26 February 2016

ஓவியக்கிறுக்(கு)கல்


என் பதின்ம வயதிலும் திருமணமான துவக்க வருடங்களிலும் நான் கிறுக்கிய சில ஓவியக்கிறுக்கல்கள்  இவை.  படம் வரைவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முகங்கள் தவிர வேறெதுவும் தன்னிச்சையாய் வரையத்தெரியாது. இங்கிருக்கும் எல்லாவற்றையும் எதையோ பார்த்துதான் வரைந்திருக்கிறேன். இந்தியாவை விட்டு வரும்போது உடன்கொண்டுவரமுடியாத பொக்கிஷங்களை பாதி பிறந்தவீட்டிலும் பாதி புகுந்தவீட்டிலுமாய் பத்திரப்படுத்தி வந்தேன். இப்போது நானே அவற்றை மறந்த நிலையில் என்னை வந்து சேர்ந்திருக்கிறது புகுந்த வீட்டில் பத்திரப்படுத்திய பொக்கிஷங்களுள் ஒன்று.  வரையப்பட்ட தாள்கள் மக்கிக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஆவணப்படுத்தும் பொருட்டும், என் மகிழ்தருணங்களை உங்களோடும் பகிரவேண்டியும் .. இங்கு கொஞ்சம். 


அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் 
ஏர் இந்தியா மகாராஜா..




துஷ்யந்தனின் வரவுக்காகக் காத்திருக்கும் 
சகுந்தலை என்று நினைவு.. 



அந்நாளைய பொங்கல் வாழ்த்து அட்டையிலிருந்து... 



 ஓவியர் ம.செ. அவர்களின் கையொப்பத்தை மட்டும்
விட்டுவைத்திருக்கிறேன் போலும். 



வளையல், தோடு மட்டுமல்லாது, 
கொண்டையிலும் தன் பெயரை நாட்டிய அந்நாளையத் தாரகை.  



புடவை விளம்பரமாக இருக்கலாம்... 



மணிமேகலையா.. 
அல்லது வேறேதும் சரித்திரக் கதாபாத்திரமா 
சரியாக நினைவில்லை. 



இந்தப்பாப்பாவை பலரும் அறிந்திருப்பீர்கள்.. 
நிர்மா விளம்பரத்தில் வருமே.. 
அந்தப் பாப்பாவைப் பார்த்துதான் வரைந்தேன். ஆனால் என்ன...  குண்டுப்பாப்பாவை ஒல்லிப்பாப்பா ஆக்கிவிட்டேன். 
(அந்த நிறுவன உரிமையாளரின் மகளும் நிர்மாவின் விளம்பர மாடலுமான நிருபமா இளவயதிலேயே மறைந்துவிட்டார் என்றறியும்போது மிகவும் வருத்தமாக உள்ளது)



இந்த கோபிகையைக் கண்டெடுத்த புத்தகம் கோகுலம். 



வண்ணம் உதிர்ந்துகொண்டிருக்கும் நிலையிலும் 
நடையில் என்னவொரு ஒய்யாரம்.



இந்தப்பாப்பாவை எத்தனை முறை வரைந்திருப்பேன் என்று 
எனக்கே தெரியாது. மிகவும் பிடித்த படம். ஒரிஜினல் படம் 
பிரமாதமாக இருக்கும். முகத்தைக் காட்ட மறுக்கிறாளே 
என்று இவள்மேல் செல்லக்கோபம் வருவதுண்டு. 



காமதேனு.. இதுவும் கோகுலம் புத்தகத்தில் பார்த்து 
வரைந்தது என்று நினைவு. 



என்ன, எல்லாவற்றையும் ரசித்தீர்களா? 
 விடைகொடுக்க வந்திருக்கிறார் ஏர் இந்தியா மகாராஜா.. 
(இப்போது மாற்றிவிட்டார்களாமே இவரை.. 
யுவராஜாவிடத்தில் அவ்வளவாக ஈர்ப்பில்லை.. 
மகாராஜாவிடம் இருக்கும் பணிவு + கம்பீரம் அவரிடம் துளியும்  இல்லை) 



இந்தப் பொக்கிஷங்களைப் பத்திரமாய்ப் பாதுகாத்து ஒப்படைத்த 
கலையரசி அக்காவுக்கு என் கனிவான நன்றி. 




20 February 2016

ஆடும் குதிரை அழகுக்குதிரை..



ஆடும் மரக்குதிரைகளை அறியாதவருண்டா? பணக்கார வீடுகளில் இருக்கும் அல்லது பரம்பரை பரம்பரையாய் சில வீடுகளில் இருக்கும். அதிலாடும் பாக்கியம் பெற்றோர் நம்மில் சிலரே உண்டு. அந்நாளைய திரைப்படங்களிலும் இந்த ஆடும் குதிரைகள் இடம்பெற்றதுண்டு.



சில வருடங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு இயந்திரக் குதிரை பொம்மைகளைப் பரிசாக அளித்ததைப் பார்த்தபோது அட, அந்த ஆடும் மரக்குதிரைகள் இப்படி மறு உருவாக்கம் பெற்றுவிட்டதா என்று எண்ணி வியந்தேன். அதன்பிறகு இங்கு ஆஸியிலும் ஷாப்பிங் மால்களில் திடீரென இந்தப் பொம்மைக்கடைகள் முளைத்து குழந்தைகள் மாடு, குதிரைகளில் உற்சாகத்துடன் வலம்வருவதைப் பார்த்தேன். 



புதிய கண்டுபிடிப்பு என்றுதான் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை சமீபத்தில் பார்க்கும்வரை 1962-லேயே தென்னிந்திய திரைப்படமொன்றில் இடம்பெற்றிருக்கிறதே ஆடும் மரக்குதிரையும் உந்தியோடும் இயந்திரக்குதிரையும். இரண்டும் போதாதாம் அந்தச் சின்னக்குட்டிக்கு.. மாமன் முதுகில் ஆனை ஊர்வலமும் அழகு.



கம்பீரத்துக்கும் பாய்ச்சலுக்கும் பெயர் போன குதிரைகள், வீரத்திற்கும் சவாலுக்கும் அடையாளமாய் படைகளில் உயிரோடும், அழகுக்கும் ஒய்யாரத்துக்கும் அடையாளமாய் பொய்க்கால் குதிரையாட்டம் என கலைத்துறையில் உணர்வோடும் காலங்காலமாக இடம்பெறுவது சிறப்பென்றால் விளையாட்டுக்கும் ஏதுவாக குழந்தைகளுக்குதான் எவ்வளவு விதவிதமானக் குதிரைப்பொம்மைகள்.. பார்த்து ரசிக்கலாம் வாங்க. 
















(படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே)

11 February 2016

வணக்கமும் வாழ்த்தும்


இன்று எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் நல்லாசானும் வழிகாட்டியுமான எங்கள் மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய 90-ஆவது பிறந்தநாள். இறகுப்பேனா காலம் தொட்டு இன்றைய கணினிக்காலம் வரை எழுத்தோடு இணக்கமாயிருப்பவர். வாசிப்பின்றி நகராது அவரது நாள் ஒவ்வொன்றும். அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரைப்பற்றிய சிறப்பான தகவல்களை இங்கு அனைவரோடும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.



11-02-1926-ல் புதுச்சேரியின் காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை பயின்று, அரசு தொடக்கப்பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியராய்ப் பணியாற்றியவர். பணியாற்றும்போதே தமிழைக் கற்று, புலவர் பட்டமும் பெற்று அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளல், ஓய்வுக்குப் பிறகான உளச்சோர்வை விரட்டும் உத்திகளுள் ஒன்று என்று அறிந்த அவர், புதிதாய் இந்திமொழியைக் கற்றுத்தேர்ந்ததோடு சமஸ்கிருத மொழிபற்றிய அறிமுக வகுப்புகளுக்கும் ஆர்வமாய் சென்றுவந்தார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ந்த ஞானம் கொண்ட அவர், தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?, லத்தீன் இலக்கிய வரலாறு, பிரெஞ்சு இலக்கிய வரலாறு, மாப்பசான் சிறுகதைகள், சிங்க வேட்டை, மறைந்த நாகரிகங்கள் என இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன் நன்கு திட்டமிடலும் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து தெளிதலும் அவசியம் என்பதை அறிவுறுத்தியவர். வரவுசெலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வரவைக் கூட்டி செலவைக் குறைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர். சேமிப்பும் சிக்கனமும் சில்லறைகளுக்கு மட்டுமல்ல.. மின்சாரம், தண்ணீர், காகிதம் என்று நாம் புழங்கும் ஒவ்வொன்றுக்கும் தேவை என்பதை செயலால் உணர்த்தியவர். விஷச்செடிகளான பார்த்தீனியத்தை அழிக்க சவக்கார நீர் உதவும் என்று அறிந்த நாள்முதலாய், துணி ஊறவைத்த சோப்புநீரை வீணாக்காமல் வாளியில் சுமந்துகொண்டுசென்று தெருவோரம் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியச்செடிகளின் மேல் ஊற்றிவருவார்.

குழந்தைகளோடு விளையாடும்போது குழந்தையாகவே மாறிவிடுவார். பேரப்பிள்ளைகளுக்கு நிகராகசொல்லப் போனால் இன்னும் சிலபடிகள் இறங்கி விளையாடுவார். 1+1 எவ்வளவு என்பாள் பேத்தி. 11 என்பார் தாத்தா. ஐயோ தாத்தா உங்களுக்கு கணக்கே தெரியல.. இருங்க நான் சொல்லித்தரேன் என்று கணக்கு சொல்லிக்கொடுப்பாள். பேரப்பிள்ளைகளிடத்தில் பயில்வதற்காகவே தன்னை ஏதுமறியாப் பேதையாக்கிக் கொள்ளும் பெருமைமிகு தாத்தா அவர்.

நேற்று என்ன குழம்பு என்று என்னைக் கேட்டாலே பெரிதாய் யோசிப்பேன். ஆனால் பல வருடங்களுக்கு முன் தன் பால்யத்தில் நிகழ்ந்தவற்றைக்கூடத் துல்லியமாய் நினைவில் வைத்திருந்து குறிப்பிடும் எங்கள் மாமனாரின் நினைவாற்றலை வியக்காமல் இருக்கமுடியவில்லை. எங்களோடு பகிர்ந்தவை யாவும் பாழாய்ப்போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் அவருடைய சம்மதத்துடன் அவருக்கென ஒரு வலைப்பூவைத் துவக்கினோம். ஆரம்பத்தில் தாளில் அவர் எழுதித்தர நான் தட்டச்சு செய்து பதிந்தேன். நாளடைவில் தானே தட்டச்சு செய்து பதிவை வெளியிடக் கற்றுக்கொண்டுவிட்டார். இப்போது வாரந்தவறினாலும் வலையில் அவருடைய பதிவுகள் வரத்தவறுவதில்லை.

வியட்நாம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றிய அனுபவங்கள், ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்ட பயண அனுபவங்கள், அந்நாளைய கப்பல் பயணம் முதல் மாட்டுவண்டிப் பயணம் வரையிலான அனுபவங்கள், அந்தக்கால வாழ்க்கை முறை, அந்நாளைய விளையாட்டுகள், அந்நாளைய திருமண முறை, தேர்தல் முறை, அந்நாளைய பழமொழிகள் இவை தவிர கதைகள், நகைச்சுவைப் பதிவுகள், தமிழ் இலக்கியப் பகிர்வுகள், ரசிக்கவைக்கும் பல சுவையான பிரஞ்சு ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என பல்சுவைப் பதிவுகளால் நிரம்பியது இவரது தளமான இலக்கியச்சாரல் 

எழுத்தயர்வு எனக்கேற்படும்போதெல்லாம் மாமாவை எண்ணிக் கொள்வேன். இந்த வயதிலும் அவர்கள் எழுதுவதையும் வாசிப்பதையும் தொய்வின்றித் தொடர்வதை நினைத்த மாத்திரத்திலேயே என் சோர்வெலாம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும். நல்லாரோக்கியத்துடனும் நெஞ்சம்நிறை மகிழ்வுடனும் அவர் இன்னும் பலகாலம் நம்மோடு இனிதே வாழவேண்டும் என்ற பேராவலோடு என் மனம்நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.