23 December 2016

சிட்னியில் என் நூல் வெளியீட்டு விழா


என் முதல் நூலுக்கான வித்தை என்னுள் விதைத்தவர்களுள் முதன்மையானவர் என் அன்புத்தோழி மணிமேகலா என்கிற யசோதா பத்மநாதன். அட்சயப்பாத்திரம் என்னும் வலைத்தளத்தில் அள்ள அள்ளக் குறையாத  அவரது சிந்தனையூற்றின் சிறப்புகளைக் காணலாம். சிட்னியில் உயர்திணை என்னும் அமைப்பினூடாய்ப் இங்கு வசிக்கும் பற்பல தமிழிலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் அரிய முயற்சியை சில வருடங்களாய் மேற்கொண்டுவருகிறார். என்னுடைய ஆத்மார்த்தமான தோழி என்பதை விடவும் என் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கல்லையும் பார்த்துப் பார்த்து வடிவமைப்பவர் என்று சொல்லலாம். என் திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளில் என்னை விடவும் அவரே அதிகமாய் மெனக்கெடுகிறார்… என்னை முன்னடத்துகிறார்… இதோ இப்போது என் புத்தகத்தை வெளிக்கொணரும் முயற்சியிலும் அவரே முன்னிற்கிறார்.





ஹென்றி லாஸனின் ஆஸ்திரேலியக் காடுறை கதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும்வண்ணம் அகநாழிகை பதிப்பகம் வாயிலாய் வெளியான என்றாவது ஒருநாள் என்னும் என் நூலுக்கான முறையான வெளியீட்டு விழா இதுவரை நடைபெறவில்லை என்பதோடு அதற்கான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை என்பதே உண்மை. நான் அயல்நாட்டிலிருப்பதும் இலக்கியவட்டாரத்தில் அநேகரை நான் அறியாதிருப்பதும் காரணங்கள் எனக் குறிப்பிட்டாலும் என் தயக்கமும் கூச்சமும் சொல்லப்படாத முதற்காரணம். அத்தயக்கமே நூலுக்கான முன்னுரை அணிந்துரைகளுக்காக எவரையும் நாடத் தடைபோட்டது. அத்தயக்கமே நூலுக்கான அறிமுகத்தை எவர்மூலமும் கோரவிடாமல் தவறவிட்டது. அத்தயக்கமே நூலுக்கான விளம்பரத்தை விலக்கிவைத்திருந்தது. அத்தயக்கமே நூலின் விற்பனையை பாதித்தது. 


என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் தோழியின் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் தோழிக்கும் அவருக்கு பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்மாறு செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.

இந்தியக் குடியரசு தினம் & ஆஸ்திரேலிய தினம் என்னும் சிறப்புடை ஜனவரி 26-ஆம் நாளன்று, நூல் வெளியீட்டு விழா..  




வர இயன்றவர்கள் தவறாமல் வருகை தருக.. 
வர இயலாதவர்கள் மானசீகமாய் வாழ்த்திடுக. 
அன்பும் நன்றியும் அனைவருக்கும். 
***********




சென்ற பதிவில் வண்ணதாசன் அவர்களுடைய கவிதையைக் குறிப்பிட்டு காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை என்றெழுதினேன்.. இதோ இன்று அக்கவிஞனுக்கு சாகித்ய அகாடமி விருது சமர்ப்பணமாகியுள்ளது. இப்போதும் சொல்கிறேன்... நெகிழெழுத்தால் நம் நெஞ்சங்கவர்ந்தவனுக்கு விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை என்று.. 


(படம் உதவி - இணையம்)


வரிகளுக்குள் வாழ்வின் அழகியல் புகுத்துபவன்
வலிகளுக்குள்ளும் வாழ்வியல் இனிமை காண்பவன்
நுண்ணிய ரசனைக்காரன்
எண்ணியதெல்லாம் எழுத்தாக்கும்
திண்ணிய வல்லமை பெற்றவன்
விரக்தி வேர்த்தொழுகும் பொழுதுகளில்
எழுத்துச்சாமரம் வீசியெனை ஆசுவாசப்படுத்துபவன்
சிற்பியின் கண்களுக்கு மட்டுமே
கல்லினுள் சிலைகள் தெரியும்
வண்ணங்களின் தாசனுக்கு மட்டுமே
காட்சியுள் கவிதைகள் தோன்றும்.
நெகிழெழுத்தால் நம் நெஞ்சங்கவர்ந்தவனுக்கு
விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை
விருதுகளொன்றும் அவனெழுத்தின் விளிம்பில்லை..

வாசகநெஞ்சங்களே என்றுமவன் வண்ணங்களின் எல்லை.
***************



27 November 2016

கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமில்லை...





இரண்டுவருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வெளியான கவிஞர் வண்ணதாசன் அவர்களுடைய கவிதை இது. 

அத்துவானத் தண்டவாளத்தில்
நெடும்பொழுது நின்றது தொடர்வண்டி.
எந்தச் சலனமும் அற்று
சன்னல் வழி விரியும்
மாலைத் தொடுவான் பார்த்திருக்கையில்
ஒரு வெண்மேகம் இரண்டாகப்
பிரிந்து நகரும்அற்புதம் நிகழ்ந்தது.
எனக்கு ஏன் அப்படிக்
கண்ணீர் திரண்டது எனத் தெரியவில்லை.

இக்கவிதைக்கான என் பின்னூட்டம் கீழே.. (வலைப்பக்க சேமிப்புக்காக இங்கே பகிர்கிறேன்.)

காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப் பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை

கடந்துவந்த பாதைகளில் சிறாய்ப்புற்ற
காயத்தின் வடுவேதும் கவனத்துக்கு வந்திருக்கலாம்.
நினைவுகளின் சாயை படிந்த மங்கிய பிம்பங்களின்
மறுபிரதிபலிப்பாய் அது இருந்திருக்கலாம்.
நெகிழ்வுற்ற கணங்களின் நீட்சியாகவும் இருக்கலாம்

தொப்புள்கொடியறுத்துத் தாயிடமிருந்து
சுகமாய்ப் பிரியும் சிசுவை நினைத்திருக்கலாம்.
கூடலுக்குப்பின் களித்துக் களைத்துப் பிரியும்
காதல் துணையாகவும் அது காட்சியளிக்கலாம்.
புகுந்த வீட்டுக்கு விசும்பலோடு விடைபெறும் மகளை
ஒருவேளை மனக்கண்ணில் கொணர்ந்திருக்கலாம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்த
புலவர் பெருமக்களை எண்ணி புளகாங்கிதமுற்றிருக்கலாம்.
புரட்டிப்போட்ட வாழ்க்கையை நிமிர்த்திடும் நிமித்தம்
பரதேசமேகிய பால்ய நட்புக்கு விடைகொடுத்த தருணம்
விருட்டென்று நினைவுக்கு வந்திருக்கலாம்.
சின்னேரப் பொழுதில் சிநேகம் வளர்த்து
செல்போன் எண்களோடு கைகுலுக்கிப் பிரிகின்ற
பயண சிநேகிதங்களைப் பற்றியும் நினைத்திருக்கலாம்.

காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப் பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை


23 November 2016

மகிழ்வும் நெகிழ்வும் 4


உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை என்றார் கவிமணி... 

அப்படிதான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் உள்ளத்தில் உருவெடுத்தது கவிதை.. எழுதுவது கவிதையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அப்போது கவலையில்லை.. கொஞ்சம் எதுகை மோனையோடு எழுதிவிட்டால் அதுதான் கவிதை என்ற தீர்மானமான எண்ணம் மேலோங்கியிருந்ததால் நிறைய கவிதைகள் எழுதினோம்..காணும் காட்சிகளை எல்லாம் கவிதையாக்கினோம்... அவற்றில் இயற்கை துள்ளியது.. அழகியல் ததும்பியது.. கற்பனை மலர்ந்தது, கனவு விரிந்தது.. மெல்ல.. நாட்டு நடப்பியல் உட்புகுந்தது... சமுதாயத்தை சாடினோம்.. அநியாயம் கண்டு பொங்கினோம்.. அறிவுரைகளை அள்ளிக்கொட்டினோம்.. அநாயாசமாய் எழுதித் தள்ளினோம்.. ஏன் எழுதினோம் எழுதினோம் என்கிறேன் என்றால் அது ஒரு குழுவியக்கம். நானும் என் வகுப்புத் தோழிகளுமாய்.. போட்டி போட்டுக்கொண்டு எழுதினோம். அது ஒரு அழகிய கவிதைக்காலம். என் முதல் கவிதையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. சிரிப்பு வருகிறது. 

நிஜமென்று நினைத்தே
நின்னை நாடிவந்த என்னை
நின்ற இடத்திலேயே
நிற்கச் செய்துவிட்டாய்!

சிலையென்று உன்னருகில்
சின்னப்பலகை ஒன்றிலே
சிங்காரமாய் எழுதியே நீ
சிரித்திருக்கக் கூடாதோ..

வண்ண நிறங்கள் தீட்டியே
வாலைக்குமரி போலவே
வசந்தம் என்றும் வாடாமல்
லயித்திருக்கும் அழகியே!

கல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியே சிறுமியான என்னை இப்படி எழுதத் தூண்டியது. இப்படிதான் காண்பதையெல்லாம் கவிதையாக்கினேன்.. அல்லது அதுவே கவிதையென நம்பினேன்.  

பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள் வாசிப்பது தடை செய்யப்பட்டு, போனால் போகிறது என்று அம்புலிமாமா மட்டும் வாசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த பருவம் அது... அத்தோடு கவிதையென எழுதப்படும் யாவும் தணிக்கை செய்யப்படும் அபாயமும் இருந்தது. அச்சூழலில் ஒரு பதின்மவயது சிறுமியின் கவிதைக்களம் எதுவாக இருக்கமுடியும்.. பெரும்பாலும் சிறுவர்களுக்கானப் பாடல்களாகவே அவை அமைந்தன. எனையொத்த சக தோழிகள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாய்... காதல் கவிதைகளை சர்வசாதாரணமாகப் படைக்க... எனக்கோ காதல் என்ற வார்த்தையைக் காதால் கேட்கவும் துணிவில்லாதிருந்தது. நான் எழுதும் அனைத்தையும் தாள்களில் அல்லாது நோட்டுப் புத்தகத்தில் எழுதும் வழக்கத்தை வைத்திருந்ததால் அவற்றை என் பொக்கிஷங்களெனப் பாதுகாத்தேன். 

திருமணம் என்ற பெயரில், என் அனுமதியின்றியே வேரோடு எனைப் பெயர்த்து வேறிடத்தில் ஊன்றியது காலம். என் இருபது வருட வாழ்வை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கிளம்பும்போது என் உடமைகளோடு தவறாமல் என் நோட்டுப் புத்தகங்களையும் வைத்தனுப்பினார் அம்மா. . குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்றான நிலையில் கொஞ்சகாலம் நானொரு எழுத்தாளி என்பதையே மறந்துபோயிருந்தேன். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு அவர்களது தொல்லையாலோ.. தொலைக்காட்சித் தொடர்களாலோ... அக்கம்பக்க அரட்டைக் கச்சேரியாலோ.. நண்பகல் உறக்கத்தாலோ.. ஆக்கிரமிக்கப்படாத வாழ்வின் ஓய்வுப்பொழுதுகள் உள்ளிருக்கும் எழுத்தார்வத்தை மீளவும் வெளிக்கொணரத் துவங்கின. கணினி, இணையம் போன்றவற்றின் பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது. அப்போதும் நோட்டுப்புத்தகத்தில்தான் அத்தனையும் எழுதிவைத்தேன். 

தனியொருத்தியாய் வேரோடு எனைப் பெயர்த்தது போதாதென்று சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு பெயர்த்துக்கொணர்ந்து அயல்மண்ணில் ஊன்றியது அடுத்தொரு காலம். ஆளுக்கிரண்டு பெட்டிகளென்ற நிபந்தனைக்குள் அடங்கவில்லை அந்நாள்வரையிலான என் வாழ்வு. எடுப்பதும் விடுப்பதுமான விளையாட்டின் இறுதியில் பெட்டியில் இடமில்லை என்று கைவிடப்பட்டவற்றோடு கலந்துபோனது என் கவிதைநோட்டு. ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு. இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ். 

ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும். எனைச் சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளும் நட்புகளும் ஏதோவொரு வகையில் என்னை வளர்த்துவிடுபவர்களாகவும், ஊக்கத்துடன் வழிநடத்துபவர்களாகவும், துவளும் பொழுதுகளில் தூக்கி நிறுத்துபவர்களாகவும், என் வளர்ச்சியில் இன்பம் காண்பவர்களாகவும் இருப்பதும் முக்கியக் காரணம். இன்றைய என் மகிழ்வின் சிதறல்களில் வெளிப்படுவதெல்லாம் பின்னிருந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுக்கும் அனைத்து நல்லுறவுகளின்.. மற்றும் நன்னட்புகளின் அகமும் முகமுமே.

அந்நாளில் எழுதியவற்றை நோட்டுப்புத்தகத்தில் சேமித்தாற்போன்று இந்நாளில் என் மகிழ்வுகளையும் நெகிழ்வுகளையும் என் வலைப்பக்கத்தின் பதிவேட்டில் பத்திரப்படுத்துகிறேன். நானே தவறவிட்டாலும் என்னிடத்தில் கொணர்ந்துசேர்க்க ஒன்றல்ல, இரண்டல்ல... எண்ணிலா நட்புகள் இங்கிருக்கின்றீர்களே...  

மகிழ்வு 1

 03-10-16 தினமலர் பட்டம் சிறுவர் இதழில் என்னுடைய சிறுவர் பாடல் வெளியாகியிருப்பதொரு மகிழ்வின் சிதறல்.. பட்டம் சிறுவர் இதழின் பொறுப்பாசிரியர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி. 





மகிழ்வு 2
11.11.2016 இல் கானமயில் என்ற சிறு தகவற்பதிவு.






மகிழ்வு 3

கூகுள் மேப்பில் பயனாளர் பயன்பாட்டுக்காக பகிரப்பட்ட என்னுடைய சில படங்களின் பார்வையாளர் கணக்கு ஐயாயிரத்தைத் தாண்டிவிட்டதாக தகவல் வந்திருப்பது மகிழ்வின் கணக்கில் கூடுதலாய் ஒன்று…



மகிழ்வு 4

கடந்த ஆகஸ்ட் மாதம் சிட்னிக்கு வந்திருந்த கவிஞர் சல்மா அவர்களை உயர்திணையின் மாதாந்திரக்கூடல் வாயிலாய் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. காத்திரமான உடல்மொழி எழுத்துகளால் அறியப்பட்டிருந்தாலும் பழகுதற்கு எவ்வித ஆர்ப்பாட்டங்களுமற்ற மிகவும் எளிய பெண்மணி.. சிநேக சுபாவமும் சிறந்த சொல்லாளுமையும் கொண்ட அவரோடு அளவளாவ அழகியதொரு வாய்ப்பினை உருவாக்கிய உயர்திணை அமைப்பின் செயற்பாட்டாளர் தோழி மணிமேகலாவுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்த நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றி. கடந்துவந்த பாதைகளின் கரடுமுரடுகளால் மனதாற்சுமந்த வடுக்களையும், வடுக்களை எழுத்தால் வடித்த திறனையும்...சுயம் தேடி அலைந்து சோர்வுற்ற காலத்து சோதனைகளையும், இறுதியாய் தன் அடையாளம் கண்டறிந்த  சாதுர்யத்தையும் சாதனைத்திறனையும் அவர் பகிர்ந்த அனுபவக்கோவைகளினூடே அறிய இயன்றது. அன்றைய சந்திப்பின் ஆவணமாய் சில நிழற்படங்கள்… இரண்டாவது படத்தில் அவர் கையிலிருப்பது என்னுடைய 'என்றாவது ஒருநாள்' புத்தகம். :)))






(இறுதியிரு படங்களுக்காய் உயர்திணை தளத்துக்கு என் நன்றி)

6 November 2016

நட்புகளால் தொடரப்படும் நன்முயற்சி


வாய்ப்புகளின் கதவு இன்னும் திறந்திருப்பது மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டுவதாக உள்ளது. ஆம்... ஆஸ்திரேலிய இயற்கைச்சூழல் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் கலந்துகொண்ட என்னுடைய படங்களுள்  நேற்று காலை வரை அதிகபட்ச வாக்குகளாக 111 வாக்குகளைப் பெற்ற படம் கடற்பாசிப் படம். நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்ற படங்களின் மத்தியில் இந்தப்படத்துக்கான வெற்றி சாத்தியமா என்று தெரியாத நிலையில் இப்போது சின்னதொரு ஆசுவாசம். நடுவர்கள் போட்டிப்படங்களைப் பரிசீலனை செய்யவிருப்பது நவம்பர் ஏழிலிருந்து என்பதால் வாக்குக்கான காலம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். இப்போதும் வாக்களிக்க முடிகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதனால் இந்த ஒரு படத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்க விரும்பினேன்.


இத்தகவலை நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தவுடன் ஓடோடி வந்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்,  காகிதப்பூக்கள் ஏஞ்சலின்,  ஆல்ப்ஸ் தென்றல் நிஷாந்தி பிரபாகரன் என மூவருக்கும் அளவிலாத என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன். அவர்களுடைய அதிரடி முயற்சியினால்தான் கடற்பாசி படத்துக்கு தற்போதைய நிலவரப்படி 224 வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்கள் உண்மைகள் வலைப்பூவில் தமிழர்களே ஆஸ்திரேலியாவாழ் தமிழ்ப்பெண்ணுக்கு உங்களின் ஆதரவு தேவை ப்ளீஸ் என்று பதிவாக எழுதியுள்ளார்.  நிஷாந்தியோ தமிழ்மன்றத்தின் சொத்து என்றெழுதி மலைக்கவைத்துள்ளார்.. ஏஞ்சலின் தன் பக்கத்தில் அல்லாது பசுமை விடியல் பக்கத்திலும் பகிர்ந்து வாக்கு சேகரிக்கிறார். இத்தகையோரின் அன்புக்கு முன் நன்றி என்னும் ஒற்றை வார்த்தை அர்த்தமற்றுப் போகிறது.  ஆயினும் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.


தொடர்ந்து நட்புகளும் நலம்விரும்பிகளும் என் பதிவை ஷேர் செய்தவண்ணம் உள்ளனர். இதுவரை 31 பேர் பகிர்ந்துள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.  இன்னுமிருக்கும் சொற்ப மணித்துளிகளில் இன்னும் சில வாக்குகள் கிடைக்கக்கூடும். வெற்றிக்குப் போதுமானதா இல்லையா என்பது தெரியாது எனினும் நம்மாலான முயற்சிகளை எல்லா வழியிலும் செய்திருக்கிறோம் என்ற மன நிம்மதி கிடைக்கும். அத்துடன் உறவுகளும் நட்புகளும் நலம்விரும்பிகளும் என்மீது கொண்ட அன்பும் அக்கறையும் என்னை முன்னிலைப் படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் வாழும் நாளெல்லாம் மனம் நிறைத்து மகிழ்வாய்த் தாலாட்டும்.  அனைவருக்கும் என் அன்பான நன்றி.


இதுவரை இப்படத்துக்கு வாக்களிக்காதவர்கள் வாக்களிக்க விரும்பினால்..

படத்துக்குக் கீழே உள்ள கடற்பாசி என்று சிவப்பு நிறத்தில் இருக்கும் பெயரைக் க்ளிக் செய்தால் தளம் திறக்கும்.  அங்கு இதே படம் இருக்கும்.  படத்தின் கீழே வலப்பக்கம் உள்ள இதயவடிவத்தையோ அல்லது ஃபேஸ்புக் பட்டனையோ அல்லது இரண்டையுமோ க்ளிக் செய்யலாம்.  அவ்வளவுதான்.







வாக்களித்த மற்றும் வாக்களிக்கவிருக்கும் 
அனைவருக்கும் என் அன்பான நன்றி. 

2 November 2016

உங்கள் பொன்னான வாக்குகளை வேண்டி...

அனைவருக்கும் அன்பான வணக்கம்… புதிதாய் அரசியல் களமிறங்கியுள்ள ஒரு சுயேட்சையின் சங்கடத்தோடு உங்களை வாக்கு கேட்டு அணுகுகிறேன். அரசியலில் இறங்கிவிட்டேனோ என்று அச்சம் கொள்ளவேண்டாம். விஷயம் இதுதான். 

ஆஸ்திரேலியாவின் இயற்கைச்சூழல் பாதுகாப்பு குறித்த புகைப்படப்போட்டியில் இவ்வருடம் பங்கேற்றுள்ளேன் என்பதை மிகவும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். புகைப்படப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தாலும் நான் எடுக்கும் படங்கள் போட்டியில் பங்கேற்கும் தகுதிவாய்ந்தவைதானா என்ற ஐயம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கும். பங்கேற்பாளர்கள் பலரும் பிரமாதமான ஒளிப்படக் கலைஞர்கள் என்பதும் பிரமிக்க வைக்கும் படங்களால் நம்மை மிரளவைப்பதுமே காரணம். இம்முறை என் திறமை மீது ஓரளவு நம்பிக்கை வளர்ந்திருப்பதால் துணிந்து களமிறங்கிவிட்டேன். வெற்றியோ.. தோல்வியோ… போட்டியில் பங்கேற்றால்தானே பலன் தெரியும்.. 

The Nature Conservancy Australia 2016 photo competition என்பது போட்டியின் பெயர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எவரும் பங்கேற்கலாம். ஒருவருக்கு 50 படங்கள் வரைமுறை. நான் இதுவரை பதினைந்து படங்களைப் பதிவேற்றியுள்ளேன். ஃபேஸ்புக்கிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்துள்ளேன். நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் மூன்று படங்களுக்கு பரிசு… அதைத் தவிர புகைப்படரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் படத்துக்கும் பரிசு உண்டு. ஒவ்வொரு படத்துக்கும் கிடைக்கும் வாக்குகளைப் பொறுத்து அப்பரிசுப்படம் எதுவெனத் தேர்வாகும். அதற்குதான் உங்கள் உதவியை நாடுகிறேன். 

உண்மையாகவே என்னுடைய படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவற்றுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இதுவரை வாக்களித்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இனி வாக்களிக்கவிருக்கும் அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.  

வாக்களிக்கும் முறை - இங்கு நான் இணைத்துள்ள ஒவ்வொரு படத்தின் கீழேயும் உள்ள ஆங்கிலப் பெயரைச் சொடுக்கினால் போட்டித்தளத்துக்குச் செல்லமுடியும். அங்கிருக்கும் படத்தின் கீழே வலப்பக்க ஓரம் உள்ள இதய வடிவத்தையோ ஃபேஸ்புக் பட்டனையோ க்ளிக் செய்து உங்கள் வாக்கினை செலுத்தலாம். ஒருவர் ஒரு படத்துக்கு ஒரு வாக்குதான் அளிக்க இயலும். ஆனால் எத்தனைப் படங்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். 

வாக்களிக்க கடைசி நாள் - நவம்பர் 4.




படம் 1 கருப்பு அன்னங்கள் மேய்தல்



படம் 2 சிரிக்கும் கூக்கபரா



படம் 3 தேனீ



படம் 4 - வெட்டுக்கிளி



படம் 5 - கொரெல்லா குஞ்சுக்கு இரையூட்டுதல்



படம் 6 - ஆலமரத்தின் அண்டைவேர்கள்



படம் 7 - கருப்பு அன்னங்கள் இணை



படம் 8 - கடற்புறா இணை




படம் 9 - ஒளிர்தல்



படம் 10 - நீர் அரணை




படம் 11 - ஸ்குவாஷ் வண்டு



படம் 12 - கடற்பாசி
              



படம் 13 - காலா காக்கட்டூ





படம் 14 - கருப்பு அன்னம்



படம் 15 - ஆஸ்திரேலிய காகம்

இந்த பதினைந்து படங்களில் உங்களை அதிகம் கவர்ந்த சிலவற்றுக்கோ அல்லது அனைத்துக்குமோ வாக்களிக்கலாம். எனவே உங்கள் பொன்னான வாக்குகளை என் படங்களுக்கு அளித்து ரசிகர் விருப்பப் பரிசுக்குத் தேர்வுசெய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். வாக்களிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வாக்களிக்க கடைசி தேதி 4-11-16. அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். 

28 October 2016

மடமயிலும் மதியறு மாந்தரும்


மப்பும் மந்தாரமுமாய் மழைமேகம்.. மயக்கும் காதலிணை அருகில்... ஆட்டத்துக்குக் கேட்கவேண்டுமாசட்டென்று தோகை விரித்து ஆடத்துவங்கிவிட்டார் அந்த ஆணழகன். அரைவட்டத் தோகையின் அத்தனைக் கண்களும்  என்னைப் பார் என் அழகைப் பார் என்று அழகு காட்டும்போது நமக்கே அவ்வளவு ஆசையாக இருக்கிறதே.. அந்தப் பெண்மயிலுக்கு ஆசை இல்லாமலா இருக்கும்.. அவளோ.. இதென்ன பிரமாதம்.. நான் பார்க்காத அழகனாஅவன் ஆடாத ஆட்டமா என்பது போல அலட்சியப் பார்வையோடு நின்றிருந்தாள். இவரோ அவ்வளவு பெரியத் தோகையை அநாயாசமாய்த் தூக்கிநிறுத்தி, தன் முன்னழகையும் பின்னழகையும் காட்டி, அவ்வப்போது இறகு சிலிர்ப்பி காவடியாட்டம் ஆடி, எங்கே அவள் பார்க்காமல் போய்விடுவாளோ என்று இஸ்.. இஸ்.. என்று இரைந்து.. அவளைக் கவர எப்படியெப்படியெல்லாமோ பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்..




அவளிடம் ஒரு சின்ன இணக்கம் கண்டுவிட்டால் போதும்.. காதல்மனத்தைக் கவர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவளைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவதும்.. இன்னுமாடீ உன் மனம் இரங்கவில்லை என்பதுபோல் இடையிடையே அகவிக் கேட்பதுமாகஅவரிருக்க... மிடுக்குடை மடமயிலோ.. செருக்குடை ஆட்டத்தையும் ஆளையும் ஓரக்கண்ணால் ரசித்தபடி மென்னடையில் மெத்தனம் காட்டி மேய்ந்துகொண்டிருந்தாள் அல்லது மேய்வதான பாவனையில் இருந்தாள். இவர் அவளை விடுவதாயில்லை.. அவள் இவருக்கு இடங்கொடுப்பதாயில்லை. இப்படியொரு ஊடல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில்தான் பூங்காவின் வாயிலில் வந்துநின்றது ஒரு சிற்றுந்து. அதிலிருந்து திபுதிபுவென்று இறங்கியது ஒரு மனிதமந்தை.. ஆம்.. மந்தைதான் அது.




ஆடும்மயிலின் அதிசயக்காட்சியைக் கண்டு ஓவென்று உச்சக்குரலில் ஆரவாரித்தது. பளீர் பளீரென்ற மின்னல்வெட்டுகளோடு படம்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஆணழகன் அதற்கெல்லாம் அசரவில்லை.... ப்ளாஷ் வெளிச்சத்தில் ஆட்டம் சூடுபிடிக்க, ஒரு நடனத்தாரகை போல முன்னைவிடவும் நளினமாக ஆட ஆரம்பித்துவிட்டார். பெண்மயில்தான் மிரண்டுபோனாள். எட்ட நின்ற கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டவர ஆரம்பித்தது. அப்போதும் ஆட்டம் தொடரவே.. கூட்டத்துக்கு இப்போது குளிர்விட்டுப்போனது. செல்ஃபிக்கு அடிமையான அந்த மந்தை, வசீகரமற்ற பெண்மயிலை அங்கிருந்து விரட்டிவிட்டு அழகுமயிலோடு அளவிலாத செல்ஃபி எடுத்துத் தள்ளியது. இந்த ஆணழகனும் வந்த காரியத்தை மறந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். காதலிக்காக ஆடிய ஆட்டம் இப்போது தற்பெருமைக்காக என்றாகிப்போனது. வீண்பகட்டுக்கான சொல்லாடலான proud as a peacock என்பதன் முழுப்பதமும் உணர்ந்த தருணமது. சற்றுத் தொலைவில் மிரட்சி மாறாமல் மருளும் விழிகளோடு அக்காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தாள் பெண்மயில்.




இப்படியாக அன்று எனது பறவை கூர்நோக்குந்தருணம் மனித மனங்களின் கூறுகண்டு நோகுந்தருணமாயிற்று. இயற்கை அம்சங்களின் இடைபுகுந்து இடையூறு செய்யும் மனிதமந்தை இருக்கும்வரை இதுபோன்ற அன்பின் பிறழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும். இவ்வளவு சொல்கிறாயே.. நீ மட்டும் என்ன ஒழுங்கா.. நீயும்தானே மாய்ந்து மாய்ந்து பறவைகளைப் படம்பிடிக்கிறாய் என்று கேட்பீர்களாயின்.. நிச்சயம் அதற்கான பதில் என்னிடம் உண்டு. 




நான் ஒருபோதும் பறவைகளைத் தொந்தரவு செய்வதில்லை. அவற்றைப் படம்பிடிக்கையில் ஃப்ளாஷ் உபயோகித்ததே இல்லை. அருகில் சென்று அவற்றை அச்சுறுத்துவதில்லை. பெரும்பாலும் ஜூம் செய்துதான் படம்பிடிக்கிறேன். பறவைகளைப் படம்பிடிக்கச்செல்லும்போது அவற்றை மிரளச்செய்யும் பளீர் வண்ண உடைகளைத் தவிர்க்குமாறு ஒரு கட்டுரையில் வாசித்தது முதல் தவறாமல் அதைப் பின்பற்றுகிறேன்.





இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இங்கே மஞ்சள்தாடை ஆட்காட்டிப் பறவைகள் அநேகம். அவை பெரும்பாலும் சாலையோரப் புல்வெளிகளிலும் விளையாட்டு மைதானங்களிலும்தான் முட்டையிடும். வெட்டவெளியில் கூடெதுவும் இல்லாது வெறுமனே முட்டையிட்டு அடைகாக்கும் காட்சி இங்கு சர்வசாதாரணமாகக் காணப்படும் காட்சி. இப்படி செய்வதால் இது ஒரு முட்டாள் பறவை ஒன்று ஒருசாராரும்.. மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பறவை என்று இன்னொரு சாராரும் அடிக்கடி வாதத்தில் ஈடுபடுவதுண்டு. விஷயம் அதைப்பற்றியது அல்ல.. கால்பந்து மைதானத்தின் ஒருபக்கம் அடைகாத்துக்கொண்டிருந்த பறவையை வெகு தொலைவிலிருந்து படம்பிடித்து முன்பொருமுறை பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்த பறவை ஆர்வல நண்பர் ஒருவர், இதுபோன்று பறவைகள் கூடுகட்டும், அடைகாக்கும், கூட்டில் குஞ்சுகள் இருக்கும் படங்களை இணையத்தில் பதிவிடவேண்டாமென்றும்.. பலருக்கும் நீங்கள் தவறான முன்னுதாரணமாகிவிடவேண்டாமென்றும் அறிவுறுத்தியமையால் அம்மாதிரியான படங்களையும் தவிர்த்துவருகிறேன். எனவே இப்பதிவை எழுதும் தகுதி எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.  

&&&&&&