27 May 2012

காய்க்காத மரம்




 பால்கனியில் எட்டிப்பார்த்த தென்னங்கீற்றின் மேலேறியும் இறங்கியும் சரசரவென்று ஓடிவிளையாடிய அணில்களைப் பார்த்தவுடன் சோர்ந்திருந்த மனதுக்குள் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மைதிலி சத்தமின்றி சன்னலோரம் வந்து அவற்றை வேடிக்கை பார்க்கலானாள்.  

தினமும் பார்க்கும் காட்சிதான் என்றாலும் இன்றும் பார்க்கத் தோன்றியது. குழந்தைகளின் குதூகலத்தைப்போல் ஒவ்வொருநாளும் சலிக்காமல் என்னமாய் விளையாடுதுகள்? காதலுடன் ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடும் அழகே அழகு. முன்னால் ஓடிய மல்லி சற்றே நின்று பின்னால் வரும் மாதுவைப் பார்த்தது. ஆமாம், மைதிலி அந்த அணிற்சோடிக்கு அப்படிதான் பெயரிட்டிருந்தாள்.  

சம்பத்திடம் சொன்னபோது அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. வீடே அதிரும்படி ஓஹோவென்று சிரித்தான். அப்படியே சிரித்துவிட்டுப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. கீழே ஓடிப்போய் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்ல... வேலைக்காரி சுப்பு உட்பட எல்லோரும் அவளைக் கேலியாகப் பார்த்து சிரித்தபோதுதான் வெட்கம் பிடுங்கித் தின்றது.  

சே! என்ன மனுஷன் இவன்? பெண்டாட்டி கிசுகிசுப்பாய் சொன்னதை இப்படியா பகிரங்கப்படுத்தி கேலி செய்வது? காற்றிலாடி ஊடியும் உறவாடியும் கதைபேசிய கயிறுகளுக்குப் பெயரிட்ட பாரதியைக் கேள்விகேட்பாரில்லை. அணிற்குஞ்சுகளுக்குப் பெயரிட்ட என்னைக் கேலி பேசுகிறார்கள். ஹும்!  

மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தபோது அத்தையின் பேச்சு வெடுக்கென்று அவள் மானத்தைப் பறித்துக் காற்றில் பறக்கவிட்டது. 

"ஆமாம், ஒரு பிள்ளையைப் பெத்து பேர்வைக்கத் துப்பில்லை... அணிப்பிள்ளைக்குப் பேர் வைக்கிறாளாமா?" 

சுருக்கென்று தைத்தது. தைக்கட்டும் என்றுதான் பேசியிருப்பாள் என்பதும் புரிந்தது.  

சம்பத்தைத் தேட அவன் யாருடனோ வாசலில் பேசும் குரல் கேட்டது. சற்று நேரத்தில் உள்ளே வந்தவன், 

"அப்பா... நாடார் வந்தாரு. மரத்தையெல்லாம் பாத்தாராம். அடுத்தவாரம் வந்து ரம் வச்சிட்டுப் போறேன்னாரு... எவ்வளவு ஆவும்னேன். அம்மாவுக்குத் தெரியும்னுட்டாரு... நீங்களே பாத்துப் பேசிக்கோங்க..." 

"சம்பத்து... அவருகிட்ட இந்த மூணாந்தென்னைமரம் பத்திக் கேட்டியாடா?" 

"இல்லயே, என்னப்பா கேக்கணும்?" 

"என்னடா இப்படிக் கேக்குறே? மூணு வருஷத்துல காய்க்கும்னு வச்சது. கூடவச்ச மரமெல்லாம் காச்சிக் குலுங்குது. இதுமட்டும் இன்னமும் கன்னி கழியாத புதுப்பெண்ணாட்டம் அப்படியே நிக்கிது. சனியன் புடிச்சதை வெட்டிட்டு புதுசு நட்டிருந்தாக்கூட இந்நேரம் பாளை கட்டியிருக்கும். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாம இப்படி வெட்டியா நிக்கிது!" 

அத்தை தென்னை பற்றிப் பேசுகிறாளா? தன்னைப் பற்றிப் பேசுகிறாளா? மைதிலி குழப்பத்துடன் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். அரிந்த காய்கறிகளை எடுத்துப்போகவந்த சுப்பு, மைதிலியின் கண்ணீரின் காரணம் வெங்காயமா? மனக்காயமா? என்றறிய அவள் முகத்தையே பார்த்தாள். 

வேலைக்காரியின் பரிதாபப்பார்வையைப் புறந்தள்ளி தன் வேலையைத் தொடர்ந்தாள். மைதிலி வேறென்ன செய்வாள் 

அம்மா சொன்னாள், 'நம்ம வம்சத்துக்கு எழுதிவச்ச விதி இதுதான் போல... எல்லாருக்கும் லேட்டாதான் பிள்ளை உண்டாவுது. ஆனா ஒருத்தருக்கும் பிள்ளை இல்லாமப் போகலை... உன் சித்தி மகள் ரேவதிக்கு ஏழு வருஷம் கழிச்சுதான் தரிச்சிது... பாண்டுவுக்கு ஆறு வருஷம்... ஏன் ... நம்ம பெரியாத்தா பேரனுக்கு........" 

உடனடியாய்ப் பிள்ளை உண்டானவர்களை கவனமாய்த் தவிர்த்து அங்குமிங்குமான உதாரணங்களைத் தேடிப்பிடித்துக் காட்டி அவளுக்கு ஆறுதல் சொன்னாள். மைதிலிக்கும் ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? அதற்காக இல்லாததை நினைத்து ஏங்கி, இருக்கிற வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்வதா? 

அத்தைதானே, பேசினால் பேசட்டும், பாவம் ஒரே மகன், அவன் வாரிசைப் பார்க்க அவர்களுக்கும் ஏக்கம் இருக்காதா? பேரப்பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சி விளையாட ஆசை இருக்காதா? 

மனதைத் தேற்றிக்கொண்டிருந்தவேளையில்தான் அத்தை அந்த திடுக்கிடும் யோசனையை முன்வைத்தாள். 

"ஏன்டா சம்பத்து... இந்த சனியன் பிடிச்சதை வெட்டியெறிஞ்சிட்டா என்ன?" 

"எந்த சனியனைம்மா?" 

"ம்? பூவும் வைக்காம காயும் வைக்காம வெட்டியா நிக்குதே ஒண்ணு. தண்ணிக்கும் ரத்துக்கும் பிடிச்ச கேடு! அதைத்தான்!". 

"ஆத்தீ.... அடுக்குமா இது?" சுப்பு அதிர்ச்சியுடன் மேவாயில் கைவைத்துக் கேட்டாள். 

"டீ... நீ சும்மா இரு! எல்லாத்துக்கும் ஏடாகூடமா எதாவது சொல்லிகிட்டு!" அத்தை அவளை அடக்கினாள். 

"எத்தன வருசமா பாத்தாச்சி? வெட்டிடவேண்டியதுதான். அடுத்தவாரம் நாடார் வரும்போது சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன்!" அத்தை முடிவெடுத்துவிட்டாள். 

தென்னைமரத்தை வெட்டவேண்டாமென்று எத்தனைக் கெஞ்சியும் பயனில்லை. மலட்டு மரத்துக்கு சிபாரிசு என்னவென்று ஆயிரம் குத்தல்பேச்சுகளைத் தவிர வேறெந்த எதிர்வினையும் உண்டாகவில்லை. 

மைதிலிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் சன்னலருகில் நின்று தென்னங்கீற்றிடுக்கில் கண்ணாமூச்சியாடும் நிலவினைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். மனம் தன்னிச்சையாய்ப் பிதற்றத் தொடங்கியிருந்தது. 

காய்ப்பற்றத் தென்னையே!
காய் பற்றாக்காரணத்தால்
காப்பாற்ற ஆளின்றிப்போனாயோ?
காத்திருந்து காத்திருந்து
கண் பூத்தது, தென்பூக்கவில்லையென்றே
காரணம் சொல்லி வேரொடு வீழ்த்த
காலக்கெடு குறித்துவிட்டார்! 

எத்தனை உரமிட்டாயிற்று,
எத்தனைக் களையெடுத்தாயிற்று,
எத்தனை வருடமாயிற்று,
எத்தனை விடுவதாவென்று
எத்தனை முஸ்தீபுகள்? 

சொரணை கெட்ட மரமே!
சட்டென்று பாளை வையேன்
எரியும் வயிற்றில் பாலை வாரேன்,
என்னோடு உறவாடிய நீ
என்னெதிரே வேரற்று வீழ்வதை
விழிகொண்டு காண இயலுமோ? 

