Showing posts with label சிறுவர் பாடல். Show all posts
Showing posts with label சிறுவர் பாடல். Show all posts

28 April 2025

தித்திக்குதே (2) கித்துள்

ஒருவித்திலைத் தாவரவினமான அரக்கேசி என்னும் பனைக்குடும்பத்தில் சுமார் 200 பேரினங்களும் 2500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. தென்னை, பனை, பாக்கு, ஈச்சை ஆகிய அனைத்துமே பனைக்குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். 

பழம், கிழங்கு, விதை, வித்து, தண்டு, பாக்கு, எண்ணெய் (பாமாயில்), பதநீர், கள், வெல்லம், பாகு, கருப்பட்டி, மாவு, கீற்று, நார், கயிறு, பன்னாடை, ஓலை, மட்டை என எண்ணற்ற பயன்களைத் தரும் பனைகள் உலகளாவிய வணிகச் சந்தையில் பெரும் பங்கு வகிக்கின்றன.  சில பனை வகைகள்  பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் சாலையோரங்களிலும் அலங்கார மரங்களாக வளர்க்கப்படுகின்றன. 

இப்போது தலைப்பில் உள்ள கித்துள் மரத்துக்கு வருவோம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிருக்கும் இந்திய, இலங்கைக் கடைகளில் வெல்லம் மற்றும் சர்க்கரை பகுதியில் கித்துள் வெல்லம், கித்துள் கருப்பட்டி என்ற பெயர்களைப் பார்த்தேன். தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அவை என்னவாக இருக்கும் என்று  யோசித்தபடி கடந்துவிடுவேன். பிறகுதான் தெரிந்தது, கித்துள் மரம் இலங்கையில் மிகவும் பிரபலமானது என்றும் கித்துள் கருப்பட்டி அந்த மரத்திலிருந்துதான் கிடைக்கிறது என்றும். 


கித்துள் மரமா? கேள்விப்படாத மரமாக இருக்கிறதே என்று பார்த்தால் எல்லாம் நமக்குத் தெரிந்த மரம்தான். தமிழகத்தில் நாம் ‘கூந்தப்பனை’ என்று சொல்வோம் அல்லவா? அந்த மரத்தைத் தான் இலங்கையில் ‘கித்துள் / கித்துல் மரம்’ என்று சொல்கிறார்கள்.

இப்பனையின் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூத்து,  பெண்களின் விரித்தக் கூந்தலைப் போன்று காட்சியளிப்பதால் நாம் அதற்கு ‘கூந்தல் பனை’ என்று காரணப்பெயர் இட்டிருக்கிறோம்.  தமிழகத்தின் தென்பகுதியில் இது 'சவுரிப்பனை' என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது. 

இப்பனையின் ஓலைகள் மற்ற பனையின் நீள் ஓலைகளைப் போல் இல்லாது, மீன்வால் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘Fishtail palm என்ற காரணப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Caryota urens. 

கித்துள் பற்றி மேலும் அறிந்துகொள்ள தேடல் வேட்டையில் இறங்கியபோது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன. கித்துள் பனை மரச் சாகுபடி இலங்கையில் பிரசித்தம். அம்மரங்களிலிருந்து கிடைக்கும் கித்துள் கருப்பட்டி, கித்துள் பாகு, கித்துள் பால் போன்ற இனிப்பூட்டிகள் பண்டைக் காலத்திலிருந்தே அங்கு புழக்கத்தில் உள்ளன. கித்துள் பனையிலிருந்து கள்ளும் இறக்கப்படுகிறது. அது மற்றப் பனைமரக் கள்ளைக் காட்டிலும் வீரியம் மிகுந்தது என அறியப்படுகிறது.   

அதென்ன கித்துள் பால்? கித்துள் மரத்தின் பதநீர்தான் கித்துள் பால் எனப்படுகிறது. கருப்பட்டி தயாரிப்பு போன்றதே மற்ற யாவும். கித்தூள் பாலை குறைந்த தீயில் சரியான பதத்தில் காய்ச்சினால் கிடைப்பது கித்துள் பாகு. அச்சில் ஊற்றி இறுக வைத்தால் கிடைப்பது கித்துள் வெல்லம். 

ஒடியல், ஒடியல் மா, புழுக்கொடியல், புழுக்கொடியல் மா இவையெல்லாம் பனையின் உபரிப் பொருட்கள். கடைகளில் இவற்றைப் பார்த்தபோது இவையெல்லாம் நமக்கு அறிமுகமில்லாத ஏதோ புதிய வஸ்துகள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் புரிந்தது. பனங்கிழங்கை நீளவாக்கில் வகுந்து துண்டுகளாக்கிக் காயவைத்துப் பெறுவது ஒடியல். அதிலிருந்து கிடைக்கும் மாவுதான் ஒடியல் மா. பனங்கிழங்கை அவித்துக் காயவைத்தால் அதன் பெயர் புழுக்கொடியல் (புழுங்கலரிசி போன்று புழுங்க வைப்பதால்). அதிலிருந்து கிடைக்கும் மாவு புழுக்கொடியல் மாவு. இவையெல்லாம் இலங்கையில் பிரபலமான உணவுப் பொருட்கள். தென் தமிழக மாவட்டங்களிலும் இவற்றின் பயன்பாடு உண்டு என்று தற்போதுதான் அறிந்துகொண்டேன்.

மற்ற பனையிலிருந்து கித்துள் பனை வேறுபடும் இன்னொரு விஷயம் அதன் அடிமரத் தண்டும் உணவாகப் பயன்படுவதுதான். கித்துள் மரத் தண்டை செதுக்கி இடித்துப் பொடித்து சலித்து மாவாக்கினால் அதுதான் கித்துள் மா. அதிலிருந்து கஞ்சி, புட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.


பனம்பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதை வெயிலில் காயவைத்துச் செய்யும் இனிப்பு ‘பினாட்டு (அ) பனாட்டு’ என்று சொல்லப்படுகிறது. மாம்பழம் அதீதமாகக் காய்க்கும் காலங்களில் சாப்பிட்டது போக, மிதமிஞ்சிக் கிடக்கும் பழங்களைப் பிழிந்து சாறெடுத்து வெயிலில் காயவைத்துப் பதப்படுத்தி வைப்போம் அல்லவா? அதே செய்முறைதான் இதற்கும்.  கூடுதலாக 'காடி' சேர்க்கப்படுகிறது. பனம்பழச் சாற்றோடு மாவைக் கலந்து செய்யப்படும் பனம்பழப் பணியாரமும் இலங்கையில் பிரசித்தம். 

பொதுவாகப் பனம்பழங்களை அவித்தோ சுட்டோ உண்பதுண்டு. நார்நாராக இருக்கும் பனம்பழத்தைச் சுவைத்து முடித்தவுடன் கொட்டையைக் காயவைத்து அதில் பொம்மை செய்வார்கள். 

பனை ஆர்வலர் அசோக் குமார் செய்த பொம்மைகள்

கொட்டையின் ஒரு பக்கம் நாரைச் செதுக்கிவிட்டு அதில் முகம் வரைந்துவிட்டால் போதும். நாலாபக்கமும் சிலுப்பிநிற்கும் தலைமயிரோடு தாத்தா பொம்மை, சிங்க பொம்மை, குரங்கு பொம்மை போன்றவை தயார். எங்கள் அம்மாச்சி வீட்டில் கருப்பு முகத்தில் உருட்டு விழிகளோடு இரண்டு பனங்கொட்டை தாத்தா பொம்மைகள் இருந்தன. சொல்பேச்சுக் கேட்காமல் அடம்பிடிக்கும் அக்கம்பக்கக் குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் மிரட்டி வழிக்குக் கொண்டுவர அம்மாச்சி அந்தப் பொம்மைகளைத்தான் பயன்படுத்துவார். 


பொதுவாக ஒரு பனை மரம் ஆணா பெண்ணா என்பது அது பூக்க ஆரம்பிக்கும் காலத்தில்தான் அறியப்படும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் உச்சியில் இருக்கும் காய்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும் இது ஆண் மரம், இது பெண் மரம் என்று அடையாளம் காண முடியும். சில பனை வகைகளில் இதுபோல் தனித்தனியாக இல்லாமல் ஒரே மரத்திலேயே ஆண் பெண் பூக்கள் காணப்படும். இன்னும் சில வகையில் ஒரே பூவிலேயே சூலகம், மகரந்தம் என ஆண் பெண் உறுப்புகள் காணப்படும். 

சிட்னியின் தாவரவியல் பூங்காவில் பனைவகைக்கென்றே ஒரு பகுதி உள்ளது. அங்கு உலக நாடுகள் பலவற்றையும் சேர்ந்த பல்வேறு பனை வகைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள கூந்தல்பனை மரம் தற்போது இளமரமாக உள்ளது. ஆனால் வேறு பனைகள் பூக்களோடும் காய்களோடும் பழங்களோடும் பார்த்திருக்கிறேன். பாக்கு மரத்தின் பழங்களையும் இங்குதான் முதன்முதலில் பார்த்தேன். அவற்றையெல்லாம் வேறொரு பதிவாகத் தருகிறேன். 

கொசுறு:

என்னுடைய சிறார் பாடல் தொகுப்பான 'பச்சைக்கிளியே பறந்து வா' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பனைமரப் பாடல்.


பனை மரமாம் பனை மரமாம்

படபடக்கும் பனை மரமாம்

பனை மரமாம் பனை மரமாம்

தமிழகத்தின் தனி மரமாம்


நூறு நூறு பலன் தருமாம்

நூறாண்டு வாழ்ந்திடுமாம்

உயரமாக வளர்ந்திடுமாம்

உச்சியிலே காய்த்திடுமாம் 


ஜெல்லி போல நுங்கிருக்கும்

ஜோராகவே ருசிக்கலாம்

குச்சி போல கிழங்கிருக்கும்

அவித்து நாமும் புசிக்கலாம் 


சுவையான பனம்பழங்கள்

சுட்டு சுட்டுத் தின்னலாம்

கட்டிக் கருப்பட்டி காய்ச்சி

காப்பி போட்டுக் குடிக்கலாம் 


விசிறியும் தொப்பியும்

பனைமடலில் செய்யலாம்

தடுக்கும் பாயும் பெட்டியும்

பக்குவமாய்ப் பின்னலாம் 


பாட்டெழுதிய ஓலைச்சுவடி

பனைமரமே தந்ததாம்

பனைமரத்தின் அருமை எனக்கு

இப்போதுதான் புரிந்ததாம்.

******

(படங்கள் உதவி:  Pixabay )

30 September 2020

புகைவண்டிப் பயணம் - சிறார் பாடல்

 புகைவண்டிப்பயணம்





புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்

நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன்

ன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்

சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன்.

 

அசையும் பச்சைக்கொடி பார்த்தேன்

அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன்.

முன்னால் ரயிலும் விரையக் கண்டேன்

பின்னால் மரங்கள் மறையக் கண்டேன்.

 

வழியில் பச்சை வயல் பார்த்தேன்

வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன்

சோளக்கொல்லை பொம்மைகளும்

ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன்

 

கோணல் பனைமர வரிசை கண்டேன்

குரங்குகள் தாவும் சோலை கண்டேன்

குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும்

கார் பஸ் வரிசையும் நான் பார்த்தேன்.

 

டாட்டா காட்டி ஓடிவரும்

குழந்தைகளுக்கு கை அசைத்தேன்.

அடடா அடடா என்பது போல்

ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.

 

ரயிலுக்குள் பலவும் விற்கக் கண்டேன்

ரசனையாய்ப் பாடும் பாடல் கேட்டேன்.

பலப்பல நிலையம் கடக்கக் கண்டேன்

பலகைப் பெயர்களைப் படித்து வந்தேன்

 

அம்மாச்சி ஊரும் வரக்கண்டேன்

மகிழ்ச்சியில் மனமும் ஆடக்கண்டேன்

குஷியுடனே குதித்திறங்கிக் கொண்டேன்

விசிலூதிய ரயிலுக்கு விடைகொடுத்தேன்.


(ஆகஸ்டு 2020 பூஞ்சிட்டு இதழில் வெளியானது)



பூஞ்சிட்டு – இது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், நூல் அறிமுகம், பொது அறிவு, புதிர்கள், விளையாட்டு போன்ற பல விஷயங்களைக் கொண்ட பல்சுவை மாத இதழ். அனைவரும் வாசித்துப் பயன் பெறுக. 

19 October 2019

கூடு பார் கூடு பார் - சிறார் பாடல்






கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார்
முட்டையிட்டு அடைகாக்க குட்டி வீடு பார்

கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக் கூடு பார்
கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார்

வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப் பெட்டி பார்
சிட்டுக்குருவி உள்ளே சென்று கூடு கட்டுது பார்

பனைமரத்தின் உச்சியிலே தொங்கும் கூடு பார்
தூக்கணாங்குருவிகளின் திறமை வியந்து பார்.

மாவிலைகள் சேர்த்து தைக்கும் தையல்சிட்டு பார்
கூர் அலகால் நாரிழுத்து கோக்கும் அழகு பார்

சின்னக்குச்சிகள் கொண்டுவரும் கொண்டைக்குருவி பார்
கிண்ணம்போல வளைத்துக் கட்டும் கூட்டினழகைப் பார்

குழைத்தமண்ணால் கூடுகட்டும் தகைவிலான்கள் பார்
சன்னமான வாசல் வைத்த சாமர்த்தியம் பார்

பொந்துக்குள்ளே முட்டையிடும் பச்சைக்கிளிகள் பார்
பஞ்சும் இறகும் மெத்தையிட்டு குஞ்சைக் காக்குது பார்

உயரக்கிளையில் இருக்குமந்தப் பருந்தின் கூட்டைப் பார்
பெரிய குச்சிகள் அடுக்கிக்கட்டிய பிரமாண்டத்தைப் பார்

ஆட்கள் கண்டால் எச்சரிக்கும் ஆட்காட்டியைப் பார்
வெட்டவெளியில் கூடமைத்து காவல் நிற்பதைப் பார்

பாடுபட்டுக் கூடுகட்டும் பறவைத் திறமை பார்
கூடு கட்டத் தெரியாத குயிலின் நிலையைப் பார்

தேடிப்போய் காக்கைக்கூட்டில் முட்டையிடுது பார்
பாடுகையில் குயிலின் குஞ்சு கொத்துப்படுது பார்

அலகாலே பறவை கட்டும் அழகுக் கூடுகள் பார்
அன்பு அக்கறை திறமை யாவும் அங்கே உண்டு பார்

பறவைக்கூடு பலவிதம் பார் ரசித்துப் பார்
தொந்தரவு செய்திடாமல் தொலைவில் நின்றே பார்!


24 November 2017

விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா?


 

குட்டிக்கதைகள் பல சொன்னேன்
சுவைத்து நீயும் கேட்டிருந்தாய்
விடுகதைகள் சில சொல்வேன்..
விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா

விடுகதைகள் புதிர்கள் என்றால்
மிட்டாய் போல இட்டம் அண்ணா
விடுவிடுவென்று கேட்டிடுவாய்
நொடியில் பதிலைத் தந்திடுவேன்...

தொப்பி போட்ட பொடியன்
பெட்டிக்குள்ளே தூங்குவான்
பொழுது சாய்ந்தபின் எழுவான்
எழுந்ததும் எரிந்து சாவான்

குட்டிக்குட்டி தீப்பெட்டியில்
தூங்கும் பொடியன் தீக்குச்சியாம்
சட்டென்று பதில் சொன்னேனா..
சடுதியில் அடுத்தது கேளண்ணா

வளைகரத்தால் இழை திரித்து
நித்தம் பெண்டிர் நெய்யும் தடுக்கு
விரித்தால் சுருட்டமுடியாது
வேறிடம் பெயர்க்க இயலாது

வாசல் கூட்டி சுத்தம் செய்து
வண்ணக்கலவைகள் பல சேர்த்து
ஆசையாய் அக்கா இடுகின்ற
அழகுக் கோலம் அது அண்ணா

உருவமில்லா உடம்புக்காரன்
ஒரு டஜன் சட்டைக்கு சொந்தக்காரன்
ஒற்றை சட்டையை அவிழ்த்தாலும்
உடனே அழவைக்கும் ஆத்திரக்காரன்

சாம்பார் மணக்கச் செய்திடுவான்
சமையலில் ருசியைக் கூட்டிடுவான்
காய்கறி வகையுள் வந்திடுவான்
வெங்காயம் என்னும் பெயருடையான்

ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்

முகமொன்றில் கண்ணிரண்டு
கண்ணிரண்டில் பார்வையொன்று
சொன்ன பதில் சரியென்றால்
சீக்கிரம் கேள் அடுத்ததை அண்ணா

காட்டிலே வளர்ந்திருப்பாள்
கந்தலாடை அணிந்திருப்பாள்
முத்துப்பிள்ளைகள் பெற்றெடுத்து
முடங்கிப்போவாள் அவள் யார்..

சுட்டாலும் சுணங்கமாட்டாள்
அவித்தாலும் அனத்தமாட்டாள்
மாலையில் அம்மா தின்னத்தரும்
சோளக்கதிர்தானே அது அண்ணா..

சோறு குழம்பு கறியெல்லாம்
ஆசையாய் கையில் அள்ளிடுவான்
ஒற்றைக் கவளம் தின்று ருசிக்க
வாயுமில்லைவயிறுமில்லை..

அள்ளி அள்ளி எடுத்ததெல்லாம்
அடுத்தவர்க்குப் பரிமாறிடுவான்
அகப்பை கரண்டி என்பதெல்லாம்
அவனுக்கு நாமிட்ட பெயர்களன்றோ

வீட்டின் வெளியே அண்ணனை
விருந்தினர் கை தொட்டுவிட்டால்
உள்ளே இருக்கும் அன்புத்தம்பி
ஓஹோவென்று அலறித் தீர்ப்பான்

அழைப்புமணி அன்புத் தம்பியாம்
அழுத்தும் பொத்தான் அண்ணனாம்
இருவரும் இணைந்து வேலைசெய்தால்
விருந்தினர்க்கு நல்வரவேற்பாம்

நூறு விடுகதைகள் கேட்டாலும்
நொடியில் விடை கிட்டும் என்றாய்
சொன்னது போலவே செய்தாய்
நன்று தம்பி நலமாய் வாழ்க.

31 August 2017

தவளையாரே... தவளையாரே..






தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இத்தனைநாள் சத்தமின்றி
இருந்ததெங்கே சொல்லுவீரே..

மண்ணிலே மறைந்திருந்து
மாயம் செய்தேன் பாரும்
உடல் விறைத்து இயக்கமற்று
உயிர் காத்திருந்தேன் நானும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இப்போது மட்டும் வந்தீரே
ஏன் என்றுதான் சொல்லுவீரே

மழைபெய்த சேதியறிந்து
மகிழ்ச்சி கொண்டேன் நானும்
குளம் குட்டை நிறையக்கண்டு
கும்மாளமிடுது என் மனம்.

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
கத்திக் கூப்பாடு போடுகிறீரே
காரணமென்ன சொல்லுவீரே

நானிருக்கும் இடத்தை எந்தன்
இணை அறிய வேண்டுமே..
வானம் பொழியும் காலத்தில் என்
வம்சம் வளர்க்க வேண்டுமே..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
உண்டுகளிக்கும் உணவெதுவோ..
உண்மை எனக்கு உரைப்பீரோ

நோய்பரப்பும் ஈயும் கொசுவும்
நொடியில் தின்பேன் நானும்
அந்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும்
ஆசையாய்த் தின்பேன் மேலும்..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
வாலோடு தானே பிறந்தீரே
வளர்ந்ததும் ஏனோ இழந்தீரே..

நீரில் மட்டும் வாழும் காலம்
நீந்திப்போக வால்தான் உதவும்
வளர்ந்து மண்ணில் வாழும் காலம்
மறைந்துபோனதே எந்தன் வாலும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
தண்ணீரில் ஆட்டம் போடுறீரே..
தாயார் திட்ட மாட்டாரோ

தவளையின் வாழ்வு தண்ணீரிலே
தரணி அறிந்த உண்மையிது.
ஏரிகுளங்கள் வற்றுவதாலே
எம் இனமும் வாழ்வும் அழியுது.



ஒரு நிலப்பரப்பின் வளமான இயற்கைச்சூழலின் அடையாளம் தவளைகள். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, நீர்நிலைகளில் கலக்கப்படும் இரசாயனம், பூச்சிகொல்லிகளின் பயன்பாடு, பூஞ்சைத்தொற்று மற்றும் இதர பல்வேறு காரணங்களால் தற்போது உலகெங்கும் தவளையினங்கள் குறைந்துகொண்டும் அழிந்துகொண்டும் வருவது கவலை தரும் விஷயம். அழிவின் விளிம்பில் இருப்பவற்றைக் காக்கும் முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்படும் பூஞ்சைத்தொற்று இன அழிவுக்கு முக்கியக்காரணம். இதுவரை ஆறு தவளையினங்கள் அழிந்துவிட்டன. ஏழு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே வாழக்கூடிய, எறும்புகளைத் தின்றுவாழும் 3 செ.மீ நீளத்தில் கட்டைவிரல் மொத்தமே உள்ள (Corroboree frog) கொரோபோரீ தவளைகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஐம்பது. அவற்றுள் ஆண் தவளைகள் 15 மட்டுமே. கவனிக்கப்படாமல் விட்டால் கூடிய விரைவிலேயே இவ்வினம் கண்ணைவிட்டு… இம்மண்ணை விட்டு முற்றிலுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்பதால் பதைப்புடன் இவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன ஆஸியிலுள்ள பல்லுயிர் பாதுகாப்பு அமைப்புகள். 

இந்தியாவிலும் 21 தவளையினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம் பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா?