15 May 2017

படித்தார்.. சொல்கிறார்..


மெல்போர்னில் கடந்த 06-05-17  அன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17-வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட வாசிப்பனுபவக் கட்டுரை. என்றாவது ஒரு நாள் நூல் குறித்த இக்கட்டுரையைப் பகிர்ந்த எழுத்தாளர் திரு.முருகபூபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. சகோதரி என எம்மை ஏற்றுக்கொண்ட பாசமிகு அண்ணனாம் அன்னாரிடமிருந்து கிடைத்துள்ள பாராட்டும் மதிப்புரையும் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும் உத்வேகத்தைத் தருவதாக உள்ளன. இவ்வாசிப்பனுபவப் பகிர்வின் மூலம் ஹென்றிலாஸன் என்னும் மகத்தான எழுத்தாளரைப் பற்றிப் பலரும் அறியும் வாய்ப்பினை அளித்தமைக்கும் இன்னுஞ்சில வாசகரைப் பெற்றுத் தந்திருப்பதற்கும் அவர்க்கு என் அன்பும் நன்றியும்.




படித்தோம் சொல்கின்றோம்:


" என்றாவது ஒரு நாள் " --- ஹென்றி லோஸன்    
தமிழில் கீதா மதிவாணன்

அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்
       --- முருகபூபதி




" புத்தாண்டின்  முன்னிரவுப்பொழுது.  வறண்ட  கோடையின் மத்தியில்   வெக்கையானதொரு  இரவு.  திசையெங்கும் திணறடிக்கும்  கும்மிருட்டு..!  காய்ந்த  ஓடைப்பாதையின்  புதர்மூடிய  வரப்புகளும்  கண்ணுக்குத்தென்படாத  காரிருள். வானைக்  கருமேகமெதுவும்  சூழ்ந்திருக்கவில்லை.  வறண்ட நிலத்தின்  புழுதிப்படலமும்  தொலைதூரத்தில்  எங்கோ  எரியும் காட்டுத்தீயின்  புகையுமே  அந்த  இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன."

இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி  என்ற சிறுகதை.

யார் இந்த ஹென்றி லோசன்...?

அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ்  மாநிலத்தில்  க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர்.

இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம்.

இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.

இயற்கைக்கும் கோபம் வருமா..? என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.

" கோடையில் ஒருநாள் மழைவரலாம்"  என்று கவிஞர்கள் பாடலாம்.

ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே  தொடக்கத்தில் சொன்னேன்.

150 ஆண்டுகளுக்கு  முன்னர்இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத்  தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன்.

தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ்வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி  மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர்.

இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர்.  அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர். 

அவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும்  பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர்.  அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத தாகத்துடன் இயங்கும்  கீதா மதிவாணன்

கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும்  ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார்.

இயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது  வியப்பானது.

இந்த நாட்டில் எம்மிடம் அறிமுகமாகியிருக்கும் Bush Walk, Barbecue என்பன ஒரு கலாச்சாரமாகவே மாறியிருக்கும் வாழ்க்கைக்கோலத்தில்  நாமெல்லாம் புள்ளிகளாகிவிட்டோம்.  கோடைகாலத்தில் இந்தக்கலாசாரக்கோலம் அதி உச்சத்திலிருக்கும்.

இந்தப் புல்வெளிதேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் நகரங்கள் வடிவமைக்கும்பொழுது, வீதிப்போக்குவரத்து, கட்டிடங்கள், குடியிருப்புகள்பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் பற்றி மாத்திரம் அக்கறை செலுத்தமாட்டார்கள்.

மக்கள் நடந்து திரிவதற்கும் ஏற்ற புதர்க்காட்டு வழித்தடங்களையும், திறந்த வெளிப்பூங்காக்களையும் அமைப்பார்கள். மரங்களை வெட்டுவதற்கும் அரசின் அனுமதி வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை இந்த நாட்டில் முன்னர் வாழ்ந்த காடுறை மாந்தர்களிடமிருந்தே பெற்றிருக்கின்றோம்.

கோடை வெக்கையிலும் மழைக்கால குளிரிலும் மந்தையோட்டிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், வாழ்ந்திருக்கும் காடுறை மனிதர்களுக்கும்  குடும்பங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள்இழப்புகள், நோய்கள் இன்ப துன்பங்கள், இருந்திருக்கின்றன என்பதை சித்திரிப்பனவே ஹென்றி லோசனின் கதைகள்.

ஹென்றி லோசனின் வாழ்க்கையும் காடுறை மாந்தர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடத்தக்கதே. என்ன வித்தியாசம் இவர் படித்திருக்கிறார். எழுத்தாளராகியிருக்கிறார்.

படித்திருந்தால் சரி, ஆனால், எழுத்தாளராகவும் அவர் வாழ்ந்திருப்பதுதான் அவரைப்பொறுத்தவரையில் பெரிய சோகம்..

அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஏற்பட்ட நோய்த்தொற்றினால் படிப்படியாக செவிப்புலன் குறைந்து பதினான்கு வயதில்  முற்றாக கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார். அதனால் பலரதும் கேலிக்கும் ஏளனத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.

இளம் வயதிலேயே இவரது பெற்றோரும் பிரிந்துவிடுகின்றனர். தந்தையுடன் இணைந்து தச்சு வேலைகளுக்கும் கட்டிடத்தொழிலில் கூலிவேலைக்கும் சென்றிருக்கிறார். அக்காலத்தில் ஓடிய புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு பெயின்ற்  பூசும் வேலைகள் செய்துகொண்டே   இரவுப்பாடசாலைக்குச்சென்று படித்திருக்கிறார்.

தமது 20 வயதில் முதலாவது கவிதையை  ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இவரது காடுறை மனிதர்கள் தொடர்பான படைப்பாற்றலை பெருமைப்படுத்தும் வகையில் சிட்னியில் இவரின் வெண்கலச்சிலை ஒன்று முதுகுச்சுமையுடன் கூடிய ஒரு காடுறை மனிதன் ஒருவனுடனும் ஒரு நாயுடனும் நிறுவப்பட்டிருக்கிறது. 1949 ஆண்டில் அவுஸ்திரேலியா அரசு அவருக்கு நினைவு முத்திரையும் வெளியிட்டது. 1966 இல் அச்சடிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின்பத்து வெள்ளிகள் நாணயத்தாளில் அவருடைய படம் பதிவுசெய்யப்பட்டது.



அவருடைய படைப்புகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. வருடந்தோறும் அவர் பிறந்த ஊரில் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் ஹென்றி லோசன் திருவிழா நடைபெற்றுவருகிறது.

அவர் வளர்ந்த குல்காங் என்ற ஊரில் அருங்காட்சியகமும் நிறுவப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது....மகத்தான மனிதர் ஒருவர்  வாழும் காலத்தில் கௌரவிக்கப்படாமல்  மறைந்தபின்னர் நினைவுகூரலுடன்   கொண்டாடப்படும் நிலைதான் நித்தியமாகியிருக்கிறது.

மகாகவி பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டுமல்ல பல மகோன்னதமான மனிதர்களுக்கும் அதுதான் நடந்தது.

வாழ்வின் தரிசனங்களே ஒரு படைப்பாளியின் எழுத்துக்கு மூலப்பொருள். காடுறை மாந்தர்களுடன் வாழ்ந்திருப்பதனால், அவரால் யதார்த்தம் குன்றாமல் அவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்க முடிந்திருக்கிறது.

முன்னொரு காலத்தில் சுரங்கக்குழிக்குள் அதிர்ஷ்டம் தேடியவர்களின் கதைகள் என்றே இக்கதைகளை மொழிபெயர்த்த கீதா மதிவாணன் வர்ணிக்கிறார். 

