கடந்த நான்கு மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் எரிந்துள்ள காடுகளின் பரப்பளவு சுமார் 8 மில்லியன் ஹெக்டேர்கள். அதீத வெப்பமும் காற்றும் இனிவரும் நாட்களில் இவ்வெண்ணை இன்னும் கூட்டக்கூடும். இக்கட்டுரையை எழுதும் வேளையில் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 300 இடங்களுக்கு மேல் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 140-க்கும் மேற்பட்ட இடங்கள். சில கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு எரிந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பெருந்தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
|
HMAS Adelaide |
ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதன் முறையாக Army, Navy, Airforce ஆகிய முப்படைகளிலிருந்தும் சுமார் 3,000 வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கென ஆஸ்திரேலியாவின் மிகப்பெரியப் போர்க்கப்பலான HMAS Adelaide பலத்த முன்னேற்பாடுகளுடனும் தண்ணீர், உணவு, உடை, மருந்துகள், படுக்கை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடனும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 75,000 தன்னார்வல தீயணைப்பு வீரர்களைக் கொண்டு உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமையை உடைய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தீயணைப்புத்துறை (New South Wales Rural Fire Service -NSW RFS) வீரர்களோடு அயல் மாநிலங்களிலிருந்தும், நியூசிலாந்து, சிங்கப்பூர், பாப்புவா நியூகினி, கனடா, கலிஃபோர்னியா ஆகிய அயல் நாடுகளிலிருந்தும் மாற்றுத் தொழில்நுட்பமும் தேர்ந்த அனுபவமும் கொண்ட ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் கைகோர்த்து களமிறங்கியுள்ளனர்.
பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தீ பரவிவிடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடாக backburn எனப்படும் தீ அரண் உத்தி கையாளப்படுகிறது. RAFT எனப்படும் Remote Area Firefighting Teams தண்ணீரின் உதவியில்லாமல் தீயணைக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் மேற்கொண்டுவருகிறார்கள். எரிபொருளை நீக்கி தீப்பரவாது தடுக்கும் உத்தி இது. குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காடுகளின் மத்தியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இறங்கும் இவர்கள், கையோடு கொண்டுசென்றிருக்கும் மரமறுக்கும் கருவி, புல் அகற்றும் கருவி, ரம்பம் போன்ற கைக்கருவிகளைப் பயன்படுத்தி மரங்களை வெட்டி, காய்ந்து தீப்பற்றத் தயாராய் இருக்கும் புற்களை அகற்றி என அப்பகுதியை மிகுந்த பிரயத்தனத்துடன் சுத்தம் செய்து மேற்கொண்டு தீப்பரவ வழியிலாது தடுக்கிறார்கள்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் சுமார் பத்து சதவீதமளவு சமீபத்திய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ இதுவரை காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை 20. மேலும் 30 பேர் குறித்த தகவல் தெரியவில்லை. 1500 வீடுகளுக்கு மேல் தீக்கிரையாகியுள்ளன. வீடுகள் தவிர கடைகள், வணிக வளாகங்கள், பண்ணைத்தொழுவங்கள், கொட்டகைகள் என தீ தின்றவை ஏராளம். பலியான கால்நடைகளின் எண்ணிக்கையோ இலட்சக்கணக்கில்.
உயிர்ச்சேதம், உடமைச்சேதம், கால்நடை இழப்பு போன்ற நாட்டுவளமிழப்போடு காட்டுவளமிழப்பும் பெரிய அளவில் கவனிக்கப்பட வேண்டியது. காடுவாழ் உயிரினங்கள் பலவும் அழிவைத் தொட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கானுயிர் அழிவு குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவிக்கக் காரணம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கானுயிர் வளம் பிரத்தியேக சிறப்புடையது. அது குறித்த புரிதல் இருந்தால்தான் அவற்றின் இழப்பு குறித்த தீவிரத்தை நம்மால் உணர்ந்துகொள்ள இயலும்.
