“விக்னேஷ் யாரையாவது காதலிக்கிறானா? அப்படி ஏதாவது இருந்தா, முன்னாடியே சொல்லிடுப்பா! திடீர்னு அவனும் உன்னைப்போல் செய்துட்டான்னு வச்சுக்கோ, என்னால் உயிரோடவே இருக்க முடியாது, அதனால்தான் கேக்கறேன்!"
பிரபு அதிர்ந்துபோனான். தன் மகனைப் பற்றி அவன் நண்பனிடம் உளவு பார்க்கும் தாயை என்னவென்று சொல்வது? ஒருவகையில் அவரைப் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது.
இளவயதில் கணவனை இழந்தவர், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்தவர்போல் பலவருடங்கள் சுயம் அறியாமல் இருந்தவர். அவரது நிலையைப் புரிந்துகொள்ளாத உறவுகள் அவர் வேண்டுமென்றே உதாசீனப்படுத்துவதாக எண்ணி, அவருடனான உறவைத் துண்டித்துக்கொண்டனர். பிறகு புத்தி தெளிந்து வாழ்ந்தாலும், உறவுகளை அண்டவிரும்பாது, தன் மகன் ஒருவனே போதுமென்று வாழ்பவர்.
இந்த விஷயங்களை எல்லாம் அவரே அவனிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதனால் அவர் கேட்பதில் உள்ள நியாயம் புரிந்தது.
விக்னேஷ் மூலம் இன்னொரு அதிர்ச்சி வந்தால் மீண்டும் மனநிலை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை பிரபு உணர்ந்தான். இப்போதைக்கு அவரிடம் நம்பிக்கையை வளர்ப்பது ஒன்றே அவர் கவலைக்கு மருந்து என்று அறிந்தவன்,
அவருடைய கரங்களை அழுந்தப் பற்றி,
"அம்மா! என் நிலை வேற, விக்னேஷுடைய நிலை வேற! எனக்கு சின்ன வயசிலிருந்து பணம் மட்டும்தான் தேவைக்கு அதிகமாக் கிடைச்சது. பாசம் ....? அது நான் எதிர்பார்த்த அளவுக்கு என் அப்பா அம்மாகிட்டேயிருந்து கிடைக்கவே இல்லை.
என் அப்பாவுக்கு அம்மா மட்டும்தான் ஊரறிஞ்ச மனைவி. ஊரறியாத மனைவிகள் எவ்வளவுன்னு அவருக்கே கணக்குத் தெரியாது. என் அம்மாவுக்கோ, என் அப்பாவை உளவு பார்க்கிறதே வேலை. எப்பவும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். என் வீட்டு வேலைக்காரங்களுக்கே எல்லா விஷயமும் தெரியும்.
அப்படியொரு கேவலமான வாழ்க்கை அது! ஆனால், பணம் சேர்க்கிறதிலயும், பதவிசா வாழுறதிலயும் ரெண்டுபேருக்கும் அவ்வளவு ஒற்றுமை! அதனால்தான் நான் சின்ன வயசிலிருந்தே என் பாட்டி வீட்டில் வளர்ந்தேன்.
பாசம்னா என்னன்னு என் பாட்டிதான் காட்டினாங்க. அவங்க தவறியதுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குப் போனேன். அங்கே நிம்மதி இல்லை. வயது வந்த பிள்ளையின் முன் எதையெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் பேசுவாங்க. எப்படி அவங்க மேல் மதிப்பு வரும்? அவங்களை விட்டு விலகணும்னு நினைச்சேன்.
எனக்கு சென்னையில் வேலை கிடைச்சது ரொம்ப நல்லதாப் போயிடுச்சி. அவங்களை விட்டு விலகினாலும், இடையிடையே ஊருக்குப் போனதே இந்த சுந்தரிக்காகத்தான். என் வாழ்க்கையில் ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்கிறதில் உறுதியா இருந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவளா சுந்தரி இருந்தாள்.
அப்பா அம்மா எதிர்க்கக் காரணம் கெளரவம்! அது ஒண்ணுதான்! மத்தபடி நான் ஒரு பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு என் வாழ்க்கை சீரழிஞ்சாலும் அதுக்கு அவங்க கவலைப்படமாட்டாங்க.
இப்ப சொல்லுங்க, நான் செய்தது எந்த விதத்தில் சரியில்லை?
ஆனா, நீங்க விக்னேஷை வளர்த்தவிதம் வேற. உங்க அன்பைக் கொட்டி வளர்த்திருக்கீங்க, அவனுக்கு நிச்சயம் என் நிலை வராது.
அப்படியே அவன் ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிச்சிருந்தாலும், நேரா உங்ககிட்ட வந்து, 'அம்மா! எனக்கு அந்தப் பெண்னைப் பிடிச்சிருக்கு, நான் காதலிக்கவா?'ன்னு உங்களைத்தான் கேட்பான். அதனால் கவலையை விடுங்க!"
தன் பெற்றோரின் அந்தரங்க வாழ்க்கையின் அசிங்கம் தன் ஊரோடு போகட்டும், நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம் என்று இத்தனை நாள் அந்தச் சோகத்தையெல்லாம் தனக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்தவனுக்கு, இன்று நண்பனின் தாயாரிடம் சொன்னதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன.
ஒன்று, தன் மனதின் பாரமெல்லாம் இறங்கியது போல் ஒரு நிம்மதி. இரண்டாவது, நாகலட்சுமிக்கு அவர் மகனிடம் தளரவிருந்த நம்பிக்கையை இறுக்கி, அவரை ஆசுவாசப்படுத்தியது.
“என்னாங்க, எவ்வளவு நேரமாக் கூப்புடுறேன், என்னா யோசனை?"
"ம்!"
திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தான், பிரபு. எதிரில் இரண்டு தம்ளர்களில் காப்பியை ஏந்தியபடி, சுந்தரி நின்றிருந்தாள்.
பிரபு ஆச்சர்யத்துடன், "நீ எப்ப எழுந்து போனே?" என்றான்.
"அது சரி! நீங்க எந்த லோகத்திலே இருக்கீங்க? நான் போய் பத்து நிமிஷம் ஆவுது. அதுகூடத் தெரியாம என்னா சிந்தனையோ, ஐயாவுக்கு?"
"ம்? நம்ம விக்னேஷோட அம்மாவைப் பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன்."
"என்னானு?"
"விக்னேஷ் காதல் கல்யாணம் செய்துகிட்டால், அந்தம்மா ஒத்துக்குவாங்களான்னு யோசிச்சிட்டிருந்தேன்!"
"நிச்சயமா ஒத்துக்குவாங்க! என்கிட்ட எத்தனை அனுசரணையாப் பேசினாங்க, எப்படி நடந்துகிட்டாங்க, நான் சாமான் கழுவுறேன்னு போனப்போ, நீ இதெல்லாம் செய்யவேண்டாம்மான்னு அப்படித் தடுத்தாங்களே! நிச்சயமா அவுங்களுக்கு மருமகளா வரப்போறவ, குடுத்துவச்சவதான். அவுங்க ஒருக்காலும் தம் பையனோட ஆசைக்கு குறுக்க நிக்கமாட்டாங்க."
"நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே, என்னமோ அவங்களோட வருஷக்கணக்கா பழகினமாதிரி?"
"ஒருத்தர் குணமறிய வருஷக்கணக்காதான் பழகணுமா, ஒரு மணிநேரம் போதுமே! நீங்க சொல்லுற மாதிரி ஒரு சராசரித் தாயா அவுங்களை என்னால் கற்பனையே செஞ்சுபாக்க முடியலை. அவுங்க அதுக்கும் மேலதான்!"
"அம்மா, தாயே! வேணுமின்னா ஒரு கோயில் கட்டி அவங்களைக் கும்பிடு! நான் இனிமே அவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை."
பிரபு கையெடுத்துக் கும்பிட்டான்.
"என்னாங்க, நீங்க? என்னப்போய் கும்பிட்டுகிட்டு....."
சுந்தரியின் செல்லச்சிணுங்கலை ரசித்தவாறே மனதுக்குள் அவளைப் பற்றிக் கவலைப்பட்டான், பிரபு.
'இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாளே! இவள் என்னமாய் இந்தச் சிங்காரச் சென்னையில் வாழக் கற்றுக்கொள்ளப்போகிறாள்?'
பிரபுவின் கவலை அறியாத சுந்தரி, அவன் சொன்னதைப்போல் மானசீகமாக ஒரு கோயில் கட்டி அதில் நாகலட்சுமியின் திருவுருவம் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டாள். அவள் அறிந்திருக்கவில்லை....பின்னாளில் அந்தக்கோயில் அதில் குடிகொண்ட தெய்வத்தாலேயே தரைமட்டமாக்கப்படப்போகிறது என்பதை!
தொடரும்...
*********************************************************************
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
மு.வ உரை: