவற்றுள் ஒரு மொழிக்குக் கூட எழுத்துவடிவத்தைத் தோற்றுவிக்க இயலவில்லை என்பது வருத்தம் தரும் தகவல். எந்தொவொரு மொழிக்கும் எழுத்துவடிவம் இல்லாத காரணத்தாலேயே அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும், ஏக்கங்களும் தவிப்புகளும், ஆத்திரமும் ஆதங்கமும் ஏட்டிலும் இலக்கியத்திலும் இடம்பெறாமல் போயொழிந்துவிட்டன.



ஐரோப்பியக் குடியேற்றத்தால் பூர்வகுடி மக்கள் அடைந்த துயர் அதிகம். அம்மக்கள் அதுவரை அறிந்திராத புதுப்புது நோய்களும், வாழ்விட அபகரிப்பும், வந்தேறிகளுக்கு எதிரானப் போராட்டங்களும் அவர்களுடைய மக்கள்தொகை பெருமளவில் குறையக் காரணமாயின. 1788 முதல் 1930 வரையிலான தாயக மண்மீட்கும் தொடர் போராட்டங்களில் உயிரிழந்த பூர்வகுடியினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கு மேல் இருக்கலாம். ஐரோப்பியர் தரப்பில் இரண்டாயிரம். 1700-களில் ஏழு இலட்சமாக இருந்த பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 1900-இல் வெறும் 93,000 –ஆக குறைந்துபோனது.

ஆக்கிரமிப்பை முறியடிக்க இயலாது என்பது முற்றிலுமாய்ப் புரிந்துபோன நிலையில் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தன. நதியின் வெள்ளத்தை எதிர்க்கமுடியாதபோது வெள்ளத்தின் போக்கிலேயே போய் கரை சேர முயல்வதைப் போல் பூர்வகுடி மக்களும் ஆதிக்கவாசிகளின் போக்கிலேயே சென்று தங்கள் இனத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியைக் கையாண்டனர். குறைந்துகொண்டு போன பூர்வகுடியினத்தின் மக்கள்தொகை மளமளவென்று பெருகி இன்று மறுபடியும் ஏழு இலட்சத்தைத் தொட்டிருப்பதற்கு அந்த சமயோசிதமே காரணம். எழுத்துமொழியில்லா அவர்கள் தங்களுடைய இலக்கியத்தைப் படைக்க ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டனர். ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் அநேக பூர்வகுடி இனங்களைப் பிணைக்கும் மொழியும் அதுவாகவே ஆகிப்போனது. 



வாழவந்த மண்ணை தங்கள் சொந்த மண்ணாகவே எண்ணிய ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல்மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். அதன் மூலமாக ஒரு நாட்டின் இயற்கைச்சூழலும் அது சார்ந்த உயிரின வாழ்வும் பாதிப்புக்கு ஆளாகி உயிரியல் சமன்பாடு சீர்குலைய நேரும் என்ற பிரக்ஞை இல்லாது எங்கெங்கிருந்தோ இங்கு கொண்டிறக்கப்பட்டவை யாவும் பல்கிப் பெருகியதோடு, வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இன்று அவர்களுக்கே ஒரு பெரும் தலைவலியாய் விளங்குவதுதான் விநோதம்.

ஊர்ப்பிடாரிகளை விரட்டிய ஒண்டவந்த பிடாரிகளைப் பற்றி இங்கு தொடர்ந்து எழுதவிருக்கிறேன். ஐரோப்பியரைப் பற்றி சொல்லியாகிவிட்டது. அடுத்ததாய் அவர்கள் இங்கு அறிமுகப்படுத்திய விலங்குகளுள் ஒன்றான ஒட்டகம் பற்றி சொல்லப்போகிறேன். என்னது? ஆஸ்திரேலியாவில் ஒட்டகமா என்று மலைக்கிறீர்களா? ஆம். ஒட்டகம்தான். ஒட்டகம் என்றால் கொஞ்சநஞ்ச எண்ணிக்கை அல்ல, உலகிலேயே அதிக அளவில் ஒட்டகங்கள் இருக்கும் நாடு என்ற பெருமைக்குரியது ஆஸ்திரேலியா. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்) 
(படங்கள்: நன்றி இணையம்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 2 (ஒட்டகங்கள்)

19 February 2015

மயிலே.. மயிலே.. உன் தோகை எங்கே...

