தன் காதல்மனைவி சிங்கியை சில நாட்களாகக் காணாமல்
தேடியலைந்த சிங்கன், அவளை சந்தித்தவுடன் முதலில்
மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுகிறான். அவளை உள்ளங்கால் முதல்
உச்சிவரை பார்த்து ரசிக்கிறான். உடனே அதிர்கிறான். பயப்படுகிறான்.
அவன் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் காரணம்… அவள் உடலில்
புதிது புதிதாய் என்னென்னவோ கிடக்கிறதே… அவள் கால்களைப் பார்த்தால்
அதிலே விரியன்பாம்பு, நாக்குப்பூச்சி, செத்துப்போன தவளை, குண்டலப்பூச்சி போன்று
ஏதேதோ தெரிகிறது.. இடுப்பிலொரு சாரைப்பாம்பு சுற்றிக்கிடக்கிறது.. அவளுடைய புடைத்த மார்பில்
ஏதோ கொப்புளங்கள் தெரிகின்றன. அவள் கழுத்திலோ பத்தெட்டுப்
பாம்புகள் பின்னிக்கிடக்கின்றன.. பயம் வராதா பின்னே?
சிங்கனின் கேள்விகளைக் கேட்டு சிரிக்கிறாள் சிங்கி…
பல ஊர்களுக்கும் சென்று குறிசொன்ன அவளுடைய
திறமைக்குக் கிடைத்த பரிசுகள் இவை
என்றும் ஒவ்வொன்றும் என்னவென்றும் சிங்கனுக்கு விளக்குகிறாள்.. நமக்கு விளக்கம் தேவைப்படாத
அந்த எளியப் பாடலை இப்போது
பார்ப்போமா?
இத்தனை
நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி!
கொத்தார்
குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப்
போனனடா சிங்கா!
பார்க்கில்
அதிசயந்தோணுது சொல்லப்
பயமாய்
இருக்குதடி சிங்கி!
ஆர்க்கும்
பயமில்லைத் தோணின காரியம்
அஞ்சாமற்
சொல்லடா சிங்கா!
காலுக்கு
மேலே பெரிய விரியன்
கடித்துக்
கிடப்பானேன் சிங்கி!
சேலத்து
நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு
கிடக்குதடா சிங்கா!
சேலத்தார்
இட்டசிலம்புக்கு மேலே
திருகு
முறுகென்னடி சிங்கி!
கோலத்து
நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த
வரிசையடா சிங்கா!
நீண்டு
குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த
நெளிவென்னடி சிங்கி!
பாண்டிய
னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடக மிட்டதடா சிங்கா!
மாண்ட தவளைஉள் காலிலே கட்டிய
மார்க்கமதேது
பெண்ணே சிங்கி!
ஆண்டவர்
குற்றாலர் சந்நிதிப்பெண்கள்
அணிமணிக்
கெச்சமடா சிங்கா!
சுண்டு
விரலிலே குண்டலப்பூச்சி
சுருண்டு
கிடப்பானேன் சிங்கி!
கண்டிய
தேசத்திற் பண்டுநான் பெற்ற
காலாழி
பீலி அடா சிங்கா!
மெல்லிய
பூந்தொடை வாழைக்குருத்தை
விரிந்து
மடித்ததார் சிங்கி!
நெல்வேலியார்தந்த
சல்லாச் சேலை
நெறிபிடித்
துடுத்தினேன் சிங்கா!
ஊருக்கு
மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப்
பாம்பேது பெண்ணே சிங்கி!
சீர்பெற்ற
சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன்
அரைஞாணடா சிங்கா!
மார்பிற்கு
மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம்
கொள்வானேன் சிங்கி!
பாருக்குள்
ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத்
தாரமடா சிங்கா!
எட்டுப்
பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப்
பாம்பேதடி சிங்கி!
குட்டத்து
நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா!
(சுமார்
இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் திரிகூடராசப்பக் கவிராயரால்
இயற்றப்பட்ட திருக்குற்றாலக்குறவஞ்சியில் இடம்பெறும் இப்பாடல் வழியே அந்நாளையப் பெண்டிர்
அணிகலன்களான சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம்,
காலாழி, பீலி, பொன்னரைஞாண், முத்தாரம்,
சவடி போன்றவற்றைப் பற்றி சிங்கனோடு நாமும்
அறிந்துகொண்டோம் அல்லவா?)
(படம் உதவி: இணையம்)