தோட்டத்துப் பிரதாபம் - 3
பறங்கிக்காயைப் பறித்து
பட்டையெல்லாம் சீவி
பொடிப்பொடியாய் நறுக்கி
உப்புக்காரம் போட்டு
எண்ணெய்விட்டுத் தாளித்து
இன்பமாகத் தின்போம்
இன்னும் கொஞ்சம் கேட்போம்
தந்தால் தின்போம்
தராவிட்டால் அழுவோம்.
இந்தப் பாடல் எங்கள் ஒன்றாம் வகுப்பு டீச்சர் ஆக்ஷனுடன் சொல்லிக்கொடுத்து நாங்கள் பாடிய பாடல். வேடிக்கை என்னவென்றால் பறங்கிக்காயைப் பறித்து என்ற முதலடியைச் சொல்லும்போது எக்கிக்குதித்து இரு கைகளாலும் பறிப்பது போல் பாவனை செய்து பாடினோம். டீச்சர் அப்படிதான் சொல்லிக்கொடுத்தாங்க. மரத்திலிருந்து மாங்காய் பறிப்பது போல பறங்கிக்காயை எக்கிக்குதித்துப் பறித்த செய்கையை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
\\வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும்
போச்சே\\
பரங்கியா பறங்கியா என்பது என் முதல் சந்தேகம். பரங்கி என்கிறார் பாரதி. பறங்கி என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
அப்படியென்றால் இரண்டுமே சரிதானோ? 😏
பறங்கியா பூசணியா என்பது இரண்டாவது சந்தேகம். சிலர் பறங்கிக்காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். ஆனால் மஞ்சள் பூசணி என்கிறார்கள். சர்க்கரைப்
பூசணி, அரசாணிக்காய் என்பனவும் பறங்கிக்காயைக் குறிப்பனவே. வெண்பூசணி, கல்யாணப் பூசணி, சாம்பல் பூசணி, நீற்றுப் பூசணி, நீர்ப்பூசணி என்பன பூசணிக்காயின்
வேறு பெயர்கள். ஆங்கிலத்தில் பறங்கிக்காய்க்கு
pumpkin என்ற ஒரே பெயர்தான். பூசணிக்காய்க்கோ
ash gourd, wax gourd, winter gourd, white gourd, tallow gourd, ash
pumpkin என ஏராளமான பெயர்கள்.
பறங்கிப்பிஞ்சு |
பறங்கிக்காயை அதன் பிஞ்சு, காய், பழம் என எல்லா பருவத்திலும் சமைத்து உண்ணமுடியும். பறங்கிக்காய்
மட்டுமல்ல, பறங்கி இலைகளைக் கூட சமைக்கலாம் என்று கேள்விப்பட்டேன்.
இன்னும் சோதனை முயற்சியில் இறங்கவில்லை. பறங்கிப்பிஞ்சு
வறுவல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. பறங்கிப்பிஞ்சை
வறுக்கலாம் என்பதே புகுந்த வீட்டுக்கு வந்துதான் அறிந்துகொண்டேன். கடைகளில் பிஞ்சு கிடைப்பது வெகு அரிது என்பதால் கிடைக்கும்போது விலையைப் பொருட்படுத்தாமல்
வாங்கிவிடுவது வழக்கம். வீட்டுத் தோட்டத்திலேயே கைக்கெட்டும்
தூரத்தில் பறங்கிப்பிஞ்சுகள் என்றால் விடுவேனா? ஆசை தீருமட்டும்
சமைத்து சாப்பிட்டாயிற்று. பறங்கிப்பிஞ்சுக்கு பறங்கிக்கொட்டை
என்ற பெயரும் உண்டு என்பதை சமீபத்தில்தான் எங்கள் ப்ளாக் மூலம்
அறிந்துகொண்டேன்.
பறங்கிப்பிஞ்சு வறுவல் |
கண் திருட்டிக்கும் இந்த பூசணி வகைகளுக்கும் என்ன தொடர்போ
தெரியவில்லை. எப்படியோ பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. புதுமனை, புதுவாகனம்
போன்றவற்றுக்கு திருஷ்டி கழித்து தெருவில் உடைக்கவும், கோர உருவத்துடன்
வீட்டு முகப்பில் பிறர் கண்படும் இடத்தில் அமர்ந்தும் தொங்கியும் கண்ணேறு
விரட்டவுமாக சாம்பல் பூசணிக்கு சந்தையில் ஏக மவுசு. மேலை நாடுகளிலோ ஹாலோவின்
சமயங்களில் பறங்கிக்காய்தான் ஹீரோ. இதற்கென்றே பிரத்தியேகமாக பறங்கிக்காய்கள்
விளைவிக்கப்பட்டு முற்றிய பழங்கள் சந்தைக்கு வருகின்றன. பழத்தைக் குடைந்து
உள்ளிருக்கும் சதைப்பற்றை நீக்கிவிட்டு கடினமான புறத்தோலில் கண் மூக்கு வாய்
வடிவங்களை செத்தியெடுத்து துளைகளாக்கி உள்ளே விளக்கெரியச் செய்வது மரபு. தீய ஆவிகளை
முக்கியமாக ஜேக்கின் ஆவியை விரட்டுவதற்காக ஏற்றப்படும் இந்தப் பறங்கி விளக்கின்
பெயர் Jack O’ lantern. இம்மரபின்
பின்னால் பெரிய கதையே இருக்கிறது.
ஹாலோவீன் பறங்கிக்காய்க்குப் போட்டியாக நம்ம பறங்கிக்காய் |
தற்காலத்தில் ஹாலோவின் கொண்டாட்டம் அமெரிக்காவில் படுபிரசித்தம் என்றாலும்
கதை ஆரம்பிப்பதென்னவோ அயர்லாந்தில். பல வருடங்களுக்கு முன்பு Stingy
Jack என்றொருவன் அயர்லாந்தில் வாழ்ந்துவந்தான். பெயரே சொல்லிவிடுமே, அவன் எப்படிப்பட்டவன் என்று.
ஆம். அவனொரு மகா கஞ்சன், அது மட்டுமல்ல, அடுத்தவர்களை தந்திரமாய் ஏமாற்றியும்
துன்புறுத்தியும் அதில் இன்பம் காண்பவன். பெற்றோர், உற்றார், நண்பர்கள் என அனைவரும் அவனுடைய ஏமாற்றுவித்தைகளுக்குப்
பலியானார்கள். சாத்தானும் தப்பவில்லை. ஒருமுறை சாத்தானிடம் நைச்சியமாய்ப் பேசி ஆப்பிள் மரமொன்றில் ஏறவைத்தான். ஏறியதும் மரத்தைச் சுற்றி சிலுவைகளை வைத்து
சாத்தான் இறங்கமுடியாதபடி செய்துவிட்டான். சாத்தான் கெஞ்சியது.
ஜேக் ஒரு நிபந்தனை விதித்தான். தான் இறந்த பிறகு
தன் ஆன்மாவை நரகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வாக்குறுதி தந்தால்தான் சிலுவைகளை
அகற்றுவேன் என்றான். சாத்தானும் வாக்குறுதியளித்தது. வேறுவழி?
சாத்தான் என்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியது. ஜேக்
இறந்ததும் அவன் ஆன்மாவைத் தீண்டவில்லை. ஜேக்கின் ஆன்மா மிகவும்
மகிழ்ச்சியோடு சொர்க்கத்தின் கதவைத் தட்டியது. குரூரம்,
கஞ்சத்தனம், அகம்பாவம், அற்பகுணம்,
அடுத்தவரைக் கெடுத்தல் என தீயகுணங்கள் நிறைந்த அவனுடைய ஆன்மா சொர்க்கத்தில்
புகத் தகுதியற்றது என்று அறிந்த திருத்தூதர்கள் சொர்க்கத்தில் அனுமதிக்கவில்லை.
நரகத்துக்குப் போகலாம் என்றாலோ வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு சாத்தான்
சம்மதிக்கவில்லை. திரிசங்குவின் நிலை போல ஆயிற்று ஜேக்கின் ஆன்மாவின்
நிலையும். திரிசங்குக்காவது அவன் செய்த ஒரே ஒரு நன்மையின்
பொருட்டு, தனியாக ஒரு சொர்க்கத்தை நிர்மாணிக்க விசுவாமித்திரர் இருந்தார்.
ஜேக்குக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.
