விக்னேஷுக்கு எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அம்மாவின் கண்மூடித்தனமான அன்பின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, அவரைத் தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினான்.
இடையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை ஒரு கெட்ட கனவென நினைத்து மறக்க முயன்றான். அம்மாவைப் பார்த்தபோது ஒரு அறியாக்குழந்தைபோல் தோன்றியது. என்னைவிட்டு விலகிவிடாதே என்று அவரது பார்வை கெஞ்சியது.
இல்லையம்மா...உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். என் அன்பு தெய்வமே! விக்னேஷின் மனம் இளகியது.
அம்மா சோபாவில் சாய்ந்தவண்ணம் ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
"என்னப்பா?"
அம்மா அவன் தலையை இதமாய்க் கோதினார். அவர் கைகளை எடுத்துத் தன் கரங்களில் பொத்திக் கொண்டான்.
"அம்மா! நான் கொஞ்ச நேரம் உங்க மடியில் தலைவச்சுப் படுத்துக்கவா?"
அம்மா நெகிழ்ந்துவிட்டார். பத்திரிகையை கீழே வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டார்.
"என்னப்பா, உடம்புக்கு முடியலையா? இல்ல....மனசு சரியில்லையா?"
"ரெண்டுமில்லம்மா, நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"
"அதுதானேப்பா எனக்கு வேணும்!"
மடியில் படுத்திருந்த மகனின் முன்னெற்றியில் பரவியிருந்த முடிகற்றையை ஒதுக்கி அவன் முகத்தை வருடினார். விக்னேஷ் ஒரு குழந்தையாகவே மாறியிருந்தான்.
நாகலட்சுமிக்கு மகிழ்வும் வியப்பும் ஒருசேர உண்டானது. என் பிள்ளை என்னிடமே வந்துவிட்டான். கடவுளே...உனக்கு நன்றி.
"அம்மா! நாளைக்கு நான் லீவு போட்டிருக்கேன், டாக்ஸிக்கும் சொல்லிட்டேன், நாம நாளைக்கு திருவேற்காடு வரைக்கும் போயிட்டு வரலாமா?"
"என்னப்பா, திடீர்னு?"
"வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறீங்க, உங்களை எங்கேயாவது வெளியில் அழைச்சிட்டுப் போவணும்னு தோணிச்சு. அன்னைக்கு வேலைக்காரப்பொண்ணு திருவேற்காடு போய்ட்டுவந்து பிரசாதம் தந்தப்போ...எனக்குதான் அந்தக் கோயிலுக்குப் போற பாக்கியம் கிடைக்கலேன்னு லேசான வருத்தத்தோடு சொல்லிட்டிருந்தீங்க. எங்கம்மாவுக்கு எப்படி அந்தப் பாக்கியம் இல்லாமப் போகும்னுதான் இந்த ஏற்பாடு."
நாகலட்சுமிக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று அவர் சந்தோஷத்தைக் குறைத்தது.. மகன் தன்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டான் என்றிருந்ததுபோக, அவன் பயணத் திட்டம் போட்டுவிட்டு வா என்று அழைக்கிறான். என்ன காரணமோ?
ஒருவேளை..............ஒருவேளை………..கோயிலில் திருமண ஏற்பாடுகள் செய்துவைத்திருக்கிறானோ? அம்மாவை அழைத்துச் சென்று அவள் கண்முன் தாலி கட்டவேண்டுமென்று எண்ணிதான் இந்தப் பயணமா? ஐய்யோ! நான் பயந்தது நடந்துவிட்டதே!
ம்ஹும்! என்ன ஆனாலும் சரி, நாளை நானும் போகக்கூடாது, இவனையும் போகவிடக்கூடாது.
அம்மாவின் மனக்குழப்பம் புரியாமல்,
"அம்மா! நீங்க போய்ப் படுத்துக்கங்க, காலையில் எட்டுமணிக்கெல்லாம் டாக்ஸி வந்திடும், அதுக்குள்ள தயாரா இருக்கணும்! நாளைக்கான மாத்திரையெல்லாம் நான் கையில் எடுத்துக்கறேன்!"
நாகலட்சுமிக்கு எல்லாமே நம்பமுடியாதவையாய் தோன்றின. எப்படி இவனுக்கு இத்தனைத் துணிச்சல் வந்தது? என்னிடம் கொடுத்த சத்தியத்தை மீறிடுவானோ? சற்றுமுன் தானே கடவுளுக்கு நன்றி சொன்னேன். இப்போழுது மீண்டும் கவலையுறும் சம்பவம் நிகழ்ந்துவிட்டதே!
"அது பெரிய கோவிலாச்சேப்பா! என்னால் அவ்வளவு நடக்கமுடியாதே....."
"அம்மா! நீங்க பிரகாரம் சுத்தவேண்டாம். நேரா கருவறை போய் சாமி கும்பிடறோம், அங்கயிருந்து கிளம்பிடறோம். உங்க வசதியைப் பொறுத்து அப்புறம் வேற எங்கயாவது போகணும்னா போலாம். சரியா?"
"விக்னேஷ்! உனக்கே தெரியுமேப்பா! என் உடம்பு இருக்கிற நிலைக்கு இதெல்லாம் ஒத்துவராதுன்னு! இன்னொரு நாள் போலாமேப்பா!"
"இல்லைம்மா! ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்றீங்க, அதனால்தான் உங்ககிட்ட கேக்காமலேயே நாளைக்கு லீவுபோட்டு ஏற்பாடெல்லாம் செய்திட்டேன். நீங்க கட்டாயம் வரீங்க, சால்ஜாப்பெல்லாம் வேண்டாம்!"
முடிவாய்ச் சொல்லிவிட்டான்.
அப்படியென்றால் ஏதோ இருக்கிறது. வரமுடியாதென்றாலும் இவன் விடப்போவதாய்த் தெரியவில்லை.சரி. போய்தான் பார்ப்போம். எந்தச் சிறுக்கி இவனை மயக்கியிருக்கிறாள் என்பதை!
என்ன ஆனாலும் சரி, என்னிடம் கொடுத்த வாக்கை வைத்தே அவனை மிரட்டிவிடலாம். தெய்வ சன்னிதானத்தில் பொய் சொல்லமுடியுமா? பார்த்துவிடுகிறேன், நானா? அவளா? என்று.
நாகலட்சுமி மனதுக்குள் கருவிக்கொண்டார்.
காலை வேளை பரபரப்பாக விடிந்தது. மனோகரி அக்காவே ஆச்சர்யப்பட்டுவிட்டாள்.
"குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி டாக்டர் வீட்டைத் தவிர உங்கம்மா கண்ணுக்கு வேற எதுவுமே தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நகரவே மாட்டாங்க, அவங்களையே நெம்பு நெம்புன்னு நெம்பிக் கிளப்பிட்டியே!"
இவளுக்கும் விஷயம் தெரிந்திருக்குமோ? விக்னேஷ் என்ன சாதாரண உடையில் வருகிறான்? பட்டுவேட்டி, சட்டை எல்லாம் நண்பர்களிடம் தயாராக இருக்குமோ?
"ஏம்மா, என்னவோ போல இருக்கீங்க?"
"ஒண்ணுமில்லையேப்பா!"
"நீங்க நாளெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்கிறதப் பாத்தா எனக்கு என்னவோ போல இருக்குமா, அதனால்தான்………………”
ம். ம். புரிகிறது. இப்போது இப்படி சொல்வான், கோவிலுக்குப் போனதும் அவளைக் காட்டி, 'நாளெல்லாம் பேச்சுத்துணையில்லாம கஷ்டப்படுறீங்கன்னுதான் இவளைக் கட்டிக்கிறேன்'னு சொல்வான்.
கடைசியில் இவனும் பிரபுவைப் போல் தான் நடந்துகொள்கிறான்.சே! என்ன பிள்ளை இவன்? இப்படிப் பொய் சொல்லி அழைத்துச் சென்றால் மட்டும் என் ஆசி கிடைத்துவிடுமா?
நாகலட்சுமியின் உள்ளத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனாய், விக்னேஷ் ஓட்டுநரிடமும், அம்மாவிடமும் எதையெதையோ பேசிக்கொண்டுவந்தான். நாகலட்சுமிக்கு எதுவும் மனதில் பதியவில்லை.
"அம்மா…. அம்மா!"
திடுக்கிட்டு விழித்தார்.
"என்னப்பா?"
"என்ன யோசனையில இருக்கீங்க, கோவிலுக்கு வந்திட்டோம்!"
இறங்கி பூக்கடையில் மாலை வாங்கிகொண்டு நடந்தனர்.
நாகலட்சுமியின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. இங்கேதான்....இங்கேதான்...எங்கேயோ…...அவள்....நண்பர்கள்…... மாலை....தாலி........
"அம்மா.....என்னம்மா ஆச்சு...?"
முன்னே சென்றுகொண்டிருந்த அம்மா, கால்கள் பின்ன மயங்கிச் சரிவதன் காரணம் புரியாமல் தவித்தபடியே ஓடிச்சென்று அவரைத் தாங்கிக்கொண்டான்.
அவரை ஒரு ஓரமாய் அழைத்துவந்து உட்காரவைத்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
ஆசுவாசமடைந்ததும்,
"என்னம்மா ஆச்சு?"
"ஒண்ணும் இல்லப்பா...இவ்வளவு தூரம் பயணம் பண்ணியது ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்..... திரும்பிப் போயிடலாமா?"
"வந்தது வந்தாச்சு! இருந்து தரிசனம் பண்ணிட்டே போகலாம்மா. ஒண்ணும் அவசரமில்லே...நீங்க இங்கேயே உட்கார்ந்து நல்லா ஓய்வெடுத்துக்கீங்க, எப்ப முடியுதோ அப்ப சொல்லுங்க,போகலாம்!"
நாகலட்சுமி பரிதாபமாய் மகனைப் பார்த்தார். இவன் என்ன இன்று இப்படி ஒரு விடாக்கண்டனாய் இருக்கிறான்?
இல்லாத கவலைகளுடன் நேரம் கழிந்ததே தவிர நாகலட்சுமி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அன்றையதினம் நல்லவிதமாகவே கழிந்தது. அபிஷேகம் பார்த்து, கண்குளிர அம்மன் தரிசனம் முடித்து, பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப பொழுதாகிவிட்டது.
விக்னேஷ் அதிசயித்த ஒரு விஷயம், காலை மயக்கத்துக்குப் பிறகு அம்மா எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. அவ்வப்போது இவன் தான் கால் வலிக்குதாம்மா? மயக்கம் வரமாதிரி இருக்காம்மா? என்று தொணதொணத்துக்கொண்டே இருந்தான்.
அம்மா படுக்கப்போகுமுன் விக்னேஷ் அவருக்கு கால் பிடித்துவிட்டான். நாகலட்சுமி அமைதி தவழும் விக்னேஷின் முகத்தைப் பார்த்தார்.
இவனைப் பற்றி காலையில் என்னென்ன நினைத்துவிட்டேன்? எப்படியெல்லாம் தப்புக்கணக்குப் போட்டு பயந்துவிட்டேன்? நல்லவேளை....வாய்திறந்து இவனிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் மானமே போயிருக்குமே! அம்மா இவ்வளவு கீழ்த்தரமானவளா என்று நினைத்திருப்பான்.
நாகலட்சுமி தன் அவசரக்குடுக்கைத் தனத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டார். பலத்த எண்ண ஓட்டங்களின் இறுதியில் நிம்மதியாக உறங்கிப்போனார்.
தொடரும்...
**************************************************************************************************
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பண்புடை மக்கட் பெறின்.
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
----------------------------
----------------------------
தொடர்ந்து வாசிக்க
முந்தைய பதிவு