ஹென்றி லோசனின் பாத்திரங்கள் வழக்கமாக நாம் சமகாலத்தில் படிக்கும் மாந்தர்கள் அல்ல. ஆட்டுரோமம் கத்தரிப்பவர்கள், மந்தையோட்டிகள் குதிரை லாயம் பராமரிப்பவர்கள், வழிப்போக்கர்கள், சுரங்கத்தொழிலாளிகள், கோழி, செம்மறியாடு மேய்ப்பவர்கள், மதுபானக்கொட்டகையில் மது விற்கும் மாதுக்கள். இவர்களின்  அன்றைய  வாழ்வை பேசுகின்றன இக்கதைகள். அதனால்   அவரது பார்வையில் புதிய உலகத்திற்கு அதாவது நாம் என்றைக்கும் பார்த்திராதநாம் கடந்து வந்துவிட்ட ஓர் உலகத்திற்கு எம்மை  அழைத்துச்செல்கிறார் கீதா மதிவாணன்.

" மருத்துவர்கள் ஒருவருக்கொருவர்  கருத்தால் மாறுபடுவது  உலகெங்கும் இயல்புதானே...?" என்று 150 வருடங்களுக்கு முன்பே ஒரு சிறுகதையில்  -  ஹென்றி லோசன் என்ன தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
இத்தொகுப்பின் முதலாவது கதை மந்தையோட்டியின் மனைவி.

மரக்கம்பங்களாலும் பலகைகளாலும் மரவுரிகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த காடுறை வீட்டிற்குள் ஒரு நச்சுப்பாம்பு நுழைந்துவிடுகிறது. பிள்ளைகளை அதனிடமிருந்து காப்பாற்ற ஒரு தாய் நடத்தும் போராட்டம்தான் கதை. அந்தப்பாம்பு ஒரு விறகுக்குவியலுக்குள் மறைந்திருக்கிறது.

மந்தையோட்டச்சென்ற கணவன் எப்பொழுது திரும்பிவருவான் என்பதும் தெரியாது. அவன் அப்படித்தான் முன்பும் பலதடவை வீட்டை விட்டுச்சென்றால் எப்பொழுது வருவான் என்பது தெரியாமல் தனது பிள்ளைகளுக்கு  வேளாவேளைக்கு  உணவும் கொடுத்து  பராமரித்து வருகிறாள்.  ஆண் துணையின்றி குடும்பப்பாரம் சுமக்கிறாள்.

இச்சிறுகதை முழுவதும் அவளது மனப்போராட்டம்தான் அவள்மீது எமக்கு அனுதாபத்தை வரவழைக்கிறது.

இரவு பூராவும் விழித்திருந்து  இறுதியில் ஒருவாறு  அந்த நச்சுப்பாம்பை அடித்துகொன்று தீ மூட்டி பொசுக்கிவிடுகிறாள்.

குழந்தைகள் மறுபடியும் தூங்க ஆரம்பிக்கின்றன. மூத்த மகன் மாத்திரம் எரியும் தீயைப்பார்த்துக்கொண்டிருக்கின்றான். தாயைப்பார்க்கின்றான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. தாயின் கழுத்தை கட்டி அணைத்தவாறு, அவன் சொல்கிறான்," அம்மா, நான் ஒருபோதும் மந்தையோட்டியாகப்போகமாட்டேன். அப்படிப்போனால், என்னை விளாசித்தள்ளு"

இத்துடன் கதை முடிந்திருக்கவேண்டும்.

ஆனால், ஹென்றி லோசன் கதையின் இறுதியில் இயற்கையினூடாக நம்பிக்கை ஒளிபாய்ச்சுகிறார். எப்படி...?

அவள் அவனைத் தன் தொய்ந்த மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். அவர்கள் அவ்வாறே நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள். காட்டை துளைத்தபடி சூரியக்கதிர்கள் ஒளிவீச ஆரம்பித்திருந்தன.

இந்தத்தொகுப்பில் மொத்தம் 22 கதைகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் தனித்தனியாக வாசித்துப்பெற்ற  முழு அனுபவத்தையும்   நான் சொல்வதைவிட நீங்கள் வாசித்துப்பெற்றுக்கொள்வதுதான் சாலச்சிறந்தது.

இதில் இடம்பெற்றுள்ள பணயம் என்ற கதை மிகவும் சுவாரஸ்யமானது.

அது ஒரு மதுபான கொட்டகை. 150 வருடங்களுக்கு முன்னர் அது எப்படி இருந்திருக்கும்....? முன்பு நாம் பார்த்த கௌபோய் படங்களை நினைத்துப்பாருங்கள்.

நான்குபேர்தான் அந்த மதுபானக் கொட்டகையில்  அப்போது இருக்கின்றனர்.

ஒருத்தி மது விற்பவள். சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். ஒருவன் நல்ல வெறியில் ஒரு  நீளிருக்கை சோபாவில்  ஆழ்ந்த உறக்கம். மற்றும் இரண்டுபேர் -  ஆட்டு ரோமம் கத்தரிப்பவர்கள் -ஒரு மேசையில் அமர்ந்து சீட்டு விளையாடுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவனின் அருகில் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கிறது.

அந்தப்பெண், ஒரு நாவலைப்படித்துக்கொண்டிருக்கிறாள். ஜிம் என்பவனும் பீல் என்பவனும் சீட்டாடுகின்றனர். பில் என்பவன் தோற்றுவிடுகிறான். பில்  எழுந்து செல்ல முனையும்போது, மீண்டும் சீட்டாட அழைக்கின்றான் ஜிம்.

பில்லிடம் வைத்து விளையாடுவதற்கு எதுவும் இல்லை. அருகில் படுத்திருக்கும் நாயைப்பார்க்கிறான். ஜிம்முக்கும் அந்த நாயில் ஒரு கண். நாயை பணயமாக வைத்து சீட்டு ஆடுகிறார்கள்.

பாண்டவர்களும் கௌரவர்களும் பெண்ணரசியான  பாஞ்சாலியையே  பணயமாக  வைத்து சூதாடியிருக்கும்போது இந்தக்  காடுறை மனிதர்கள் ஒரு நாயை  பணயம் வைத்துவிளையாட  முடியாதா...?

அந்த நாயையும் வெற்றிகொண்ட ஜிம், நாயுடன் புறப்பட்டுவிடுகிறான். தோல்வியுற்ற பில்லின் மீது பரிதாபப்பட்ட அந்த மதுக்கொட்டகைப்பெண் தனது கணக்கில் ஒரு குவளை மதுவைக்கொடுத்து  அனுப்பிவிடுகிறாள்.

இனித்தான் கதையின் உச்சம்,

நீளிருக்கை சோபாவில் போதை மயக்கத்திலிருந்தவன் எழுந்து தனது நாயைத்தேடுகின்றான். அந்தப்பெண்ணிடம் கேட்டு நச்சரிக்கின்றான்.
அது யாருடைய நாய் என்பது  அவளுக்கும் அதுவரையில் தெரியாது.

இப்போது அந்த போதை மயக்கத்திலிருந்தவனுக்கும், மதுக்கொட்டகை பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. தான் போதை உறக்கத்திலிருந்தவேளையில் அவனது நாயை அவள்தான் கவனித்திருக்கவேண்டும் என்பது அவன் வாதம். ஆனால், அவளோ ஒரு சுவாரஸ்யமான நாவல் படிப்பதில் மூழ்கியிருந்தவள்.

நாயை இழந்தவன், மீண்டும் குடிக்கிறான். கத்துகிறான், முனகினான், திட்டினான். பின்னர் எழுந்து நடந்தான்.

இதிலும் ஹென்றி லோசன் இத்துடன் கதையை நிறுத்தவில்லை.

" இந்தக்கதையை என்னிடம் சொன்னவர் எவருக்கும், பணயமாய் வைத்து விளையாடப்பட்ட  நாய் உண்மையில் எவருக்குச்சொந்தமானது என்பது உறுதியாய்த்தெரியவில்லை. எனக்கும்  தெரியவில்லை என்பதால் அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்."  என்று முடிக்கிறார்.

வாசகரின் சிந்தனையில் ஊடுருவுவதுதான் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளியின் கெட்டித்தனம். அங்குதான் அவரது வெற்றி தங்கியிருக்கிறது.

பணயம் --- இன்றைய நவீன உலகிலும் எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொல் பாருங்கள்.  மகா பாரதத்திலிருந்து உலகெங்கும் நடந்த போர் அனர்த்தங்களிலும், ஏன்... இலங்கையில் நீடித்த போரிலும் இன்று சிரியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் நடக்கும் போர்களிலும் யார் பணயம் என்பது தெரியும்தானே...?

ஹென்றி லோசனின் கதைகள் 150 வருடங்களுக்கு முந்தியதாய் இருந்த போதிலும் சமகாலத்திற்கும் பொருத்தமான செய்திகளைத்தான் தருகின்றன.

அதனால், அவரது சர்வதேசியப்பார்வை அவரது ஒவ்வொரு கதையிலும் விரவிக்கிடக்கிறது. அதனால் அவர் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய இலக்கியத்தில் கொண்டாடப்பட்டுவருகிறார்.

கீதா மதிவாணன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்கு சொல்  மொழிபெயர்க்காமல்  தமிழ் மரபார்ந்து மொழிமாற்றம் செய்து வெற்றி கண்டுள்ளார்.   அதனால், மொழிபெயர்ப்புக்கதைகள் என்ற உணர்விலிருந்து தூரவிலகி நின்று கதைகள் என்ற நிலையிலிருந்து ஆர்வமுடன்  தரிசிக்கின்றோம்.

வெளிநாடுகளில் வாழும்  ஈழத்து இலக்கியவாதிகள், தாயக நினைவுகளுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில்தமிழகத்திலிருந்து இந்த நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா மதிவாணன்எமது தமிழ் இலக்கிய உலகிற்கு, அவுஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களை அவர்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையை , 230  வருடகால வரலாற்றைக்கொண்டிருக்கும் இந்தக்கண்டத்தில்  150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காடுறை மனிதர்களின் வாழ்க்கைக்கோலத்தை உயிர்ப்புடன் தந்திருப்பதானது விதந்து பாராட்டத்தக்க இலக்கியப்பணி மட்டுமல்ல, எம் அனைவருக்கும் முன்மாதிரியான எழுத்துப்பணியுமாகும்.

நூலில் இடம்பெற்றிருக்கும் என்றாவது ஒரு நாள் என்ற கதையே நூலின் பெயராகவும் அமைந்திருப்பதும் சிறப்பு,

ஒவ்வொருவர் வாழ்விலும், " என்றாவது ஒரு நாள்...!!!" என்ற உணர்வு ஆழ்ந்த அடி மனதில் இருந்துகொண்டே இருக்கும். வாழ்வில் தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் வரும்போதெல்லாம், சரி போகட்டும், என்றாவது ஒருநாள் நல்ல காலம் பிறக்கும், என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும், என்றாவது ஒருநாள் விடிவு பிறக்கும் என்ற சிந்தனை கருக்கொண்டவாறுதான் இருக்கும்.

நம்பிக்கைதானே வாழ்க்கை. அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த " என்றாவது ஒரு நாள்" என்ற சொற்பதம்தான். கீதா மதிவாணனுக்கும் இந்த மொழிபெயர்ப்புத்துறையின் மீதான அவருடைய ஆழ்ந்த நேசிப்பு குறித்த  மற்றவர்களின் வரவேற்பும் அங்கீகாரமும் என்றாவது ஒருநாள் கிடைக்கும் என நம்புவோமாக.

 எமக்கு இந்த நாட்டில் கிடைத்துள்ள சிறந்த இலக்கிய மொழிபெயர்ப்பாளராக அவரை நாம் வரவேற்று கொண்டாடுவோம். அதன் மூலம் ஹென்றி லோசனையும் நினைவில் நிறுத்துவோம்.

கீதா மதிவாணனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

( முக்கிய  குறிப்பு:  கடந்த 6 ஆம் திகதி (06-05-2017) மெல்பனில் நடைபெற்ற  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற  வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை.)


letchumananm@gmail.com


***************************

மீண்டும் என் அன்பும் நன்றியும் அண்ணா..




இக்கட்டுரை தேனீ, பதிவுகள், பூமராங் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.