வண்ணங்களை கேன்வாசில் ஊற்றி விரவ விரவ, வண்ணங்களின் அசைவுக்கும் எண்ணங்களின் இசைவுக்கும் ஏற்ப எப்படி எப்படி எல்லாம் நழுவிப் படர்ந்து விரிந்து உருவாகின்றன வித விதமான ஓவியங்கள்! இதிலேயே Balloon kissing, blowing with straw, marble rolling, string pulling, swiping என்று எண்ணற்ற நுணுக்கங்கள் உள்ளன என்பதை மேலதிகத் தேடலில் அறிந்து வியந்தேன். சிலவற்றைப் பயிற்சி செய்து பார்த்து மகிழ்ந்தேன். அறிமுகப்படுத்திய Art teacher-ஐயும் கலாரசனையோடு இப்படி ஒரு பிறந்தநாள் பரிசளித்த தோழியையும் நன்றியோடு நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.
இந்த வண்ணம் ஊற்று கலையில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்
வெளியில் வழியும் அல்லது கொட்டும் வண்ணங்களைப் பற்றிய சிந்தனை அற்று கான்வாசில் உருவாகும் ஓவியத்தில் மட்டுமே
கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பது. நாம்தான் சிக்கன சிகாமணிகளாச்சே… கொஞ்சமாக ஊற்றினால்
எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதிகமாக ஊற்றினாலோ.. ஐயோ.. இவ்வளவு
பெயிண்ட் வீணாகுதே என்று மனம் பதைக்கிறது. இருந்தாலும் செய்து முடித்த பிறகு வரும்
ஆனந்தத்துக்கு அளவில்லை. இன்னொரு பிரச்சனை, கேன்வாஸ் முற்றிலும் காய்வதற்கு இரண்டு
மூன்று நாட்களாவது தேவைப்படும். அதுவரையிலும் அதை ஆடாமல், அசங்காமல், தூசு படாமல் பாதுகாப்பான
இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.
ஓவியக்கலை ஆர்வத்தின் தொடர்ச்சியாக மகளின் முயற்சியால்
இன்னும் பல ஓவிய அட்டகாசங்கள் அரங்கேறின. 48 வண்ணங்களுடன் Acrylic Paint set,
Brush set, palette, palette knives, Canvasses, Apron என்று ஒரு தேர்ந்த ஓவியக் கலைஞருக்குத்
தேவையான அத்தனை அம்சங்களையும் மகள் தன் பரிசாக ஆன்லைனில் வாங்கி இறக்கிவிட்டாள். இதில்
பெயிண்ட் வீணாகாது, உங்கள் விருப்பம் போல சிக்கனமாகத் தொட்டுத் தொட்டு செலவு செய்யுங்கள்
என்று கூடவே கேலி வேறு.
சூழ்ந்திருக்கும் உறவுகளாலும் நட்புகளாலும் ஐம்பது
கடந்த வாழ்க்கை அழகியலோடு வண்ணமயமாகிக் கொண்டிருக்கிறது. ஐம்பதிலும் ஆசை வருமாம்… எனக்கு
வண்ணங்களின்பால் மோகமே வந்துவிட்டது. கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் அன்பின் வண்ணங்களை
ஆழ்மனக் கேன்வாசில் அழகோவியமாக்கி!