25 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (29)




அசைவ விருந்து அமர்க்களமாய் இருந்தது. ஆடு, மீன், கோழி நண்டு, இறால் என்று எதையும் விட்டுவைக்காமல் தனக்குத் தெரிந்த அத்தனையையும் செய்துவைத்திருந்தாள், சுந்தரி.

அனைவரும் தரையில் வசதியாக உட்கார்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டது. நாகலட்சுமிக்கும், அவருக்குத் துணையாக கனகவல்லிக்கும் மேசையில் பரிமாறப்பட, தாரா தனக்கும் கீழே உட்கார்ந்து பழக்கமில்லையென்று கூறி தானும் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

விக்னேஷ், முத்துவையும் தங்களுக்குச் சமமாக அமர்த்திக்கொண்டதைப் பார்த்து கனகவல்லியும், தாராவும் முகத்தைச் சுழித்தனர். வேலைக்காரனுக்கு நடுவீட்டில் வைத்து  மற்றவர்களுடன் சேர்த்து உணவு பரிமாறுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை தாராவின் பேச்சு உணர்த்தியது.

"முத்துவுக்கு என்ன அவசரம்? நாமெல்லாம் சாப்பிட்டபின்னால அவனைத் தனியா சாப்பிடவைக்கலாமே? எங்க வீட்டுல அப்படிதான்!"

"அது உங்க வீட்டுப் பழக்கம்னா, இது எங்க வீட்டுப்பழக்கம்!"

விக்னேஷ் சட்டென்று சொன்னான். தாரா வாயடைத்துப்போனாள். சுந்தரிக்கு தம்பியின் நிலையை நினைத்து வருத்தம் மேலிட்டது.

வித்யா, சுபாவுக்கு பருப்புசோறு ஊட்டிக்கொண்டே அஜய், அஷ்வத் இருவரும்  ரசித்து, ருசித்து சாப்பிடுவதைப் பார்வையிட்டாள். இப்படியொரு சாப்பாட்டை அவர்கள் சாப்பிட்டு எத்தனை நாட்களாகிவிட்டன. பிள்ளைகள் ஆவலுடன் சாப்பிடுவதிலேயே அது தெரிந்தது.

சுந்தரியும், மனோகரியும் பரிமாறினர். ராம் சுந்தரியின் சமையலை வெகுவாகப் புகழந்தார்.

"உன் ஊறுகாயைச் சாப்பிட்டதிலிருந்தே உன் ரசிகராயிட்டார்." என்று மனோகரியும் ஒத்திசைத்தாள்.

விருந்து முடிந்து அனைவரும் எழுந்தபின் மூன்று பெண்களும் சாப்பிட்டு, மற்ற வேலைகளையும் முடித்து அடுக்களையை ஒழுங்குபடுத்தினர்.

விக்னேஷ் மறக்காமல் அம்மாவின் மாத்திரைகளை எடுத்துவந்து தந்தான். நாகலட்சுமி நெகிழ்ச்சியின் எல்லையில் நின்றிருந்தார். இதுபோல் வீடு நிறைந்த உறவுகளைப் பார்த்து வருஷக்கணக்காகிவிட்டது நினைவுக்கு வந்தது. அஜயும், அஷ்வத்தும் பாட்டி, பாட்டி என்று அழைத்தது புது அனுபவத்தைத்தந்தது. அவர்களைப் பார்த்து சுபாவும் 'பா….த்...தீ...' என்றாள். வீடே சிரிப்பில் மூழ்கியது.

"என்ன விக்கியம்மா? விக்னேஷோட அடுத்த பிறந்தநாளையாவது மருமகளோட கொண்டாடுற எண்ணமிருக்கா?"  ராம் பேச்சைத் துவக்கினார்.

"நிச்சயமா! என்னோட ஆபரேஷன் முடிஞ்ச கையோட விக்னேஷுக்கு கல்யாண ஏற்பாடுதான்!"

"சரி... உங்க பையனுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்? சொன்னீங்கன்னா நாங்களும் பார்ப்போமில்ல......?

"ராம்! விக்கியம்மா என்ன சொல்வாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? அவங்களுக்கு நல்ல……. அடக்கமான …..பார்க்க லட்சணமா இருக்கிற பொண்ணு வேணும். அவ விக்கி மேலயும் அம்மா மேலயும் ரொம்ப பாசமா இருந்து பொறுப்பா குடும்பத்தை நடத்தி குடும்பப்பேரை காப்பாத்தணும், முக்கியமா……….. மாமியார்  மனசறிஞ்சு நடக்கிற மருமகளா வேணும். அவ்வளவுதானேம்மா?"

மனோகரி புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சுவாங்குவதாய் பாவலா செய்தாள்.

“அக்கா! தயவுசெஞ்சு சும்மா இருங்களேன்!" விக்னேஷ் மனோகரியை அடக்கமுயன்றான்.

"நீ சின்னப்பையன், உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்க பெரியவங்க பேசும்போது குறுக்க பேசப்படாது!" மனோகரி வில்லத்தனமாய் குரல் கொடுக்க, அனைவரும் சிரித்தனர்.

"அடேயப்பா! இவ்வளவு நல்ல பொண்ணை எங்கேன்னு தேடறாது? அது ரொம்ப கஷ்டமாச்சே!" ராம் சொல்ல, மனோகரி இடைமறித்தாள்.

"ஏன் முடியாது? இவ்வளவு நல்ல குணமுள்ள பொண்ணுங்களும் இருக்கதான் செய்யிறாங்க, நாமதான் கண்டுக்கிறதில்லை"

"அப்படி ஒரு பொண்ணை எனக்குத் தெரியும், ஆனா இப்ப அவங்க குடும்பச்சூழல் கொஞ்சம் சரியில்ல. அதனால யோசிக்கிறேன்!" ராம் வித்யாவைப் பார்த்துக்கொண்டே சொன்னார். வித்யா அங்கு இருக்க விரும்பாமல் மெதுவாய் அகன்றாள்.

நாகலட்சுமி சட்டேன்று கனகவல்லியிடம் கேட்டார்.

"உன் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்றதா இருக்கே?"

"அவளுக்கென்ன அவசரம்? இப்பதான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கா. சம்பாதிக்கட்டும். இவ அண்ணன் வேற இவளை ஃபாரின் மாப்பிள்ளைக்குதான் கட்டிக்கொடுக்கணும்னு இருக்கான்!"

"ஏன், இந்த ஊர் பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல்? வெளிநாட்டுல கட்டிக்கொடுத்திட்டு ஏதாவது பிரச்சனைன்னா என்ன செய்வே? இங்கேயே இருந்தா நீயும் அடிக்கடி போய் பாக்கலாம், அவளும் வர போக இருப்பா!"

"எல்லாம் சரிதான். ஆனா இவளுக்கே வெளிநாடு போற ஆசையிருக்கே. இப்பவே போறேன்னா. நாங்கதான் கல்யாணம் பண்ணிகிட்டு போயேண்டின்னு சொல்லி வச்சிருக்கோம்!"

அப்பாடா, சனியன் விட்டது என்று மனோகரி மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஆனால் நாகலட்சுமிக்கு முகம் சுண்டிவிட்டது. இருந்தாலும், முயற்சியைத் தளரவிடாமல்,

"இல்ல கனகா! நல்லா யோசிச்சுப் பாரு! தினமும் எவ்வளவு செய்தி கேள்விப்படறோம், நாளைக்கு உன் பெண்ணோட நிலையும் அப்படி ஆயிடக்கூடாது, உன் நல்லதுக்குதான் சொல்றேன். பொண்ணையும், புள்ளயையும் அனுப்பிட்டு நீ மட்டும் இங்க தனியா இருந்து என்ன பண்ணப்போறே? உன் மகனும் இங்க வந்து செட்டில் ஆகப்போறதில்லைன்னு சொல்றே! எதுக்கும் எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசனை பண்ணி செய்! நாளைக்கு ஏதுவும் பிரச்சினை வந்துடக்கூடாது பாரு, அதனால் சொல்றேன்!"

விட்டால் கனகவல்லியின் மனதை மாற்றி இங்கேயே தாம்பூலத்தட்டை மாற்றிவிடுவாரோ என்று பயந்த சுந்தரி பேச்சை மாற்ற விரும்பினாள். அப்போதுதான் அவளுக்கு சுபாவின் நினைவு வந்தது. "பாப்பா எங்க? ரொம்ப நேரமா நான் கவனிக்கல," சுந்தரி தவித்தாள்.

"ஆமாம்! நானும் பாக்கவே இல்லையே!"

"அஜய், அஷ்வத்! பாப்பா எங்கேடா?" வித்யா குரல் கொடுக்க, வாசற்புறத்திலிருந்து இருவரும் ஓடிவந்தனர்.

"எங்கேடா பாப்பா?" வித்யா பதறினாள்.

"சித்தி! அவ டிரைவர் அங்கிள் கிட்ட இருந்துகிட்டு எங்ககிட்ட வரவே மாட்டேங்கறா. ப்ளீஸ், ஆண்ட்டீ, நீங்க கொஞ்சம் வந்து அவளை வாங்கி தாங்களேன்!"

சிறுவர்கள் சுந்தரியின் தயவை நாட, சுந்தரி கையைப் பிசைந்தாள்.

இந்த சந்தர்ப்பத்திற்காகவே, தான் காத்திருந்தபோதும், என்னவோ இப்போது தயக்கம் வந்து குறுக்கே நின்றது. எதையோ நினைத்தவளுக்கு சட்டென்று மகிழ்ச்சி கரைபுரண்டது. சுபாவை இவ்வளவுநேரமும் அவன்தான் வைத்திருக்கிறான். அவள் அவனை விட்டு வர மறுக்கிறாள் என்றால் எத்தனை ஆசையுடன் அவளை வைத்திருப்பான்? அப்படியென்றால்.....? அவன் கோபம் போய்விட்டது என்றுதானே அர்த்தம்? தயக்கம் முற்றிலுமாய் நீங்கி ஒருவிதத் துள்ளலுடன், சுந்தரி போக முற்பட்டவேளை, வித்யா தடுத்தாள்.

"விடு, சுந்தரி! பாப்பா பத்திரமாதானே இருக்கா. இந்த வாலுங்க கையில இல்லாம பெரியவங்க கையில இருக்கிறவரைக்கும்  ஒரு பயமும் இல்ல"

"போங்க, சித்தி!" சிறுவர்கள் பொய்யாய் கோபித்துச் சென்றனர். சுந்தரியின் முகம் வாடியதை விக்னேஷ் கவனிக்கத் தவறவில்லை. சுந்தரியை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.

முத்துவைப் பார்த்ததும் சுந்தரி அழுததிலிருந்தே ஒருவாறு யூகித்திருந்தான். இன்று முத்துவுடன் தனியே  பேசியதில் அது உறுதியானது.

ஊரை விட்டு வந்து சிலநாள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், பிறகு  ஒரு ஆட்டோமொபைல் ஷாப்பில் வேலை கிடைத்ததாகவும் ஒரு நல்ல மனிதரின் உதவியால் கார் ஓட்டுநருக்கான பயிற்சியும், உரிமமும் பெற்று இப்போது கனகவல்லியின் வீட்டில் வேலையில் இருப்பதாகவும் தெரிவித்தான்.

அப்பாவும் அம்மாவும் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார்கள் என்றும் சுந்தரியை இந்நிலையில் பார்த்தால் இன்னமும் வேதனைப் படுவார்கள் என்பதால் உடனேயே அவர்களிடம் அவளை அழைத்துச் செல்ல இயலாது என்றும் தெரிவித்தான். தனக்கும் சுந்தரியின்மேல் கோபமிருந்ததாகவும், இப்போது அவளிருக்கும் நிலையைப் பார்த்து கோபம் போய் வருத்தம் மேலிடுவதாகவும் சொன்னான். ஒருநாள் வந்து சுந்தரியைப் பார்த்து அவளிடம் மனம் விட்டுப் பேசுவதாகவும் உறுதியளித்தான்.

இப்போது பேச்சு குழந்தைகள் பக்கம் திரும்பியது.
சுபாவின் சேட்டைகளை சுந்தரியும், விக்னேஷும், நாகலட்சுமியும் விவரிக்க, அஜய், அஷ்வத்தைப் பற்றி வித்யா பேச, மனோகரியும் ராமும் அவற்றைக் கேட்டு ரசித்து சிரித்துக்கொண்டிருந்தனர். இவர்களது பேச்சில் சுவையிழந்த தாரா பட்டென்று மனோகரியை நோக்கி, "நீங்க உங்க குழந்தைங்க புராணம் பாட ஆரம்பிக்கலையா?" என்று கிண்டல் செய்தாள்.

மனோகரி பதிலுக்கு, "முதல்ல குழந்தைங்க வரட்டும், அப்புறம் நாங்களும் பாட ஆரம்பிக்கவேண்டியதுதான்!" என்றாள்.

"அப்படின்னா உங்களுக்கு குழந்தைங்க கிடையாதா? ஓ! ஐயாம் ஸாரி!" என்றவள் அத்துடன் நிறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்கும். ஆனால் அவள் மேற்கொண்டு "என்ன பிராப்ளம்?" என்று  கேட்டது அனைவரையும் முகம் சுழிக்கவைத்தது.

இங்கிதமற்ற அந்தக்கேள்வியால் இதுவரை நடைபெற்றுக்கொண்டிருந்த இன்பகரமான உரையாடல்கள் தடைபட்டுப்போயின. குழந்தையில்லை என்று தெரிந்தால் நாசுக்காய் அந்தப் பேச்சைக் கைவிடவேண்டியதுதானே? இப்படியா காரணம் தேடி அவர்களைப் புண்படுத்துவது?

மனோகரி கடுப்புடன், "ப்ராப்ளம்னு யார் சொன்னது? இப்ப வேண்டாம்னு முடிவெடுத்திருக்கோம், அவ்வளவுதான்!" என்றாள்.

மனோகரி ராம் தம்பதிக்கு திருமணமாகி ஐந்தாண்டுகள் கழிந்தும் குழந்தையில்லை என்பதை ஒரு குறையாகவே அவர்கள் இதுவரை நினைத்ததில்லை. ஆனால் தாரா அத்துடன் நிற்கவில்லை. அதிபுத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து அடுத்ததாய் ஒரு யோசனையும் சொன்னாள்.

"அப்படியா? நான் நினைச்சேன் ஏதோ பிரச்சனைன்னு. இவங்க குழந்தை சுபாவ வேணா நீங்க தத்தெடுத்து வளக்கலாமேன்னு தோணிச்சு. அவங்களுக்கும் பாவம், யாருமே இல்ல, குழந்தைய நல்லபடியா வளக்கிறது கஷ்டம்."

தாரா சொல்லவும் சுந்தரி வேதனையில் எழுந்த விம்மலை அடக்க, கொல்லைப்புறம் ஓடினாள். வித்யாவும், விக்னேஷும் தாராவை அருவறுப்புடன் நோக்கினர். நாகலட்சுமி சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்து தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்க, கனகவல்லி பெரும் ஆரவாரத்துடன் மகளை ஆதரித்தார்.

"வெரிகுட்! என் பொண்ணால் மட்டும் தான் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஈஸியா ஸால்வ் பண்ண முடியும்!"

'பிரச்சனையா? யாருக்கு என்ன பிரச்சனை? சுந்தரி இவளிடம் போய் குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று முறையிட்டாளா? இல்ல... மனோகரி அக்காவோ ராம் சாரோ இவளிடம் சென்று குழந்தையில்லாக்குறையைச் சொல்லி புலம்பினார்களா? என்ன பெண் இவள்? பெண் பேசுவதைக்  கண்டிக்காமல் தாயாரும் கூட சேர்ந்து கைதட்டுகிறார். சே!' வெறுத்துப்போனான், விக்னேஷ்.

தொடரும்.....
********************************************************************************************

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

மு. உரை:
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
-----------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


படம் நன்றி ; கூகுள்

20 comments:

  1. அருமை... நல்லப் பதிவு...
    ரத்தம் வராமல் ரணம் செய்யும் வல்லமை தான்
    இக் கடும் சொல்லுக்கு உண்டு என்பதை
    அழகாக புகுத்தி இருக்கிறீர்கள்...
    அடுத்த பதிவை படிக்க ஆவலுடன்..

    ReplyDelete
  2. சிலர் பேச்சால் உறவு வளரவும் செய்கிறது
    சிலர் பேச்சால் அடியோடு அழிந்தும் போகிறது
    குறள் மிகப் பொருத்தம்
    கதை மிகச் சிறப்பாகத் தொடர்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வார்த்தைகள்! மெல்லிய மயிலிறகாய் வீசவும் முடியும், அவற்றால் ரணப்படுத்தவும் முடியும். அழகாகச் சொல்லியிருக்கீங்க. நன்று.

    ReplyDelete
  4. அவ‌ர‌வ‌ர் வார்த்தைக‌ளுள் வெளிப்ப‌ட்டு நிற்கின்ற‌ன‌ அவ‌ர‌வ‌ர் இய‌ல்பு. க‌தைப் போக்கில் தாராவை ஓர‌ம்க‌ட்ட‌ இதுவுமொரு வாய்ப்பாகுமோ...

    ReplyDelete
  5. மனித இயல்புகளை படம் பிடித்து காட்டும் கருவியாய் இந்த பதிவு ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குறள் சொல்லும் பாதையை சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    "தீயினால் சுட்ட புண் ஆறும்
    ஆறாதே வாயினால் சுட்ட புண்" என்பார்கள்.

    ReplyDelete
  7. இறைவனின் படைப்பில் எத்தனை மனிதர்கள் /எத்தனை மன ஓட்டங்கள் .சில வார்த்தைகள் மருந்தாகும் சில வார்த்தைகள் புண்ணை கிளறிவிடும்
    //words can hurt// .
    அருமையாக பயணிக்கிறது கதைஅதனுடன் நாங்களும்

    ReplyDelete
  8. எம்மிடமிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் விட்டபின் எம் சொந்தமில்லை என்பார்கள்.அது எத்தனைபேரைச் சந்தோஷப்படுத்தும் துன்பப்படுத்தும் என்பதைச் சிந்தித்தால் மட்டும் போதும்.எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் போகும் !

    ReplyDelete
  9. கதை அழகாக பயணிக்கிறது கீதா!

    இறுதியில் ' நா காக்க' என்பதற்கு அழகான குறளைத் தந்திருக்கிறீர்கள்!
    அன்பான சொல்லினால் அகிலத்தையே தன் கைக்குள் அடக்க முடியும் என்பதை அறிந்தவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள்!!

    ReplyDelete
  10. @ தமிழ் விரும்பி, தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமூட்டும் கருத்துரை வழங்குவதற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி கணேஷ் சார்.

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி அரசன்.

    ReplyDelete
  15. வருகைக்கும் குறளைக் குறிப்பிட்டுக் கருத்துரை வழங்கியதற்கும் மிக்க நன்றி டாக்டர்.

    ReplyDelete
  16. அழகான புரிதலுடனானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  17. வருகைக்கும் ஆழ்ந்த கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஹேமா.

    ReplyDelete
  18. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  19. நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    நொடியாய்ப் பிறந்து
    மணித் துளியாய் மறைந்து
    புது ஆண்டாய் மலர்ந்த
    பொழுதே....
    வறண்ட வாழ்வும்
    தளர்ந்த கையும்
    உன் வரவால்
    நிமிர்ந்து எழுதே!
    புது வருடம் பிறந்தால்
    வாழ்வு மாறும்-என
    ஏங்கித் தவிக்கும்
    நெஞ்சம்..
    உன் வரவே
    நெஞ்சின் தஞ்சம்!
    இறந்த காலக்
    கவலை அதனை
    மறந்து வாழ
    பிறந்து வா வா
    என் புதிய வாழ்வே
    விரைந்து வா வா!

    அழுதுவிட்டேன்
    ஆண்டு முழுதும்
    முயன்று பார்த்தேன்
    விழுந்து விட்டேன்
    அழுத நாளும் சேர்த்து
    மகிழ்ந்து வாழ
    எழுந்து நின்று
    இமயம் வெல்ல
    இனிய ஆண்டே
    இன்றே வா வா
    நன்றே வா வா!

    அன்புடன் இனியவன்

    ReplyDelete
  20. தாராவின் குணம் இப்போது நாகலெக்‌ஷுமிக்கு நன்றாக புரிந்திருக்கும்.

    இப்போ இறுதிப்பகுதி வரை படிக்கப்போகிறேன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.