பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும்
பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி
சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து
பாடாய்ப்படுத்தும்.
சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....
தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,
அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக்
கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக்
கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும்
கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!
புழுதிகிளப்பியபடி, குப்பைகளால்
கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த
ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,
விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப்
பெற்றதொரு காலம்.
வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில
கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத்
தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!
மரங்களற்ற திடல் மயான அமைதி
கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து
நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!
மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?