29 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (32) - இறுதிப்பகுதி



"என்னம்மா, தாரா, இப்படி முகத்திலடிச்சமாதிரி சொல்றே?"

"வேறெப்படி ஆண்ட்டீ சொல்றது? அவரோட லைஃப் ஸ்டைல் வேற, என்னோடது வேற. எங்க ரெண்டுபேருக்கும் ஒத்துவராது ஆண்ட்டீ."

நாகலட்சுமிக்கு எதையும் நம்பமுடியவில்லை. விக்னேஷுக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும், அன்பான குணத்துக்கும் அவனை கணவனாய் அடையக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இவளோ அவனை நிராகரிக்கிறாள். என்னென்னவோ சாக்குபோக்கு சொல்கிறாள்.

"தாரா! என் பையனை கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவச்சிருக்கணும்மா!"

"அடக்கடவுளே! ஆண்ட்டீ, புரிஞ்சுதான் பேசுறீங்களா? ஒரு ண்பிள்ளைக்கான அடையாளமே இல்லாதவரை எப்படி விரும்புவாங்க?"

"என்ன சொல்றே?அப்படி என் மகன்கிட்ட என்ன குறையைக் கண்டே நீ?"

நாகலட்சுமி பெரும் படபடப்புடன் பேசினார்.

"நிறைய, ஆண்ட்டீ! அதிர்ச்சியடையாதீங்க. உங்க பிள்ளைக்கு உங்களைத் தவிர வேறயாரும் பெருசாத் தெரியாது. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுறதைத் தவிர மறுத்து எதுவும் பேசத் தெரியாது. சுயமா யோசிக்கத் தெரியாது. தான் நினைக்கிறதை தைரியமா வெளியில சொல்லத் தெரியாது. மொத்தத்தில சரியான பயந்தாங்கொள்ளி.”

நாகலட்சுமியின் முகம் அவமானத்தால் சிவந்து உதடுகள் துடித்தன. என் மகனைப் பற்றி அவதூறாய்ப் பேச இவள் யார்?

"என்ன, கனகா, உன் மகள் பேசுறதைக் கேட்டுகிட்டு கம்முனு உக்கார்ந்திருக்கே?"

"நான் என்ன பண்றது, நாகு? என் குழந்தைகளை சுதந்திரமா வளர்த்திட்டேன். இது அவங்க வாழ்க்கைப் பிரச்சனை. அவங்களே முடிவெடுக்கிறதுதானே நல்லது?"

"கனகா..."

"ஆமாம், நாகு! என் பொண்ணு, பிள்ளையோட விருப்பம்தான் என்னோடதும். அதனால நீ விக்னேஷுக்கு வேற இடம் பாரேன், நாகு. இதனால் நம்ம சிநேகம் கெட்டுப்போயிடாது. அதுக்கு நான் காரண்டி. ஏன்னா.... என் சுதந்திரத்தில என் பிள்ளைங்களும் தலையிடறதில்ல."

"கனகா! நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்!" நாகலட்சுமியின் குரல் தழுதழுத்தது.

"என்ன இப்போ? நிச்சயமா முடிஞ்சிருச்சு?  இடிஞ்சு போய் உக்காந்திருக்கே? நீ முதல்ல உடம்பைப் பாத்துக்கோ! தாரா பேசினதையெல்லாம் மனசில வச்சுக்காதே. அவ எதையும் ஓப்பனா பேசுற டைப். மத்தபடி ரொம்ப நல்லபொண்ணு."

தாராவுக்கு அவள் தாயாரே நன்னடத்தைச் சான்றிதழ் வழங்க,  இங்கு பேசப்பட்டவை யாவும் விக்னேஷின் காதுகளை எட்டியிருக்கக்கூடாதே என்ற கவலையில் ஆழ்ந்தார், நாகலட்சுமி.

ஆனால் அடுத்த அறையிலிருந்த விக்னேஷின் காதுகளில் அட்சரம் பிசகாமல் அத்தனையையும் வந்து விழுந்திருந்தன. தன்னைப் பற்றி ஒருத்தி இப்படி தரக்குறைவாய் தன் தாயின் முன்பே பேசுகிறாள்! அதுவும் இரண்டாவது சந்திப்பிலேயே! அவனிடம் பேசியதில்லை, பழகியதில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய கணிப்பை சரியாகவே கணித்திருக்கிறாள்!

விக்னேஷுக்கு தாராவின் மீது கோபம் வருவதற்கு பதில் தன்மீதே வெறுப்பு வந்தது. அவள் சொன்னவை யாவும் உண்மை. கோபப்பட்டு என்ன லாபம்? அவள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அம்மா அழுவதில் பயனில்லை.

கனகவல்லியும் தாராவும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர் என்று உறுதியாய் தெரிந்தபிறகு அறையைவிட்டு வெளியில் வந்தான். ஹாலில் சுந்தரி தாராவை சபித்துக்கொண்டிருந்தாள்.

விக்னேஷ் அமைதியாய் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான். மகனைக் கண்டதும் நாகலட்சுமி பெரிதாய் அழ முற்பட்டார்.

"அம்மா! அழாதீங்க! இதில கவலைப்பட என்ன இருக்கு? அந்தப் பொண்ணு சரியாத்தானே சொல்லியிருக்கா?"

"விக்னேஷ்......!"

"அம்மா! என்னைப் பத்தி அவ சொன்னதில எந்தத் தப்புமில்ல. சொல்லப்போனா.... அவ சொல்ற மாதிரி எனக்கும் அவளுக்கும் ஒத்துவரவே வராது. ஆனா அவளோட துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கும்மா. எவ்வளவு தைரியமா அவங்க அம்மா முன்னிலையிலேயே தனக்கு இந்தக் கல்யணத்தில் இஷ்டமில்லைன்னு சொன்னா. நான் அப்படியே அசந்துபோய்ட்டேன். ஒரு ஆணாப் பிறந்திருந்தும் நான் இன்னமும் ஒரு கோழையா உங்க முன்னால நின்னுகிட்டிருக்கேனே, அதை நினைச்சு எனக்கே வெட்கமா இருக்கும்மா."

விக்னேஷ் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். பேசுவது விக்னேஷ்தானா என்பதுபோல் அவர் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தான். 

"அம்மா! எனக்கும் வயசு ஆச்சு. என்னோட கல்யாணம் உங்க விருப்பப்படிதான் நடக்கணும்னு சத்தியம் வாங்கிகிட்டீங்க, ஆனா.... அது தொடர்பா என்கிட்ட கருத்துக் கேக்கிறதைக் கூடவா நான் உங்களுக்கு தாரை வார்த்தேன்? என் திருமண விஷயத்தில உங்களுக்கு இருக்கிற அக்கறையைவிட பலமடங்கு அக்கறையும் பொறுப்பும் எனக்கு இருக்கு. எனக்கு மனைவியா வரவ எங்கம்மாவை நல்லவிதமா பாத்துக்கணும்னு நான் நினைக்கமாட்டேனா?

அம்மா! நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நானும் வித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம். அவளைத் தவிர வேற ஒருத்தியை என்னால் மனசாலயும் நினைச்சுப்பாக்க முடியலை. அப்படி  வித்யா வேண்டாம்னு நினைச்சீங்கன்னா....வித்யாவை விடவும் ஒரு நல்ல பொண்ணை உங்களால் தேடமுடியும்னா தேடுங்க, அப்படித் தேடினாலும், உங்களுக்கு ஒரு நல்ல மருமகள் கிடைக்கலாம். எனக்கு மனைவி கிடைப்பாளாங்கிறது சந்தேகம்தான்!”

நாகலட்சுமி இடிந்துபோய் அமர்ந்திருந்தார். விக்னேஷ் சொல்வது எதையும் அவர் மனம் நம்பமறுத்தது.

‘இவன் சொல்வதெல்லாம் உண்மையா? காதல் என்னும் வலையில் இவனும் சிக்கிக்கிடக்கிறானா? என்னுடனேயே இருக்கிறான், எனக்கெப்படி இது தெரியாமல் போனது? இந்த வித்யாவும் எப்படி அமுக்கமாய் இருந்திருக்கிறாள்? என்னால் நம்பமுடியவில்லையே? என் மகனா? என்னிடம் செய்த சத்தியத்தையும் மீறி அவனுக்குள் காதல் எப்படி வந்தது? அல்லது காதலித்துக்கொண்டே என்னை ஏமாற்ற பொய்சத்தியம் செய்தானா? ஒருவேளை தாரா சம்மதித்திருந்தால் அவளைத் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருப்பானா? அல்லது என் வற்புறுத்தலுக்காய் அவளைத் திருமணம் செய்திருப்பானா?'

எதுவும் புரியாமல் விக்னேஷை ஏறிட்டார்.

விக்னேஷ் மிகவும் தெளிவாக இருந்தான். இனி இரட்டை வாழ்க்கை வாழப்போவதில்லை என்று மனதுக்குள் முடிவெடுத்தவனாய் துணிவுடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் துணிந்தவனாய் புதிய அவதாரம் எடுத்து அம்மாவின் முன் நின்றிருந்தான்.

"அம்மா! வித்யா எனக்கு வாழ்க்கைத் துணையா வந்தா என் வாழ்க்கை நீங்க நினைக்கிறதைப்போல சந்தோஷமா அமையும். நான் நினைக்கிறதைப்போல நீங்களும் என்கூட சந்தோஷமா கடைசிவரைக்கும் இருப்பீங்க. இப்பகூட பாருங்க, வித்யா எனக்கு வேணும்னு கெஞ்சுறமாதிரிதான் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன். வித்யாவைதான் கல்யாணம் பண்ணுவேன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியல பாத்தீங்களா அம்மா. இப்படி ஒரு கோழையை எந்தப் பொண்ணுதான் கல்யாணம் பண்ணிக்க வருவா? சொல்லுங்க!"

விக்னேஷ் உதட்டைக் கடித்துக் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுயன்றான். அவனை மீறி சில துளிகள் சிதறின. அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவமானத்தால் அவன் மனம் குமுறிக்கொண்டிருப்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

தலைக்கு உயர்ந்த மகனை தன் காலடியிலேயே கிடத்தி இத்தனைக்காலமும் அவனை ஒரு தனி மனிதனாய் செயல்படவிடாத தன் சுயநலத்தை எண்ணி வெறுப்புற்றார். இதற்குமேலும் அவனது வாழ்வில் தான் குறுக்கிடுவது தன் தாய்மைக்கே அவமானம் என்று உணர்ந்தவராய், அவனது கைகளைப் பிடித்து சொன்னார். 

"விக்னேஷ்! என்னை மன்னிச்சுப்பா! நான்.... நான்.... உன்ன.... "

நாகலட்சுமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மகனை நேராய் பார்க்கமுடியாமல் குற்ற உணர்வு குறுக்கிட்டது.

"அம்மா! நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க? என்னை சரியான பாதையில்தானே வளர்த்திருக்கீங்க? அதனால நீங்க வருத்தப்படாதீங்க. ஒண்ணு தெரியுமா? தாரா எதையெல்லாம் என் மைனஸ் பாயிண்டா பட்டியல் போட்டாளோ, அதையெல்லாம் வித்யா என் ப்ளஸ் பாயிண்டா பாக்கறாம்மா. அந்த வகையில நீங்க என்னை நினைச்சு, உங்க வளர்ப்பை நினைச்சு பெருமைப்படலாம் அம்மா."

நாகலட்சுமி தன் மகனை எண்ணி பெருமிதம் அடைந்தார்.

"சுந்தரி! கொஞ்சம் சர்க்கரை எடுத்துட்டு வாம்மா!"

அதுவரை தாய்க்கும் மகனுக்கும் நடந்துகொண்டிருந்த உரையாடலை தவிப்புடன் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த சுந்தரி, ஒரே பாய்ச்சலில் ஓடிச்சென்று சர்க்கரை டப்பாவுடன் வந்தாள். நாகலட்சுமி கொஞ்சம் எடுத்து விக்னேஷுக்கு ஊட்டினார். துளி எடுத்து சுபாவின் நாவில் தடவ அவள் அதை வேகமாய் சப்புக்கொட்டினாள்.  தானும் சிறிதை வாயில் போட முயல, சுந்தரி  நினைவூட்டினாள்.

"அம்மா, உங்களுக்கு சக்கரை ஆகாது!"

"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி, இப்ப மட்டும் என்னத் தடுக்காத!"

"ஏண்ணே, வித்யா அக்கா சம்மதிப்பாங்களா? அந்தப் புள்ளங்களை என்ன பண்ணுவாங்க?"  சுந்தரி தன் சந்தேகத்தைக் கிளப்பினாள்.

"அதான் எனக்கும் யோசனையா இருக்கு! அஜயையும், அஷ்வத்தையும் ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேக்கலாம்னா அவ ஒத்துக்குவாளான்னு தெரியலை."

"ஹாஸ்டலா? எதுக்கு?"

நாகலட்சுமியின் கேள்வியின் அர்த்தம் புரியாமல் விக்னேஷ் விழித்தான்.

"ஆமாம்பா! ஹாஸ்டல் எதுக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் அந்தப் பிள்ளைகளும் இங்கேயே நம்மளோட இருக்கட்டும். அதுங்க படிச்சு பெரியாளாகிறவரைக்கும் உன் பொறுப்பிலயும், வித்யாவோட பொறுப்பிலயும் இருக்கட்டும்."

அம்மாவின் தாராள மனதைப் பார்த்து விக்னேஷ் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான். இனி அந்தவீட்டில் சந்தோஷத்துக்கு எந்தக்குறையும் வராது என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் வேர்விட்டது.

(முற்றும்)

படம் நன்றி; கூகுள்
**************************************************************************************************

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

மு. உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
-------------------------------

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (31)




"அம்மா! எல்லாம் தயாரா? கிளம்பலாமா?"

"ம்!" நாகலட்சுமியிடமிருந்து சுரத்தில்லாமல் பதில் வந்தது.

"அம்மா! பயப்படுறீங்களா? தைரியமா இருங்க! ஒரு பிரச்சனையும் இருக்காது." விக்னேஷ் அவரைத் தேற்றினான்.

"அது எனக்குத் தெரியும்பா. இருந்தாலும் ஆபரேஷன்னாலே ஒரு பயம் இருக்கத்தானே செய்யிது?"

"அதெல்லாம் அப்போ. டெக்னாலஜி முன்னேறின இந்தக்காலத்தில இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. இப்ப உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர் இதில ஸ்பெஷலிஸ்ட். அதனால எந்தப் பின்விளைவும் இருக்காது. பயப்படாம கிளம்புங்க."

நாகலட்சுமி பூஜையறைக்குச் செல்ல உதவினாள், வித்யா.

"பாவம், நீயும் என்கூட சேர்ந்து சிரமப்படுறே!" அவளுக்காக இரங்கினார், நாகலட்சுமி.

"பரவாயில்லம்மா, எங்க அம்மாவா இருந்தா செய்யமாட்டேனா?" வித்யாவின் பதிலைக்கேட்டு மலைத்தார்.

சுந்தரி முகம் வெளிறி நின்றிருந்தாள்.என்றுமில்லாத வழக்கமாய் நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்ததில் அவள் பயம் புரிந்தது. 

"அக்கா, அம்மாவைப் பாத்துக்கங்க,  என்னாலதான் வந்து துணைக்கிருக்க முடியாமப் போச்சு!"

"சுந்தரி, நீ கவலைப்படாதே. நான் அவங்களை நல்லா பாத்துக்கறேன். தைரியமா இரு.”

"எத்தன நாள் தங்கவேண்டியிருக்கும்க்கா?"

"அஞ்சாறு நாள் ஆகலாம். அதுக்கப்புறம் ஒருமாசம் போல தெரபிஸ்ட் ஒருத்தங்க வீட்டுக்கு வந்து காலை மடக்க, நீட்ட பயிற்சி தருவாங்க. அப்புறம் அம்மா தானாவே நடக்க, உட்கார, எழுந்திரிக்க எல்லாம் செய்வாங்க."

சுந்தரி ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டாள்.

“இந்தப் பசங்க ஏதாவது வம்பு பண்ணினா எனக்குப் போன் பண்ணு. என்ன?"

"அஜயும், அஸ்வத்தும் ரொம்ப நல்ல புள்ளைங்க. ஒரு வம்பும் பண்ணமாட்டாங்க."

மருத்துவமனையில் உதவிக்கு ஒரு பெண் அருகில் இருந்தால் நல்லது என்று டாக்டர் கூற வித்யாவை வரவழைத்தான், விக்னேஷ். அவளும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். அஜயும், அஷ்வத்தும் இங்கிருந்தே பள்ளி செல்ல ஏற்பாடு செய்தாகிவிட்டது. குழந்தைகளை கவனித்துக்கொண்டு சுந்தரி வீட்டிலிருந்துவிட்டாள். அவளிடம் விடைபெற்றுக்கிளம்பினர் மூவரும்.  


*******************************************************************************************

குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் நடந்தேறியது. நாகலட்சுமிக்கு எல்லாம் கனவுபோல் இருந்தது. இன்றுதான் புதிதாய்ப் பிறந்ததுபோல் உணர்ந்தார்.

அப்பப்பா! எத்தனை வலியும், வேதனையும் அனுபவித்தாயிற்று. இனி தனக்கு யார் உதவியும் தேவையில்லை என்ற நினைவே இரண்டாள் பலத்தைத் தந்தது. இத்தனை நாளும் விக்னேஷ் தவித்துவிட்டான். வித்யா மட்டும் இல்லையென்றால் இன்னமும் தவித்திருப்பான்.

வித்யாவின் அன்பான அனுசரணையான கவனிப்பில் உள்ளம் உருகி நின்றாலும், அவள் தனக்காக தன் காலடியிலேயே பழியாய்க் கிடப்பதை எண்ணி குற்ற உணர்வு மிகுந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி இவை யாவும் அவள் தனக்கு செய்யவேண்டிய கடமையென்றே நாகலட்சுமியின் மனம் எண்ணியது.

வித்யாவின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவள் அக்கா வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சியில் அவர் திடீரென  இறந்தபோதும், விக்னேஷ் எப்படியெல்லாம் ஓடி ஓடி உதவினான். சாப்பாடு, தூக்கம் மறந்து எத்தனை நாள் அலைந்திருப்பான்? அன்று அவன் செய்த உதவிக்கு பிரதியுபகாரமாய் இன்று இவள் எனக்கு சேவை செய்கிறாள். அவ்வளவுதான். இதில் எனக்கெதற்கு குற்ற உணர்வு என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார்.

மருத்துவமனையில் இருந்தபோது ஒருநாள் கனகவல்லி வந்து பார்த்தார். அவரை வரவேற்ற வித்யா, நாகரிகம் கருதி அறையை விட்டு வெளியேறி, வெளியிலிருந்த பார்வையாளர்களுக்கான நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தாள்.

இங்கு வந்து ஐந்து நாட்களாகிவிட்டன. அஜயும், அஷ்வத்தும் நல்லவிதமாய் இருப்பதாக சுந்தரி சொன்னாள். பாவம், அவளுக்குதான் எத்தனை சிரமம்? சுபாவும் வளர்ந்துவிட்டதால் ஒரு இடத்தில் இருப்பதில்லை. எதையாவது பிடித்துக்கொண்டு  எழுந்துநிற்கத் துவங்கிவிட்டதால் அவளைக் கண்காணிப்பதே பெரும்வேலை. கொஞ்சம் அசந்தாலும் கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. சுந்தரிக்காக பரிதாபப்பட்டுக்கொண்டிருந்த வேளை,

"ஏய், வித்யா! இங்க என்ன பண்றே?" சமீபத்தில் விக்னேஷின் குரல் கேட்டு திடுக்கிட்டாள்.

"வாங்க, விக்கி! உங்க வருங்கால மாமியார் வந்திருக்காங்க! ரெண்டுபேரும் ஏதாவது பேசுவாங்க, நான் எதுக்கு குறுக்க இருக்கணும்னு வந்திட்டேன்."

"வித்யா! நீ இப்படி பேசுறது எனக்குப் பிடிக்கலை."

விக்னேஷ் இறுக்கமானான்.

"விக்கி, நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்கதான்....."

"வித்யா, நிறுத்துறியா? இங்க பாரு, எனக்கு அவங்களையும் பிடிக்கலை, அவங்க பொண்ணையும் பிடிக்கலை. பொண்ணா அது? சரியான ராங்கி!"

வித்யா சிரித்தாள்.

"விக்கி! உங்களுக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்குதாங்கிறது முக்கியமில்ல. உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு!"

"அம்மாவுக்குப் பிடிச்சு என்ன பண்றது? வாழப்போறது நான்."

விக்னேஷ் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான். வித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாயிருந்தாள்.

சற்றுநேரத்தில் விக்னேஷ் எழுந்து அம்மாவைப் பார்க்கச் சென்றான். வித்யா தானும் தொடர்ந்தாள்.

விக்னேஷைப் பார்த்ததும் நாகலட்சுமி முகம் மலர்ந்தார்.

விக்னேஷ் கடமைக்கு கனகவல்லியிடம், "வாங்க," என்று சொல்லிவிட்டு அம்மாவிடம், "அம்மா! எப்படிம்மா இருக்கீங்க? டாக்டர் வந்து பாத்தாரா?" என்றான்.

"பாத்தார். ரெண்டு நாளில வீட்டுக்குப் போலாம்னு சொன்னார். எனக்கும் எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு. சுந்தரி எப்படி இருக்கா?"

"நல்லாயிருக்காம்மா!"

"குழந்தைங்க எப்படி இருக்காங்க?"

"ம்! எல்லாரும் நல்லாயிருக்காங்க."

அம்மா, சுபாவைத் தனியே குறிப்பிடாமல் குழந்தைகள் என்று அஜயையும், அஷ்வத்தையும் சேர்த்துக் குறிப்பிட்டது விக்னேஷுக்கு ஆறுதலை அளித்தது. 

தாங்குகட்டைகளின் உதவியாலும் வித்யாவின் கைத்தாங்கலாலும் மெல்ல நடக்கப்பழகினார், நாகலட்சுமி. மருத்துவமனையில் அவரது அந்தரங்கத் தேவைகளை வித்யா கவனித்துக்கொண்டாள் என்றால் வீட்டுக்கு வந்தபின் அந்தப் பொறுப்பை சுந்தரி எடுத்துக்கொண்டாள்.

நாகலட்சுமியின் உடல்நிலை வெகுசுலபத்தில் தேறியது. மகனின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற உத்வேகமும், சுந்தரியின் அதீத கவனிப்பும் அவருக்கு ஒத்துழைத்தன. பிஸியோதெரபிஸ்ட்டின் பயிற்சியும் சேர்ந்துகொள்ள, ஒரே மாதத்தில் தானே தன் அடிப்படைக் காரியங்களைச் செய்யும் அளவில் முன்னேறியிருந்தார்.

மருத்துவமனையில் சந்தித்தபோது, கனகவல்லி, இன்னமும் தன் மகன் முரளியிடம் தாராவின் திருமணவிஷயமாய் பேசவில்லை என்றும் கூடியவிரைவில் பேசி தகவல் சொல்வதாகவும் கூறியிருந்தார். இன்றுவரை தகவல் இல்லை.

நினைத்துக்கொண்டிருக்கும்போதே கனகவல்லியிடமிருந்து போன் வந்தது. இன்று மாலை வருவதாக சொல்ல, நாகலட்சுமி மிகவும் மகிழ்ந்தார்.

கனகவல்லியுடன் தாராவும் வந்திருந்தாள். சுந்தரி, தேநீர் உபசரிப்பை முடித்து, முத்துவைச் சந்திக்கும் ஆவலில், அறையை விட்டு வெளியேறினாள். விக்னேஷ் தன் அறையில் தஞ்சம் புகுந்திருந்தான்.

கனகவல்லி மிகவும் கரிசனத்துடன் தோழியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஆனால் தாரா விக்னேஷ் திருமணம் குறித்து எதுவும் பேசவில்லை. நாகலட்சுமி தவித்தார். கனகவல்லியிடம் தானே திருமணப்பேச்சைத் துவக்கினார்.

