27 December 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்

ஒரு இனத்தின் சிறப்பையும், தொன்மையையும், வரலாற்றையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள அவ்வினத்தின் மொழியும் அதன்வழி வெளியான இலக்கியங்களுமே நமக்கு உதவுகின்றன. ஆனால் காலங்காலமாக வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் தங்கள் மொழிக்கென்று எழுத்துவடிவமோ இலக்கியமோ படைத்திராத சூழலில் அவர்களுடைய தொன்மையையும் சிறப்பையும் எப்படி தங்கள் தலைமுறையினருக்குக் கடத்துகிறார்கள்? எப்படி தங்கள் இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என்ற கேள்விகள் நமக்கு எழக்கூடும்.


இயற்கையை இறையாய் வழிபடும் அவர்கள்,  நிலவமைப்புகளைப் புனிதமாய்க் கருதுகிறார்கள். முன்னோர்களின் ஆன்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் கதைகள் மூலம் செவிவழியாகவும், கலைகள் மூலம் காட்சிவழியாகவும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தங்களுடைய மொழியை ஓவியங்களாய் வெளிப்படுத்தினர். நடனம், சடங்குகள், வழிபாட்டுமுறை, ஓவியம், வைத்தியம், இசை, கைவேலைப்பாடு, வேட்டை நுணுக்கம் என எத்தனையோ சம்பிரதாயங்களை அவற்றின் பாரம்பரியம் கெடாது தங்கள் வருங்கால சந்ததியினருக்குக் கடத்திவருகின்றனர்.




ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள் என்றாலே பாறை ஓவியம், செதுக்கு ஓவியம், புள்ளி ஓவியம், மரப்பட்டை ஓவியம், மணல் ஓவியம், சுவடு ஓவியம், உடல் ஓவியம் என அதில் அத்தனை வகையைக் காணமுடியும்.



உலக மக்களின் பார்வையில் ஆஸ்திரேலியாவை தனித்து அடையாளப்படுத்தும் கலாச்சார வகைமைகளுள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் புள்ளி ஓவியமும் ஒன்று. ஆஸ்திரேலியப் புள்ளி ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாய் புள்ளிகள் வட்டங்கள் கோடுகள் என்று தோன்றினாலும் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அர்த்தமுடையவை. பூர்வகுடி ஓவியங்கள் பல அடுக்கு புரிதல்களைக் கொண்டவை. குழந்தைகளுக்கு எளிமையாகவும் மேலோட்டமாகவும், பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சற்று விரிவாகவும் அதைச் சார்ந்தோர்க்கு, அதன் புனிதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆழமான மற்றும் தீர்க்கமான புரிதலையும் தரக்கூடியவை. ஒரு பூர்வகுடிக் கலைஞர், இந்த மூன்று நிலையிலும் ஓவியத்தை விளக்கும் முறையை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 




கதைகளுக்குள் ஓவியங்களும் ஓவியங்களுக்குள் கதைகளும் பொதித்துவைக்கப்பட்டு, ஆன்மீக உணர்வுடனும், இனத் தனித்துவத்துடனும்  பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்கு வலம்வரத் தொடங்குவதை அறிந்த அவர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கும் புனித நம்பிக்கைகளுக்கும் இழுக்கு ஏற்படாதிருக்கவும், இதர பூர்வகுடி இனங்களுக்கு தங்கள் ரகசியங்கள் பகிரப்படாதிருக்கவும் கண்டுபிடித்த உத்திதான் புள்ளி ஓவிய உத்தி. ஓவியங்களை புள்ளிகளாய் வரைவதன் மூலம் அதன் புனிதத்தன்மை நீக்கப்பட்டு விடுவதாகவும் ரகசியங்கள் வெளியுலகுக்குக் கடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு விடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.




கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவிய வகைமையுள் முக்கியமான ஒன்று. தங்களுடைய வாழ்விட எல்லைகளைப் பறைசாற்றும் வண்ணம் மலைப்பாறைகளிலும் குகைகளிலும் அவ்விடங்களில் வசிக்கும் பூர்வகுடிக் குழுவினர் தங்கள்  கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்களைப் படியெடுத்து முத்திரை பதிப்பது வழக்கம். படியெடுக்கப்பட்டிருக்கும் கைச்சுவட்டுப் பிரதிகளுள் மேலே உச்சியில் இருப்பது குழுவின் உயர்ந்த பதவியிலிருப்பவர் அதாவது தலைவரின் கைச்சுவட்டுப் பிரதியாகும். அவருக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களின் கைச்சுவட்டுப் பிரதிகள் அந்தந்த வரிசைக்கேற்ப அமைந்திருக்கும்.



இந்த கைச்சுவட்டுப் பிரதிகளை உருவாக்குவதே ஒரு கலை. தண்ணீர், செங்காவி அல்லது சுண்ணாம்புத்தூள், கங்காரு, எக்கிட்னா, ஈம்யு போன்ற விலங்கு அல்லது பறவைகளின் கொழுப்பு இவற்றைக் கலந்து வாய் நிறைய நிரப்பிக்கொண்டு பாறையில் ஊன்றப்பட்டிருக்கும் கையின் மீது மிகுந்த விசையோடு ஊதுவார்கள். தாளில் மை ஊறுவது போல இக்கலவை பாறையில் ஊறி சுவட்டோவியத்தை உருவாக்கும். குழுவின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுடைய வயதுக்கும் தலைமைப் பண்புக்கும் ஏற்ப மணிக்கட்டு வரை மட்டுமல்லாது முழங்கை வரை தங்கள் கைச்சுவட்டைப் பதிக்கும் பெருமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். கைச்சுவட்டுப் பிரதிகள் பெரும்பாலும் இடக்கைகளாகவே உள்ளன. அதற்குக் காரணம், பெரும்பாலானோர் வலக்கை பயன்பாட்டாளர்கள் என்பதால் வலக்கையை வாயருகில் புனல்போல் குவித்து வண்ணக்கலவையை சிதறாமல் ஊதுவதற்குப் பயன்படுத்தினர்.


இந்த கைச்சுவட்டுப் பிரதியெடுக்கும் ஓவிய வகைமை ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களிடத்தில் மட்டுமல்லாது அர்ஜென்டினா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் தொன்மையான ஓவிய வகைமையாக அறியப்படுகிறது.



ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்களும் செதுக்கு சிற்பங்களும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரின் சில சுண்ணாம்புப் பாறை செதுக்கு சிற்பங்களின் வயது சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களுக்கு செங்காவி வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண்ணைக் குறிக்கும் குறியீடுகளும், நீர்நிலைகள், பழங்கள், கங்காரு, ஈமு போன்ற உணவிருப்பிடம் குறித்த குறியீடுகளும், சந்திக்கும் இடங்கள் பற்றிய அடையாளக் குறியீடுகளுமாய் ஒவ்வொரு இனமும் தமக்கென்று தனித்த குறியீட்டு ஓவியமுறையைக் கைக்கொண்டுள்ளனர்.



நார்வாலா கபன்மேங் குகைகள், கிம்பர்லி, லாரா, உபிர், காக்கடூ தேசியப் பூங்கா, உலுரு என ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலும் கற்பாறை ஓவியங்களும் முருஜுகா, ப்ளூ மவுண்டன்ஸ், குரிங்கை சேஸ் தேசியப்பூங்கா போன்ற இடங்களில் சுண்ணாம்புப்பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆதி மனிதன் முதல் இன்று அழிந்துபோய்விட்ட தைலாசின் போன்ற பல உயிரினம் வரை வரையப்பட்டுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள இயலும்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் மரப்பட்டை ஓவியங்களும் மற்றொரு பிரசித்தி பெற்ற ஓவிய முறையாகும். முண்டுமுடிச்சுகள் இல்லாத யூகலிப்டஸ் மரவகையான Stringybark எனப்படும் மரத்தின் பட்டைகளே ஓவியம் தீட்டப் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் தேர்ச்சியும் பெற்றவர்களால் உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் தீயில் லேசாக வாட்டப்பட்டு மேலே கற்கள் மரக்கட்டைகள் போன்றவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டு சமதளமாக்கப்படுகின்றன. பிறகு காவி, மஞ்சள் போன்ற மண் நிறமிகள், சுண்ணாம்பு மற்றும் கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. நிறமிகளின் ஒட்டுந்தன்மைக்கு முற்காலத்தில் மரப்பிசின் பயன்படுத்தப்பட்டது. தற்போது இரசாயனப் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன.   



பூர்வகுடி மக்களின் கலாச்சார நம்பிக்கையின் மையமான கனவுக்காலக் கதைகளை அடிப்படையாய்க் கொண்டே பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த உலகம் எப்போது, எப்படி தோன்றியது, இவ்வுலகின் உயிரினங்கள், காடுகள், மலைகள், சூரியன், நிலவு, காற்று, மழை, நெருப்பு, கடல் என ஒவ்வொன்றின் தோற்றம் குறித்தும் ஒவ்வொரு பூர்வகுடிக் குழுவினரிடமும் கதைகள் உள்ளன. படைப்பின் ரகசியங்களை வேற்றுக் குழுவினரோடு பகிர்ந்துகொள்வதைக் குற்றம், இழுக்கு என்று நம்பிய அவர்கள், எப்போதும் தங்கள் கதைகள் மற்றும் கலைகளை புனித நம்பிக்கை காரணமாக தங்களுக்குள் மறைவாகவே பகிர்ந்துவந்தனர். இன்றும் கூட ஒரு பூர்வகுடி ஓவியத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் வேறு. அவர்கள் புரிந்துகொள்ளும் விதம் வேறு.


பெரும்பாலான பூர்வகுடி ஓவியங்கள் பறவைப் பார்வை கொண்டு வரையப்படுகின்றன. நிலத்துக்கு மேலே பறந்துகொண்டு நிலத்தைப் பார்ப்பதான பாவனையில் இவ்வோவியங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் நீர்நிலைகள், புதர்க்காடுகள், பழமரங்கள் மட்டுமல்லாது வேட்டைகான விலங்குகள் பறவைகள் இவற்றின் இருப்பிடங்களும் ஒரு வரைபடம் போல மிகத்தெளிவாக சுட்டப்படுகின்றன.



1930 களில்தான் பூர்வகுடி ஓவியர்கள் கான்வாஸ் மற்றும் காகிதங்களில் வரையத் தொடங்கினர். செங்காவி வண்ணத்துக்குப் பதிலாக நீர்வண்ண ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. 1937-ல் முதன்முதலாக பூர்வகுடி ஓவியக் கலைஞரான ஆல்பர்ட் நமட்ஜிராவின் நிலவமைப்புத் தோற்ற ஓவியங்கள் அடிலெய்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆனாலும் பல தனித்துவமிக்க பூர்வகுடி ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்படாமலேயே இருந்தன. காரணம் அவற்றை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முதலாவது தங்களுடைய கனவுகாலக் கதைகளையும் குழு சார்ந்த ரகசியங்களையும் வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துவிடக்கூடாது என்னும் அவர்களுடைய புனித நம்பிக்கை. இரண்டாவது தங்களுக்கு உரிமை இல்லாத, பிற இனம் சார்ந்த ஓவியங்களை வரைவது தவறு என்னும் தார்மீக எண்ணம். ஓவியக்கதைகளில் மட்டுமல்ல, ஓவிய முறைகளிலும் கூட அவர்கள் தார்மீக ஒழுங்கினைப் பின்பற்றுகின்றனர். உதாரணத்துக்கு குலின் இனத்தைச் சேர்ந்தவர்கள் புள்ளி ஓவியங்களை வரைய மாட்டார்கள். மாறாக தங்களுக்கு உரிமையான குறுக்குக் கோட்டோவியங்களை மட்டுமே வரைவார்கள்.  


தங்கள் குழுவைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துக்கு வழிவழியாய் வந்த கதைகளை மட்டுமே அவர்கள் ஓவியங்களாய்த் தீட்டினர். அதன் மூலம் தங்கள் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார அடையாளத்தையும் உலகுக்கு உணர்த்தினர். 2007-ஆம் ஆண்டு மே மாதம் Emily Kame Kngwarreye -இன் Earth’s creation என்னும் ஓவியம் ஒன்றரை மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் விற்பனையானது. மில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையான முதல் பூர்வகுடி ஓவியம் என்ற பெருமையைப் பெற்ற அதே வருடம் ஜூலை மாதம் Clifford possum Tjapaltjarri - இன்  Warlugulong ஓவியம் 2.4 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. 



இன்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைவளர்ச்சிக்காகவே செயல்படும் சுவிட்சர்லாந்தில் உள்ள La grange, நெதர்லாந்திலுள்ள The Museum of Contemporary Art, விர்ஜினியா பல்கலைக் கழகத்தின் Kluge-Ruhe Aboriginal Art Collection போன்ற அருங்காட்சியகங்கள், ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைகளின் சிறப்பு உலக மக்களை ஈர்த்திருப்பதற்கான பெரும் சாட்சி எனலாம்.



(SBS தமிழ் வானொலியில் 01-11-20 அன்று 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.)

(படங்கள் அனைத்தும் இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)