உனக்காய் இரங்கும்வேளையில்
உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு!
உனைப்போலவே எனக்கும்
உறவறுக்கும் தேதியொன்று
உறுதியாகக் குறிக்கப்படுமோ?


பால்கனிக் கதவைத் திறந்து வெளியில் வந்தாள். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. தென்னங்கீற்று சடசடப்புடன் மேல்ல அவள் தோளை உரசியகன்றது. அகன்றதை எட்டிப்பிடித்துக்கொண்டு கன்னத்துடன் உரசியபடியே கண்மூடி அதன் முரட்டு ஸ்பரிசத்தை அனுபவித்தாள்.  

திருமணமாகி வந்த இந்த நான்கு வருஷமாய் தன்னுடன் உறவாடிய மரம்! தேனிலவு அனுபவித்த காலங்களில் சம்பத் தன்னிடம் செய்த குறும்புகளை அக்கம்பக்கம் அறியாமல் மறைத்து அந்தரங்கம் காப்பாற்றிய மரம். இப்போது வளர்ந்துவிட்டது, என்றாலும் இன்னமும் கீற்றுகளைத் தவழவிட்டு தன் தோள் தடவி ஆறுதல் தந்துகொண்டிருக்கும் மரம்.. 

வீட்டைச் சுற்றிலும் ஏழு தென்னைகள் இருந்தாலும் இந்தமரம் மட்டும்தான் இவள் தொட்டுப்பேச இடங்கொடுத்த மரம். பக்கத்துவீட்டைப் பார்த்தாற்போலிருந்த இவர்களது அறையின் பால்கனியை ஒட்டி வளர்ந்திருந்த அம்மரத்தை மூணாம் மரம் என்றுதான் குறிப்பிடுவர். கொஞ்சநாளாய் இரண்டு அணிற்சோடிகளின் வருகையும் அதிகரிக்க, மைதிலிக்கு ஒவ்வொருநாளும் ஓய்வுப்பொழுதில் தன்னறைக்குவந்து அவற்றை ரசிப்பதே வாடிக்கையாயிற்று. அந்த அணில்களைப் பார்க்கும்போது தானும் சம்பத்தும் சந்தோஷமாய்க் கழித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.  

இரண்டும் இவளைக் கண்டால் முதலில் பயந்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போது இவளை அவ்வளவாய் லட்சியம் செய்வதே இல்லை. இரண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டன. கூடு கட்டுவதில் இரண்டும் பிஸி. எப்போது பார்த்தாலும் பஞ்சு, தேங்காய் நார் எதையாவது வாயில் வைத்துக்கொண்டுமரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தவற்றை.....  

ஐயோ..... இப்போதுதான் மைதிலிக்கு ஞாபகம் வந்தது. அடக்கடவுளே! இரண்டும் இந்த மரத்தில்தானே கூடு கட்டின? மரத்தை வெட்டிவிட்டால் அவற்றின் கதி? கூடு கட்டிமுடித்து குட்டிகள் ஈன்றிருக்குமா? என்ன செய்வது இப்போது? நினைக்கவே நெஞ்சம் பதறியது. 

காலையில் சம்பத்திடம் மெல்ல பேச்சைத் துவக்கினாள். 

"ஏங்க, இந்த மூணாம்மரத்தை வெட்டுறதை அத்தைகிட்ட சொல்லி கொஞ்சநாள் தள்ளிவைக்க முடியுமா?" 

"ஏன்?" 

"இல்ல.... அந்த மரத்திலதான் அணிப்பிள்ளைங்க கூடு கட்டுது. அதான்..." 

"அதனால என்ன?" 

அதனால் என்னவா? இப்படிக் கேட்பவனிடம் எப்படிச் சொல்வது? 

"குட்டி போட்டிருக்கும்னு நினைக்கிறேன். அணில்கூட்டைக் கலைச்சி அதோட புள்ளைங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா அப்புறம் அந்தத் தாய் படற வேதனையைப் பாக்க என்னால் முடியாதுங்க. கொஞ்சநாளானா அதுங்க வளர்ந்து வெளியில போயிடும். அப்புறமா...." 

"மைதிலி, இதை எப்படி அம்மாகிட்ட சொல்லமுடியும்? எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணி ஆளுக்கு சொல்லிவிட்டாச்சி. இப்ப போய் சொன்னா.... அம்மா கடுப்பாயிடுவாங்க, அதுவுமில்லாம அதைச் சொல்றதுக்கும் ஒரு தகுதி வேணாமா?” 