"என்ன கனகா, உன் பையன்கிட்ட பேசினியா?"

"எதைப்பத்திக் கேக்குறே, நாகு?"

நாகலட்சுமி அதிர்ந்தார்.

"என்ன கனகா? புதுசா கேக்கிறே? அதான் தாராவை விக்னேஷுக்குக் கொடுக்கறதைப் பத்தி உன் பையன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னியே?"

"சொன்.....னேன்......."

"என்ன கனகா, இழுக்கிறே?"

"அது வந்து நாகு.... என் பையன்கிட்ட சொன்னேன். அவன் என்ன சொல்றான்னா.... "

"ம், சொல்லு, கனகா!"

"நீ தப்பா நினைக்காதே, நாகு.என் மகனுக்கு  இதில விருப்பமில்ல."

கனகவல்லி இப்படி சொன்னதும் நாகலட்சுமி பெரிதும் வியந்தார்.

"விருப்பமில்லையா? ஏன்?"

"அவனுக்கு ஃபாரின் மாப்பிள்ளைதான் வேணுமாம்! முடிவாச் சொல்லிட்டான்."

இத்தனை சொத்திருந்தும் ஏன்தான் இப்படி வெளிநாட்டு மோகம் பிடித்து அலைகிறார்களோ என்று தோன்றியது. பையன் நல்லவனா? குடும்பம் நல்ல குடும்பமா? என்று பார்க்காமல் இப்படித் தேடுவதால்தான் பல சிக்கல்கள் எழுகின்றன என்று நினைத்துக்கொண்டார். இருந்தாலும் கனகவல்லி என்ன நினைக்கிறார் என்று அறியும் ஆவல் உந்தியது.

"உன் மகன் சொல்வது இருக்கட்டும், நீ என்ன சொல்றே? உனக்கு இதில் சம்மதம்தானே?"

"என் மகன் சம்மதிக்காமல் நான் எப்படி சம்மதிக்கமுடியும்?"

நீ சொன்னால் உன் மகன் கேக்கமாட்டானா?"

"அவன் என்ன இன்னும் சின்னப்பிள்ளையா, அம்மா பேச்சை தட்டாம கேக்கறதுக்கு? எப்ப தோளுக்கு மேல வளந்துட்டானோ, இனிமே அவன் பேச்சைக் கேட்டு நடக்கிறதுதானே நமக்கு மரியாதை?"

நாகலட்சுமி நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார்.

மேற்கொண்டு ஏதோ பேச கனகவல்லி வாயைத் திறக்குமுன் தாரா வாய் திறந்தாள்.

"அம்மா! எதுக்கு இப்படி சுத்தி வளைச்சுகிட்டிருக்கீங்க? நான் சொல்றேன்."

தாயிடம் சொல்லிவிட்டு நாகலட்சுமியிடம் தொடர்ந்தாள்.

"சாரி ஆண்ட்டீ, அம்மா  உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கறாங்க, நானே சொல்லிடறேன். ஆக்சுவலா, எனக்குதான் உங்க மகனை மேரேஜ் பண்ணிக்கிறதில இஷ்டமில்ல, ஆண்ட்டீ!”

தாராவின் அதிரடி பதிலைக் கேட்டு நாகலட்சுமி திடுக்கிட்டார்.

(அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும்)

*******************************************************************************************************

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

மு. உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
--------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (30)



மனோகரிக்கு வாய் துடித்தாலும் விருந்துக்கு வந்த இடத்தில் தானும் பதிலுக்குப் பேசுவது சரியில்லை என்று உணர்ந்தவளாய், ராமிடம் கண்சாடை காட்ட, அவரும் எழுந்துகொண்டார்.
"விக்கியம்மா! உங்க விருந்துக்கு ரொம்ப நன்றி. நாங்க கிளம்பறோம். காலையிலிருந்து இங்கேயே இருந்தாச்சு! விக்கி, வித்யா வரோம்! சுந்தரி எங்கே? சுந்தரி......!"
அழுது வீங்கிய முகத்துடன் சுந்தரி வந்தாள். என்னதான் அதை மறைத்து சிரிக்க முயன்றாலும் அவளால் அதை முழுமையாய் செய்ய இயலவில்லை. ராம் அவளிடமும் நன்றி சொல்லி விடைபெற்றார். மனோகரியும் கிளம்பினாள். தவறியும் இருவரும் கனகவல்லியிடமும், தாராவிடம் சொல்லிக்கொள்ளவில்லை.
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் வித்யாவும் புறப்பட்டாள். போகும்போது நாகலட்சுமியிடம் வந்து,
"அம்மா! உங்களுக்கு ஆபரேஷன் சமயத்தில  என்ன உதவி தேவைப்பட்டாலும் சொல்லுங்க, நான் செய்யறேன்! எதுவும் யோசிக்காதீங்க." என்றாள். நாகலட்சுமி வியந்தார்.
இவளுக்கும் எனக்கும் என்ன உறவு? எனக்காக இவள் ஏன் சிரமப்படவேண்டும்? ஓ! இவள் அப்பாவுக்கு முடியாதபோது விக்னேஷ் சென்று உதவினானே! அதனால் பதிலுக்கு செய்ய நினைக்கிறாள் போலும். தானே தன்னைத் தேற்றிக்கொண்டார்.
"சரிம்மா, தேவைப்பட்டா சொல்றேன்!"
வித்யாவை வீட்டில் விட்டுவர விக்னேஷும் கிளம்பினான். சிறுவர்கள் மனமில்லாமல் கிளம்பினர். அவர்கள் போனபிறகும் "பாட்டி... பாட்டி..." என்ற சொல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இரவல் உறவே இத்தனை இன்பத்தைத் தரும் எனில் சொந்தம் எத்தனை சுகத்தைத் தரும்? நாகலட்சுமிக்கு பாட்டி என்னும் பதவியின்மேல் திடீர்மோகம் வந்தது.
கனகவல்லி பேசிப் பேசிக் களைத்துப்போயிருந்தார். நாகலட்சுமியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தாரா கால் மேல் கால் போட்டுக்கொண்டுதொலைக்காட்சியில் இருக்கும் எல்லா அலைவரிசைகளையும் மாற்றி மாற்றி எதிலும் நிலைகொள்ளாமல் கையிலிருந்த ரிமோட்டைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தாள்.
நாகலட்சுமிக்கு தாராவை மருமகளாக்கிக்கொள்ளும் எண்ணம் சற்றே தளரத் தொடங்கியது. 'சின்னப்பெண்தானே? சொகுசாய் வளர்ந்தவள்! கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாள், கல்யாணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடாதா? ‘என்று தளர்ந்த எண்ணத்துக்கு சற்று முட்டுக்கொடுத்து நிமிர்த்தினார்.
தேநீர் உபசரிப்பு முடிந்ததும், நாகலட்சுமியிடம் விடைபெற்றுக்கிளம்பினர் தாராவும், கனகவல்லியும். சுந்தரி ஏக்கம் நிறைந்த விழிகளால் முத்துவைப் பார்த்தாள். கார் கிளம்புமுன் அவன் அவளிடம், "போய்ட்டு வரேன்க்கா!" என்றதும் அவள் விழிகள் நீரால் நிறைந்து பார்வையை மறைத்தன.
********************************************************************

அந்த இரவு எப்போதும்போல அமைதியாகவே இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு மனதிலும் சலன அலைகளை உண்டுபண்ணியவண்ணம் இருந்தது.  நாகலட்சுமியின் மனதில் தாராவே மருமகள் என்ற எண்ணம் ஆழமாய் வேர்விடத் தொடங்கி இருந்தது. கனகவல்லியிடம் பேசியதில் அவர் தன் மகனைக் கேட்டு முடிவு சொல்வதாய் சொல்லியிருந்தார். அவருக்குள் விக்னேஷின் திருமணக்கனவுகள் ஊர்வலம் வரத்தொடங்கிவிட்டன.
திருமணம் என்றால் சும்மாவா? அதற்கு எத்தனை ஏற்பாடுகள் செய்யவேண்டும்? இந்தவிஷயத்தில் விக்னேஷுக்கு உதவ ஆண்துணை இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. சொந்தம் இல்லைநண்பர்கள் இல்லை. இருந்த ஒருவனும் இப்போது இல்லாமற் போய்விட்டான். மனோகரியையும் ராமையும் தவிர்த்து அக்கம்பக்கத்திலூம் அதிகப் பழக்கம் இல்லை.
முதல் முறையாய் யாருமற்ற தீவில் தானும் மகனும் தனித்திருப்பதுபோல் உணர்ந்தார். தன் காலம் முடிந்துவிட்டால் பிறகு விக்னேஷுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவனைத் தனிமரமாக்கிவிட்டதைப் போலொரு குற்ற உணர்வு தலைதூக்க, அதற்காக வருந்தியபடியே மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தார்..
அடுத்திருந்த அறையிலிருந்த சுந்தரிக்குள் அடங்கியிருந்த பல ஆசைகள் கிளைத்து வளரத் தொடங்கியிருந்தன. அப்பா அம்மாவைப் பார்த்து மன்னிப்பு கேட்டு..... நடந்த துயரங்களை மறைத்துதம்பியுடன் மீண்டும் பழையபடி பேசிச் சிரித்து..... அவர்கள் மடியில் சுபாவைத் தவழவிட்டு..... அவர்கள் கொஞ்சும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டு....
கனவுகளின் துணையுடன் உறங்கிப்போனாள்.
விக்னேஷ் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தான். வித்யாவின் நினைவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.  எப்படி இருந்தவள்இப்போது பொலிவிழந்து, சுரத்திழந்து நடைபிணம்போல் இருக்கிறாள்! என் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இன்று தாராவின் வரவால் பொய்த்திருக்கும்.
குழந்தைகள் இருப்பதாலேயே அவள் இன்னும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தளரவிடாமல் இருக்கிறாள். இத்தனை துயரச்சூழலிலும் அம்மாவின் அறுவை சிகிச்சையின்போது வந்திருந்து உதவுவதாய் சொல்லிச் சென்றாளே? இவளல்லவா பெண்? இவளை மனைவியாய் நான் அடையும் பாக்கியம் இருக்கட்டும், மருமகளாய் அடையும் பாக்கியத்தை அம்மா இழந்துவிடக்கூடாது! அம்மாவிடம் பேசினால் என்ன?
இத்தனை நாளாவது அம்மாவின் மனதில் எந்தச் சலனமும் இல்லாதிருந்தது. இப்போதோ தாரா என்னும் கொலு பொம்மையினால் கல்லெறியப்பட்ட குளமாகிவிட்டது, அம்மாவின் மனது.
அம்மாவின் அறுவை சிகிச்சை முடிந்தபிறகுதானே கல்யாண ஏற்பாடு செய்வதாய் சொன்னார். அப்போது அவரிடம் வித்யாவுக்கும் தனக்குமுள்ள காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். அப்போது அவர் மறுத்தலும் விடப்போவதில்லை. பொய்சத்தியம் செய்துவிட்டாயடா பாவி என்று புலம்பலாம். ஆனால் வித்யா இல்லையென்றால் என் வாழ்வில் வேறு பெண்ணுக்கு இடமில்லை என்பதையாவது உறுதியாக சொல்லிவிடவேண்டும்.
தன் பிடிவாதத்தால் மகனின் வாழ்வு பாழாவதை அம்மாவால் தாங்க முடியாது. நிச்சயம் ஒத்துக்கொள்வார். வித்யா வந்தபின் பிரச்சனை இல்லை. அவள் நிச்சயம் அம்மாவின் மனதில் இடம்பிடித்துவிடுவாள். அஜய், அஷ்வத் பற்றி யோசித்தான். முதலில் அவர்களை ஏதாவது ஒரு நல்ல போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு, பின்னாளில் அம்மா சமாதானமானபின் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்துவிடலாம். 
வித்யா இந்த எற்பாட்டுக்கு ஒத்துக்கொள்வாளா என்பது சந்தேகமே! ஆனால் வேறு வழியில்லை! அம்மாவும் அதுவரை தாரா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவேண்டும்.விக்னேஷ் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.
வித்யாவின் வீட்டில் சிறுவர்கள் உறங்க வெகுநேரமாகியது. வினேஷ் வீட்டுக்கு சென்று வந்தது அவர்களுக்கு புது உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வாய் ஓயாமல் அன்றைய நிகழ்வுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
"சித்தி! விக்கி அங்க்கிள் வீட்டுக்கு மறுபடி எப்ப போவோம்?"
"எதுக்கு?"
ஒருவேளை.... இவர்கள் விருந்துணவுக்காகத்தான் அங்கு போக விரும்புகிறார்களோ என்ற நினைவு எழுந்து உள்ளுக்குள் வலித்தது.
"ரொம்ப ஜாலியா இருந்துச்சுஎங்களுக்கு அந்த பாப்பாவ ரொம்பப் புடிச்சிருந்துது, சித்தி!" அஷ்வத் சொன்னதும் வித்யா கலங்கினாள்.
"அதுக்கென்ன? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போலாம்!"
"ஐயா.... ஜாலி..."
சிறுவர்கள் உற்சாகத் துள்ளலுடன் உறங்கச் சென்றனர்.
வித்யா அவர்களை பார்த்தாள். இத்தனை வயதில் தாய் தந்தையைப் பிரிந்து தான் படும் அவதியை இவர்கள் இந்த சின்ன வயதிலேயே அனுபவிப்பதை எண்ணி வேதனை அடைந்தாள். வேணி இருந்தபோது ஒருநாள் கூட அவர்களுடைய அப்பாவைப் பற்றிக் கேட்டதில்லை, வேணி போனபின் அவளைப் பற்றியும் கேட்கவில்லை என்பதே அவர்களுடைய மன முதிர்ச்சியைக் காட்டியது.
வேணியுடன் இருந்தபோது ஓரிடம் தங்காது, சொல்பேச்சு கேளாது, அட்டகாசம் செய்துகொண்டிருந்த குழந்தைகளா இவர்கள்? இப்போது எத்தனைப் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள்? வித்யாவுக்கு பெருமையாயிருந்தது. இந்த அற்புதமான சிறுவர்களுடன் வாழக்கொடுத்துவைக்காத பெற்றோரை எண்ணி வருந்தினாள். இனி தன் எதிர்காலத்தை இவர்களுக்காகவே அர்ப்பணிக்கவேண்டுமென்று மனதில் முடிவுசெய்துகொண்டு நிம்மதியாய் உறங்கினாள்.
(இன்னும் இரண்டு பாகங்களுடன் இக்கதை நிறைவுறும்.)
*********************************************************************
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
மு.வ உரை:
ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
-----------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு