Showing posts with label நூலறிமுகம். Show all posts
Showing posts with label நூலறிமுகம். Show all posts

14 January 2026

கம்பராமாயணக் காட்சிகள் (Glimpses of Kamba Ramayanam)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 

மற்றும் 

பொங்கல் வாழ்த்துகள்! 

2026-ஆம் ஆண்டின் முதல் பதிவே கன்னல் சுவையினும் இனிய கவிச்சுவையாம் கம்ப ராமாயணம் என்னும் இன்தமிழ்க் காப்பியம் சார்ந்து இருப்பது மகிழ்வளிக்கிறது. சிட்னியில் வசிக்கும் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ள 'Glimpses of Kamba Ramayanam' நூலுக்கான மதிப்புரையுடன் இவ்வாண்டின் பதிவுகளை இனிதே தொடங்குகிறேன்.



யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி

கம்பராமாயணத்தை இயற்றப் புகுமுன், என்னதான் தன்னை, பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனையாய்த் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், கம்பனின் கவி மேதைமையையும் தண்ணிகரில்லாத் தமிழ்ப்புலமையையும் ஐயமின்றி ஆராதிப்பவர்கள் நாம். கம்பராமாயணத்தின் காவியத்திறத்தை காலந்தோறும் போற்றிப் புகழ்பவர்கள் நாம்.

பன்மொழி அறிஞரும் தமிழ்த்திறனாய்வாளருமான வ.வே.சு.ஐயர் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை’ என்னும் நூலில்,

“நமது முன்னோர் கம்பனுக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்ல: அது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான்! மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மொலியேர், கதே ஆகிய இவர்கள், கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்த பட்டன், துளசிதாஸர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும், தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமேயொழிய, அவர்கள் பக்கம் சாயாது.” என்கிறார்.


அது மட்டுமா? வியாசனையும் வால்மீகியையும் கூட ஒப்பீட்டுக்கு அழைக்கிறார். “வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதை (வேத மந்திரங்களின் தொகுப்பு) என்பதால் அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல, கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச் சமமாகவாவது இருக்குமே தவிர எள்ளளவு கூடத் தாழாது” என்றும் “கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதல் நூலாசிரியரும், கம்பனாலாயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்டமுடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமர்த்தியத்தை கம்பனுடைய சாமர்த்தியத்தினும் மேலானது என்று சொல்ல வேண்டாமா என்ற கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல் சிரத்தையொடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.  

இங்ஙனம் உலக மகாக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமிழன்னையின் தவப்புதல்வனாம் கவிச்சக்கரவர்த்தி கம்பனை தமிழென்னும் மொழி வரையறைக்குள் வைத்து நமக்கு நாமே சிலாகித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

தமிழ் அறியாதோரிடத்தும் கம்பனின் காவியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திடும் முகமாகவும், அயல்மொழி அறிந்தோரும் கம்பராமாயணம் என்னும் அருந்தமிழ்க் காப்பியத்தின் சுவையைக் குறைவிலாது ரசித்து இன்புறும் வண்ணமும், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற தமிழ் மக்களின் அடுத்தச் சந்ததியினர் கம்பனின் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கண்டு அதிசயித்துக் கொண்டாடும் பொருட்டும் ஆவன செய்திருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள். பிரத்தியேகச் சிரத்தை எடுத்து ஆங்கிலம் வழியே தமிழ்ப் பாக்களை எளிதாய்ப் புரிந்துகொள்ள வழி செய்துள்ள நூலாசிரியர் இந்நூலை எழுதியதன் மூலம் அந்த சீரிய பணியைச் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறார். கம்ப ராமாயணப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதுமாறு அவரை ஊக்குவித்த அவருடைய பிள்ளைகட்கு நமது நன்றி என்றென்றும் உரித்தாகுக!

கம்பராமாயணத்தின் செய்யுட் பாடல்களைப் புரிந்து ரசிக்க எல்லாராலும் இயல்வதில்லை. ஆர்வம் மேலிட, பயில முனைந்தாலும் காலம் கைகூடுவதில்லை. ஓய்ந்து உட்காரவும் நேரமின்றி துரிதகதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் முழு காவியத்தையும் வாசித்து ஆய்ந்து விளங்கிக்கொள்வதற்கான நேரமோ பொறுமையோ பலருக்கும் அமைவதில்லை. தமிழின்பால் தாளாத மையலுடனும் கம்பராமாயணத்தை வாசித்து இன்புற இயலவில்லையே என்னும் ஆதங்கத்துடனும் எட்ட நின்று ஏங்கியவர்களைக் கைப்பிடித்து அழைத்துவந்து அற்புதமான காப்பிய விருந்து படைத்திருக்கிறார் முனைவர் அவர்கள்.

கரும்பு தின்னக் கூலியா? என்பார்கள். இவரோ கரும்பை மென்று துப்பும் வேலையைக்கூட வாசகர்க்குத் தரவில்லை. கரும்பினைப் பிழிந்து சாறெடுத்து, வடிகட்டி, அவ்வினிய சாற்றைக் குவளையில் ஊற்றி, கையில் கொடுத்துள்ளார். ரசித்து ருசித்து பருகுவதொன்றே வாசகர் பணி.

Glimpses of Kamba Ramayanam நூலை மொழிபெயர்ப்பு நூல் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட இயலாது. இது மொழிபெயர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மொழிப்புலமை பெற்றவர்களால் சிறுகதைகளையும் புதினங்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட இயலும். கவிதைகளையும் கட்டுரைகளையும் கூட மொழிபெயர்த்துவிட முடியும். ஆனால் காப்பியங்களை? அதுவும் அவற்றின் கவிதையழகு கெட்டுவிடாமல்?

Poetry is what gets lost in translation - Robert Frost

மூல மொழியில் இருப்பவற்றைத் துல்லியமாக மொழிமாற்றம் செய்வதால் மாத்திரம் ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பின் நோக்கம் நிறைவு பெறாது. படைப்பும் முழுமை அடையாது. மொழியோடு அம்மொழி பேசும் மண் சார்ந்த மக்களின் இயல்பும் வாழ்வியலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிவழியாய்த் தொடரும் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் யாவும் உரிய விளக்கத்தோடு மொழிபெயர்க்கப்படல் வேண்டும். காவியத்தின் அழகும் கவித்திறமும் சந்த நயமும் கோடிட்டேனும் காண்பிக்கப்படல் வேண்டும். ஒரு நிலத்தின் மொழியை அதன் பண்பாடும் கலாச்சாரமும் சிதையாமல், அதே சமயம் அவற்றைப் பற்றி சற்றும் அறிந்திராத வேறொரு நிலத்தின் மொழிக்குக் கடத்துதல் பெரும் சவாலான விஷயம். அந்தச் சவாலை மிக அநாயாசமாகக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள்.

கம்பராமாயணத்தின் 118 படலங்கள் உள்ளடக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து மிகுந்த சிரத்தையோடு 108 பாடல்களை மட்டும் தெரிவு செய்து கம்பராமாயணத்தின் ரசம் துளியும் கெடாது சுருக்கி சிறப்பு செய்துள்ளார். 

‘பானைச்சோற்றுக்கு பருக்கைச்சோறு பதமாக’ என்னும் சொற்பதம் இங்கு பயன்படாது. ஏனெனில் படலங்கள் உள்ளடக்கிய பாடல்கள் ஒவ்வொன்றிலும் கவியின் திறமும் காட்சி நயமும் எதுகை மோனைகளும் எழிற் சந்தங்களும், அழகு வர்ணனைகளும், அணி இலக்கணங்களும், பொருண்மையும், பொருத்தமான உவமைகளும், கற்பனை வளமும், காவிய மாந்தரின் உணர்வெழுச்சியும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கும்போது ஒன்றை மாத்திரம் தெரிவு செய்தல் எவ்வளவு கடினம்?

50 பாடல்கள் கொண்ட பரசுராமப் படலத்தை இரண்டே பாடல்களால் மிக அழகாக விளக்கிவிட்டார். பரசுராமரை ஏன் கொல்லவேண்டும் என்றும் ஏன் கொல்லக்கூடாது என்றும் இராமன் குறிப்பிட்டு, நாணேற்றப்பட்ட இராம பாணத்துக்கு இலக்காக எதைக் கொள்ள எனக் கேட்கும் பாடலையும் அதற்கு பரசுராமர் விடை பகரும் பாடலையும் தெரிவு செய்துள்ளதன் மூலம் பரசுராமப் படலம் வாசகர்க்கு எளிதில் விளங்கவைக்கப்படுகிறது.

காவியத்தின் முழுமையான புரிதல் வேண்டி, இந்நூலில் ஒவ்வொரு காண்டத்தைத் துவங்கும் முன்பும் ரத்தினச் சுருக்கமாக அக்காண்டம் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் மிக இலகுவான வடிவில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படலத்திலிருந்தும் தெரிவு செய்த பாடலோடு கூடவே அதன் ஆங்கிலக் கவிதை வடிவமும் தரப்பட்டுள்ளது. அடுத்து அப்பாடலுக்கான பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுவோர் எளிதில் வாசிக்க, அப்பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் உச்சரித்து (transliteration) மகிழவும் கூடுதல் வகை செய்யப்பட்டுள்ளது.

அயல்மொழிகட்குப் பரிச்சயமற்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும் எளிதில் விளங்கக்கூடிய வண்ணம் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சில.

வேள்வி – Fire sacrifice ritual, sacrificial fire; ஊழி deluge; புஷ்பக விமானம் – gemstone-decorated aircraft; அமுதம் – remedial nectar; கவரி – yak-hair fan; வெண்கொற்றக் குடை – white umbrella of royalty; சூடாமணி – The hair ornament

கவரி என்பதை ‘flywhisk’ என்று பொதுவாகக் குறிப்பிடாமல் ‘Yak-hair fan’ என்று துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நூலாசிரியர் எடுத்துக்கொண்ட சிரத்தை தெளிவாகத் தெரிகிறது.

தாரை வார்த்தல் என்பதை Pouring the holy water என்கிறார். எவ்வளவு எளிமையான விளக்கம்! இது ஒரு திருமணச் சடங்கு என்பதைக் குறிப்பிடும் வண்ணம் அடுத்த வரியில் he followed the sacred rituals என்று கூடுதல் விளக்கமளிக்கிறார்.

காற்று வந்து அசைத்தலும் – இந்த வரிகளை அப்படியே மொழிமாற்றம் செய்யாது, ‘சஞ்சீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும்’ என்று தமிழிலும் ‘The medicinal air from the Herbal Mountain touched’ என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுவதன் மூலம் பாடலின் உட்கருத்தை வாசிப்போர் ஐயமின்றி விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறார்.

ஆங்கிலவழிக் கவிதை விளக்கங்கள் பல பாடல்களில் ‘அட’ என்று எண்ண வைக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு பாடல்கள்.

(1)    இராமன் காட்டுக்குச் சென்ற செய்தி அறிந்த பரதன், கோசலையில் பாதங்களில் வீழ்ந்து கதறுகிறான்.

தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்

தீ எரி நரகத்துக் கடிது செல்க யான் (பள்ளிபடைப் படலம்)

 

Bharata who had fallen at Kosalai’s feet, started to list that,

‘The sinner, who takes care of his hunger while his mother starves to death,

Who witnesses the death of his King in the war front but saves his own life,

Would all go to the burning hell, but let I should reach hell before them’

 

(2)    அசோகவனத்தில் கவலையே உருவான சீதை, நிலவைப் பார்த்துக் கூறுகிறாள்

கல்லா மதியே கதிர்வாள் நிலவே

செல்லா இரவே சிறுகா இருளே

எல்லாம் எனையே முனிவீர் நினையா

வில்லாளனை யாதும் விளித்திலீரோ (உருக்காட்டுப் படலம்)

 

Never learnt and just shine reflecting the Sunlight, Oh Moon!

Unending and intensifying darkness, Oh Night!

All of you infuriate towards lonely me,

But not Raman with bow, who never think of me!

எவ்வளவு அழகான தெளிவான விளக்கப் பாடல்கள்!

இந்நூலில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் கம்ப ராமாயணத்தின் கதை மாந்தர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது Rama, Bharatha, Sita, Lakshmana, Hanuman, Ravana, Vibhishana, Kumbhkarna என்று இல்லாமல் Raman (ராமன்), Bharathan (பரதன்), Seethai (சீதை), Lakshmanan (லக்ஷ்மணன்), Anuman (அனுமன்), Ravanan (ராவணன்), Vibeeshanan (விபீஷணன்), Kumbhakarnan (கும்பகர்ணன்) என தமிழில் உச்சரிப்பது போன்றே குறிப்பிட்டிருப்பது.

Glimpses of Kamba Ramayanam என்னும் இந்நூல், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்களின் தீவிரத் தமிழ்ப்பற்றுக்கும், நாடு, மொழி, மதம், இனம் மற்றும் தலைமுறைகள் கடந்து தமிழின் காப்பியச் சிறப்பைக் கொண்டுச்செல்ல விழையும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் பெரும் சான்று.


எண்ணற்ற விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும், ஏராளமான பொறுப்புகளை நிர்வகிக்கும் அன்னாரது உழைப்பினாலும் சீரிய முயற்சியினாலும் உருவாக்கப்பட்ட இந்நூல் எப்பேதமும் அற்று உலக மக்கள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும், தமிழின் சிறப்பு பாரெங்கும் ஓங்க வேண்டும், கம்பனின் காவியத்திறம் மொழி கடந்தும் விதந்தோதப்பட வேண்டும் என்னும் பேரவா எழுகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

பாரதியின் இவ்வாக்கினை மெய்ப்பிக்கும் முகமாக இந்நூல் உலகம் முழுவதும் சென்றடைந்து, இப்படைப்பின் நோக்கத்தை முழுமையுறச் செய்ய வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கிறேன்.

*****

ஆங்கில மதிப்புரைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் 'தமிழணங்கு' மற்றும் இலங்கையிலிருந்து வெளியாகும் 'The Morning' இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.  நன்றி: முனைவர் சந்திரிகா சுப்ரமணியம் அவர்கள்.

'The Morning' சஞ்சிகையில்




'தமிழணங்கு' இதழில்






17 August 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று. 



அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சிலபுள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில.. 

வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும். 

புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும்,  ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



8 October 2018

சந்திரபாபு - கண்ணீரும் புன்னகையும்





தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் முகில் அவர்கள். ‘பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையைத் தேடித் தொகுப்பது என்பது பாலைவனத்தில் மினரல் வாட்டரைத் தேடி அலைவதற்கு சமம்என்ற வரிகளின் மூலம் இந்நூலாக்கத்துக்கான தன் சிரமங்களைத் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

முன்னுரை நமக்கு சந்திரபாபுவைப் பற்றிய முன்னறிமுகத்தைத் தந்துவிடுகிறது. . “திங்கள்கிழமை கிடைக்கிற தகவல்களின்படி சந்திரபாபுசெம ஜாலி ஆளுப்பாஎன எண்ணத் தோன்றும். செவ்வாய்க்கிழமைமனுஷனுக்கு லோள்ளு ஜாஸ்திஎன்று நினைப்பேன். புதன்கிழமை, யாரிடமாவது பேசிவிட்டு வரும்போதுஅய்யோ பாவம் சந்திரபாபுஎனப் பரிதாபப்படுவேன். வியாழக்கிழமை, வேறொரு நபருடன் பேசும்போதுச்சே, சந்திரபாபு கெட்ட பையன்என்று மனம் நினைக்கும். வெள்ளிக்கிழமை, ‘அட, இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரேஎன்று வியப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிகைகள் எதையாவது புரட்டினால், ‘என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படிச் சொல்லுவாருஎன்று தோன்றும். ஞாயிற்றுக்கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்துவைத்து யோசிக்கும்போது, நாயகன் ஸ்டைலில்சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா? என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.”

நூலாசிரியருக்கு ஏற்பட்ட அத்தனை உணர்வுகளும் வாசிக்கும் நமக்கும் உண்டாகும் வகையில் வெகு சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். ஆசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். “சந்திரபாபு போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் வாழ்க்கை அடுத்த தலைமுறைகளுக்கும் பாடமாக இருக்கும் தகுதி பெற்றது”.

அதை வழிமொழியும் பதிப்பாசிரியரும்இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் இவர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்தான், ஆகவே படியுங்கள்என்று பரிந்துரைக்கிறார்.

உண்மைதான். சந்திரபாபுவின் வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் ஒரு பாடம்தான். எப்படி வாழவேண்டும் என்பது ஒருவகை பாடம் எனில் போல் எப்படி வாழக்கூடாது என்பது இன்னொருவகையான பாடம்தானே.  

பிறப்பு வளர்ப்பு திருமணம் இறப்பு என்ற வரிசைக்கிரமப்படி அல்லாமல் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது என்பதே புத்தகத்தின் சுவாரசியம் கூட்டும் ஒரு விஷயம். முதல் அத்தியாயமே அவரது தற்கொலை முயற்சியில்தான் துவங்குகிறது. இவ்வுலக வாழ்வின் முடிவை நோக்கிய அவரது பயணமே அவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமாக அமைந்திருக்கிறது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மகனாய்ப் பிறந்து திரைத்துறையில் கால்பதிக்கத் துடித்த அந்தக் கலைஞனின் வாழ்க்கையில்தான் எவ்வளவு மேடுபள்ளங்கள்திருப்பங்கள்உப்பு சத்தியாக்கிரகம் செய்ததற்காக அவரது தந்தை சிறை சென்ற வேளையில் தீரர் சத்தியமூர்த்தியின் இல்லத்தில் விடப்பட்ட பதினொரு வயது பாபுவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாரிடம் விடப்பட்டது தெரியுமா? பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம்தாம்.

நாற்பத்தாறு வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்ட மகத்தான கலைஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை புத்தகத்திலிருந்து இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

நடிப்பின் மீதான மோகமும், கலையார்வமும், தொழில்பக்தியும், எதையும் தனித்துவத்துடன் செய்யவேண்டுமென்னும் தீராத ஆர்வமும் அவரை உச்ச நிலைக்குக் கொண்டுபோயின என்றால் குடிப்பழக்கமும், பெண்மோகமும், அதீத தற்பெருமையும், மற்றவர்களைப் பற்றி தன் மனத்தில் நினைப்பதை எல்லாம் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் தன்மையும் அவரை படு பாதாளத்தில் வீழ்த்தின. திருமண வாழ்வில் அவருக்கு உண்டான தோல்வியே அவரது தீவிர குடிப்பழக்கத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது திருமணவாழ்வு குறித்த செய்திகள் இதுவரை நான் கேள்விப்பட்டதிலிருந்து மாறுபட்டவையாக இருப்பதை இப்புத்தகம் வாயிலாகவே அறியமுடிந்தது.

பேசும் படம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது

பெயர்சந்திரபாபு

செய்யும் தொழில்நடிப்பது

தெரிந்த வேறு தொழில்செல்ஃப் ஷேவிங்

என்னைப் பற்றி நான் கொண்டிருக்கும் எண்ணம்உலகத்திலேயே வாழும் மிகப்பெரிய மனிதன் நான், நானேதான்.

என்னைப் பற்றி எனக்கே உள்ள மாறான கருத்துகள்நான் அழகின் அடிமை. அழகு என்னை வசியப்படுத்தி விடும். மற்றவர்கள் அழகை ரசிப்பதற்கும் நான் அழகை ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கற்பாறையை சிலையாக வடித்தால் பலர் ரசிப்பார்கள். நான் கற்பாறையையே ரசிப்பேன். மறைந்து கிடக்கும் இயற்கையின் அழகை நான் அதில் காண்பவன்.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்கள் யார்? என் வாழ்க்கையில் மூன்று பேரை நான் மறக்கமாட்டேன். ஆமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன், எனது மாமனார், ஜெமினி கணேசன் ஆகியோர்.
(அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் விசித்திரம்.)

நீங்கள் ஊரோடு ஒத்து வாழ்ந்தால் என்ன என்ற கேள்விக்கு இப்படி விடைதருகிறார்.

ஊரோடு ஒத்து வாழ். கேட்பதற்கு இனிமையாகதான் இருக்கிறது. என்னைவிட, அறிவில் குறைவானவர்களையே அதிக எண்ணிக்கையில் இங்கு நான் சந்திக்கிறேன். என் பார்வைக்கு அவர்கள் பைத்தியக்காரர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் பார்வைக்கு நான் பைத்தியக்காரனாகத் தெரிகிறேன். ஏதோ ஒரு சிலர்தான், அத்திப்பூவைப் போல் அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஓரளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?’

1951 முதல் 1971 வரையிலான இருபது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையின் முன்னும் பின்னும் முரண்களின் மூட்டையாகிப் போனார் சந்திரபாபு.

விருந்தோம்பும் பண்பால் கலையுலகத்தையே அசரவைத்த அவர்தான் பின்னாளில் ஒரு பிரியாணிக்காக அலையாய் அலைந்திருக்கிறார். அந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது இப்புத்தகத்தில்.

ராஜா அண்ணாமலை புரத்தில் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு காரிலேயே போகும்படியாக ஒரு பங்களா கட்டிக்கொண்டிருந்த சந்திரபாபுதான், வாடகை தரவும் வழியில்லாமல் வீட்டை அமீனா வந்து காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

சிவாஜி கணேசன், எம்ஜியார், ஜெமினி கணேசன், கண்ணதாசன் போன்ற பிரபலங்களுடன் நடிகர் சந்திரபாபு முரண்பட்ட தருணங்களை விவரிக்கும் அதே வேளை, பாலாஜி, தேங்காய் சீனிவாசன், எம் எஸ் விஸ்வநாதன் போன்றோருடன் அவருக்கிருந்த அந்நியோன்னிய நட்புறவையும் ஒருங்கே பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பேசுகிறது இப்புத்தகம். ஜெயகாந்தன் சொல்கிறார், “பாபுவுக்கு இயற்கையாகவே நடிப்புத்திறமை, பாட்டுத்திறமை ஆகியவை எல்லோரும் விரும்பும் வகையில் அமைந்திருந்தன. அவற்றையெல்லாம் ஓர் ஊதாரியைப் போல் இந்த சினிமா உலகுக்கு வாரி இறைத்ததன் விளைவாக, அவருக்கு அதீதமான ஏற்றத்தையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்த சினிமா உலகமே கொண்டுவந்துவிடும் என்று நான் அஞ்சினேன். எனது அச்சத்தை உரிமையோடு பலமுறை அவரிடம் கூறினேன். மிகவும் உருக்கமான நேரங்களில் அவர் திடீரென்று சிரிப்பார். அதேபோல சில நேரங்களில் அழுவார். இப்படிக் கண்களில் கண்ணீர் வருகிற அதே மனிதன், சில சமயங்களில் சட்டைக் காலரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “I am Babu” என்று வல்லமை பேசுகிற காட்சி இன்னும் ரசமாக இருக்கும்.”

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சகோதரி என்ற திரைப்படத்தைப்போட்டுப் பார்த்த ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லையாம். படம் எடுபடாது என்று நினைத்த அவர் படத்தை ஓடவைக்க சந்திரபாபுவை அழைத்துப் பேசியிருக்கிறார். நல்ல காமெடியை பத்து நாட்களில் படமாக்கிப் படத்துடன் சேர்த்து ஒரு கோர்வையாக்கிக் கொடு என்றாராம் செட்டியார். சந்திரபாபு ஒருநாள் யோசித்து முடிவைச் சொன்னாராம். அவரது முடிவைக் கேட்ட செட்டியார் அசந்துபோய்விட்டாராம். அப்படி என்ன சொன்னார்?

ஏழு நாட்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கித் தருகிறேன். எனக்கு லட்ச ரூபாய் தாருங்கள்என்றாராம். முதலில் மறுத்த செட்டியார் சந்திரபாபு மீது கொண்ட நம்பிக்கையால் பிறகு ஒத்துக்கொண்டாராம். அன்றைய நாட்களில் ஒரு முழுப்படத்துக்கே முன்னணி நடிகர்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு நகைச்சுவைக் காட்சிக்காக ஒரு லட்ச ரூபாய் வாங்கியது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதாம்.

தமிழ் சினிமா உலகில் நடிப்பாகட்டும், பாடலாகட்டும், நடனமாகட்டும்,  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற பலரும் அறிந்திராத உச்சத் தருணங்களையும் வீழ்ச்சித் தருணங்களையும் அற்புதமாய்ப் படம்பிடித்துக்காட்டும் புத்தகம் இது.

பக்கங்கள் – 200
விலைரூ. 125
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
முதல் பதிப்பு டிசம்பர் 2012


(5-12-2015 வல்லமை இதழில் வெளியானது)