9 January 2019

பூக்கள் அறிவோம் (61-70)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து. 
அழகோடு மருத்துவக்குணங்களும் கூடவே பல சிறப்பியல்புகளும் கொண்டு 
பயன்தரும் மலர்களின் வரிசையில் சிலவற்றின் அறிமுகம் இன்று...

61. ஆவாரம்பூ
Cassia auriculata




ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது பழமொழி. ஆவாரையின் இலை, பூ, மொட்டு, காய், விதை, வேர், பட்டை, பிசின் அனைத்துமே மருத்துவகுணம் உள்ளவை. சித்த மருத்துவத்திலும் இயற்கை மருத்துவத்திலும் பெரிதும் இடம்பெறும் மூலிகையாகும். நல்லதொரு தழையுரமாகவும் இயற்கை விவசாயத்தில் போற்றப்படுகிறது.

ஆவாரைக்கு ஆவிரை, ஏமபுட்டி, மேகாரி, தலபோடம், ஆகுலி என்ற வேறு பெயர்களும் உண்டு. சமீபத்திய திரைப்பாடல்களில் மட்டுமல்ல.. சங்கப்பாடல்களிலும் ஆவாரம்பூக்கள் இடம்பெற்றுள்ளன. கிராமப்புறங்களில் பொங்கல் சமயத்தின்போது வாசலில் கட்டப்படும் காப்பில் ஆவாரங்குலை இடம்பெறும். தெலங்கானா மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. 

இதன் அறிவியல் பெயர்கள் cassia auriculata / senna auriculata என்பதாம். Senna என்பது sana என்ற அரபு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதற்கு பேரொளி என்று பொருள். Auriculata என்பதற்கு லத்தீன் மொழியில் காது என்று பொருள். இலைகள் காதுவடிவத்தில் இருப்பதால் இப்பெயராம்.

இதன் பூ மற்றும் வேர்க்கசாயம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். இலைகள் மலமிளக்கியாகப் பயன்படுகின்றன. இதற்கு நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொல்லும் தன்மையும் இன்சுலீன் சுரப்பை அதிகப்படுத்தும் வல்லமையும் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சிக்காலத்தில் ஆவாரை இலைகளும் விதைகளும் சமைத்துண்ணப்படுகின்றன.

மரப்பட்டைகளிலிருந்து பெறப்படும் பழுப்புவண்ணச்சாயமும் பூக்களிலிருந்து கிடைக்கும் மஞ்சள் சாயமும் பதனிட்ட தோல்களில் அசல் நிறமேற்றவும் பொலிவேற்படுத்தவும் பயன்படுகின்றன. இந்தியாவில் தோல் பதனிடும் ஆலைகளில் வருடத்துக்கு சுமார் ஐம்பதாயிரம் டன் காய்ந்த ஆவாரை மரப்பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதனாலேயே இதற்கு Tanner’s cassia என்ற பிரசித்தப் பெயருமுண்டு.


62. வாதமடக்கி
White gulmohur – Delonix elata





கசப்புச்சுவையுள்ள இதன் இலைகளுக்கு வாதத்தைக் குணமாக்கும் மருத்துவக்குணம் இருப்பதால் இம்மரம் வாதமடக்கி, வாதநாராயணன், வாதரசு, ஆதிநாராயணன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. செக்கச் செவேலென்று பூத்துக் குலுங்கும் குல்மொஹரும் (Delonix regia) வாதமடக்கியும் (Delonix elata) ஒன்றுவிட்ட சகோதரிகளே. மஞ்சளும் வெள்ளையுமான பூக்களைக் கொண்டிருப்பதால் இது creamy peacock flower, white gulmohur, yellow gulmohur என்றும் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் முன்பெலாம் இம்மரத்தை வீட்டுக்கு வீடு பார்க்கமுடியும். இப்போது தேடவேண்டியிருக்கிறது. தண்ணீர் அதிகம் தேவைப்படாமல் வளரக்கூடியது. ஆனால் முருங்கை போல வலுவிலாதது. முருங்கை போலவே விதை மற்றும் போத்துகள் மூலமாக வளரக்கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. ஏராளமான மருத்துவப்பயன் காரணமாக உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சகாலத்தில் இதன் விதைகளை அவித்துத் தின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மூலிகை மருத்துவத்தில் இதன் பயன்பாடு பெரிது. இலை, பட்டை, வேர், விதை என அனைத்தும் பாரம்பரிய மருத்துவத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. பக்கவாதம், இழுப்பு, கை கால் குடைச்சல், உடல் வலி, வீக்கம், போன்றவற்றுக்கு உள்ளும் புறமுமான நிவாரணியாக இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.


63. விஷமூங்கில்
 Spider lily - crinum asiaticum





பூக்கள் சிலந்தியைப் போல கால்பரப்பி இருப்பதால் சிலந்தி லில்லி (spider lily) என்று பரவலாக அறியப்பட்டாலும் இது லில்லி வகை அன்று. இச்செடியின் எல்லாப்பகுதிகளும் நச்சு என்பதால் poison bulb என்று ஆங்கிலத்திலும் விஷமூங்கில் என்று தமிழிலும் அறியப்படுகிறது. இச்செடியின் பால் பட்டாலும் தோலில் அரிப்பும் எரிச்சலும் உண்டாகும் என்பதால் செடியைக் கையாளுகையில் கவனமாக இருப்பது அவசியம்.

சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளையும் இந்தோனேஷயத் தீவுகளையும் ஆஸ்திரேலியாவையும் அக்கம்பக்கத் தீவுகளையும் தாயகமாகக் கொண்டவை. பூக்களின் அழகுக்காக பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, வீட்டுத்தோட்டங்களிலும் பூங்காக்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

நச்சுத்தன்மை கொண்டிருந்தாலும் இதற்கும் மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. இதன் இலைச்சாறு காதுவலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நகச்சுத்தி, கட்டி போன்றவற்றுக்கு இதன் இலையை விளக்கெண்ணெயில் வாட்டிக் கட்டினால் குணமாகும் என்று அறியப்படுகிறது.

புதிய இடத்தில் இதன் கிழங்கு வேர்பிடித்து வளர்வதற்கு வருடக்கணக்காகலாம். ஆனால் ஒரு முறை வளர்ந்துவிட்டால் பிறகு வருடந்தோறும் புதிய செடிகள் அதே இடத்தில் வளர்ந்து மலர்ந்து அழகூட்டும்.


64. பவளக்குறிஞ்சி
Crepe myrtle - Lagerstroemia indica





பெயருக்கேற்றாற்போல பவள வண்ணத்தில் பார்ப்போரை வசீகரிக்கும் அழகுமலர்கள் இவை. கோடை காலத்தில் கிளைக்கரம் ஒவ்வொன்றும் பெரிய பெரிய பூச்செண்டுகளை ஏந்தியிருப்பது போல அழகாகக் காட்சியளிக்கும். காற்றிலாடி உதிரும் பூவின் மென்னிதழ்களோ காணுமிடமெங்கும் அலங்கரித்திருக்கும்.

இதன் அறிவியல் பெயர் Lagerstroemia indica. இதன் ஒன்றுவிட்ட சகோதரிதான் செம்மருது, பூமருது என்றெல்லாம் குறிப்பிடப்படும் lagerstroemia speciose வகை. மருத மரங்களுள் வெண்மருது, கருமருது, பில்லமருது, பூமருது எனப் பலவகை உண்டு. செந்நிறப் பூக்களைக் கொண்டிருப்பதால் பூமருதுக்கு செம்மருதம் என்ற பெயரும் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர்கள் Queen’s crepe myrtle, pride of India, Giant crepe myrtle.

மெல்லிய சுருக்கவடிவைக் கொண்டிருக்கும் Crepe silk என்ற துணிவகை நினைவிருக்கிறதா? அதைப்போலவே சுருக்கங்களுடன் இருப்பதால் இவ்வகை மலர்களும் crepe myrtle, crape myrtle என்ற காரணப்பெயர்களைப் பெற்றுள்ளன. இத்தாவரத்தின் மாதிரியை சேகரித்து வழங்கிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வியாபாரி Magnus von Lagerstrom நினைவாக இப்பேரினத்துக்கு Lagerstroemia என்று பெயரிடப்பட்டுள்ளது. இவற்றின் தாயகம் இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள்.

வீடுகளிலும் தெருக்களிலும் அழகுக்காக வளர்க்கப்படும் lagerstroemia மரங்களுக்கு மருத்துவப் பயன்பாடுகளும் உண்டு. வயிற்றுப்போக்கு, இரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு இவற்றின் இலைக் கசாயம் நல்ல மருந்தாகிறது. பட்டையும், பூவும் மலமிளக்கியாக பயன்படுகின்றன. இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இப்பூக்கள் அஞ்சல் தலைகளில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன.


65. சீமை நாயுருவி
 common snake weed - Stachytarpheta jamaicensis



Blue porterweed, common snake weed, Indian snake weed, Brazilian tea, Jamaica vervain என்றெல்லாம் குறிப்பிடப்படும் சீமை நாயுருவி அதன் மருத்துவ குணம் அறியப்படும் வரை பல நாடுகளில் களைச்செடியாக எவராலும் கண்டுகொள்ளப்படாதிருந்தது.

இதன் இலைச்சாறு வயிற்றுப் புண்களை ஆற்றவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் அருந்தப்படுகிறது. இந்தியாவில் இதன் மருத்துவக்குணத்துக்காக மூலிகைப்பயிராகப் பயிரிடப்படுகிறது. சில இடங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. வண்ணத்துப்பூச்சிகளை வசியம் செய்து ஈர்க்கும் தாவரங்களுள் இதுவும் ஒன்று.

மலேரியா, மஞ்சட்காமாலை முதல் நீரிழிவு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு வரை பல வியாதிகளுக்கு இலையும் தண்டும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கண்புரை, காதுவலி, தீக்காயம், ஆறாத புண் போன்றவற்றுக்கான பாரம்பரிய மருந்தாகவும் இது பயன்படுகிறது. இதன் இலைகளைக் காயவைத்துப் பொடிசெய்து தேயிலைத்தூளுடன் கலப்படம் செய்து விற்பதாகவும் தெரிகிறது.


66. தேள்கொடுக்கு
Indian heliotrope - Heliotropium indicum



தேளின் கொடுக்குபோன்ற தோற்றத்தில் இதன் பூந்தண்டு இருப்பதால் இதற்கு தேள்கொடுக்குச் செடி என்று பெயராயிற்றாம். காக்காய் மூக்கு செடி, குரங்குத் தோடு செடி என்ற பெயர்களும் உண்டு. இதன் பூர்வீகம் ஆசியா என்றாலும் அமெரிக்க ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் பராம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக இச்செடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸில் இதன் இலைச்சாறு புண்களை ஆற்றவும் கண் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தில் தேள்கொடுக்குச்செடிக்கு தனியிடம் உண்டு. பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு இதன் வேர்க்கசாயம் விஷமுறிவு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் ஆறாத ரணம், வீக்கம், கொப்புளம், வெட்டுக்காயம், தீக்காயம், மூட்டுவலி போன்ற புறப்பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்புண், பேதி, நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற உள்வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பாலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இதன் இலைக்கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது.

வருடத்தின் எல்லாக் காலத்திலும் பூப்பதாலும், வண்ணத்துப்பூச்சிகளுக்கு விருப்பமான தாவரம் என்பதாலும் வண்ணத்துப்பூச்சிப் பூங்காக்களில் அவசியம் வளர்க்கப்படுகின்றன. இச்செடிகளை மண்ணில் மட்கச்செய்து அதனால் கிடைக்கும் நார்ப்பொருளைக்கொண்டு சவுரிகள் (செயற்கை மயிரிழைகள்) தயாரிக்கப்படுகின்றன என்பது வியப்பளிக்கும் தகவல். 
  

67. புங்கை
 Millettia pinnata



புங்க மரம் தமிழில் போங்கம், புங்கை, புங்கு, புன்கு, பூந்தி, சுரஞ்சகம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்திலும் இதன் சங்ககாலப் பெயரான போங்கம் என்ற பெயரில் (pongam oiltree) குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 பூக்களுள் இதுவும் ஒன்று. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா முதல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்குத் தீவுகள் வரையிலான நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது புங்கை மரம்.

புங்கையின் பட்டை, இலை, வேர் அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டவை. வயிற்றுப்புண், மூல நோய் போன்றவற்றுக்கான மருந்தாக இதன் வேர்க்கசாயம் அருந்தப்படுகிறது. இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி தீக்காயங்களுக்கும் வெட்டுக்காயங்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோப்பு, பயோடீசல் தயாரிக்கவும் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. புங்கை எண்ணெயின் மூலம் டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவது குறித்த ஆராய்ச்சிகள் முடிவடைந்து தற்போது இந்தியாவில் மின்சார வசதியற்ற கிராமங்கள் பலவற்றில் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொறுமைக்கு உதாரணமாக புங்கை விதைகளைச் சொல்லலாம். ஏனெனில் மற்ற தாவரங்களின் விதையோடுகள் போல புங்கையின் விதையோடுகள் பிளந்து விதைகளுக்கு விடைகொடுப்பதில்லை. விதைகளும் ஓட்டை உடைத்துக்கொண்டு முளைவிடுவதில்லை. பின் எப்படி புதிய செடிகள் உருவாகின்றன? மண்ணில் விழுந்த விதையோடுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும்வரை விதைகள் பொறுமையாகக் காத்திருக்கின்றன. அதன்பிறகே முளைவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றன.   


68. புளியாரை

Oxalis corniculata




புளியாரை, புளியாக்கீரை என்றெலாம் அழைக்கப்படும் இம்மூலிகைக் கீரை வயல்வரப்புகளிலும், நீர்நிலைகளை ஒட்டியும் தரையோடு படர்ந்து காணக்கிடைக்கும். oxalid acid மற்றும் விட்டமின் ‘c’ அதிகம் கொண்டிருக்கும் காரணத்தாலேயே இது oxalis எனப்படுகிறது. Oxalidaceae குடும்பத்தில் சுமார் 570 வகை உள்ளன. துருவப் பிரதேசங்கள் தவிர்த்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணக்கிடைக்கும் தாவரம் இது.

தோட்டங்களிலும் வயல்களிலும் களையாக அறியப்பட்டாலும் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பசியின்மை, காய்ச்சல், குடற்புண், வயிற்றுப்போக்கு, மூலநோய் முதல் பூச்சிக்கடி, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளுக்கும் மருந்தாக இம்மூலிகை பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான மருத்துவக்குணங்கள் காரணமாக தமிழகத்தில் புளியாரைக் கீரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. கடைசல், கூட்டு, சாம்பார் என மற்ற கீரைகளைப் போலவே பருப்போடு சேர்த்து சமைத்துண்ணப்படுகிறது.

ஆக்ஸாலிஸ் செடிகள் பல அவற்றின் அழகிய பூக்கள் காரணமாக அலங்காரச்செடிகளாக வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. நியூசிலாந்து சேனைக்கிழங்கு (Newzealand yam) எனப்படும் உண்ணத்தகுந்த கிழங்கும் ஆக்ஸாலிஸ் (Oxalis tuberosa) குடும்பத்தைச் சேர்ந்ததே. 

ஆக்ஸாலிஸ் செடிகளின் இலைகள் க்ளோவர் இலைகளைப் போன்றிருப்பதால் நான்கிலை கொண்ட oxalis tetraphylla செடிகள் நாலிலை க்ளோவர் என்று ஏமாற்றி விற்கப்படுகின்றனவாம். நாலிலை க்ளோவர் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.


69. வட்டத்தாளி
cat’s tail - Acalypha hispida




புசுபுசுவென்று பூனையின் வாலைப் போல இருப்பதால் cat’s tail என்றும்,  சிவப்பு நிறத்தில் இருப்பதால் Red hot cat tail என்றும், வெல்வெட் போல இருப்பதால் chenille plant என்றும் குறிப்பிடப்படும் இத்தாவரம், தமிழில் வட்டத்தாளி எனப்படுகிறது. வருடம் முழுக்கப் பூக்களைக் கொண்டிருக்கும் தன்மையால் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும் சில நாடுகளில் இதன் அபாரமான மருத்துவக் குணத்துக்காகவே வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் வட அமெரிக்க நாடுகள். வட்டத்தாளியின் அறிவியல் பெயர் Acalypha hispida என்பதாகும். Acalypha என்றால் பண்டைய கிரேக்க மொழியில் சுணப்புள்ளஎன்றும் Hispida என்றால் லத்தீனில் முள்ளுமுள்ளானஎன்றும் பொருள். 

ஒரு பூச்சரத்தில் ஏராளமான பூக்கள் இருக்கும். செடி வளர்வதற்கான சூழல் சாதகமாக இருந்தால் பூச்சரங்கள் வருடம் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்குமாம். ஒரு பூச்சரம் அதிகபட்சமாக சுமார் 50 செ.மீ. வரை வளரும். சிவப்பு நிறம் அல்லாது வாடாமல்லி மற்றும் வெள்ளை நிறத்திலும் பூக்கள் காணப்படுகின்றன. ஆண் பூக்கள், பெண் பூக்கள் தனித்தனி செடியில் பூக்கின்றன. காற்றாலும், பூச்சிகளாலும் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பெண் பூக்கள் அளவுக்கு ஆண் பூக்களுக்கு அழகும் கவர்ச்சியும் இல்லாத காரணத்தால் அழகுக்காக வளர்க்கப்படுபவை எல்லாமே பெண் பூச்செடிகளே.

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இதன் வேர் மற்றும் பூக்கசாயம் ஆஸ்த்துமா உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும், இலைகள் அரைக்கப்பட்டு பச்சிலை மருந்தாக தொழுநோய் உள்ளிட்ட தோல்நோய்களுக்கும், பூ மற்றும் இலைக்கசாயம் மலஜலம் கழிப்பதில் உள்ள சிக்கல் நீக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இத்தாவரம் குறித்த சரியான புரிதலும் போதுமான எச்சரிக்கையும் இன்றிப் பயன்படுத்தினால் இதிலுள்ள நச்சு உடலுக்குப் பாதிப்புண்டாக்கும் என்று அறியப்படுகிறது.


70. தொட்டாற்சுருங்கி
Touch-me-not plant - mimosa pudica




சிலர் எடுத்ததற்கெல்லாம் சட்டென்று சுணங்கி முகம் வாடிவிடுவது போல தொட்டாற்சுருங்கியின் இலைகள் தொட்டவுடன் சுருங்கிச் சிணுங்குவதால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விளையாட்டாய் இலைகளைத் தொட்டு அவை ஒன்றன்பின் ஒன்றாக சுருங்கும் அழகை ரசிப்பது இயல்பு. தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சுணங்கி, தொட்டாச்சிணுங்கி, தொட்டால்வாடி, ஆள்வணங்கி என தமிழிலும், கிட்டத்தட்ட அப்படியான காரணப் பெயர்களாலேயே Touch-me-not plant, Tickle-me-plant, shame plant, shy plant, sensitive plant, humble plant, sleepy plant, action plant Dormilones  என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடப்படுகிறது.

தொட்டாற்சுருங்கி செடியின் தாயகம் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள். ஆனால் இன்று இது உலகளாவிய களைச்செடியாக அறியப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் mimosa pudica என்பதாகும். pudica என்பதற்கு லத்தீனில் கூச்சமுள்ளஎன்று பொருள்.  

தொட்டாற்சுருங்கி இலைகள் தொட்டவுடன் மூடிக்கொள்வது அதிலுள்ள அமிலம் காரணமாக என்பதை அறிவோம். ஆனால் ஏன் அப்படிச் செய்கிறது தெரியுமா? ஆடுமாடு போன்ற தாவர உண்ணிகள் இலைகளை மேய்ந்துவிடாதிருக்க செடி மேற்கொள்ளும் தற்காப்பு உத்திதானாம். இலைகள் சுருங்கியவுடன் முட்களுடன் கூடிய தண்டு மட்டுமே பிரதானமாகக் காட்சியளிக்கும். இந்தச் செடியில் இலைகளே இல்லையென்று விலங்குகள் விலகிவிடும். மீண்டும் இலைகள் விரிய குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். இதன் பூக்களில் மகரந்தச்சேர்க்கை பூச்சிகளாலும் காற்றாலும் நடைபெறுகிறது.

தொட்டாற்சுருங்கியின் வேர், இலை, பூ, தண்டு, பழம் அத்தனையும் பாரம்பரிய மருத்துவத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. வேர் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவங்களில் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, தொழுநோய், மஞ்சட்காமாலை, மூலம் போன்ற நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வலிக்கு இதன் வேர்க்கசாயம் தண்ணீருடன் கலந்து கொப்பளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பலதரப்பட்ட சரும வியாதிகளுக்கான மருந்தாகவும் இத்தாவரம் பயன்படுகிறது.