23 May 2023

ஒரு தேயிலை மரத்தின் புலம்பல்


ஏதேனுமொரு பருவத்தில்

நானும் மலர்வேன் என்னும் நம்பிக்கையில்

கடந்துவிட்டன நூற்றாண்டுக் காலங்கள்!

வெள்ளையா மஞ்சளா சிவப்பா நீலமா

என் மலர்களின் நிறம் எனக்கு மறந்துவிட்டது

மலர்வேன் என்பதைக்கூட மறந்துவிட்டேன்

 

கதிரையும் காலடி நீரையும் என்ன செய்வது

துளிர்த்துக்கொண்டே இருக்கிறேன்

கொய்துகொண்டே இருக்கிறார்கள்

தேயிலைத் தோட்டத்துத் தேவதைகள்!

பாவம் அத்தேவதைகள்!

என்ன சாபம் பெற்று வந்தார்களோ?

சகதியூறி வெடிப்புற்ற ஈரப்பாதங்களோடு

முதுகெலும்பு வளைய மூங்கிற்கூடை சுமந்து

கொசுவுக்கும் அட்டைக்கும் கொடுத்தது போக

எஞ்சிய குருதியோட்டத்தோடு

வெடவெடக்கும் தணுப்பில்

வேக வித்தை காட்டுகிறார்கள் விரல்களால்.

 

வெடுக் வெடுக் வெடுக்கென

பிடுங்கப்படும் என் உச்சிமயிர்களை

உரூபாய்களாக மாற்றுகிறது உலகச்சந்தை

 

எல்லாம் என் தவறுதான்

பூத்துக் காய்த்துதான்

விதை தருவேன் என்று வீம்பு பிடிக்காமல்

அங்குலத் தண்டிலேயே

அடுத்த சந்ததியை உருவாக்கிவிடுகிறேனே

வனமழிக்கிறேன் என வீண்பழி வேறு.

நானென்ன செய்ய?

என் நூற்றாண்டுக்கால வாழ்வும்

சிறு கோப்பைக்குள் அல்லவா சுழன்றுகொண்டிருக்கிறது!

இதில் மலரும் ஆசை ஒன்றுதான் குறைச்சல்!

 

&&&

 


ஆண்டுதோறும் மே மாதம் 21-ம் நாள் ‘சர்வதேச தேநீர் தினம்’ ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வருடத் தேநீர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறாயே, உனக்கு தேநீர் பிடிக்காதா என்று கேட்கத் தோன்றும். நானும் தேநீர்ப் பிரியைதான். என்னதான் தேநீர்ப்பிரியையாக இருந்தாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பாடு எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையை மறுக்க முடியாது அல்லவா?

ஆனால் திரைப்படங்களில் காட்டப்படுவது என்ன? தேயிலைத் தோட்டம் என்றாலே மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பிய இடம் போலவும், காதலனும் காதலியும் தேநீர்த் தோட்டத்தில் ஓடி ஓடி காதல் செய்ய, பின்னணியில் முக்காடிட்டபடி தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் லா..லா...லல்லலா... என கோரஸ் பாடியபடி தேயிலை பறிப்பது போலவும் கூடவே ஆடுவது போலவுமானக் காட்சியமைப்புகள்! தேயிலைத் தோட்டம் நீ... தேவதையாட்டம் என வர்ணிப்பு வேறு.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் சிரமத்தை, முதலாளிகளால் சுரண்டப்படும் உழைப்பை, அவர்களது துயரார்ந்த வாழ்வுநிலையை ஓரளவு நியாயமாகக் காட்டியத் திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘பரதேசி’ திரைப்படம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் பட்ட துன்பங்களை நேரில் பார்த்திருந்த மருத்துவர் பால் ஹாரிஸ் டேனியல் ‘Red Tea’ பெயரில் எழுதிய புதினத்தை ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் இரா.முருகவேள் தமிழாக்கம் செய்துள்ளார்.

நாம் குடிக்கும் கோப்பைத் தேநீருக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளிகள் அனைவரின் உழைப்பையும் மதிப்பையும் அங்கீகரிக்கும் முகமாக தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் தேயிலையின் கலாச்சாரத் தொன்மை மற்றும் நன்மைகளை எடுத்துரைக்கவும் தேயிலை நிறுவனங்களின் வளர்ச்சியைப் பறைசாற்றவும் தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது.

வாங்க, நாமும் தேநீர் பருகுவோம். உற்சாகமாய்ப் பருகும் ஒவ்வொரு மிடறுக்குப் பின்னாலும் இருக்கும் தொழிலாளிகளின் உழைப்பை நன்றியோடு நினைவுகூர்வோம். 

&&&&

தேயிலைப் பூ எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள விரும்புவோர்க்காக... இதோ தேயிலை மரத்தின் பூக்கள்!




8 March 2023

கம்பனைச் சந்திக்காக் கவியேது?



அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழாவில் இரண்டாம் முறையாகக் கவிதை வாசிப்பு கூடி வந்தது.  கடந்த 2018-ஆம் ஆண்டு 'வாய் தந்தன கூறுதியோ' என்ற தலைப்பில் முதன் முறையாக கம்பன் விழா கவியரங்கில் கவிதை வாசித்தேன்.  2019-ஆம் ஆண்டு 'குகனொடும்  ஐவரானோம்' என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. கவிதையெல்லாம் எழுதி வாசிக்கத் தயாராக இருந்த நிலையில் உடல்நலமில்லாது போனதால் கவியரங்கத்தில் பங்கேற்க இயலாது போயிற்று. அதன் பிறகு கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக இணைய ஒன்றுகூடல் வாயிலாய் விழா நடைபெற்றதால் பெரிதளவு கவன ஈர்ப்பைப் பெறவில்லை. இந்த வருடக் கம்பன் விழா கோலாகலமாக இலக்கிய ஆர்வலர்களோடு இனிதே கொண்டாடப்பட்டது.  


இம்முறையும் கவியரங்கில் கவிதை வாசிக்கக் கேட்டபோது தயங்காமல் ஒத்துக்கொண்டேன்.  சில காலமாகவே கவிதை எதுவும் எழுதவில்லை. கவிதை கைவருகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பரிசோதனை முயற்சி முதலாவது காரணம். இரண்டாவது, இந்த சாக்கை முன்னிட்டாவது இலக்கியத்தின் பக்கம் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். கம்பராமாயணத்தை மீண்டும் வாசித்து ரசிக்கலாம். கூடவே ஔவையைப் பற்றிய ஆராய்ச்சியும். காரணம் கொடுக்கப்பட்ட தலைப்பு அப்படி. 

கம்பனைச் சந்திக்கும் புலவர்கள் என்ற வரிசையில் வள்ளுவன், இளங்கோ, பாரதி மற்றும் ஔவை இருந்தனர். எனக்கு ஔவை வந்தார். எந்த ஔவை என்று கேட்டபோது நீதிநூல் படைத்த ஔவை என பதில் அளிக்கப்பட்டது. எனவே கம்பராமாயணத்தையும் ஔவையின் நீதி போதனைகளையும் ஒப்பிட்டு கவிதைக்கான கருத்துகளை அடுக்கவே இரண்டு வாரங்கள் ஆயிற்று. கடைசி மூன்று நாட்களில் கவிதையை முழு மூச்சாக எழுதி முடித்தேன். கவிதை வடிவமும் கருத்தும் ஓரளவுக்கு நிறைவளித்தன.



கம்பன் விழாவின் ஐந்தாம் நாளான 5-3-23 அன்று மாலை  பேராசிரியர் பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் 10 நிமிடக் கவிதையை வாசித்தேன்.  மேடையை விட்டு இறங்கியதும் அறிஞர் பெருமக்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்னை மகிழ்வின் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. ஆகப்பெரும் ஆளுமைகளிடமிருந்து அப்படியான பாராட்டுகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறினேன். முக்கியமாக கம்பவாரிதி ஜெயராஜ் ஐயாவிடமிருந்து கிடைத்த மனந்திறந்த பாராட்டுகளை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.   என் மகோன்னதமான தருணங்களை தன் மொபைலில் படம் பிடித்து ஆவணமாக்கி எனக்கு அளித்து என்னை பெருமகிழ்வில் ஆழ்த்திய தோழி யசோதாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன். 




கம்பனைச் சந்திக்கும் ஔவை


அறையும் ஆடரங்கும்  மடப் பிள்ளைகள்

தரையில் கீறிடின்  தச்சரும் காய்வரோ?

இறையும் ஞானம் இலாத  என் புன் கவி

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ என்று

பாவன்மை ஓங்கிய பாவலனும்

நாவன்மை ஓங்காது நயந்திருக்க

ஆன்றோர் நிறைந்த இவ்வரங்கில்

நானுமோர் கவியென   

நாணத்துடன் நாச்சுழற்ற

தயக்கத்துடன் தமிழ்ப்பா மிழற்ற 

முயலும் இச்சிறியவளை

தாயன்ன பரிவுடையீர்!

தமிழ்த் தாயன்ன பரிவுடையீர்!

தயவுடனே பொறுத்தருள்வீர்!

 

தெள்ளுதமிழ்ப் பாட்டனாம்

திகட்டாக் கவிப் பூட்டனாம்

கம்பனை சந்திக்காக் கவியேது?

சந்திக்காவிடில்

பைந்தமிழ்ப் புலமைக்குக் கவினேது?

பாரதி இளங்கோ வள்ளுவன் என்றே

நீளும் பட்டியலுக்கு நிறைவேது?

அமிழ்தாய் தமிழ்த்தாய் அவ்வையிலாது

அச்செவ்விய வரிசைக்குதான் சிறப்பேது?

 

கருத்தால்

கவி வளத்தால்

அறத்தால்

பா வடிக்கும் திறத்தால்

புனைவால்

பொலிகின்ற அணிகளால்

உவமையால்

உன்னதப் புலமையால்  

ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளாது

ஒருக்காலும் ஒண்டமிழ் ஒளிராது

 

அரங்கு எதிர்நோக்கும் ஔவையார்

ஒருவரா இருவரா?

அல்லது  ஆய்வு காட்டும் அறுவரா?

அரங்கு எதிர்நோக்கும் ஔவை யார்?

 

ஆதியிலே வந்தவளா?

ஆத்திசூடி தந்தவளா?

அசதிகோவை பாடியவளா?

தன் அன்புக் கோவைப் பாடியவளா?

மையிழைத்த மடவரலா?

மெய்யுரைத்த முதியவளா?

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என

சங்கத்தமிழில் முழங்கியவளா?

துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்

சங்கத்தமிழ் மூன்றும் தாவென வேண்டியவளா?

விறலியா? வித்தகியா?

அறநெறி படைத்த அன்னையா?

அகவல் இசைத்த அம்மையா?

மண்டையைத் துளைத்தன

வண்டு போல் வினாக்கள்!

 

பேதைமை நீங்கிட பெருமை ஓங்கிட

நீதிமுறை உரைத்த அவ்வையே

இவ்வரங்கு எதிர்நோக்கும் கவிமையம்

என்றறிந்து அகன்றது என் ஐயம்!

 

கம்பனும் அவ்வையும்  காலத்தால் நிகரென்றார்

பொன்னுக்கும் கூழுக்கும் கவி பாடி

புவி தொட்டிருந்த நாளிலே

பூனையும் எலியும் என்றார்

பூவுலகு கட்டும் கதைகள்  மெய்யோ?  புளுகோ?

புரட்டோ?  புனைசுருட்டோ?/  

புரியாது தவித்தேன்

கவி புனையாது தவிர்த்தேன்.


எங்ஙனம் நான் கவிபாட?

எண்ணியெண்ணி பன்னாள் ஓட

மீதம் இருந்ததோ அரை நாள்!

ஏதும் செய்ய ஏலுமோ என்னால்?

 

நண்பகல் நேரத்து மயக்கம்

கண்ணயர்ந்து சிறு உறக்கம்

கனவினில் வந்தாள் அவ்வை

கன்னித்தமிழின் தவ்வை

சொன்னேன் கவியரங்கத் தலைப்பை

விடுத்தாள் கம்பனுக்கு அழைப்பை

 

பா ரதமேறி வந்தான் கம்பன்

பாமரரையும் கவர்ந்த அன்பன்

சீதையைக் கண்ட அனுமனைப் போலே

பேதை நான் மகிழ்ந்தேன் பேருவகையாலே

 

அவ்வையே வாழ்க

அதிசயமாய் நீவிர் என்னை நினைக்க

யாது காரணம் கதைக்க

என  பரிகசித்துக் கம்பன் நகைக்க

 

திரட்டுப் பாலென தீந்தமிழால்

திகட்டத் திகட்டக் கவிபுனையும்

கம்பனோடு எனக்கென்ன வம்பு?

கொம்பனைக் கட்டுமோ சிறுதும்பு?

ஐயனே!

ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினின்று 

தூது வரவிலையோ

செந்தமிழ்க் கவிஞரெலாம்  உமைத் தேடும் 

சேதி பெறவிலையோ என்றாள்.

 

பெற்றேன் பெற்றேன்

பெரும்பேறு உற்றேன் உற்றேன்

அல்வழி நடந்தோர் திரும்ப

நல்வழி நல்கிய நல்லாளே

தீதுரை கேட்டோர் திருந்த

மூதுரை ஓதிய மூத்தவளே

உம்மிடம் உரையாடவே 

உம் இடம் தேடி வந்தேன்

ஆத்திசூடி அமர்ந்த தேவனையும் 

கொன்றைவேந்தன் செல்வனையும்

ஏத்தி யேத்தித் தொழுது

கொவ்வைக் கவிபாடிய அவ்வையே! அம்மையே!

செவ்விய வாழ்வுக்காய் 

நீர் செப்பிய அனைத்தும் உண்மையே

கவ்விய கவ்வை போக்க

கனிவாய் உரைத்தனை நன்மையே

கம்பன் சொல்லிலே தேன் வார்த்தான் 

சொல்லி முடித்து எனைப் பார்த்தான்.

 

ஈதொரு கவிப்பித்து என்றாள் அவ்வை 

எனைக் காண்பித்து

ஆஸியில் கவிபாடப்போகும் இவளுக்கு

ஆசிகள் தந்து அனுப்ப வேண்டுமாம்

ஆசில்லா நற்கவி பாட

ஐயனே நாம் துணை நிற்க வேண்டுமாம் என்றாள்

 

அங்ஙனமே ஆகட்டும் 

நல்வண்ணமே நடக்கட்டும்

அகரத்திலே தொடங்கட்டும்

அதுவும் அறத்துடனே தொடங்கட்டும்

அறத்தோடு தொடங்குதல்தானே அறம்

அனுமதி கிட்டியது அருங்கவியிடமிருந்து.

 

அறம் வெல்லும்  

அறமே வெல்லும்

அறியாது உலகு எள்ளும்

அறிந்தபின் ஒருநாள் அதுவே சொல்லும்

அதுவரை ஏற்ற அவச்சொல் தள்ளும்

ஆகவேதான் அறம் செய விரும்பு என்றேன் 

நீவிரோ 

அறத்தால் ஆவதே வாழ்வென்று

அறம் தரு வள்ளலை உருவத்தில் காட்டினீர்

 

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்   

உள்ளது ஒன்று ஈயான் ஆயின்

அடைந்தவர்க்கு அருளான் ஆயின்   

அறம் என் ஆம்?  ஆண்மை என் ஆம்? என்ற

அண்ணல் வாய்மொழி அறப்பெருமை நாட்டினீர்

அறம் பிழைத்தவர்க்கு 

வாழ்மைதான் வாய்க்குமோ என

ராக்கத அண்ணனைக் காயும் 

ரட்சக இளவலைக் காட்டினீர்

 

பிறன் இல் விழைவோர்   கிளையொடும் கெடுப 

என்னும்   பாவிகத்தைப் பறைசாற்ற

ராமகாதையெனும்   காவியத்தைப் படைத்த

கவிச்சக்கரவர்த்தியும் நீவிர் அன்றோ? 


கவினுறு புகழாரம் அணிவித்தாள் அவ்வை

வியனுறு கம்பன் வினயமாய்ச் சொன்னான்

 

பிறன்மனை புகாமை   அறன் எனத் தகும் என்பது  

நும் அறநெறி காட்டும்   செவ்விய மாண்பன்றோ?

மை விழியார் மனை அகல் என்பதும்

நும் பொன்மொழி புகட்டும் நனி நோன்பன்றோ?

 

இடைமறித்தாள் அவ்வை

கம்பரே கவி வேந்தே

மங்கையர் பொருட்டால் எய்தும்  

மாந்தர்க்கு மரணம் என்றல்

சங்கை இன்று உணர்தி என்று  

சத்திய வாக்குப் பறைந்தனை

பெண்கள் பால் வைத்த நேயம்  

பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? என  

பாழும் நெஞ்சம் பதைத்தனை

 

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின்   கடுங்கேடு எனும்

நாமம் இல்லை  நரகமும் இல்லையே

என நேமத்தின் விதிகளை நினைவூட்டினை!

 

இத்தனை வரிகளும் சொல்லாததையா

என் ஒற்றை வரி சொன்னது ஐயா?

சிரித்தபடி வினவினாள் அவ்வை

சிரத்தையொடு விடையிறுத்தான் கம்பன்

 

ஒற்றை வரியா?  

நல்வழியின் மற்றை நான்கு வரிகளை 

மறந்தீரே, சரியா?

நற்றமிழ்க் கவி அம்மையே?

நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்தில்

கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல்- ஒண்டொடீ

போதம் தனம் கல்வி பொன்றவருங்காலம்

அயல் மாதர்மேல் வைப்பார் மனம்

என அழகுற ஆபத்தை உரைத்தீரே?

 

நன்மக்கள் குறித்து நீவிர்

நவின்ற வரிகளை நினைவுகூர்கென  

நற்கவி மக்களின் நடுவில்

நானும் புகுந்து நயமிலாது கேட்க  

ஏவா மக்கள் மூவா மருந்தென  பாவால் பகன்றாள் அவ்வை

சொல் மறா மகப் பெற்றவர்  அருந்துயர் துறந்தார் என்று

தானுமதை ஆமோதித்தான்  தசரத மொழியால் கம்பன்

 

இன்னல் இலாது வாழ இன்னாது ஒழிகவென

எந்நாளும் இயம்பினோம் யாம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென

சொற்பதம் தந்து அவ்வை எச்சரிக்க

தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்

என்  வாயது கேள் என  திரிசடை வாயிலாய்

வாய்மை புகட்டினேன் என்றான்

தேய்விலா தேன்கவி

 

சூது பற்றியும் ஏதோ சுட்டியதாய் நினைவு என்றேன்

சூடானான் கம்பன்

விளையாட்டல்ல சூதாட்டம்

வனத்தீயின் சூடாட்டம்

வெந்தணலாடும் புழுவாட்டம்

வாழ்வுநிலை பெரும் போராட்டம்!

 

சூது விரும்பேல் 

இது  அவ்வையின் ஆதி அறிவுரை!

போதாது போதாதென்று

சூதும் வாதும் வேதனை செய்யும் என்று

அழுத்தி இயம்பினார் அடுத்தும் ஒரு முறை!

 

சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்

நீதி மைந்த! நினக்கு இலை  ஆயினும்,

ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு

ஓதும் மூலம் அவை என ஓர்தியே

இது  வசிட்டனின் வாயுரை! 

அதுவே அடியேனின் தாயுரை!

 

தப்பும் சரியும் தப்பாமல் செப்பிடும்

ஒப்புமைப் பாக்களை இருவரும் ஓர்மித்து நோக்க

காலத்தை மறந்து நானும் கதைபோலதைக் கேட்க

நெஞ்சுக்குள் மணி அடித்தது

அஞ்சு மணி ஆனதென்று லறியது

 

போதும் போதும் பொழுது சாய்ந்துவிட்டது

காதோரம் ஓதினர் கம்பனும் அவ்வையும்

ஓடு ஓடு கவியரங்கு ஓடு

பாடு பாடு நீ கண்டதைப் பாடு என்றனர்

கண்டதைப் பாடினால் கல்லெறிய மாட்டாரோ?

கலங்கினேன்

கண்டதையும் பாடினால் கல்தான் விழும்

நீ கனவில் கண்டதைப் பாடினால் கள் அல்லவோ எழும்?

ஆம்! 

ரசிப்புகள் 

தலையசைப்புகள் 

அன்புகள் 

ஆமோதிப்புகள்

உவப்புகள்

உணர்வின் சிலாகிப்புகள்

சிறப்புகள்

சிறு அங்கீகரிப்புகள்!

அடடா அடடா!

தெளிந்து நானும் தேறினேன்

கனவின் காட்சியை நனவின் நீட்சியாக்கி

துணிந்து மேடை ஏறினேன்

கவிஞர் பெருமக்களை அதன் சாட்சியாக்கி!

*****

 2018 ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்கில் வாசித்த கவிதை

வாய் தந்தன கூறுதியோ

2019-ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்குக்காக எழுதிய கவிதை

குகனொடும் ஐவரானோம்




 

13 January 2023

புத்தகத் திருவிழாவில் 'சாத்தான்'

 வணக்கம். 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2023 ஆரம்பித்து இரண்டு வாரமாகப் போகுது, இப்போதுதான் இவளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லத் தோணுதோ என்று நினைப்பீர்கள். என்ன செய்வது, இப்புத்தாண்டை கோவிடோடு அல்லவா கொண்டாட நேர்ந்துவிட்டது! கடந்த மூன்று வருடங்களாக அந்தா இந்தா என்று போக்குக்காட்டி அதனிடமிருந்து ஓரளவு தப்பித்து வந்திருந்தோம். அதற்கு மேலும் தப்பிக்க முடியாதபடி 2022 கடைசியில் கணவருக்கும், 2023 துவக்கத்தில் எனக்கும் வந்துவிட்டது. விலா எலும்பே விட்டுப்போவது போல கடுமையான இருமலும் காய்ச்சலும் உடம்பு வலியுமாக பாடாய்ப்படுத்திவிட்டது. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் antiviral மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டோம். நல்லவேளையாக தடுப்பூசிகளும் இரண்டு பூஸ்டர்களும் போட்டிருந்தோம். அப்படி இருந்துமே இவ்வளவு சிரமம் என்றால் தடுப்பூசி போடாதவர்களின் நிலையை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது. எப்படியோ நல்லபடியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம். அம்மட்டில் நிம்மதி.


சரி, இப்போது மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருகிறேன். இந்த வருடம் 2023 சென்னை புத்தகத் திருவிழாவில் கனலி பதிப்பகம் வாயிலாக என்னுடைய அடுத்த மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியுள்ளது. லியோ டால்ஸ்டாயின்
‘The Devil’  என்ற குறுநாவல் ‘சாத்தான்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.



மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள 2022-ல் கவனம் பெற்ற நூல்கள் தொகுப்பில் சென்ற வருடம் கனலி பதிப்பகம் வாயிலாய் வெளியான ‘மழைநிலாக் கதைகள்’ என்ற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலும் இடம்பெற்றிருக்கிறது. இது நான்  எதிர்பாராததொரு அங்கீகாரம்.

தற்போது நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இந்த இரு நூல்களும் கனலி பதிப்பகத்தின் பிற நூல்களும் கிடைக்கும் அரங்குகள்:

பரிதி பதிப்பகம் - 432

பரிசல் புத்தக நிலையம் -171-172

பனுவல் புத்தக நிலையம் - 199-200

குட்டி ஆகாயம் - 533

பூவுலகின் நண்பர்கள் - 642 - 643

காக்கைக் கூடு- 589-590

 


கோதை பதிப்பகம் வாயிலாக வெளியான என்னுடைய ‘என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’ சிறுகதைத் தொகுப்பு, ‘என்றாவது ஒரு நாள்’ மொழிபெயர்ப்பு நூல் மற்றும் கோதை பதிப்பகத்தின் அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்:

கோதை பதிப்பகம் அரங்கு எண் - 303


நூல்களை வாங்கி ஆதரவளிக்குமாறும் வாசித்துக் கருத்தினைப் பகிர்ந்து ஊக்கமளிக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.