29 March 2013

ஒற்றை வார்த்தையில் ஊசலாடுகிறதோர் கவிதை

 
 

 
எத்தனை முறை யோசித்தாலும்
எண்ணத்துக்கு அகப்படாமல்
ஏய்த்து விளையாடுகிறது ஏதோவொன்று! 

கணகாலத்துக்குப் பின் கருவான
அந்தக் கவிதையின் ஓட்டத்துக்கு
அநேகமாய் ஈடுகொடுத்துவிட்டன
அத்தனை வார்த்தைகளும்,
அந்த ஒன்றைத் தவிர! 

மூளைக்குள் முரண்டுபிடிக்கும் அவ்வார்த்தையைக்
கட்டிக்கொணர எத்தனைமுறை ஏவினாலும்
வெறுமனே திரும்பிவருகிறது நினைவுபூமராங்! 
அவ்வார்த்தைக்கு நிகராய் வேறொன்றை
இட்டு நிரப்பவும் மனமொப்பவில்லை.
 
முற்றியும் முற்றாமல்
மூளியெனக் கிடக்கும் அக்கவிதை,
ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு
ஏளனமும் ஏக்கமுமாய்
என்னைப் பார்க்கும் பார்வையில்
குறுகுறுத்துக் கவிழ்கிறது என் கவியுள்ளம்! 

அஜீரணக்காரனின் நெஞ்செரிச்சல் போல்
அடிக்கடி நினைவுக்கு வந்தும் வராமலும்
உள்ளெரிக்கும் அந்த வார்த்தை என்னவென்று
உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். 

குறைந்தபட்சம் உங்கள் கவிதையொன்றிலாவது
அதைப் பயன்படுத்துவதன்மூலம்
என் கவனத்துக்குக் கொண்டுவருவீராயின்
மழலையைப் பிரிந்த தாயைப் போல
மன்றாடி நிற்கும் கவிதையிடம் சேர்ப்பித்து
நன்றியோடு நான் ஆசுவாசமடைவேன்!