முந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தேன். அதை வாசித்தபோது என் மனத்தில் தோன்றிய வரிகள்.
உலக்கைக்குமொரு காலம்
உரியதாயிருந்தது அப்போது.
உடன் இன்னுஞ்சிலவற்றுக்கும்
உரியவரை வசைபாடும் உபயோகமிருந்தது
குதிர், குந்தாணி, குத்துக்கல், தீவட்டி,
குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு...
இப்படியும் இன்னபிறவுமாய்!
அர்த்தமுள்ள அத்தனையும் காலாவதியாகிவிட
கால்முளைத்தாடுகின்றன காதுகூசும் வசவுகள்!
கால்முளைத்தாடுகின்றன காதுகூசும் வசவுகள்!
"உலக்கை... உலக்கை... செக்குலக்கை... தண்ணி வழியிது, பார்த்துட்டு சும்மா நிக்கிறியே... குழாயை நிறுத்தினால் என்ன? ஒரு ஆள் சொல்லணுமா?"
"முண்டம்... அடுப்பில் எண்ணெய் வச்சிருக்கையில் ஈரக்கையை உதறுறியே அறிவில்லே?"
"குதிர் மாதிரி வளர்ந்திருக்கு, ஒரு வேலையும் செய்யத் துப்பு கிடையாது."
என்னுடைய பால்யத்தில் இவையெல்லாம் வசைச்சொற்கள் என்னுமளவில் மட்டுமே புரிதல் இருந்தது. இப்போது யோசிக்கையில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பது புரிகிறது.
நம் வீட்டுப் பெரியோர்களாலும் முன்னோர்களாலும் உபயோகிக்கப்பட்ட அர்த்தமுள்ள சில வசைச்சொற்களும் இழிசொற்களும் இதை எழுதும் தருணத்தில் நினைவுக்கு வருகின்றன. நம்மில் பலரும் இவற்றை எங்கேயாவது எப்போதாவது நிச்சயம் கேட்டிருப்போம். பொருள் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
உலக்கை, தீவட்டி, தண்டம், குத்துக்கல், பிடிச்சுவச்சப் பிள்ளையார் –தானாக முன்வந்து எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் செய்வதை சும்மா வேடிக்கை பார்த்தபடி இருப்பவர்கள்.
குதிர் |
குந்தாணி |
குதிர், குந்தாணி, சோத்துப்பானை - தின்று தின்று விட்டு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம் என்று சோம்பி இருப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள்
குதிர் என்பது நெல் கொட்டிவைக்கும் மரக்கலன்;
குந்தாணி என்பது நெல்லை உரலிலிட்டுக் குத்தும்போது வெளியே சிந்தாமல் இருக்க வாய்ப்புறத்தில் போடப்பட்டிருக்கும் கல் வளையம்
கோவில்மாடு - கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகள் தம்மிஷ்டத்துக்கு மேய்ந்தும் திரிந்தும் வாழ்வதுபோல் எந்தக் கவலையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தன் விருப்பத்துக்கு வாழ்பவர்கள்.
கோவில் பெருச்சாளி - பெரிய கோவில்களுள் வாழும் பெருச்சாளிகளுக்கு நைவேத்தியம், பிரசாதம், படையல், பக்தர்களின் வேண்டுதல் என்று எந்த வடிவிலாவது எப்படியாவது உணவோ, தானியமோ கிடைத்துக்கொண்டே இருக்கும். அவற்றைத் தின்று கொழுத்துவளரும் எலிகளைப் போல எந்த உடல் உழைப்பும் இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் உண்டு உடல் பெருக்கும் சோம்பேறிகளைக் குறிப்பது.
பழம்பெருச்சாளி - அடுத்தவர் உழைப்பில் உடல் பெருக்கும் சோம்பேறிகளுள்ளும் பெரும் அனுபவசாலி, சுரண்டலில் கைதேர்ந்தவர்.
பழம்பஞ்சாங்கம் - பழைமைவாதத்தில் ஊறியவர்.
புண்ணாக்கு – எண்ணையெடுத்த பின்பு மீறும் சக்கையைப் போல் எந்த விஷயஞானமும் இல்லாதவர்கள்.
பன்னாடை – பனை மரம், தென்னை மரங்களில் கீற்றுகளைத் தாங்கிப்பிடிக்க அமைந்த இயற்கையின் சிறப்பு. பயனுள்ள இதை ஏன் பயனற்றவர்களுக்கான வசையாக உபயோகிக்கிறார்கள் என்று யோசிக்கையில்தான் விஷயம் பிடிபட்டது. இந்த பன்னாடை சல்லடை போன்றிருப்பதால் பழங்காலத்தில் எண்ணெய் வடிகட்டியாகப் பயன்பட்டது. சாரத்தை கீழே விட்டு தூசு தும்புகளைத் தக்க வைப்பது போல் பயனற்றவற்றை மனத்தில் தக்கவைக்கும் தன்மையினர்.
பன்னாடை |
கூமுட்டை – கூழ்முட்டை – வெளியே நல்ல தோற்றமிருந்தாலும் உள்ளே விஷயஞானம் இல்லாதவர்கள்.
ஓட்டைவாய் - எந்த ரகசியத்தையும் தன்னகத்தே வைத்திருக்க இயலாதவர்.
குறுமுட்டு – அளவு கடந்த செருக்குடையவன் என்கிறது லெக்சிகன் தமிழகராதி
கருங்காலி, குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு - காட்டிக்கொடுப்பவர்கள், இனத்துரோகிகள்.. தன் குலத்தை (அ) குடும்பத்தைத் தானே கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். (இரும்புக்கோடரிக்கு கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட உறுதியான கைப்பிடிதான் மற்ற கருங்காலி மரங்களை வெட்ட உதவி செய்கிறது என்பதால் இப்பட்டம்)

விளக்கெண்ணெய் – வழவழா கொழகொழா என்று விஷயமில்லாமல் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள்.
வெண்ணெய்வெட்டி – மழுங்கலான கத்தியைக் கொண்டு வெண்ணெய் போன்ற மிக மென்மையான பொருளைத்தான் வெட்டமுடியும். செயலில் தீரம் காட்டாத வாய்ச்சொல் வீரர்களுக்குரிய பட்டம்.
உதவாக்கரை - மக்கள் புழங்குவதற்குப் பயன்படாத தன்மை கொண்ட ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரை போன்றவர்கள். இருந்தும் உபயோகமில்லாதவர்கள்.
களிமண் – தண்ணீரை உள்ளிழுக்கும் தன்மையற்றதால் செடி வளர உபயோகப்படாது. சொல்வதை உள்வாங்கும் திராணியற்றவர்களைக் குறிப்பது.
சென்னாக்குன்னி - சதா நச்சரிப்பவர்.
முண்டம் - தலையில்லாதவன். தலையிருந்தால்தானே அதில் மூளையும் இருக்கும்? எனவே மூளையில்லாதவன்.
மண்ணாந்தை, தெம்மாடி, தத்தி, தறுதலை - சாதுர்யமில்லாதவர்கள்
அறிவுக்கொழுந்து - அவர்களுடைய அறிவு இப்போது கொழுந்தாக, இளந்தளிராக இருக்கிறது. முற்றி வளர காலமெடுக்கும் அதாவது அவர்களிடத்தில் புரிதல் அரிதாம்.
அகராதி - தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவப்பேச்சும் செய்கையும் கொண்டவர்கள்.
எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் - கஞ்சன், கருமி
கல்லுளி மங்கன், கல்லுப்பிள்ளையார் - அழுத்தக்காரன் (கல்லுளியால் செதுக்கினாலும் அசைந்துகொடுக்காத கல் போல எவ்வளவு தூண்டினாலும் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தாது அழுத்தமாய் மறைத்துவைப்பவன்)
கிராமப்புறங்களில் அடுத்தவரை சாபமிடவென்று சில வசைச்சொற்களை உபயோகப்படுத்திக் கேட்டிருப்போம். கழிச்சலில் போக என்பார்கள். அந்தக்காலத்தில் காலரா வந்து வாந்தி பேதியால் இறந்தவர்கள் அதிகம். அப்படி பேதி வரவேண்டும் என்ற சாபம்தான் அது. காளியாய் கொண்டு போக என்றால் அம்மை வரவேண்டும் என்ற சாபம். இப்போது காலரா, அம்மை போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் வந்துவிட்டதால் அந்த சாபங்கள் பலிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.
இவை போக சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, உம்மணாமூஞ்சி, அழுகுணி, புளுகுணி, மடையன், கிறுக்கன், கேணன், வம்பன், மூர்க்கன், வாயாடி, அடங்காப் பிடாரி, சண்டி, விடாக்கொண்டன், கொடாக்கொண்டன், அழுக்குப்பாண்டை, பயந்தாங்கொள்ளி, தொடைநடுங்கி, மேனாமினுக்கி, கோள்மூட்டி போன்ற காரணப்பெயர் வசவுகளுக்கு விளக்கம் தேவைப்படாது அல்லவா?
யாவும் எவ்வளவு அர்த்தமுள்ள வசவுகள்.. இன்னும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம், இப்போதும் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை தவிரவும் குரங்கு, கோட்டான், எருமை, பன்றி, நாய், பேய் போன்று கோபமாகவும், செல்லமாகவும் வெளிப்படும் விசேட வசைச்சொற்களை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறோம் அல்லவா?
(படங்கள் உதவி: இணையம்)