மயில்களை ஆஸ்திரேலியாவில் பார்ப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அதுவும் கூண்டுக்குள் அடைபடாது சுதந்திரமாய் சுற்றித்திரியும் அழகுத்தோகை ஆண்மயில்களும் அவற்றை விடவும் வெகு மெத்தனமாய்த் திரியும் பெண்மயில்களுமாய்.…ஒரு நாளை மிக அழகாக்கிவிட்டன. 

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சார்ந்த பூங்கா அது. ஏராளமான பறவைகளின் சத்தத்தை மீறி ஒலித்த க்காவ்…. க்காவ்.. என்னும் அகவல் ஓசை இப்போதும் கூட காதில் ஒலிக்கும் அற்புதம். 

புதுப்புடவையின் ஓரம் அழுக்காகாதவண்ணம் மெலிதாய் கொசுவத்தைத் தூக்கிப்பிடித்து நடக்கும் பெண்கள் போல ஒரு சமயம் அவ்வளவு நீளத் தோகையை வெகு லாவகமாகத் தூக்கிக்கொண்டு நடக்கும் ஒய்யாரம்… அப்படியே அழுக்கானால்தான் என்ன என்று அலட்சியமாய் தழையத்தழைய நடக்கும் பெண்டிரைப் போல தோகையைத் தரையில் தழையவிட்டு நளினமாய் சிலநேரம்… 

ஆடு மயிலே ஆடு மயிலே என்று கெஞ்சும் அறியாமையை ரசித்தபடி அவை பாட்டுக்குப் போகின்றன வருகின்றன. அங்கே க்ளிக்கியதில் கொஞ்சம் நீங்களும் ரசிக்க… 












15 February 2015

ஒரு கூடு உருவாகிறது


இங்கே பரவலாய்க் காணப்படும் கருங்குருவியிது...
 பக்கத்து வீட்டின் மேற்கூரையோரம் உருவாக்குகிறதொரு கூடு! 


















கலையரசி அவர்களின் ஊஞ்சலில் என்றாவது ஒரு நாள்



ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும் குழந்தையின் 
உற்சாக உள்ளத்தோடு நான்...




என்றாவது ஒரு நாள் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் என் மதிப்புக்குரிய மற்றுமொரு தோழமையுறவு கலையரசி அக்கா.  நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்து அவர்கள் அளித்துவரும்  ஊக்கமும் உந்துதலும்தான் இன்றென்னை இணையத்தில் ஓரளவுக்கு பரிச்சயப்பட்ட பதிவராய் எழுத்தாளராய் வலம் வரச் செய்திருக்கின்றன. அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

என்றாவது ஒரு நாள் நூல் விமர்சனத்தை தன்னுடைய ஊஞ்சல் தளத்தில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு கதையையும் அவர்கள் சிலாகித்திருக்கும் விதமே கதையை அவர்கள் எந்த அளவு ஊன்றி வாசித்திருக்கிறார்கள் என்பதையும் மூலக்கதைகளின் கருவை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாகக் காட்டுகின்றன. 










 


10 February 2015

மணிமேகலாவின் அட்சயப்பாத்திரத்தில் என்றாவது ஒரு நாள்!



ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்ட கதைகளின் தொகுப்பான என்றாவது ஒரு நாள் என்னும் என் புத்தகத்தில் நன்றியுரையில் இடம்பெற்றிருக்கும் தோழி மணிமேகலாவை பலர் அவருடைய வலைத்தளமான அக்ஷ்ய பாத்திரம் வழியே அறிந்திருக்கக்கூடும். தமிழ், தமிழர், சமூகம், பெண்கள், வாழ்க்கை போன்ற பல்வேறுபட்ட சிந்தனைக்களம் சார்ந்த அற்புதமான மற்றும் ஆழமான எழுத்துக்களின் சொந்தக்காரியான அவருடைய சிநேகம் கிடைத்த நாளிலிருந்து என்னுடைய இன்னொரு புதிய பரிமாணம் எனக்குப் பரிச்சயமானது எனலாம்.

ஆஸ்திரேலிய காடுறை கதைகளை நூலாகத் தொகுக்கும் முயற்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் தோழி மணிமேகலா. என் புத்தகம் எப்போது வரும் என்று காத்திருந்து பெற்றுக்கொண்டபோது அவருடைய உற்சாகம் புரிந்தது. ஒரு வார அவகாசத்தில் முழு புத்தகத்தையும் வாசித்துமுடித்து, கையோடு தன் சந்தோஷ உணர்வுக்குவியலைப் பகிர்ந்துகொண்டபோது உள்ளம் கரைந்துபோனது. தேர்ந்தெடுத்த கதைகளையும், தமிழாக்கிய திறத்தையும் சிலாகித்த அவர், அந்தக் கதைகளினூடே தான் அந்தக்காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வைப் பெற்றதாகவும் அதிலிருந்து மீளமுடியாமல் நிகழுலகு வரவியலாமல் தவிப்பதாகவும் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.

இப்போது தன் வலைப்பூவான அக்ஷ்ய பாத்திரத்தில் அமுதென வழங்கியிருக்கிறார் நூலின் மீதான தன் விமர்சனத்தை. எந்த ஒளிவு மறைவுமில்லாமல் குறை நிறைகளோடு கூடிய மனந்திறந்த அவரது விமர்சனம் அடுத்தடுத்தப் படைப்புகளின் மீதான என் சிரத்தையைக் கூட்டுமென்பதில் சந்தேகமில்லை.

தோழி மணிமேகலாவின் விமர்சனத்தை வாசித்திட இங்கு வாருங்கள்


வாசிப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளரோடு மூல ஆசிரியரின் உணர்வுகளையும் மிக அழகாக உணர்ந்ததோடு அவற்றை அனைவரும் அறியத் தந்துள்ள தோழியின் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன், அன்புக்கு பதில் அன்பைத் தருவதைத் தவிர! நன்றி மணிமேகலா.


8 February 2015

மன்னியுங்கள் என்னை...



மன்னியுங்கள் என்னை
இதுவரை எழுதியவற்றுக்காகவும்
எழுதவியலாமற் போனவற்றுக்காகவும்
இப்போது எழுதவிருப்பவற்றுக்காகவும்
இனி ஒருபோதும் என்னால் எழுதப்படாதிருப்பவற்றுக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
பூத்துக்குலுங்கும் மரங்களுக்காகவும்
பூக்கள் வழங்கும் கனிகளுக்காகவும்
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
பொன்னுக்கும் நீருக்கும் ஊற்றுக்குமாய்..

மன்னியுங்கள் என்னை
தேயும் நிலவுக்காகவும்
மறையும் கதிருக்காகவும்
உயிர்களின் சலனத்துக்காகவும்
ஜடங்களின் நிச்சலனத்துக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
வண்ணங்கள் குழைத்த வையத்துக்காகவும்
குருதியில் கூட்டிய செந்நிறத்துக்காகவும்
வனங்கள் நிறைத்த இலைகளுக்காகவும்
வானம் நிறைத்த மழைக்காகவும்
மணல் நிறைத்த விண்மீன்களுக்காகவும்
நீலம் நிறைத்த கனவுகளுக்காகவும்!

மன்னியுங்கள் என்னை
அர்த்தங்களைப் பொதித்த வார்த்தைகளுக்காகவும்
அந்நாட்களைப் பொதித்த வரலாற்றுக்காகவும்
நேற்றில் ஒளிந்திருந்த இன்றைக்காகவும்
இன்றில் ஒளிந்திருக்கும் நாளைக்காகவும்
அபிநயங்களால் பரதத்தையும்
அடையாளங்களால் பிரபஞ்சத்தையும் நிறைத்த
பரம்பொருளைப் படைத்தமைக்காகவும்.

மன்னியுங்கள் என்னை
நிலம் பிளக்கும் பூகம்பத்துக்காகவும்
சுழன்றடிக்கும் சூறைக்காற்றுக்காகவும்
பற்றியெரியும் காட்டுத்தீக்காகவும்
கொந்தளித்து சீறும் பெருங்கடலுக்காகவும்.

இப்பூமியொரு பழுதடைந்த எந்திரம்!
அதை சீராக்க வந்தவனல்லன் நான்!
நானொரு நாடிழந்த மன்னன்
ஆயுதமிழந்த கடவுள்
நாவிழந்த வாழ்வு

உங்கள் தலையைக் காவுகேளாத
கடவுளைக் கண்டுபிடியுங்கள்.
பயந்தொலைத்த மனிதனைக் கண்டுபிடியுங்கள்
அகரந்துவங்கியொரு அருமொழியைக் கண்டுபிடியுங்கள்.

*********************

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு பிரபல மலையாளக்கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்கள் சமர்ப்பித்துள்ள மலையாளக் கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தைப் (மொழியாக்கம்: கே.சச்சிதானந்தன்) பகிர்ந்துகொண்ட முகநூல் தோழி கவின்மலர் அவர்களுக்கும் அதைத் தமிழாக்கத் தூண்டிய நண்பர் பேனா மனோகரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆங்கிலக் கவிதை கீழே…

PARDON
------------
- K. Satchidanandan

Pardon me
for what I have written,
for what I could not write,
what I am likely to write
and what I may never write.

Pardon me for the trees’ flowering,
for the flowers’ fruiting,
for having hoarded so much of
gold and water and spring
inside the earth.

Pardon me for the waning moon,
for the setting sun,
the movement of the living,
the stillness of the non-living.

Pardon me for filling earth
with so much of colour,
blood with so much red,
leaf with forest,
rain with sky,
sand with star
and ink with dreams.

Pardon me for filling words
with so much meaning,
dates with so much of history,

for having hidden today inside yesterday
and tomorrow inside today,
for creating the Creator
who fills gestures with dance
and nature with symbols.

Pardon for the earthquake
and the tempest,
the wild fire and the raging sea.

Earth is a damaged machine.
I am not the one to repair it.
I am the king without a country,1
the god without a weapon,2
life without a tongue.

Invent a god
that doesn’t ask for your head.
Invent the fearless man.

Invent
language,
alphabet.


1 February 2015

மண்ணாசையோடீ...




நெஞ்சுக்குழிக்கும் தொண்டைக்குழிக்குமாய்
ஊசலாடும் அந்திம சுவாசத்தின் மர்மத்திறவுகோல் பற்றி
அங்கு எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
குற்றவுணர்வில்லாமல் கொலை செய்வதெப்படியென
கற்றுத்தேர்ந்தவர்களையழைத்து கலந்தாலோசித்தார்கள்…

அறுபட விரும்பாது அலையும் அவ்வான்மாவின்
அறுதி இழையின் ரகசியப்பற்று குறித்து
ரகசியமாய்க் கூடி விவாதித்தார்கள்.
பதினேழு பெற்று பத்தைப் பறிகொடுத்து
மிச்சத்தின் மூலம் வம்சத்தின் எச்சம் வளர்த்தவளுக்கு
மற்றென்ன ஆசையிருக்கமுடியுமென்று
மாய்ந்து மாய்ந்தொரு முடிவுக்கு வந்தார்கள்.

பொன்னைக் கரைத்தூற்றியும் போகாத உயிரை வியந்து
மண்ணைக் கரைத்தூற்றி மரணம் தருவித்தார்கள்.
நா நுனியில் காத்திருந்த ஒப்பாரியோடு
நடுநிசியில் மாரடித்து அழுகிறார்கள்.

அடியம்மா… மண்ணுக்குப் போகும் வயதில்
மண்ணாசையோடீ உன்னைப் பிடித்து நிறுத்தியது என்று
மூக்கைச்சிந்தி முந்தானையில் துடைக்கிறார்கள்.

&&&&

(படம் : நன்றி இணையம்)