மதியவேளையொன்றில் பொம்மைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறாள் நிலா.
நேற்றைய கோயில் பயணம்
நினைவில் இன்னும் பயணம்.
டெடிபேருக்குப் பூக்கள் தூவி
புது வஸ்திரமும் சாத்தி
அவதரிக்கச் செய்துவிட்டாள்
ஆதிக்கடவுளரில் ஒன்றாய்.
மதிய உணவுக்காய் வீடுவந்த மாமனிடம்
சாமி கும்பிட்டுக்கொள் மாமா என்கிறாள்.
கரடியெல்லாம் சாமியாகுமா?
கேலியை அலட்சியம் செய்து கேட்கிறாள்,
யானையும் குரங்கும் சாமியாகுமென்றால்
கரடி ஏன் சாமியாகாது?
வாயடைத்து நிற்கிறான் மாமன்,
மருமகளின் வாய்சாலம் கண்டு.
******************
எல்கேஜி படிக்கும் நிலாவிடம்
தன் பெயரை எழுதச் சொல்லி
ஆசையுடன் கேட்கிறார் தாத்தா.
ரொம்பச் சுலபம் என்றபடியே சொல்கிறாள்,
J போட்டு ஒரு ball வரைந்துவிடவேண்டும்.
திகைத்து நிற்கும் தாத்தாவிடம் கேட்கிறாள்,
ஜேபால்தானே உங்க பெயர்?
சுதாரிப்புக்குப் பின் மெச்சுகிறார் தாத்தா,
பேத்தியின் பேச்சுவன்மையை!
பெயர் சொல்லத்தானே பேரப்பிள்ளைகள்?
*********************
ஊரிலிருந்து தாத்தாவால் அழைத்துவரப்பட்டு
தன் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டப்
புதிய பொம்மைப்பிள்ளைகளுக்கு
மும்முரமாய்ப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள் நிலா.
சாப்பிட வாம்மா நிலா..
தாத்தா.. நான் டீச்சர் விளையாட்டு விளையாடிட்டிருக்கேன்...
சாப்பிட்டுப் போய் விளையாடம்மா..
மாட்டேன்.. சாப்பாடு வேணாம்.
அப்படிச் சொல்லக்கூடாது. வந்து புவ்வா
சாப்பிட்டுப்போம்மா..
புவ்வாவா? தோ.. வரேன்.
தட்டில் சோறு கண்டு மிரள்கிறாள்.
அம்மா… எனக்கு சோறு வேண்டாம்.
தாத்தா சொன்ன புவ்வாதான் வேணும்.
இதுதானம்மா புவ்வா..
இல்லை. இது இல்லை. எனக்கு புவ்வாதான்
வேணும்...
அடம்பிடிக்கும் நிலாவை அடக்கும் நோக்கில்
தாத்தா கேட்கிறார்,
நிலா நல்லபிள்ளையா? கெட்டபிள்ளையா?
நான்.. நான்…
நல்லபிள்ளை மாதிரி கெட்டபிள்ளை!
இப்படியொரு பதில் எதிர்பார்த்திராதத் தாத்தா
அடக்கமாட்டாமல் சிரித்துவைக்கிறார்.