25 April 2015

ஒண்டவந்த பிடாரிகள் 10 - (பன்றிகள்)



1788-ஆம் ஆண்டு முதல் கப்பல் தொகுதி ஆயிரக்கணக்கான கைதிகளுடனும் அதிகாரிகளுடனும் வந்திறங்கியபோது, உணவுத்தேவைக்காக உடன் கொண்டுவரப்பட்டவை நாற்பத்தொன்பதே பன்றிகள். ஆனால் இன்று பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் அல்லாமல் ஆஸ்திரேலியக் காடுகளில் தன்னிச்சையாகத் திரியும் பன்றிகளின் எண்ணிக்கை மட்டுமே இரண்டரை கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விக்டோரியா மாநிலத்தில் இவை pest என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

இத்தனை வருடங்களில் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காட்டுப்பன்றிகள் வளர்ப்புப்பன்றிகளை விடவும் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. வளர்ப்புப் பன்றிகளை விடவும் அளவில் சிறியதாக இருந்தாலும் வலிமையும் மூர்க்கமும் நிறைந்தவை காட்டுப்பன்றிகள். வளர்ப்புப்பன்றிகளை விடவும் இவற்றின் ரோமம் முரட்டுத்தனமாக இருக்கும். இவற்றின் வால் வளர்ப்புப்பன்றிகளுக்கு இருப்பதைப் போல சுருண்டு இல்லாமல் நேராகவும் நுனியில் அடர் ரோமங்களுடனும் காணப்படும். காடுவாழ் பன்றிகளில் ஒரு ஆண் பன்றியின் எடை சராசரியாக 100 கிலோ வரை இருக்கும் என்றாலும் சில சமயங்களில் 250 கிலோ வரையிலும் கூட இருப்பதுண்டாம். ஆண்பன்றிகளுக்கு தந்தம்போல் இருப்பக்கமும் கோரைப்பற்கள் நீண்டு வளர்ந்திருக்கும்.


ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை ஒட்டி வாழும் பன்றிகள் ஐந்து முதல் பத்து வரையிலோ ஐம்பது முதல் நூறு வரையிலோ உணவும் நீரும் கிடைப்பதைப் பொறுத்து கூட்டமாக வாழும். யானைக்கூட்டத்தைப் போலவே காட்டுப்பன்றிக்கூட்டத்திற்கும் தலைமைப்பொறுப்பு மூத்த தலைவியிடம்தான். அக்கூட்டத்தில் பெண்பன்றிகளும் குட்டிகளும் மட்டுமே இருக்கும். பருவம் வந்தபின் ஆண் பன்றிகள் கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுவிடும். இனப்பெருக்க காலத்தில் மட்டும்தான் அங்கே அவற்றுக்கு இடமுண்டு. ஒரு ஈட்டுக்கு பத்து குட்டிகள் என்ற அளவில் வருடத்துக்கு இரண்டு முறை குட்டி ஈனும் பன்றிகளின் எண்ணிக்கை வதவதவென்று பெருகுவதில் வியப்பென்ன?



காட்டுப்பன்றிகள் கிடைக்கும் எதையும் தின்று உயிர்வாழும் தன்மையுடையவை. தாவர உணவுகளோ, தானியங்களோ, கிழங்குகளோ கிடைக்காத பொழுதுகளில் தவளை, மீன், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. சில சமயங்களில் கால்நடைப் பண்ணைகளில் உள்ள ஆட்டுக்குட்டிகளையும் வேட்டையாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 30% விளைச்சல் பன்றிகளால் நாசமாகிறது என்கிறது ஆய்வு. காட்டுப்பன்றிகளால் வேளாண்துறைக்கு உண்டாகும் நஷ்டம் மட்டுமே வருடத்துக்கு நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேல். (இந்திய மதிப்பில் ஐநூறு கோடி ரூபாய்).

கோதுமை வயல்களையும் ஓட்ஸ் வயல்களையும் நாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக்கொல்ல தொழில்முறை மட்டும் கேளிக்கை வேட்டைக்காரர்கள் வரவழைக்கப்படுகின்றனர். காட்டுப்பன்றிகள் மூர்க்கம் நிறைந்தவை என்பதால் ஒற்றையாய் வேட்டையாடச் செல்லுதல் புத்திசாலித்தனம் இல்லை என்கிறார்கள் அனுபவசாலிகள். குழுவாக இணைந்தே வேட்டைக்குச் செல்கிறார்கள். வேட்டையாடப்பட்ட இளம்பன்றிகளை உணவுக்குப் பயன்படுத்தினாலும் அதில் ஆபத்தும் அதிகம் என்று குறிப்பிடுகிறார்கள். காட்டுப்பன்றிகள் இறந்த விலங்குகளையும் அழுகிய  மாமிசங்களையும் உண்பதால் ஏராளமான நோய்க்கிருமிகளும் புழுக்களும் அப்பன்றியிறைச்சியில் இருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். 



விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் நாசமாக்குவதோடு கால்நடைப் பண்ணைகளிலும் பெரும் சேதங்களை உண்டாக்கும் காட்டுப்பன்றிகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பது அரசுக்கு மாபெரும் சவால். விஷ உணவு வைத்தும் பொறிகள் வைத்தும் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியும் கட்டுப்படுத்த முனைகிறது. முடியாதபோது பண்ணைகளையும் விளைநிலங்களையும் சுற்றி போடப்படும் உறுதியான தடுப்புவேலிகள் ஓரளவு பயன்தருகின்றன.


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 9 (பூனைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)

23 April 2015

மரங்கள் என்னும் வரங்கள்


உயிர்கோதிஉறவாடும் மரங்களை அழித்தபின்னே
வயிறுநிறைக்கஉதவுமா வாங்கிவந்த வரங்களெல்லாம்?
இயந்திரஇரைச்சல் ஓய்ந்திருக்கும் இடைவேளையில்
இரண்டிலொருசெவியேனும் திறந்துவைத்துப் பாருங்கள்
சலனமற்றக்காற்றிலும் சலம்பித்திரிந்தவாறிருக்கும்
வனந்துறந்தலையும்வனப்பேச்சிகளின் வெஞ்சாபங்கள்!





 காய்ந்துதிர் பூஞ்சன ஆடைபோர்த்திய
கரட்டுடல் காட்டுமரமும் வெகுநேர்த்தி!

Norfolk pine tree


ஒதுங்கிநில்லென்னும் உபதேசத்தோடு
ஒட்டும் பசை சுரக்குமொரு மரமிங்கு!

Black wattle


விலகிநில்லென்னும் எச்சரிப்போடு
விருட்சமொன்று முட்கவசத்தோடு!

Pochote tree

பாசிபடர்தண்டின் வளமையோடு
பசுமரமொன்றுஎன்றும்மாறா இளமையோடு!

Ash tree

மரவுரி உரித்தொரு மரமொன்று
முற்றும் துறக்கும் உத்தேசத்தோடு!

Eucalyptus tree

தொய்ந்தகொடியைத் தோளில்தாங்கும்
தாய்மை கொண்ட தருவொன்று.




வந்தென்னுள் வாழென்று உயிர்களை
வாசம் செய்ய அழைக்கும் பாசமரம்.




இலைக்கடலில் அலையெனக்
கிளைவிட்டதொரு அழகு மரம்!




திரைச்சீலையென காட்சிமறைத்து
இலைச்சரங்கள் காற்றாடுமழகு!

willow tree

சட்டிக்குள்ளுமொரு சாம்ராஜ்யம் காணும்
குட்டிமரத்தின் சாமர்த்தியம் அபாரம்!




குறுமரம் கண்டபோதும் குறுகுறுக்கா மனமதிலே
அறுமரம் கண்டபோதெழும் ஆதங்கம் என் சொல்ல? 



19 April 2015

அழைப்புமணி




எனக்கு எட்டு வயதாகும்போது எங்கள் வீட்டில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அப்போது நாங்கள், அழகான சிட்னி துறைமுகத்தின் வசீகரமான விரிகுடாக்களில் ஒன்றான மோஸ்மான் விரிகுடா பகுதியில் வசித்துக்க்கொண்டிருந்தோம்.

அப்போதெல்லாம் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவும்தான் இருந்தன. எங்கள் வீட்டைச் சுற்றிலும் யூகலிப்டஸ் மரங்களின் காடு. ஒத்த தோற்றமுள்ள யூகலிப்டஸ் மரங்களின் காட்சி ஒருவித சலிப்பையே தரும். காட்டின் ஊடோடிய பாதைகளில் போக்குவரத்தும் அரிதாகவே இருக்கும். எங்கள் வீடு, துறைமுகத்துக்கு செல்லும் பிரதான சாலையை விட்டு வெகுதூரம் விலகி உள்ளடங்கி இருந்தது. 

நடுவில் திறந்தவெளி முற்றத்துடன் கூடிய நாற்புறக் கட்டடம் அது. கிட்டத்தட்ட வீட்டின் எல்லா அறைகளின் வாசல்களும் முற்றத்தை நோக்கியே அமைந்திருந்தன. ஒவ்வொரு அறைக்கு வெளியிலும் சிறிய அளவிலான அழைப்பு மணிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் முன்வாசலில் கட்டப்பட்டிருக்கும் அழைப்பு மணி மிகப்பெரியது. கீழே தொங்கிக்கொண்டிருக்கும் மெல்லிய சங்கிலியைப் பிடித்திழுத்தால், வெளிச்சுவரோடு பொருத்தப்பட்டுள்ள நீளமான இரும்புத்தண்டு மணியோடு மோதி ஒலியெழுப்பக்கூடிய பழங்கால பாணியினாலான அழைப்பு மணி அது. இழுப்பதற்கு ஏதுவாக சங்கிலியின் நுனியில் ஒரு வளையம் இருந்தது.

தண்ணென்று குளிர்காற்று வீசிக் கொண்டிருந்த ஒருநாள் இரவு எட்டு மணி வாக்கில் நான், என் அம்மா, என் அக்காக்கள் அனைவரும் சிட்னியிலிருந்து திரும்பி வரும் எங்கள் அண்ணன்களுக்காக உணவுண்ணும் அறையில் காத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் அங்கே உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். போக வர தினமும் ஆறு மைல் தூரத்தைப் படகுகளில் துடுப்பு போட்டபடியோ அல்லது பயணித்தோ சென்றுவரும் அவர்கள் வீடு திரும்ப பொழுது சாய்ந்துவிடும்

குறிப்பிட்ட தினத்தன்று பொழுதுசாய்ந்தும் அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. வடகிழக்குப் பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பது காரணமாக துடுப்பு போடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது முன்வாசலில் அழைப்பு மணியோசை நிதானமாக கேட்டது.
  
ஒருவழியாக வந்துட்டாங்க. ஆனால் இப்படி பலமா காத்தடிக்கும் வேளையில் முன்வாசல் வழியா வருவது எவ்வளவு முட்டாள்தனம்? இந்தப் பிள்ளைகளோடு பெரும் இம்சைதான்!” அம்மா சலித்துக்கொண்டாள்.

எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண் ஜூலியா, கையில் மெழுகுவர்த்தியுடன் நீண்ட நடைபாதையைக் கடந்துசென்று கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு எவரும் இல்லை. அவள் புன்னகைத்தபடியே உணவுண்ணும் அறைக்குத் திரும்பிவந்து சொன்னாள். “எட்வர்ட் தம்பி ஏதோ குறும்பு பண்ணுறார் போலிருக்கும்மா.” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் மணியோசை கேட்டது, இம்முறை வேகமாக.

என் அக்கா, தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வேகமாய் எறிந்துவிட்டு வசைபாடியபடியே எரிச்சலுடன் சென்றவள், வெடுக்கென்று கதவைத் திறந்தபடி சொன்னாள், “முட்டாப்பசங்களா, உள்ளே வந்து தொலைங்க!” பதில் இல்லை. அவள் வெளியில் சென்று வராந்தாவில் பார்த்தாள். யாரும் கண்களுக்குப் புலப்படவில்லை. அதேசமயம், மறுபடியும் மணி ஒலித்ததுஅவள் கோபத்துடன் கதவைச் சாத்திவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தாள். அழைப்புமணியிலிருந்து மிகச் சன்னமான ஒலி எழுந்தடங்கியது

யாரும் கண்டுக்காதீங்க. இந்த முட்டாள்தனமான விளையாட்டு கொஞ்சநேரத்தில் அலுத்துப்போனதும் பசியெடுக்க ஆரம்பிக்கும். அப்போது தானாகவே வருவாங்கஅம்மா சொன்னாள்.

இப்போது மணி தெளிவாக மூன்றுமுறை ஒலித்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். ஐந்து நிமிடங்கள் கழித்து எட்டு அல்லது பத்து தடவை விடாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

“அவங்களை… இப்போ கையும் களவுமாகப் பிடிக்கிறேன் பார்.” அம்மா எங்களை சைகையால் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு மிக மெதுவாக அடியெடுத்து வைத்து முன்வாசலுக்கு நடந்தாள். நாங்களும் சத்தமெழுப்பாமல் நுனிக்காலால் நடந்து அவள் பின்னாலேயே சென்றோம். கதவின் கைப்பிடியை மெதுவாகத் திருகி, சரியாக மணியொலிக்கும் நொடியில் படக்கென்று கதவை விரியத் திறந்தாள். ஒரு ஜீவனையும் காணோம்.

எதற்கும் அலட்டிக்கொள்ளாத சுபாவத்தினளான எங்கள் அம்மா இப்போது கோபமும் எரிச்சலும் கொண்டவளாய் வெளியில் சென்று வராந்தாவில் நின்றபடி இருட்டைப் பார்த்துக் கத்தினாள்.

ஒழுங்கா உள்ளே வந்துடுங்க பசங்களா, இல்லைன்னா எனக்கு பயங்கரமான கோம் வந்துடும். நீங்க என்ன செஞ்சுவச்சிருக்கீங்கன்னு  எனக்கு நல்லாவே தெரியும். மணியின் சங்கிலியை வேறெங்கேயோ இழுத்துக்கட்டிவச்சு அங்கிருந்து விளையாடிட்டிருக்கீங்க. போதும் இந்த விளையாட்டு. நிறுத்திட்டு சாப்பிடவாங்க. வரலைன்னா.. இன்னைக்கு சாப்பாடே கிடையாது, சொல்லிட்டேன்.”

அழைப்புமணி மறுபடி ஒருமுறை அரைகுறையாய் எழுப்பிய ஒலியைத் தவிர வேறெந்த பதிலும் இல்லை.

ஜூலியா, மெழுகுவர்த்தியும் மடக்கு ஏணியும் எடுத்துவா. இந்த பசங்க மணியின் சங்கிலியை எதோடு இழுத்துக்கட்டியிருக்காங்கன்னு பார்ப்போம்.அம்மா எரிச்சலுடன் சொன்னாள்.

ஜூலியா மடக்கு ஏணியை எடுத்துவந்தாள். என் அக்கா அதை விரித்து நிறுத்தி அதன்மேலேறி சங்கிலியை ஆராய்ந்தாள். அசாதாரணமான வகையில் வேறெந்த கயிற்றுடனோ கம்பியுடனோ அது பிணைக்கப்பட்டிருக்கவில்லை. அவள் முக்காலியிலிருந்து இறங்கும்போது மறுபடி ஒருமுறை மணியின் மங்கிய ஒலிச்சத்தம் கேட்டது.

நாங்கள் வரவேற்பறைக்குத் திரும்பினோம். ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், எங்கள் அண்ணன்கள் மூவரும் வழக்கமாய் வரும் பின்வாசல் வழியே உள்ளே வந்தார்கள். மழையில் நனைந்து ஈரமும் சேறுமாக வரவேற்பறையினுள் நுழைந்த அவர்கள் உரத்த குரலில் பசி பசியென்று கோஷமிட்டனர். எங்கள் அம்மா அவர்களை முறைத்துப் பார்த்து சாப்பாடு கிடையாது என்றாள்.

ஏம்மா, என்ன விஷயம்? எங்களுக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்ற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணினோம் அல்லது எதை சரியா செய்யலை? ரெண்டு மணிநேரம் இந்த காத்தோடு போராடி படகு வலிச்சி களைச்சி வந்திருக்கோம். எங்களுக்கு சாப்பாடு கிடையாதுன்னா என்ன நியாயம்?” டெட் கேட்டான்.

நான் எதைப் பத்தி சொல்றேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களுடைய அந்த சின்னப்பிள்ளைத்தனமான விளையாட்டு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சி இன்னமும் விளையாடுறது உங்களுடைய அடாவடித்தனத்தைதான் காட்டுது.”

டெட் அவளை திகைப்புடன் நோக்கினான். “என்னம்மா சொல்றீங்க? சின்னப்பிள்ளைத்தனமான விளையாட்டா? நாங்க விளையாடினோமா?”

மறுபடி மணி ஒலிக்கவும் ஜூலியா பயத்தில் மிரண்டாள்இந்த மர்மமான மணியோசைக்கு டெட்டும் மற்ற பிள்ளைகளும் காரணமில்லை என்பது அம்மாவுக்குத் தெளிவாகப் புரிய, அவள் நடந்தவற்றை அவசரமாக அவர்களிடம் சொன்னாள்.

சரி, வாங்க, நாம் போய் அது யாருன்னு கண்டுபிடிப்போம். ஜூலியா, நீயும் தம்பிங்க ரெண்டுபேரும் குதிரை லாயத்துக்குப் போய் லாந்தர் விளக்குகளை கொண்டு வந்து ஏத்துங்க. ஒரே நேரத்தில் எல்லோரும் வெளியே போய் இந்தப்பக்கமா ரெண்டுபேர் அந்தப்பக்கமா ரெண்டுபேர் சுத்திவருவோம். நிச்சயமா… யாரோ நம்மிடம் விளையாட்டு காட்டுறாங்க. கண்டுபிடிப்போம், வாங்க.” என்றான் டெட்.

உயரமான ஒடிசலான அயர்லாந்துப் பெண்ணான ஜூலியா கடுமையான உழைப்பாளி. ஆனால் சரியான பயந்தாங்கொள்ளி. அவள் மறுபடியும் பயந்து அழத் தொடங்கினாள்.

எதுக்கு இப்போ அழறே? என்னாச்சு உனக்கு?” டெட் கோபத்துடன் கேட்டான்.

முன்பு சிறையிலிருந்து தப்பிவந்த கைதிகளால் இந்த இடத்தில் மூன்று கொலைகள் நடந்திருக்கு. செயின்ட் லியோனார்டில் இருக்கிற காவலதிகாரியின் மனைவி என்னிடம் சொல்லியிருக்கிறாங்க. கடற்கரையோரமாக மூன்று காவலாளிகள் இரவுணவு சாப்பிட்டுக்கிட்டிருக்கும்போது சில கைதிகள் அவங்களைக் கொன்னுட்டு தப்பிச்சிட்டாங்க. எங்கே பாத்தாலும் இரத்தமாம். அந்தப்பக்கத்தில் இருந்தவங்க எல்லாருமே பாத்தாங்களாம்அந்த இரத்தத்தையும்அந்த…”

உன் உளறலை நிறுத்தறியா?டெட் கத்தினான்

என் அக்கா ஓஹோவென்று சிரிக்க, தங்கை ஓடிச்சென்று அம்மாவின் பாவாடையைப் பிடித்துக்கொண்டாள்.

டெட்டின் ஆவேசமான கத்தலையும் ஆத்திரம் தெறிக்கும் முகத்தையும் பார்த்து ஜூலியா ஒரு நிமிடம் வாயடைத்துப் போனாள். அவள் நடுங்கியவாறே முதலாளியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வெளியே செல்ல முயன்றபோது மணி மறுபடியும் பலமாக ஒலிக்க அவள் அங்கேயே நிலைகுலைந்து தரையில் விழுந்தாள். பயத்தில் அவளுக்கு கைகால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன.

எதையும் நிதானமாகக் கையாளும் அம்மா, எங்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியேற்றி, கதவைச் சாத்தித் தாழிட்டாள். ஜூலியாவின் வலிப்பு எப்படி குணமாகும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

அவள் இங்கேயே அறைக்குள்ளேயே இருக்கட்டும். அவள் தன்னைவிடவும் நாற்காலி மேசைளைத்தான் அதிகம் காயப்படுத்துவாள். விநோதமான பிறவி. டெட், இப்போ நீயும் தம்பிகளும் போய் லாந்தரை எடுத்துவாங்க. குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு நான் சமையலறையில் இருகக்கேன்.” அம்மா சொன்னாள்.

நாங்கள் குதிரை லாயத்துக்கு ஓடி மூன்று லாந்தர்களை எடுத்துப் பற்றவைத்தோம். எங்கள் மூத்த அண்ணன் டெட் சொல்வதை நாங்கள் செய்யவில்லை என்றால் அவன் என்ன செய்வான் என்று எங்களுக்குத் தெரியுமென்பதால் நானும் எனக்கு அடுத்த அண்ணனும் உள்ளுக்குள் பயந்திருந்தாலும் தைரியமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டோம். பின்வாசலைத் திறந்துவிட்ட டெட், எங்களை வீட்டின் இடப்பக்கம் துவங்கி வீட்டை வலம் வந்து முன்வாசல் கதவருகே அவனை சந்திக்குமாறு சொல்லிவிட்டு வலப்பக்கமாக அவன் சென்றான்.

நாங்கள் ஒருவரோடு ஒருவர் ஒண்டிக்கொண்டு நடுங்கும் கால்களுடனும் அடைக்கும் மூச்சுடனும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சுற்றைக் கடக்க ஆரம்பித்தோம். புல்வெளியில் கண்ணில் தென்படும் எதன்மீதும் கவனத்தை ஊன்றாமல் முன்வாசலில் டெட்டை சந்தித்து வீட்டுக்குள் செல்வதொன்றையே இலக்காக நிர்ணயித்து கிட்டத்தட்ட ஓடினோம். டெட் வருவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வராந்தாவை அடைந்து முன்வாசல் கதவையும் அடைந்துவிட்டோம்.

நீங்க எதையாவது பார்த்தீங்களா?” கையில் விளக்குடன் வந்துகொண்டிருந்த டெட் எங்களைப் பார்த்துக் கேட்டான்.

இல்லை, எதுவுமில்லை.” கதவைக் குறிவைத்தபடியே சொன்னோம்.

டெட் எங்களை ஏளனமாய்ப் பார்த்தான். “பயந்தாங்கொள்ளிப் பசங்களா! ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீங்க? பெண்களையும் குழந்தைகளையும் விட நீங்க ரொம்ப மோசம். காத்து பலமா வீசுறதால் மணி ஒலித்திருக்கு. காத்து இல்லைன்னா வேறு ஏதோ ஒண்ணுஅது என்னன்னு எனக்குத் தெரியலை. ஆனால் எனக்கு இப்போ பசிக்கிது. அம்மா வந்து கதவைத் திறந்தால்தான் நாம் உள்ளே போகமுடியும். இப்போ யாராவது அந்த மணியை அடிங்கடா.

அந்த இரவின் பயங்கரத்திலிருந்து விடுபடும் உத்வேகத்துடன் நாங்கள் அழைப்புமணியின் சங்கிலியைப் பிடித்திழுத்தோம். ஆனால் இழுக்கமுடியவில்லை.  

எங்கேயோ சிக்கியிருக்கு, டெட், இழுக்கமுடியலை.”

பயந்தாங்கொள்ளிகள்! அதை இழுக்கக் கூட தைரியமில்லை!” எங்களைத் தள்ளிவிட்டு டெட் வளையக் கைப்பிடியைப் பற்றி வேகமாக இழுத்தான். மணி ஒலிக்கவில்லை.

ஆமாம், எங்கேயோ சிக்கிதான் இருக்கிறது.” டெட் ஒத்துக்கொண்டு தன் கையிலிருந்த லாந்தர் விளக்கைத் தூக்கிப்பிடித்து மேலே பார்த்தவன் அலறினான்.

டேய்… இங்கே பாருங்கடா

நாங்கள் மேலே பார்த்தோம். மணியடிக்கும் இரும்புக்கம்பியையும் சங்கிலியையும் பல சுற்றுகளாகப் பின்னிப் பிணைந்தபடி ஒரு பெரிய மலைப்பாம்பு! தலைகீழாக அதாவது அதனுடைய தலை எங்களை நோக்கி இருந்தது. எங்களை அங்கு பார்த்தும் எவ்வித பயமுமின்றி இன்னும் உற்சாகமாக உடலை முறுக்கிக்கொண்டிருந்தது.

டெட் குதிரைலாயத்துக்கு ஓடிச்சென்று துணி காயவைக்க உதவும், முனையில் கூர்பற்கள் உள்ள கழியை எடுத்துவந்தான். எங்களை பீதியில் ஆழ்த்திய அந்த பாம்பை அந்தக்கழியாலேயே எதிர்கொண்டான். அது அந்த இடத்திலிருந்து விடுபடுவதற்குள் அங்கேயே வைத்து பலமான அடிகளால் அதன் முதுகுத்தண்டை பல இடங்களில் ஒடித்தான். வீட்டுக்குள்ளிருந்து மடக்கு ஏணி கொண்டுவரப்பட்டது. அதில் ஏறிய டெட், அந்த ஜந்துவின் வாலைப் பிடித்து மிகவும் சிரமப்பட்டு விடுவித்து வராந்தாவில் எறிந்தான்.  

அந்த மலைப்பாம்பு ஒன்பது அடிக்கும் மேலே நீளமாகவும் நல்ல பருமனாகவும் இருந்தது. அது சுவருக்கும் மணியின் சங்கிலிக்கும் இடையில் தன் உடலை உராய்ந்து உராய்ந்து தன் சட்டையை உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறது. அந்த அப்பாவி ஜீவனை டெட் கொன்று கீழேபோட்டபோது, அது தான் செய்ய நினைத்த காரியத்தை கிட்டத்தட்ட முடித்திருந்தது.

&&&&&&&&

மூலக்கதை: The snake and the bell by L.Becke
தமிழில்: கீதா மதிவாணன்
23-02-2015 அதீதம் இதழில் வெளியானது.
(பட உதவி: இணையம்)


15 April 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 9 (பூனைகள்)


காட்டுப்பூனைகளால் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் அழிந்துபோன உயிரினங்கள் அநேகம் என்கின்றன ஆய்வுத்தகவல்கள். காட்டுப்பூனைகள் என்றால் காட்டுப்பூனை இனமல்ல, காடுவாழ் பூனைகள். மனிதர்களைத் தங்களுடைய வாழ்நாளில் பார்த்தேயிராதவை அவை. 




குடியிருப்புகளிலும் பண்ணைகளிலும் பல்கிப் பெருகிவிட்டிருந்த சுண்டெலி, பெருச்சாளி, முயல் போன்றவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு 1800-களில் சில பூனைகளை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்தனர் ஐரோப்பியர். சில வருடங்களிலேயே பூனைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இப்போது மழைக்காடுகளையும் ஒருசில தீவுகளையும் தவிர காட்டுப்பூனைகள் இல்லாத இடங்களே இல்லை என்னுமளவு இவற்றின் எண்ணிக்கை பூதாகரமாக உள்ளது.

அரசு, ஆஸ்திரேலியப் பூனைகளை வளர்ப்புப்பூனைகள், தெருப்பூனைகள், காட்டுப்பூனைகள் என்று மூன்றுவிதமாக பிரிக்கிறது. வளர்ப்புப்பூனைகளையும் மக்களின் குடியிருப்புகளைச் சார்ந்து வாழும் தெருப்பூனைகளையும் விட்டுவிட்டு முழுக்க முழுக்க மக்களுடன் தொடர்பில்லாது புதர்க்காடுகளில் வாழும் பூனைகளை மட்டுமே இலக்காக வைத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காரணம் இவைதான் ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் சொந்த உயிரினங்களை வேட்டையாடிக் கொன்று பல இனங்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியவை… தள்ளிக்கொண்டிருப்பவை.



ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை கோடி இருக்கலாம் என்கிறது ஆய்வு. ஒரு பூனை ஒரு நாளைக்கு ஐந்து முதல் முப்பது உயிரினங்களைக் கொன்று தின்கிறது என்றும் குறைந்தபட்சம் ஐந்து என்று கணக்குவைத்தாலுமே மொத்தமாக ஒரு நாளைக்கு கொல்லப்படும் சொந்த மண்ணின் உயிரினங்களின் எண்ணிக்கை ஏழரை கோடி என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேக்வாரி தீவில் காட்டுப்பூனைகளால் அழிந்துபோன உயிரினங்களுள் செம்மார்பு பாரகீட் பறவையினமும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் 35 வகை பறவைகள், 36 வகை விலங்குகள், 7 வகை ஊர்வன மற்றும் 3 வகை நீர்நில வாழ்வன போன்றவை காட்டுப்பூனைகளால் அழிவை எதிர்நோக்கும் விலங்குகள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனவாம்.



காட்டுப்பூனைகள் சின்னச்சின்ன விலங்குகளையும் தரைவாழ் பறவைகளையும் மட்டுமே வேட்டையாடித்தின்னும் என்று இதுவரை எண்ணியிருந்த ஆய்வாளர்களை வியக்கவைத்திருக்கிறது சமீபத்தில் டாஸ்மேனியாவில் பதிவான காட்சிப்பதிவு ஒன்று. காட்டுத்தீ பற்றிய ஆய்வுக்காக காட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது அந்தக் காட்சி.

ஒரு காட்டுப்பூனை நான்கு கிலோ எடையுள்ள பேடிமெலான் எனப்படும் சிறிய வகை கங்காருவின்மேல் பாய்ந்து அதன் குரல்வளையைக் கடித்துக் கொன்று தின்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் மலைத்துப்போயிருக்கின்றனர். பொதுவாக பூனைகள் இரண்டுகிலோ எடைக்கும் குறைவான விலங்குகளையே வேட்டையாடும் என்று இதுவரை எண்ணியிருந்த தங்கள் எண்ணத்துக்கு மாறாக இப்படியொரு பலத்த வேட்டை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சொந்த மண்ணின் பெரிய உயிரினங்களும் காட்டுப்பூனைகளுக்கு பலியாவது தெரிய வந்திருப்பதால் இனி காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிறந்த ஒரு வருடத்திலிருந்தே இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும் பூனைகள் வருடத்துக்கு இரண்டு ஈடுகள் குட்டி ஈனுகின்றன. ஒரு ஈட்டுக்கு நான்கு குட்டிகள் வீதம் வருடத்துக்கு எட்டு குட்டிகள் என்ற அளவில் இனத்தைப் பெருக்குகின்றன. டிங்கோ நாய்களுக்கும் நரிகளுக்கும் ஆப்புவால் கழுகுகளுக்கும் இரையானவை போக மீதமுள்ள காட்டுப்பூனைகளின் அட்டகாசமே இந்த அளவுக்கு இருக்கிறது.




நரிகளைக் கொல்ல பயன்படும் உத்தி இந்தக் காட்டுப்பூனைகளிடம் எடுபடவில்லை.  மண்ணில் புதைக்கப்படும் விஷ மாமிசத்தைத் தோண்டியெடுத்துத் தின்னும் பழக்கம் இவற்றிடம் இல்லை. மேலும் மனிதர்களுடன் பழகாத காரணத்தால் அவர்களைக் கண்டாலே பதுங்கி ஒளிந்துவிடுவதாலும் காட்டுப்பூனைகளைக் கொல்வதும் பொறிவைத்துப் பிடிப்பதும் மிகவும் கடினமான காரியமாக உள்ளதாம். 

இப்போதைக்கு சொந்த மண்ணின் உயிரினங்களை இவற்றிடமிருந்து பாதுகாக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பாதுகாப்பாக உலா வரும் வகையில் இயற்கை சரணாலயங்களும்  வனப்பூங்காக்களும் சுற்றிலும் பலத்த வேலிகள் போடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த நடைமுறை ஓரளவு பலன் தருவதாக உள்ளதாம்.


திருடனைப் பிடிக்கமுடியாத நிலையில் பொருளைப் பூட்டி பத்திரமாய்ப் வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்றாலும் அந்தத் திருடனை ஊருக்கு வரவழைத்ததே நாம்தான் என்று எண்ணும்போது நம் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 10 (பன்றிகள்)