(1)
சுவர்தொட்டுத் திரும்பும்
குழந்தையைத் துரத்துகிறது நிழல்
ஓடிப்பிடித்து விளையாட்டு.
(2)
எந்தப்பக்கம் விழுவது…
திகைப்பில் நிழல்
எல்லாப்பக்கத்திலிருந்தும் ஒளி.
(3)
பிடித்தபிடி விடவில்லை
நிழலின் கரத்தை நிஜம்
இருள்பயம்.
(4)
நடந்து நடந்து
ஆயாசமானது நிழல்
அசையாதிருந்தது பாறை.
(5)
இருள்கவியத் தொடங்கியதும்
சட்டெனத் தழுவிக்கொள்கின்றன
நிழல்கள் ஒன்றையொன்று.
(6)
நிஜத்தின் பின்னே
ஒளியும் நிழற்குழந்தை
ஒளிக்கூச்சமாம்.
(7)
வெயில் சுமந்து சுமந்து
வெளுத்துப்போனது குடை.
வெளுக்கவில்லை நிழல்.
(8)
இருளில் மடிந்து
ஒளியில் உயிர்க்கும்
நிழலோடு நித்தம் சமர்.
(9)
விரட்டினாலும் விலகாது
கால்பற்றி இறைஞ்சுகிறது
போக்கிடமற்ற நிழல்.
(10)
ஒளியில் ஒளியும் நிழல்
நிழலில் ஒளியும் நிழல்
ஒளியில் ஒளியும் ஒளி
******