28 March 2020

மலரே மலரே உல்லாசம்

தோட்டத்துப் பிரதாபம் - 12
தோட்டத்துப் பூக்களின் அணிவகுப்பு


1. ரோஜா


2.  மலை அரளி

3. கிளாடியோலஸ்


4. கிளாடியோலஸ்


5. மலை அரளி


6. மல்லிகை

7. பயத்தங்காய் பூ

8. கேலண்டுலா

9. ரோஜா

10. ரோஜா

11. ரோஜா

12. ஃப்யூஷியா

13. பாப்பி

14. ரோஜா

15. மல்லிகை

16. ரோஜாக்கூட்டம்

17. கேலண்டுலா

18. ரோஜா
 
19. சால்வியா

20. கிளாடியோலஸ்
(பிரதாபங்கள் தொடரும்)

10 March 2020

அணில்வரிக் கொடுங்காய்


 தோட்டத்துப் பிரதாபம் - 11கோடையின் வெம்மை தணிக்கும் வெள்ளரியை விரும்பாதவர் யாருண்டு? இளம்பிஞ்சாய் கடித்துத் தின்னவும், பருத்து வெடித்துப் பழமானபின் வெல்லத்துடன் குழைத்துக் குடிக்கவும் எந்த வயதானாலும் மனம் ஏங்குவது உண்மை.

கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் இந்த வெள்ளரிக்காய் எவ்வளவு ரசனையைத் தந்திருக்கிறது.

வெள்ளரிக்காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே நீ சிரிக்காயோ 

என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

வெள்ளரிக்காயை நீளவாக்கில் பிளந்துவைத்த மாதிரி வானத்தில் காட்சியளிக்கும் அந்த பிறைநிலா சிரிப்பதைப் போலிருக்கிறதாம். என்னவொரு அழகான உவமை.


நான் வெட்டிய வெள்ளரிக்காயும் உள்ளே விதைப் பற்களைக் காட்டி தானும் சிரிக்கிறதைப் பாருங்களேன்.

வெள்ளரிவிதை என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. ஆண் குழந்தைகளுக்கு காது குத்தும்போது அதிகம் கனமில்லாத காதணி ஒன்று அணிவித்து கொஞ்ச நாளில் கழற்றிவிடுவார்கள். குணுக்கு மாதிரி சின்னதாய் ஆடிக்கொண்டிருக்கும் அதற்கு வெள்ளரிவிதை என்று பெயர்.  

நல்ல நெய் என்பதற்கு மணல்மணலா இருக்கும் என்று விளம்பரங்கள் உவமை சொல்லி கேட்டிருக்கிறோம்இளம் வெள்ளரிவிதைகளை உவமை சொல்கிறது பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடிய புறநானூற்றுப் பாடலொன்று.

அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட
காழ்போனல்விளர் நறுநெய்

அணிலின் உடலில் ஓடும் வரிகளைப் போல வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் உள்ளே காணப்படும் விதைகளைப் போன்ற நல்ல வெண்ணிற மணமிகு நெய் என்று பொருள்.

அணில் வரிக் கொடுங்காய் - வெள்ளரிக்காய்க்கு என்ன அழகான பெயர். அணிலின் முதுகில் காணப்படுவதைப் போன்ற வரிகளை உடைய வளைந்த காய் என்று பொருள். எங்கள் தோட்டத்தில் காய்த்த வெள்ளரிக்கு அழகான கோடுகளும் கூடவே ஆங்காங்கே வியர்க்குரு போல முட்டுமுட்டாக கொஞ்சம் துருத்தினாற்போல் முட்களும் இருந்தன. கவனமில்லாமல் பற்றினால் சுரீரென்று கையில் தைத்தன. என்ன வெள்ளரியில் முள்ளா என்று ஆச்சர்யமாக உள்ளதல்லவா? எனக்கும் அப்படிதான் இருந்தது. சாண் உயரக் கன்றாக நர்சரியில் வாங்கி வைத்தது என்பதால் என்ன வகை என்றும் தெரியவில்லை.


மறுபடியும் தேடல் துவங்கியது. சில வெள்ளரி வகையின் காய்களின் மேல் இதுபோல் சொரசொரப்பான முட்கள் இருக்கும் என்றும் அது விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உத்தி என்றும் அறிந்து வியந்தேன். காயைக் கவனமாகப் பறித்த பிறகு பேப்பர் டவல் அல்லது மெல்லிய துணி கொண்டு துடைத்தால் வியர்க்குரு போன்று துருத்திக்கொண்டிருக்கும் முட்கள் உதிர்ந்துவிடுகின்றன. பிறகு கழுவி விட்டு அப்படியே கடித்து உண்ணலாம். சுவை அபாரம். காய் ஒவ்வொன்றும் ஒரு அடிக்கும் அதிகமான நீளத்துக்கு கை மொத்தத்தில் கொடி தாங்காத பாரம்.
வெள்ளரியிலும் ஆண் பூக்கள் பெண் பூக்கள் என்று தனித்தனியாகப் பூக்கின்றன. தேனீக்களின் உதவியோடு மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்கும் அத்தனைப் பெண் பூவும் பழுதில்லாமல் காயாகிப் பலன் கொடுத்தன. சிலவற்றைப் பழுக்க விட்டுப் பார்த்தேன். பயனில்லை. பழத்துக்கு ஏற்ற வகையில்லை என்பது புரிந்தது.வெள்ளரிக்காய் காய்க்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளரிக்காயில் இத்தனை வகை சமையல் செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டேன். வெள்ளரி சாலட், வெள்ளரிக்கூட்டு, வெள்ளரி சாம்பார், வெள்ளரி பொரியல், வெள்ளரி அவியல், வெள்ளரி பச்சடி, வெள்ளரி மோர், வெள்ளரி அடை என்று நித்தம் நித்தம் வெள்ளரி சமையல்தான். அக்கம்பக்கத்திலும் நட்புகளுக்கும் கொடுத்தது போகவும் ஏராளமாய் மிஞ்சின. சுவையும் ஆரோக்கியமும் மிக்க வெள்ளரியை எந்தெந்த வகையில் முடியுமோ அத்தனை வகையிலும் உட்கொண்டோம்.


வைத்திய நூல்களான பதார்த்த சூடாமணியும் பதார்த்த குணசிந்தாமணியும் வெள்ளரியின் பயன்களைப் பாடல்களின் மூலம் விளக்குகின்றன. 


வித்துத்தான் சலவடைப்பை விலக்குங்காய் வாதமாக்கும்
மெத்திய பழத்தாற்பித்தம் வீடிடுந் நீரும்போகும்
உத்தம மானபிஞ்சா லோங்கிடுஞ் சிறுநீர்போகும்
வைத்திடிக் குணங்கடாமே வளரும்வெள் ளரியின்றன்மை

  -    பதார்த்த சூடாமணி

பொருள் – வெள்ளரிவித்து சல அடைப்பைக் குணமாக்கும். வெள்ளரிக்காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிப்பழம் பித்தத்தைப் போக்கும். சிறுநீரை வெளியேற்றும். வெள்ளரிப்பிஞ்சு சிறுநீர் கழிவதை ஊக்குவிக்கும்.

பிஞ்சு வெள்ளரிக் காய்க்குப் பேசுதிரி தோஷம்போம்
வஞ்சியரே முற்றியகாய் வாதமாம் – நைஞ்சகனி
உண்டாற் சத்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நீரிறங்கும் காண்

   -    பதார்த்த குணசிந்தாமணி

பொருள் – வெள்ளரிப்பிஞ்சு வாதம் பித்தம் கபம் என்னும் மூன்று தோஷங்களையும் போக்கும். காய் வாதத்தை உண்டாக்கும். வெள்ளரிப்பழத்தின் உள்ளே இருக்கும் விதை சிறுநீரை வெளியேற்றும்.
(உசாத்துணை https://tamilauthors.com/Medicine/049.html)
ஆசை தீருமட்டும் உண்டு முடித்து காய்ப்பு முடிந்த நாளொன்றில் மனசில்லா மனசோடு கொடியை வேரறுத்து நீக்கினேன். மறுபடியும் அப்படியொரு அபாரமான காய்ப்பு கிட்டுமா என்று தெரியவில்லை, கிட்டியதை வெகுவாக அனுபவித்திருக்கிறோம் என்பதே அளவில்லாத சந்தோஷம்.   

&&&&&