உலகில் வேறெங்கும் காண முடியாத அதிசய உயிரினங்கள் பலவற்றின் தாயகம் ஆஸ்திரேலியா. இம்மண்ணின் ஆதி உயிரினங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் விசித்திரமும் விநோதமும் நிறைந்தவை. பெரும்பாலான ஆஸ்திரேலிய விலங்கினங்களின் சிறப்பம்சம் அவை மார்சுபியல் என்பதுதான். மார்சுபியல் இனத்தில் குறுகிய கால கர்ப்பத்தில் பிறக்கும் முழுவளர்ச்சியற்றக் குட்டிகளை வளர்க்க பெண் விலங்குகளின் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருக்கும். கங்காரு, வல்லபி, கோவாலா, வாம்பேட், போசம் என ஆஸ்திரேலியாவில் 140-க்கும் மேற்பட்ட மார்சுபியல் விலங்குகள் உள்ளன.
மார்சுபியல் இனத்திலேயே தாவர உண்ணிகள், கொன்றுண்ணிகள், அனைத்துண்ணிகள் என பலவகை உண்டு. பாலூட்டிகளில் வழமையான பாலூட்டிகள், மோனோட்ரீம்ஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டிகள், பறக்கும் பாலூட்டிகள் என பல வகை உண்டு. முட்டையிட்டு அடைகாத்து குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களான பிளாட்டிபஸ்ஸும், எக்கிட்னாவும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அதிசயங்கள். விநோதமான பறவையினங்களும், விஷச் சிலந்திகளும் பாம்புகளும், கடற்பூங்காவென சிலாகிக்கப்படும் பவளப்பாறைத்திட்டுகளும், அவை சார்ந்து வாழும் அற்புத கடல்வாழ் உயிரிகளுமென ஆஸ்திரேலியா பல்லுயிர் வாழ்தன்மைக்கு பிரசித்தமானது.
ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதிக்கு மேல் உலகில் வேறெங்கும் காணவியலாத அபூர்வப் பறவைகள். 8 செ.மீ. நீளமே உள்ள வீபில் (weebil) எனப்படும் சின்னஞ்சிறிய தேன்சிட்டு முதல் 2 மீ. உயரமுள்ள பென்னம்பெரிய பறவைகளான காஸோவரி மற்றும் ஈமு வரை இங்கே உள்ளன.
உலகில் மிகக்கடுமையான விஷம் கொண்ட 25 பாம்பினங்களுள் 21-க்கு ஆஸ்திரேலியாதான் தாயகம். 140 வகை நிலம்வாழ் பாம்புகளுக்கும் 32 வகை கடற்பாம்புகளுக்கும் அல்லாது, சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய உப்புநீர் முதலைகளுக்கும் ஆஸ்திரேலியா பிரசித்தம். ஃப்ரில் கழுத்து ஓணான், நீலநாக்கு பல்லி, தாடி ஓணான், கோவான்னா என 700-க்கும் மேற்பட்ட ஊர்வன பட்டியலும், பரந்த கடற்புரத்தையும் பேரரண் பவளப்பாறைத் திட்டையும் சார்ந்துவாழும் கடல்வாழ் உயிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும்.
உலகின் வேறெங்கும் காணப்படாத அதிசய உயிரினங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில்தான் உலகின் வேறெங்கும் காணப்படாத அளவுக்கு உயிரினங்களின் அழிவும் நடைபெற்றுள்ளது. இலட்சக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருந்த பல உயிரினங்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகு முற்றிலுமாய் அழிந்துவிட்ட இனமாகிவிட்டன. கடந்த 200 ஆண்டுகளில் அழிவுக்காளானவை என்று 24 பறவையினங்கள், 7 தவளையினங்கள், 27 விலங்கினங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது பன்னாட்டு இயற்கைநல பாதுகாப்பு சங்கம்.
நரி, நாய், முயல், ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை, குதிரை, பன்றி, கோழி, வாத்து, மைனா என அறிந்தும் அறியாமலும் அந்நிய நாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பல, சொந்த மண்ணின் உயிரினங்களுக்கே உலை வைக்குமளவுக்குப் பல்கிப் பெருகியிருப்பது சூழல் சமன்பாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. கூடவே புவி வெப்பமயமாதல், சூழல் சீர்கேடு, காடுகள் அழிப்பு, இரசாயன உரங்களின் பயன்பாடு, மனிதனின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் இன்னும் கூட ஏராளமான உயிரினங்கள் அழியக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
அழிந்துவரும் விலங்கினங்களைப் பாதுகாக்க பெருமுயற்சி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சமீபத்திய காட்டுத்தீக்களினால் சுமார் 480 மில்லியன் விலங்கு, பறவை, ஊர்வன உள்ளிட்ட கானுயிர்கள் அழிந்திருக்கலாம் என்று Professor Chris Dickman விடுத்துள்ள அறிக்கை நம்மை திடுக்கிடச் செய்வதோடு ஆஸ்திரேலியாவின் சூழலியல் மாறுபாடு குறித்த அச்சத்தையும் உண்டாக்குகிறது. காடுகள் எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இக்கணக்கெடுப்பு எப்படி சாத்தியம்? இதில் எந்த அளவு துல்லியம் இருக்கமுடியும்?
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு WWF (World Wild Fund for Nature)க்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இப்புள்ளிவிவரம் பகிரப்பட்டுள்ளது. காடுகள் அழிவதன் மூலம் கானுயிர்கள் அழிந்துவருவதை முன்னிட்டு கானுயிர் வாழ்பரப்பு குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் இணை ஆக்குநரும் ஆஸ்திரேலிய உயிரினங்கள் குறித்த சூழலியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையில் சுமார் 30 வருடங்கள் அனுபவசாலியுமான Professor Chris
Dickman குறிப்பிடுவதன் பின்னணியில் இருக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்கத்தக்கவை. இக்கணக்கெடுப்பில் விலங்கினம், பறவையினம், ஊர்வனவினம் மட்டுமே உள்ளன. பூச்சியினம், தவளையினம், வௌவாலினம் குறித்த அழிவு கணக்கிடப்படவில்லை. எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் இழப்பின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவையாக இருக்கக்கூடும். மேலும் இம்மதிப்பீடு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தினுடையது மட்டுமே.
ஒரு ஹெக்டேர் (பத்தாயிரம் சதுர மீட்டர்கள்) நிலப்பரப்பில் சுமார் 18 விலங்குகளும் 20 பறவைகளும் 130 ஊர்வனவும் வாழ்வதாக முந்தைய கானுயிர் கணக்கெடுப்புகள் தந்திருக்கும் புள்ளி விவரத்தைக் கொண்டும் அன்றைய தேதி வரை எரிந்துள்ள காடுகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டும் அழிந்துள்ள கானுயிரிகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. தீப்பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தற்போது இவ்வெண்ணிக்கை இன்னும் கூடுதலாய் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதே சமயம் பூமிக்கடியில் வளை தோண்டி வாழும் பல விலங்கினங்களும் ஊர்வனவும் தீயிடமிருந்து தப்பி பதுங்கி உயிரோடிருக்க வாய்ப்புண்டு என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் உள்ளது.
கங்காரு, ஈமு போன்ற அளவில் பெரிய உயிரினங்களுக்கு ஓரளவாவது தப்பித்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தும் எரிந்துமுடிந்த காடுகளில் ஆங்காங்கே கரிக்கட்டையாய் கங்காருகளின் சடலங்கள் காணக்கிடைக்கின்றன. கோவாலா போன்ற மரத்தில் வாழும் உயிரினங்களுக்கும் சிற்றுயிர்களுக்கும் பறவைகளுக்கும் காட்டுத்தீ கோர முடிவைத்தான் தந்திருக்கிறது. தீயில் சிக்கித் தப்பிய விலங்குகள் உடல் முழுக்க தீக்காயங்களோடு வாழப்போராடி முடியாமல் மடியும் காட்சி அவலம்.
கங்காரு தீவில் மட்டுமே வசிக்கும் Dunnart என்ற சுண்டெலி அளவிலான சிறு மார்சுபியல் விலங்கினமும் தெற்காஸ்திரேலியத் தீவொன்றில் வாழ்கின்ற Southern brown bandicoot இனமும் Yellow bellied glider, Greater glider, Pygmy possum போன்ற மேலும் பல அரிய உயிரினங்களும் காட்டுத் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் முக்கியமானவை கோவாலாக்கள். நகர விஸ்தரிப்பு, காடழிப்பு, chlamydia என்னும் பால்நோய்த்தொற்று, வாகனவிபத்து, நாய், நரிகளால் ஏற்படும் உயிரிழப்பு என பல்வேறு காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இச்சூழல் அபாயத்தைக் கருத்திற் கொண்டு கோவாலாக்களுக்கென சிறப்பு சரணாலயங்கள், பாதுகாப்பகங்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் இனம் பெருகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டுத்தீயால் கடந்த நான்கு மாதங்களில் நியூ சவுத் வேல்ஸில் மட்டும் சுமார் 8000 கோவாலாக்கள் (30%) இறந்து போயிருப்பதாக வரும் கணிப்புகள் பெருங்கவலை அளிக்கின்றன.
கோவாலாக்கள் பொதுவாக தண்ணீர் குடிக்காத விலங்குகள். அவை தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தை தாங்கள் உண்ணும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே பெற்றுக்கொள்கின்றன. ஆனால் தீப்பற்றிய காடுகளில் மரங்களை இழந்து, பதறித்திரியும் கோவாலாக்கள், காப்பாற்றப்பட்டு தண்ணீர் புகட்டப்படுகின்றன. தண்ணீரை மாய்ந்து மாய்ந்து அவை குடிக்கும் காட்சிகளே சொல்லிவிடும், நாட்கணக்காக உணவின்றி நீர்ச்சத்து குறைந்துபோய் அவை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதை. கோவாலாக்கள் காப்பாற்றப்பட்டாலும் அவற்றின் மனப்பதற்றம் குறைக்கப்பட்டு, உடற்காயங்கள் ஆற்றப்பட்டாலும் புதிய வனத்தில் புதிய சூழலில் அவற்றை வாழ்விப்பதென்பது பெரும் சவால்.
தீயை அணைப்பதொரு பக்கம் இருக்க, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, எரிந்து கருகிய காடுகளிலும் பண்ணை நிலங்களிலும் ஆங்காங்கே கிடக்கும் இறந்து அழுகிய விலங்குடல்களை எரிப்பதும் புதைப்பதும், எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்று பயங்காட்டியபடி சாலையோரத்தில் காட்சியளிக்கும் எரிந்து கரிக்கட்டையான நெடுமரங்களை அப்புறப்படுத்துவதுமான தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது தீயிடமிருந்து தப்பியுள்ள உயிரினங்களுக்கு உணவின்மையும் உறைவிடமின்மையும் இனிவரும் நாளில் பெரும் பிரச்சனையாகக்கூடும். போதாக்குறைக்கு காடற்ற, மரங்களற்ற திறந்தவெளிகள், நரிகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் நல்ல வேட்டைக்களமாக மாறிவிடும். உணவுச்சங்கிலியின் பல கண்ணிகள் ஆங்காங்கே அறுந்துபோய் உள்ள இச்சூழலில் விரைவிலேயே மற்றுமொரு கானுயிர் கணக்கெடுப்பின் தேவையும் அது சார்ந்த முன்னெடுப்புகளும் தொடருழைப்பும் காத்திருக்கின்றன. சூழல் சமன்பாடு சீர்குலைந்தால் வரக்கூடிய ஆபத்து இதனினும் பேராபத்தாய் இருக்கும் என்பதை உணர்ந்து இனியேனும் பொறுப்பாய் மனிதகுலம் செயல்படவேண்டிய தருணமிது.
(ஜனவரி, 2020 எதிரொலி பத்திரிகையில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது)