24 November 2017

விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா?


 

குட்டிக்கதைகள் பல சொன்னேன்
சுவைத்து நீயும் கேட்டிருந்தாய்
விடுகதைகள் சில சொல்வேன்..
விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா

விடுகதைகள் புதிர்கள் என்றால்
மிட்டாய் போல இட்டம் அண்ணா
விடுவிடுவென்று கேட்டிடுவாய்
நொடியில் பதிலைத் தந்திடுவேன்...

தொப்பி போட்ட பொடியன்
பெட்டிக்குள்ளே தூங்குவான்
பொழுது சாய்ந்தபின் எழுவான்
எழுந்ததும் எரிந்து சாவான்

குட்டிக்குட்டி தீப்பெட்டியில்
தூங்கும் பொடியன் தீக்குச்சியாம்
சட்டென்று பதில் சொன்னேனா..
சடுதியில் அடுத்தது கேளண்ணா

வளைகரத்தால் இழை திரித்து
நித்தம் பெண்டிர் நெய்யும் தடுக்கு
விரித்தால் சுருட்டமுடியாது
வேறிடம் பெயர்க்க இயலாது

வாசல் கூட்டி சுத்தம் செய்து
வண்ணக்கலவைகள் பல சேர்த்து
ஆசையாய் அக்கா இடுகின்ற
அழகுக் கோலம் அது அண்ணா

உருவமில்லா உடம்புக்காரன்
ஒரு டஜன் சட்டைக்கு சொந்தக்காரன்
ஒற்றை சட்டையை அவிழ்த்தாலும்
உடனே அழவைக்கும் ஆத்திரக்காரன்

சாம்பார் மணக்கச் செய்திடுவான்
சமையலில் ருசியைக் கூட்டிடுவான்
காய்கறி வகையுள் வந்திடுவான்
வெங்காயம் என்னும் பெயருடையான்

ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்

முகமொன்றில் கண்ணிரண்டு
கண்ணிரண்டில் பார்வையொன்று
சொன்ன பதில் சரியென்றால்
சீக்கிரம் கேள் அடுத்ததை அண்ணா

காட்டிலே வளர்ந்திருப்பாள்
கந்தலாடை அணிந்திருப்பாள்
முத்துப்பிள்ளைகள் பெற்றெடுத்து
முடங்கிப்போவாள் அவள் யார்..

சுட்டாலும் சுணங்கமாட்டாள்
அவித்தாலும் அனத்தமாட்டாள்
மாலையில் அம்மா தின்னத்தரும்
சோளக்கதிர்தானே அது அண்ணா..

சோறு குழம்பு கறியெல்லாம்
ஆசையாய் கையில் அள்ளிடுவான்
ஒற்றைக் கவளம் தின்று ருசிக்க
வாயுமில்லைவயிறுமில்லை..

அள்ளி அள்ளி எடுத்ததெல்லாம்
அடுத்தவர்க்குப் பரிமாறிடுவான்
அகப்பை கரண்டி என்பதெல்லாம்
அவனுக்கு நாமிட்ட பெயர்களன்றோ

வீட்டின் வெளியே அண்ணனை
விருந்தினர் கை தொட்டுவிட்டால்
உள்ளே இருக்கும் அன்புத்தம்பி
ஓஹோவென்று அலறித் தீர்ப்பான்

அழைப்புமணி அன்புத் தம்பியாம்
அழுத்தும் பொத்தான் அண்ணனாம்
இருவரும் இணைந்து வேலைசெய்தால்
விருந்தினர்க்கு நல்வரவேற்பாம்

நூறு விடுகதைகள் கேட்டாலும்
நொடியில் விடை கிட்டும் என்றாய்
சொன்னது போலவே செய்தாய்
நன்று தம்பி நலமாய் வாழ்க.