"என்ன தகுதி வேணும்?" 

சம்பத் மெளனமாயிருந்தான்.  

"சொல்லுங்க, என்ன தகுதி வேணும்? ஒரு மனுஷியா இருக்கிறேனே, இது பத்தாதா? பிள்ளை பெத்திருந்தாதான் தாய்மை பத்தி தெரியுமா? இல்ல.. தாய்மை பத்திப் பேச அருகதை இருக்கா? என்ன சொல்லவரீங்க?" 

பதில் சொல்லாமல் விடுவிடுவென்று மாடிப்படிகளில் இறங்கிப்போனவனின் பின்னாலேயே மைதிலியும் விரைந்தாள். 

ஏய், காலையிலேயே என்ன அவன்கிட்ட நச்சரிப்பு?" 

சாமியே வந்து கேட்கும்போது இடையில் பூசாரியிடம் என்ன கெஞ்சல்? 

"அத்தே... தென்னமரத்தை ஒரு பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு வெட்டச் சொல்லமுடியுமா?" 

"அதுக்குள்ள அந்தமரம் என்னத்தைக் கிழிக்கப்போவுது?" 

"அந்த மரத்தில அணில் கூடு கட்டியிருக்கு... அது..." 

"ஏண்டி, ஒரு புள்ளய தக்கவைக்கத் துப்பில்ல, அணிப்பிள்ளைக்கும் தென்னம்பிள்ளைக்கும் வக்காலத்து வாங்குறே?" 

"நல்லாக் கேளும்மா, இதைத்தான் நானும் சொன்னேன்." 

கோடரி தென்னையை வீழ்த்துமுன் வார்த்தைகள் இவளை வீழ்த்தின. அத்தையிடமிருந்து அடிக்கடி வெளிப்பட்டு முனை மழுங்கியிருந்த பழிபேசும் ரம்பத்தைவிடவும் சம்பத்திடமிருந்து புதிதாகப் புறப்பட்ட நன்கு கூர்தீட்டப்பட்ட வார்த்தைக்கோடரி அவளது எதிர்கால நம்பிக்கையை ஒரே வெட்டில் துண்டாக்கியது. இத்தனைநாள் எங்கு மறைத்துவைத்திருந்தான் இவ்வாயுதத்தை? எப்போது சாணைபிடித்தான்? தக்க சமயம் பார்த்து உபயோகித்துவிட்டானே! 

மைதிலி நிலைகுலைந்துபோனாள். பித்துப்பிடித்தவள்போல் வளையவந்தவளைத் தேற்றவும் ஆளில்லை. 

வீம்புக்காகவே வேலைகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமாய் நடைபெற்றன. பக்கத்துவீட்டுப் பக்கம் சாய்ந்துவிடாமல் மரம் உள்நோக்கி இழுத்துக்கட்டப்பட்டது. மல்லியும் மாதுவும் தங்கள் எதிர்ப்பையும் பயத்தையும் காட்ட உச்சஸ்தாயியில் கத்திக் கூப்பாடிட்டுக் கொண்டிருந்தன. உதவிக்கு இவளை அழைக்கின்றனவோ?

மைதிலி அறைக்குள் முடங்கிப்போயிருந்தாள். அடிவயிற்றுக்குள் ஒரு பிரளயமே உருவாகிக்கொண்டிருந்தது. ஐயோ... மல்லி! சும்மா இரேன்! என்னால் தாங்கமுடியவில்லையே.... மாது.... ஏண்டா என்னைப் படுத்தறே! 

மட்டேர் மட்டேர் என்று கோடரிச் சத்தம் மரத்துடன் இவள் இதயத்தையும் சேர்த்தே பிளந்தது. 

சடசடவென்ற சத்தத்துடன் முறிந்து விழுந்தது மரம். 

பால்கனிக் கதவைத் திறந்து பதைப்புடன் எட்டிப்பார்த்தாள் மைதிலி. 

தென்னை தலை கொய்யப்பட்டும் உடல் துண்டுகளாக்கப்பட்டும் ஒரு போர்க்களத்து வீரனைப் போல் சிதறிய அங்கங்களுடன் ஆங்காங்கே கிடந்தது. பஞ்சுப்பொதிபோல் கிடந்த அணிற்கூட்டை காக்கைகள் முற்றுகையிட்டிருந்தன. மல்லியையும் மாதுவையும் தேடினாள் மைதிலி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணவே இல்லை. 

அவள் மனம் கொண்ட வெறுமையை பால்கனி பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

(படம் உதவி: இணையம்)

17 May 2012

கவிதைக்கொத்து!


பறவையில்லாக்கூடு


பறக்கக் கற்றுக் கொண்டன,
பறவைக் குஞ்சுகள்!
பள்ளி வாழ்வைத் துவங்கிவிட்டனர்,
மழலைப் பிஞ்சுகள்!
வெறுமையாகிப் போயின,
வீடும், கூடும்!

********************** 

பாசம்

விலைபேசி விற்ற பசுவை
தொழுவம் விட்டு வெளியேற்றவிடாமல்
வழிமறித்துக் காவலிருக்கும்
வளர்ப்பு நாய்! 
******************* 
காகிதக் கப்பல்

இந்தப் பெருமழைக்குத்
தாங்குமோ, தாங்காதோ
சிறுமண் குடிசையென்றே
அப்பனும், ஆத்தாவும்
விசனப்படும் விசயமறியாமல்,
ஓடும் நீரில் கப்பல் விட,
காகிதம் கேட்டு
அடம்பிடிக்கின்றனர்,
அவர்தம் அன்புப் பிள்ளைகள்! 
*********************
காத்திருப்புகள்

பொழுது புலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, பூக்கள்;
பூக்கள் மலர்வதற்காகக்
காத்திருக்கின்றன, தேனீக்கள்;
தேனீக்கள் கொணர்வதற்காகக்
காத்திருக்கிறது, தேனடை;
தேனடை நிறைவதற்காகக்
காத்திருக்கிறான், ஒருவன்;
அவன் வருகைக்காகக்
காத்திருக்கிறது,
அவனது குடும்பம்,
பசித்த வயிறுகளோடு!
****************************
குழந்தையின் தேடல்

ஒவ்வொரு அரிசியிலும்
அதற்கு உண்டானவரின் பெயரிருக்கும்
என்றாள் அம்மா!
தந்தை வாங்கித்தர மறுத்தபின்னும்
தேடுகிறது குழந்தை,
எந்தப் பஞ்சுமிட்டாய்ப் பொட்டலத்தில்
தன் பெயர் இருக்கக்கூடும் என்று!
 *****************************
(படங்கள் தந்துதவிய கூகுளுக்கு நன்றி)

8 May 2012

அவன் கவலை அவனுக்கு!



புடவைக்கட்டைப் பிரித்த நிமிடம் அகலவிரிந்த வாணியின் கண்கள் இமைக்கவும் மறந்துவிட்டிருந்தன. அவளைச் சுற்றிலும் வண்ணங்களை வாரியிறைத்ததுபோல் புடவைகள்! புடவைகள்! புடவைகள்! 

வேலு ஒவ்வொன்றையும் விரித்துப் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தான்.புடவைகளுக்கு என்னென்னவோ புதுப்புதுப் படங்களின் பெயர் சூட்டியிருந்தான். வாணிக்கு சிரிப்புதான் வந்தது. இப்போதைய திரைப்படங்களில் எந்தக் கதாநாயகி புடவையணிந்து வருகிறாள்? வேலு நன்றாகவே பூச்சுற்றுகிறான் என்று அறிந்தபோதும் அவனைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த மாதம் புடவை வாங்கக் கூடாது என்று வாணியும் எத்தனையோ முறை சபதம் எடுத்துவிட்டாள். எல்லாவற்றையும் வேலு நிமிடமாய் உடைத்துவிடுவான். 

"இந்த மாசம் வேணாம், வேலு! பீரோ நிறைய புடவை அடுக்கிவச்சிருக்கேன்னு அவர் கத்தறார். அடுத்த மாசம் வாயேன்!" 

"அட, என்னாக்கா, நீ? உன்னை யாரு எடுக்கச் சொல்லுறா? சும்மாப் பாரேன். புதுப்புது டிசைனெல்லாம் வந்திருக்கு!" 

"வேணாம், வேலு! நீ பிரிச்சின்னா நான் வாங்கறமாதிரி ஆயிடும்!" 

"வாங்கிக்கயேன். பணத்த மெதுவாக் குடு" 

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு புடவையாவது எடுக்கவைத்துவிடுவான். புடவை வியாபாரத்தின் அத்தனை நுணுக்கங்களும் அவனுக்கு அத்துபடி. யாரிடம் எப்படிப் பேசினால் எடுபடும் என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருந்தான். 

மாடி வீட்டு மோகனாவுக்கு ரோஷம் அதிகம். பிறர் முன்னிலையில் அவளிடம், "ஏன்க்கா, நீ என்னமோ பொடவ எடுக்கப் போறது மாதிரி முன்னாடி வந்து உக்காந்திருக்கே? என்னாத்துக்கு சும்மா வேடிக்க பாத்துக்கினு நிக்கிறே?" என்பான். உடனே அவள், "ஆமாம்! நீ யான வெல, குதிர வெல சொல்லுவ! உன்கிட்ட எப்படி எடுப்பாங்க?" என்பாள். 

"எக்கா, உனக்கெல்லாம் பெரிய பெரிய கடைங்கள்ல பில்லு ஒட்டி வச்சிருப்பான், பாரு, வாய மூடீட்டு அத எடுத்துவரத்தான் புடிக்கும். என்னை மாதிரி நேர்மையா, நியாயமா வெல சொன்னா புடிக்குமா? நீ அப்பால போ! மத்தவங்க பாக்கட்டும்!" 

எல்லார் முன்னிலையிலும் சொன்னால் அவளால் சும்மாயிருக்க முடியுமா? உடனே ஒரு புடவை போணியாகிவிடும். 

வாணிக்கோ இரக்கசுபாவம். இதையும் அவன் அறிந்துவைத்திருந்தான்.  

"இப்போ கையிலே பணமில்லே, வேலு! அடுத்த மாசம் சேத்துத் தரவா?" 

"எக்கா, நீயே இப்புடிச் சொன்னா எப்புடிக்கா? பொழப்பு ஓடவேணாமா? " 

"புடவ எடுக்கும்போது அடுத்தமாசம் தான்னு சொல்லு, எடுத்ததுக்கப்புறம் ஈட்டிக்காரன் மாதிரி கெடுபிடி பண்ணு!" 

"எக்கா, நான் என்னக்கா பண்ணுவேன்? ஒரு சேலைக்கு பத்தோ, இருவதோ கிடைக்குது. அதையும் அப்புறம் இப்புறமுன்னு இழுக்கடிச்சா கையில என்னாக்கா தேறும்? எனக்கும் புள்ளகுட்டின்னு ஆயிப்போச்சுக்கா! கொஞ்சம் பாத்துக் குடுக்கா!" 

வேலுவுக்கு எல்லாப் பெண்களுமே அக்காதான். கொஞ்சம் வயதானவர்களாக இருந்தால் மட்டும் 'பெரியம்மா' என்பான். 

வேலு வந்திருப்பதை அறிந்து, மோகனா, எதையோ இரவல் வாங்கும் சாக்கில் வாணியின் வீட்டுக்கு வந்தாள். 

"வேலு, நிசமாத்தான் சொல்றேன்! இப்ப என்கிட்ட பைசா இல்ல!" 

"யக்கா, சிறுவாட்டுப் பணம் சேத்துவச்சிருப்ப, பாரு. அஞ்சாறப்பொட்டியில் இருக்கும், பாருக்கா!"

வேலு விடவில்லை. 

"அட! நம்பமாட்டேங்கறியே! இப்போவெல்லாம் சனி, ஞாயிறுன்னா, தானும் சமையல் செய்யிறேன்னு அவரும் அடுப்படி புகுந்துடறாரு. பணத்த எங்க வக்கிறதுன்னே புரியல!" 

மோகனா அடக்கமாட்டாமல் சிரித்தாள்.கூடவே,

"ஒருவேளை, நீங்க பணத்தை எங்கே பதுக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே சமைக்க வர்றாரோ, என்னவோ?" என்று சந்தேகம் கிளப்பினாள்.  

"இருந்தாலும் இருக்கும்!" வாணி ஆமோதித்தாள். 

வேலு தன் காரியத்தில் கவனமானான். சட்டென்று எல்லாப் புடவைகளையும் மடித்து அடுக்கினான். 

"என்னா, வேலு, ஏன் கிளம்பிட்ட? புடவ காட்டலியா?" 

"எங்கக்கா? எல்லாம் தவண கட்ட மூக்கால அழுவுறீங்க? உதயா காலனிக்குப் போனாலாவது வேல நடக்கும். மளமளன்னு புடவ வித்துப்போகும், பணமும் வசூலாயிடும். பொழப்பப் பாக்கணுமேக்கா! நான் கெளம்புறேன்" 

"வேலு! என்ன நீ ரொம்பதான் சலிச்சுக்கறே? ஒருமாசம் முடியலன்னு சொன்னா, ஒரேயடியா முறுக்கிக்கறியே? உக்கார், மோர் கொண்டுவரேன்" வாணி எழுந்து உள்ளே போனாள். 

"நீ எதுன்னா எடுக்கிறீயாக்கா?" 

"ப்ச்!" மோகனா உதட்டைச் சுழித்தாள். 

வாணி இரண்டு புடவைகளை மடியில் போட்டுக்கொண்டு இரட்டைப் பிள்ளை பெற்றவளைப்போல் இரண்டையும் கீழிறக்க மனமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

"வாணி! அந்தப் புடவய நீங்க எடுக்கலேன்னா சொல்லுங்க, நான் எடுத்துக்கறேன்" மோகனா பரபரத்தாள். 

"இந்தக் கலர்ல புடவ வேணும்னு வேலுகிட்ட எப்போ சொல்லி வச்சது, தெரியுமா? இப்பதான் கொண்டுவந்திருக்கான்." 

"சரி! அப்படின்னா இன்னொன்னு கையில வச்சிருக்கீங்கள்ல, அது வேணாமா?" 

"ஐயோ! எனக்கு இதுவும் பிடிச்சிருக்கே!" 

"என்ன வாணி, ரெண்டையுமேவா எடுக்கப் போறீங்க? ஏற்கனவே தவண பாக்கி இருக்குது போலயிருக்கே!"  

வேலுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே மோகனா கேட்டாள்.  

வாணி பரிதாபமாக விழித்தாள். மோகனா சொல்வது சரியென்றபோதிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாமல் தவித்தாள். ஆளுயர நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு இரண்டு புடவைகளையும் மாறி மாறி தன் தோளில் போட்டு அழகுபார்த்தாள். அவள் கைவிடப்போகும் புடவைக்காக கழுகு போல் காத்திருந்தாள் மோகனா. 

"ஏன்க்கா, மாடி வூட்டக்கா, கடல் மாதிரி இத்தன பொடவ விரிச்சி வச்சிருக்கேன், அத வுட்டுட்டு, அதுங்கையில இருக்கிறதயே கேக்குறீயே! வேற பாரேன்!" 

வேலு, தனக்கு ஆதரவாகப் பேசியதும், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனாள் வாணி. அவனுக்குப் பெரும் ஆச்சரியம். எப்படிப்பட்டப் பெண்களும் புடவைக்கடையைப் பார்த்தால் குழந்தைகளாக மாறிவிடுகின்றனரே!  

பள்ளிக்கூடத்தில் ஒருநாள் வரச்சொல்லியிருந்தார்கள். புடவைக்கட்டைப் பிரித்ததும், தலைமையாசிரியை கூட ஆசையுடன் அது இதுவென்று பரபரத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்களிடம் தவணைப்பணம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. என்னமாய் அலையவிட்டார்கள்? படிக்கும் காலத்தில் கூட பள்ளிக்கூடத்துக்கு இப்படி நடையாய் நடந்ததில்லை என்று எண்ணுமளவுக்கு அவனை நன்றாகவே இழுக்கடித்தனர். 

கடைசியில் வேலுவின் ஆலோசனைப்படி இரண்டு புடவைகளையுமே வாணி எடுத்துக்கொண்டாள். மோகனா முனகிக்கொண்டே வெளியேறினாள்.  

வேலு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டி கணக்குப் பார்த்தான். 

"எக்கா! முன்பாக்கி முன்னூறு ரூவா. இதையும் சேத்தா தொள்ளாயிரத்தி அம்பது ரூவாக்கா. மாசம் இருநூறாவது கொடுத்துடுக்கா!" 

"ரெண்டு நாள் கழிச்சு வா, வேலு! எதாவது ஏற்பாடு செஞ்சு வைக்கிறேன். ஆனா அவரிருக்கும்போது வந்து பிரச்சனை பண்ணிடாதே!" 

"எனக்குத் தெரியாதாக்கா?" 

வேலு சைக்கிளின் பின்புறம் புடவை மூட்டையை வைத்துக் கட்டினான். 

வெயில் சுரீரென்று முகத்தில் அடித்தது. நாலு மணிக்குள் உதயா காலனியில் வேலை முடிக்கவேண்டும். புதிதாய் எதுவும் விற்காவிட்டாலும் பரவாயில்லை; தவணைத் தொகையைப் பெற்றால் போதும் என்ற எண்ணத்துடன் சைக்கிளை வேகமாக மிதித்தான். 

சே! என்ன பிழைப்பு இது? வெயில் மழை பாராமல் சைக்கிள் மிதித்து வீடுவீடாய்ப் போய் வக்கணையாய்ப் பேசி பொருளை விற்று, அதனிலும் வக்கணையாய்ப் பேசி தவணைத் தொகையைப் பெற்று, கடனை அடைத்து... மிச்சத்தில் குடும்பம் நடத்தி...அப்பப்பா...நாய் படாத பாடுதான்!  

*********************************

 அந்தக் காவல் நிலையத்தின் சுவரோரமாக குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தான், வேலு, தான் ஏன் இங்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே. பயத்தில் கால்கள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.வெளியில் பார்த்தான். இருள் கவியத் தொடங்கியிருந்தது.  

அவனுக்கெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டரின் முரட்டு மீசையையும், உருட்டு விழிகளையும் பார்க்கும்போதே அடிவயிறு கலங்கியது. அவர் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். 

"அப்படியா? சரி, சரி, ஆவட்டும்!" 

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவர் கண்களில் வேலு அகப்பட்டான். 

"என்னடா, உன் பேர் என்னன்னு சொன்னே?" 

"வே...வேலு சார்!" 

"ம்! அப்புறம்..? என்னா தொழில் பண்றே?" 

"பொடவ யாவாரம்தான் சார்" 

"ராகவேந்திரா அப்பார்ட்மெண்டுக்கு மத்தியானம் போயிருந்தியா?" 

"ஆமாங்க, சார்!" 

"போய்...என்னா பண்ணே?" 

"அங்க வாணியக்கா வீட்டுக்குதாங்க ரெகுலராப் போறது. பொடவ வித்துட்டு வந்தேங்க." 

"அந்தப் பொண்ணு வாணிய யாரோ கொல பண்ணிட்டாங்க தெரியுமா?" 

"என்னாது....?" 

ஒட்டுமொத்த உடலும் அதிர்ந்து குலுங்கியது. கால்களில் இருந்த நடுக்கம் உடம்பு பூராவும் பரவியது. நாக்குழறியபடியே, 

"அய்யய்யோ...! என்னா சார் சொல்றீங்க? காளியாத்தா....மாரியாத்தா...என்னால் நம்பமுடியலியே.... அந்த அக்காவையா...? அடக்கொடுமையே.....ஆத்தா..." 

நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதான். 

"ஏய்! வாய மூடு! எதுக்கு இப்படி கூப்பாடு போடற? நீதான் கடைசியாப் பாத்ததுன்னு தகவல் வந்திருக்கு!" 

"சார்...! இது அந்தக் கடவுளுக்கே அடுக்காது..சார். அது பச்சப் புள்ள..சார். ஆண்டவனே... ஒனக்கு கண்ணு அவிஞ்சிடுச்சா? இப்படியும் நடக்குமா? அது குடுத்த மோரு இன்னமும் என் தொண்டையில நிக்குதே! அய்யோ... என்னா கொடும சாமீ......" 

"ஏய்! சீ! ஒப்பாரிய நிறுத்து! என்னமோ உன் பொண்டாட்டி போன மாதிரியில்ல அழுவுற?" 

"அய்யய்யோ...!" 

"டேய்! நீ நிறுத்தலன்னா நீதான் கொல பண்ணினேன்னு எழுதிடுவேன். சும்மாயிரு! விசாரிக்கத்தானே கூட்டிட்டு வந்திருக்கு!" 

வேலு வேட்டியைச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டான்.  

வாணியை யார் கொன்றார்கள்? ஏன் கொன்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? எதுவும் அவனுக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளத் தேவையுமில்லை.  

அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அக்கா ஆசைஆசையாய் புடவை எடுத்ததுதான். அது கண்ணாடி முன் நின்று அழகு பார்த்த காட்சி கண்முன் விரிய, அடக்கியிருந்த அழுகை மீண்டும் தலைதூக்கியது. 

"இவன் ஏன் இப்படிக் கதறுறான்?" 

ஒரு கான்ஸ்டபிள் இன்னொருவரிடம் கேட்க, அவர், 

"புடவக்காசை வசூல் பண்ணமுடியாமப் போயிட்டதேங்கிற கவலை அவனுக்கு!" என்று கூறிச் சிரித்தார்.