ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். ஆலையில்லாத ஊர் என்றால் சர்க்கரை ஆலை இல்லாத ஊர். சர்க்கரை ஆலை இருக்கவேண்டும் என்றால் கரும்பு அதீதமாக விளைய வேண்டும். கரும்பு விளையக்கூடிய மண்ணாக இல்லாவிடில் அங்கே சர்க்கரைக்கு வழியில்லை. இப்போது உலகமயமாக்கல் காரணமாக உலகின் எந்த மூலையில் விளைவதையும் எந்த மூலையிலும் பெற முடியும். முற்காலத்தில் இந்த வசதி கிடையாதல்லவா? அப்படியென்றால் இனிப்புக்கு அந்த ஊர் மக்கள் எங்கே போவார்கள்? இருக்கவே இருக்கிறது இலுப்பைப்பூ.
![]() |
1. இலுப்பைப்பூக்கள் Pc. Smarndi (wikimedia commons) |
இலுப்பைப் பூக்களைச் சேகரித்து உலர்த்தி சுத்தப்படுத்தி பிறகு அவற்றை வெதுவெதுப்பான நீரில் பல மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை வடிகட்டிக் கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் பாகினை ஆற வைத்துப் பெறுவதுதான் இலுப்பைப்பூச் சர்க்கரை. இலுப்பைப் பழங்களும் மிக இனிப்பானவை என்றாலும் சர்க்கரை தயாரிக்கப்படுவது பூக்களின் தேனிலிருந்துதான். உலரவைத்த இலுப்பைப் பூக்களை அப்படியேயும் உண்ணலாம்.
2. உலர்ந்த இலுப்பைப்பூக்கள்
Pc. Gurpreet Singh Ranchi (wikimedia commons)
அதீத இனிப்புச்சுவை கொண்ட இலுப்பைப் பூக்களிலிருந்து கள் போன்ற போதையூட்டும் மதுபானம் கூட தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இம்மரத்துக்கு madhuca என்று காரணப்பெயர் பெயரிடப்பட்டுள்ளது. 'மதுகா' என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'இனிமை' என்று பொருள். இதன் அறிவியல் பெயர் Madhuca longifolia என்பதாகும். ஆங்கிலத்தில் Indian Butter tree, Honey tree, Mahua, Madhuca என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இலுப்பையின் தாயகம் இந்தியா, இலங்கை, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகள்.
முற்காலத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் இலுப்பைப்பூவை இனிப்பூட்டியாகப் பயன்படுத்தினார்கள் என்றும் பூக்களையும் இலுப்பைப் பழங்களையும் நொதிக்க வைத்து போதையூட்டும் தேறல் தயாரித்து அருந்தினார்கள் என்றும் தெரிகிறது. இப்போதும் வட இந்தியப் பழங்குடி மக்களிடத்தில் திருமணம், திருவிழா போன்ற கலாச்சாரக் கூடுகைகளின்போது இலுப்பைப்பூ ஊறல் அருந்தும் வழக்கம் உள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனத்தார் இலுப்பை மரத்தைத் தெய்வமாக வழிபடுகின்றனர்.
![]() |
3. இலுப்பை மரம் Pc. LRBurdak (wikimedia commons) |
ஒரு டன் அதாவது ஆயிரம் கிலோ இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை கிடைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். நன்கு வளர்ந்த ஒரு இலுப்பை மரம் வருடத்துக்கு இருநூறு கிலோ முதல் முந்நூறு கிலோ அளவுக்கு இலுப்பைப் பூக்களைத் தரும்.
ஒரு இலுப்பை மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு சுமார் இருநூறு கிலோ விதைகள் கிடைக்கும். எண்ணெய் வித்துக்களான அவற்றிலிருந்துதான் இலுப்பை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெயிலிருந்து சோப்பு, சவக்காரம் மற்றும் உயவு எண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மூட்டுவலி, தலைவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கான மருந்துகளிலும், சருமப் பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பிலும் இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கான தாவர வெண்ணெய் தயாரிப்பிலும் இலுப்பை பெரும் பங்கு வகிக்கிறது. Indian butter tree என்று ஏன் சொல்லப்படுகிறது என்று இப்போது புரியுமே! எண்ணெய் எடுத்தப் பிறகான சக்கை தாவரங்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகிறது.
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், ஒரிசா என பல வட இந்திய மாநிலங்களில் இலுப்பை ஜாம் தயாரிப்புத் தொழில் சிறு தொழிலாகவும் பெருவணிகமாகவும் நடைபெறுகிறது. உலரவைத்த இலுப்பைப் பூக்களும் இலுப்பை பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் ஜாமும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இணையங்களிலும் விற்பனைக்கு உள்ளன.
![]() |
4. உலர் இலுப்பைப் பூக்களும் ஜாமும் பட உதவி - இணையம் |
தமிழ்நாட்டில் முன்பு கோவில்களில் விளக்கெரிக்க இலுப்பை எண்ணெய்தான் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதற்காகவே கோவிலைச் சுற்றி இலுப்பை மரங்கள் பெருமளவு வளர்க்கப்பட்டன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோவில், திரு இரும்பைமாகாளம் மாகாளேச்வரர் கோவில் என பல கோவில்களில் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.
5. மணிமுழுங்கி மரம்
Pc. A. J. T. Johnsingh (wikimedia commons)
மேலே உள்ள படத்தில் இருப்பது பொதிகை மலை வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சொரிமுத்து ஐயனார் திருக்கோவிலின் இலுப்பை மரம். பக்தர்கள் வேண்டுதலின் பொருட்டு, இக்கோவிலின் தல விருட்சமான இந்த இலுப்பை மரத்தைச் சுற்றி மணிகளைக் கட்டுவது வழக்கம். மரம் பெருக்கப் பெருக்க நாளடைவில் மணிகள் மரத்தோடு மரமாகப் புதைந்து காணாமற் போய்விடுகின்றன. அதனால் இம்மரத்துக்கு 'மணிமுழுங்கி மரம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது களக்காடு - முண்டந்துறை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முன்பு தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இலுப்பை மரங்கள் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் காரணத்தால் அவை அழிவின் விளிம்பில் இருக்கும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
*****