ஜேக்கின் குறுக்குபுத்தி இப்போதும் வேலை செய்தது. இந்த
இருளில் என்னால் எப்படி திரும்பிப்போகமுடியும்? அதனால் என்னை
உள்ளே அனுமதி என்று சாத்தானிடம் கேட்டான். சாத்தான் புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்தது. நரகத்தில்
எரிந்துகொண்டிருக்கும் தீயிலிருந்து ஒரு கங்கை எடுத்து அவனிடம் கொடுத்து இதன் வெளிச்சத்தில்
திரும்பிப்போ என்றது. நெருப்புக்கங்கை எங்கே வைப்பது?
ஜேக்குக்கு மிகவும் பிடித்த காய் டர்னிப் என்பதால் எப்போதும் தன்வசம்
வைத்திருப்பான். இறந்தபிறகும் அவன் ஆன்மா அதைத் தன்னுடனேயே கொண்டுவந்திருந்தது.
அதைக் குடைந்து உள்ளே அந்த நெருப்புக்கங்கை வைத்து லாந்தர் விளக்கு போல
கையில் தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்தான். அதுதான் இன்றைக்கு
ஹாலோவின் தினத்தில் பறங்கிக்காய்க்கு கண் மூக்கு வாய் ஆகியவற்றை செதுக்கி உள்ளே விளக்கேற்றும்
மரபுக்கு வழி வகுத்தது என்றொரு செவிவழிக்கதை உலவுகிறது.
அது சரி, ஜேக் விளக்கேற்றியது டர்னிப்பில்தானே?
எப்போது பறங்கிக்காய்க்கு அது மாறியது? அயர்லாந்தில்
அப்போது பறங்கிக்காய் என்ற ஒன்று அறிமுகமாகாத சமயம். மக்கள் டர்னிப்,
உருளைக்கிழங்கு, பீட்ரூட் என்று பல காய்களிலும்
குடைந்து விளக்கேற்றியிருக்கிறார்கள். பின்னாளில் பறங்கிக்காய் அறிமுகமானபோது, குடைவதற்கு ஏற்றதாகவும், பெரியதாகவும் இருந்ததால் டர்னிப்பின்
இடத்தை பறங்கிக்காய் நிரந்தரமாகப் பறித்துக்கொண்டது.
சமைப்பதற்கு முன் கொஞ்சம் விளையாட்டு |
பூசணி, பறங்கி என்றாலே திருஷ்டி கழிக்கவும்,
தீய ஆவியை ஓட்டவும் மட்டும்தானா? இல்லையில்லை.
தேவதைக் கதைகளுள் ஒன்றான சிண்ட்ரெல்லாவில் தேவதை அழகுரதமாக மாற்றுவது
பறங்கிக்காயைத்தானே? அது மட்டுமல்ல, Thanksgiving day
எனப்படும் நன்றி தெரிவிக்கும் தினத்தன்று, அறுவடைக்காலத்தின்
அடையாளமாய் விருந்தில் கட்டாயம் இடம்பெறும் சிறப்பும் பறங்கிக்காய்க்கு உண்டே.
நம்முடைய அறுவடைத்திருநாளான பொங்கல் தினத்தன்றும் பறங்கிக்காய் இல்லாத பொங்கல்கறி உண்டா என்ன?
சரி, இப்போது நாம் தோட்டத்துக்கு
வருவோம். பறங்கிக்கொடியொன்று
தானாய் முளைத்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? உள்ளங்கை அளவுக்கு வட்டமாய் வெள்ளைக்கோடுகளுடன்
இரண்டு இலைகள் விட்டு வளர்ந்ததை முதலில்
களைச்செடி என்று நினைத்துப் பிடுங்கிப்போட இருந்தேன். அப்புறம் ஏதோ பொறி
தட்டவே, சரி, இன்னும் கொஞ்சம் வளரட்டும், பிறகு முடிவு செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.
இன்னும் கொஞ்சம் இலைகள் விட்டு
கொடியாக படர ஆரம்பித்த பிறகு பறங்கிதான் என்று தெரிந்துவிட்டது. முதல் பூ (ஆண்)
அதை உறுதிப்படுத்தியும் விட்டது. மேற்கொண்டு தேடியதில் பறங்கிக்கொடி வளர்ப்பும்
காய்ப்பும் பற்றிய சுவாரசியத் தகவல்கள் கிடைத்தன.
பறங்கிக்கொடியில்
ஆண்பூ, பெண்பூ தனித்தனியாகப்
பூக்கிறது. மார்கழிக் கோலங்களுக்கு நடுவில் சாணிப்பிள்ளையாரில் சொருகி
வைக்கப்படுபவை பறங்கி மற்றும் பூசணியின் ஆண்பூக்களே. ஒரே நிறத்தில் ஒரே அளவில் ஒரே
வடிவத்தில் பூக்கும் ஆண் பூ, பெண் பூக்களை
எப்படி கண்டுபிடிப்பது? ரொம்ப சுலபம். மொட்டு வெளிவரும்போதே அது ஆணா பெண்ணா என்பது தெரிந்துவிடும்.
பறங்கியின் ஆண் பூ, பெண் பூ மொட்டுகள் |
ஆண் பூக்கள் காம்பில் நேரடியாகப் பூக்கும். பெண் பூக்களுடைய காம்பில் சின்னதாய்
கோலி குண்டு அளவில் காய் இருக்கும். ஆண் பூவில் தேனும் மகரந்தத்தாதும் இருக்கும். பெண் பூவில் தேன் மட்டுமே இருக்கும்.
தேனும் மகரந்தமும் கொண்ட ஆண் பூ |
மகரந்தம் அற்ற பெண் பூ |
தேனீக்கள் ஆண் பூவில் தேனெடுக்கும்போது
மகரந்தத்தூள்கள் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ளும். பிறகு அவை பெண்பூவில் தேனெடுக்க
வரும்போது சூலகமுடிகளில் மகரந்தத்தூள் ஒட்டிக்கொள்ளும். மகரந்தச்சேர்க்கை நிகழும். இதுதான் இயற்கை.
ஆண் பறங்கிப்பூவிலிருந்து மகரந்தம் பூசி வெளிவந்திருக்கும் தேனீ |
அனுபவசாலிகளின் பார்வையும் பாடமும் வேறாக உள்ளது. வீட்டுத்தோட்டங்களில் பூக்கும் மெலான் வகைப் பூக்களில் இயற்கை
முறையில் அதாவது தேனீக்களின் மூலம் மகரந்தச்சேர்க்கை பெரும்பாலும் நடைபெறுவதில்லையாம். அப்படியே நடைபெற்றாலும் தோல்வியில்தான்
முடிகிறதாம். அதாவது விளைச்சல் வெகு சொற்பமாம். hand pollination முறையால் 100% பலனைப் பெறமுடியும் என்று புத்தகங்களிலும் இணையப்பக்கங்களிலும் வலியுறுத்துகிறார்கள். எப்படி என்பதையும் செயல்முறை விளக்கமாக படம்
போட்டும் காணொளிகள் மூலமும் விளக்குகிறார்கள்.
பறங்கியின் ஆண் பெண் பூக்கள் |
மகரந்தச்சேர்க்கை
நிகழ்த்த அதிகாலையில் தேனீக்களை முந்திக்கொண்டு நாம் செயல்படவேண்டும். ஆண் பூ பெண் பூ இரண்டும்
அன்று மலர்ந்தவையாக இருக்கவேண்டும். ஆண்பூவைப் பறித்தெடுத்து ஒரு மெல்லிய தூரிகை
கொண்டு மகரந்தத்தூள்களைத் தொட்டு பெண்பூவின் மையப்பகுதியில் உள்ள சூலகமுடிகளில்
நன்கு படுமாறு தடவவேண்டும். தூரிகை
உதவியின்றி நேரடியாகவும் மகரந்தத்தை சூலகமுடிகளில் ஒட்டச்செய்யலாம்.
மகரந்தத்தூள்கள் ஒட்டிக்கொண்டவுடன் பெண்பூவின் ஐந்து இதழ்களையும் குவித்து
பொட்டலம்போல நூலால் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் தேனீக்கள் வந்து தேன்
எடுக்கும்போது ஏற்கனவே பூவில் நாம் ஒட்டவைத்துள்ள மகரந்தத்தூள்கள் அவற்றின் உடலில்
ஒட்டிக்கொண்டு போய்விடுமாம். எவ்வளவு முன்னெச்சரிக்கை!
நமக்குதான் பறங்கி வளர்ப்பு முதல் அனுபவமாச்சே.
அனுபவசாலிகள் சொன்னதை செய்வோம் என்று பார்த்தால் அது இருந்தால் இது
இல்லே, இது இருந்தால் அது இல்லே என்பது போல, ஆண் பூ பூக்கிற நாளில் பெண் பூ பூப்பதில்லை,
பெண் பூ பூக்கிற நாளில்
ஆண் பூ பூப்பதில்லை. ஒரு நாள் காலையில் பார்த்தால் அதிசயம் போல இரண்டு ஆண் பூக்களும் இரண்டு பெண் பூக்களும்
பூத்திருந்தன. ஆஹா.. என்னே அதிர்ஷ்டம் என்று சொல்லி இரு சோடிகளுக்கும் முறைப்படி
திருமணம் செய்வித்து தாலியும் (அதான் நூலும்) கட்டிவைத்துவிட்டு வந்துவிட்டேன்.
செயற்கை முறை மகரந்தச்சேர்க்கை |
ஒரு வாரத்தில் காய்பிடித்து பெருக்க ஆரம்பித்துவிட்டது. வெற்றி வெற்றி என்று
உள்ளுக்குள் குதியாட்டம் போட்டது மனம். இரண்டு காய்களிலேயே திருப்தியுற்றதால்
அதற்குப் பிறகு பூத்த ஏராளமான பெண் பூக்கள் பற்றி கவலைப்படவே இல்லை. நம்ம வீட்டுக்கு இரண்டே அதிகபட்சம். அதனால் மீதப்
பூக்கள் காயானால் என்ன காயாகாமல் போனால் என்ன என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.
என்ன ஆச்சர்யம். அதன்
பிறகு பூக்கும்
ஒவ்வொரு பெண் பூவும் காயானது. கவனித்தபோதுதான் தெரிந்தது எல்லாம் தேனீக்களின்
கைங்கர்யம் என்பது. அடப்பாவிகளா.. இயற்கையாகவே தேனீக்களின் தயவால் பூ காயாகிறதே..
இதற்கெதற்கு செயற்கையாய் இத்தனை சிரமப்படவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இயற்கைக்கு யார் உதவியும் தேவையில்லை. அது தன்னைத்தானே வாழ்வித்துக்கொள்ளும்.
இது என் அனுபவத்தில் கற்ற அடிப்படைப்பாடம்.
காய்த்துத்தள்ளும் பறங்கிக்காய்கள் |
பறங்கிக்காய்கள்
ஒவ்வொன்றும் மூன்று முதல் ஐந்து கிலோ வரை எடை. இதுவரையிலும் நூறு கிலோ அளவுக்குக் காய்த்திருக்கும். இத்தனைக் காய்களை
என்ன செய்வது? அக்கம்பக்கத்து வீடுகள், தோழியின் வீடு போக கணவரின் அலுவலகத்தில் உடன்
பணியாற்றும் இந்திய நண்பர்கள் என பலருக்கும் கொடுத்தேன். முதல் ரவுண்டு முடிந்து அடுத்த ரவுண்டும்
கொடுத்துவிட்டேன்.
புளிக்குழம்பு, சாம்பார்,
வறுவல், கூட்டு, சூப், அல்வா என அடுக்களையில் புகுந்து
விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
பிஞ்சும் காயும் பழமுமாக.. |
மூன்று மாதங்களாக கொடி போகும் இடமெல்லாம்
முட்டையிட்டுக்கொண்டே போவது போல குண்டு குண்டாய்க் காய்த்துக் கொண்டே போகும் பறங்கியை
இப்போதும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் காரணமான
தேனீக்களை நன்றியோடு பாராட்டுகிறேன்.
வெட்ட வெட்ட
தழைத்துக் கிளைத்துப் படர்ந்து தோட்டத்தையே சுற்றி வளைத்து சொந்தம் கொண்டாடும் என்
வீட்டுப் பறங்கிக்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் நாட்டை சுற்றி வளைத்து சொந்தம்
கொண்டாடிய வெள்ளையரை பறங்கியர் என்றது எவ்வளவு பொருத்தம் என்று தோன்றுகிறது.
(பிரதாபங்கள் தொடரும்)
முந்தைய பிரதாபங்கள்
பிரதாபம் 1 - இலமென்று அசைஇ இருப்பேனோ
பிரதாபம் 2 - கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
தொடரும் பிரதாபங்கள்
பிரதாபம் 4 - பொறிவண்டெல்லாம் பொறிவண்டல்ல
முந்தைய பிரதாபங்கள்
பிரதாபம் 1 - இலமென்று அசைஇ இருப்பேனோ
பிரதாபம் 2 - கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
தொடரும் பிரதாபங்கள்
பிரதாபம் 4 - பொறிவண்டெல்லாம் பொறிவண்டல்ல