ஜெமினி கணேசன், பானுமதி நடிப்பில் 1973-ல் வெளியான பழைய
திரைப்படம் கட்டிலா தொட்டிலா. வழக்கறிஞரான கணவருக்கும், மருத்துவரான
மனைவிக்கும் இடையில் நடக்கும் ஈகோ போராட்டம்தான் கதை. அந்நியோன்னியமான தம்பதிகள்,
பாசமான பிள்ளைகள் என்றிருக்கும் அழகான குடும்பத்தில் பிரச்சனை எழக்
காரணமாகிறது மகளின் திருமணம் குறித்த பேச்சு. கணவன் மனைவி இருவருமே தத்தம் ஜூனியர்களுக்கு மகளைத் திருமணம் செய்விக்க விரும்புகின்றனர். சின்ன விரிசல் பெரிதாகி விவாகரத்து வரை போகிறது. பிரச்சனை எழக் காரணமான மகளோ வேறொருவரை விரும்புவார். இத்திரைப்படத்தின் மூலம் Naa Mechida Huduga என்னும் கன்னடத் திரைப்படம்.
அதில் மகளாய் நடித்திருந்தவரே தமிழிலும் மகளாய் நடித்திருந்தார்.
மகளின் பாத்திரத்தில் நடித்த நடிகையின் நடிப்பு கொஞ்சம் மிகையாகவே தெரிந்தது. அம்மா என்று அழைப்பதைக் கூட பாடுவது
போல அழைத்தார். பேச்சு,
சிரிப்பு, நடை, உடை என எல்லாவற்றிலும் இயல்பு மீறிய ஒரு தனித்துவம் தென்பட்டது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் அந்தப்படம் பார்த்த போது எனக்கு அந்த நடிகையை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவரது நடிப்பின் தனித்துவம் அவர் யாரென்ற தேடலில் இறக்கியது. மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாது மிரண்டால் என ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களிலும்
ஒரு சில மலையாள, துளு, தெலுங்கு திரைப்படங்களிலும் தலைகாட்டியுள்ளார்.
ஆனால் கன்னடத்திலோ
கதையே வேறு.
மினுங்குதாரே
(மின்னும் தாரகை) என்ற அடைமொழியோடு கன்னடத் திரை ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை மின்னிக்
கொண்டிருக்கும் நடிகை கல்பனாதான் அவர். அப்படியென்ன பிரமாதமான நடிகை என்ற அலட்சியத்தோடுதான் அவர் நடித்த திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். Sarvamangla, Sharapanjara, Belli moda, Eradu kanasu, Kappu biluppu, Gejje pooje, Hannele Chiguridaga, YaavaJanmada Maitri என நீண்டுகொண்டே போன பட்டியலில் ஒரு கட்டத்தில் நான் முற்றிலுமாய் என்னை அவரிடத்தில் ஒப்படைத்திருந்தேன்.
கங்கா கொஞ்சம்
கொஞ்சமாக சந்திரமுகியாக மாறியது போல நானும் கொஞ்சம் கொஞ்சமாக கல்பனாவாக
மாறிவிடுவேனோ என்னுமளவுக்கு அவரது ஆக்கிரமிப்பு நெஞ்சுக்குள் ஆணியடித்து இறங்கியது.
அவரது நடிப்பு, நடிப்பு என்றே தோன்றாத அளவுக்குத் தாக்கத்தை உண்டாக்கியது.
இப்படியொரு
அற்புதமான நடிகையை இது வரைக்கும் அறிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறோமே என்று வெட்கினேன். என் ஆதர்ச திரைநாயகிகளான சாரதா, ஷர்மிளா தாகூர், ஷபனா ஆஸ்மி, சுஜாதா இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்றுவிட்டார் கல்பனா.
திரைப்படங்களின் பிரம்மா என்று போற்றப்படும் இயக்குநர் புட்டண்ணா கனகலின் ஆஸ்தான நாயகியாக குறிப்பிட்டக் காலக்கட்டத்தில்
கொடிகட்டிப் பறந்தவர் கல்பனா. பெண் வாழ்வை, பெண் மனப் பிரதிபலிப்பை, பெண்ணின் மென்னுணர்வுகளை மையமாய் வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர் புட்டண்ணா கனகல். தமிழில் சுடரும் சூறாவளியும், டீச்சரம்மா என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் இமயம் பாலசந்தர் அவர்கள் புட்டண்ணா கனகலை தம் குரு என்று குறிப்பிட்டிருக்கிறார்
என்ற தகவல், புட்டண்ணா கனகலின் திரைப்படங்களைத் தேடித்தேடிப் பார்க்க வைத்தது.
புட்டண்ணா கனகல் மட்டுமல்ல, பெரும்பாலான அக்காலக் கன்னட இயக்குநர்கள் ஒரு தரமான நாவலின் கதையையே தங்கள் திரைப்படங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கப்பட்டத் திரைப்படங்கள். எழுத்தாளருக்கு உரிய நியாயத்தை இயக்குநரும், இயக்குநருக்கு உரிய நியாயத்தை கதாபாத்திரங்களும் செய்திருந்தார்கள்.
ஒரு
திரைப்படத்தின்
நாயகி கல்பனா என்றால் அதில் நாயகன் டாக்டர் ராஜ்குமாராகவே இருந்தாலும் இரண்டாம் பட்சம்தான் என்னுமளவுக்கு கல்பனாவின் நடிப்பின்
ஆளுமை விஞ்சிநிற்கிறது. ஷரபஞ்சரா என்ற ஒரு திரைப்படம் போதும், கல்பனாவின் நடிப்புத்திறமையை பறைசாற்ற. திரைப்படம் பார்த்து ஒரு வாரத்துக்கு மேல் வேறு சிந்தனையே இல்லை. அப்படி மனத்தின் ஆழம் வரைக்கும் பாய்ந்திருந்தது அவரது நடிப்பின் தாக்கம். காவேரி என்னும் கதாபாத்திரமாய்
அவர் வாழ்ந்திருந்த வாழ்க்கையின் தாக்கம்.
பாசமான
பெற்றோர், கை நிறைய சம்பாதிக்கும் காதல் கணவன், சொந்த வீடு, அன்பான மாமியார், ஆசைக்கொரு பிள்ளை என அழகான வாழ்க்கை காவேரியுடையது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வாழ்கிறாள் அவள். இரண்டாவது குழந்தை பிறக்கிறது. அவள் வாழ்வில் பிரளயம் ஆரம்பிக்கிறது. Postpartum depression என்னும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாள். தன்னை அறியாமல் என்றோ எப்போதோ தவறவிட்ட தன்னைத் தேடி அலைகிறாள். சுவாதீனம் இழக்கிறாள். கணவனின் அன்பை இழக்கிறாள். மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வருட சிகிச்சைக்குப் பின் முழு நலத்துடன் பழைய சந்தோஷமான வாழ்க்கையை வாழும் ஆவலோடு வீடு திரும்புகிறாள்.
ஆனால்… குடும்பம், சுற்றம், நட்பு. சமூகம் என எதுவும் அவளை அவளாய்ப் பார்க்கவில்லை. பைத்தியமாகவே பார்க்கிறது. ஒதுக்குகிறது, கேலி பேசுகிறது, அவமதிக்கிறது, அலட்சியப்படுத்துகிறது, ஆத்திரப்படுத்துகிறது. கணவனின் அன்பை மட்டுமே இறுதிப்பிடிப்பாக எதிர்நோக்கியிருப்பவளுக்கு அங்கே அதுவும் கைவிட்டுப்போய்விட்டது என்றறிந்த பிறகு ஏற்படும் ஏமாற்றமும் துரோகத்தின்
அவமானமும் அவளைப் பொடிப்பொடியாக்குகிறது. அன்பும் இரக்கமும் அற்ற இவ்வுலகை எதிர்கொள்ளத் திராணியற்றவளாய் அவள் உடைந்து மீண்டும் மனநோய்க்கு ஆளாகிறாள். இல்லையில்லை, ஆளாக்கப்படுகிறாள்.
கன்னடத்தில்
கல்பனா ஏற்று நடித்தப் பெரும்பாலான திரைப்படங்கள் தெலுங்கிலும் தமிழிலும் வாணிஸ்ரீயின் நடிப்பில்
மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. ஷரபஞ்சரா தெலுங்கில் கிருஷ்ணவேணி
என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. வாணிஸ்ரீ நடித்து தமிழில் வெளிவந்த இருளும் ஒலியும், தாலியா சலங்கையா போன்ற திரைப்படங்களில் வாணிஸ்ரீயின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். மூலக் கன்னடப்படங்களில் கல்பனாவின் நடிப்பு பார்த்தபோது நகலின் மீதான பிரமிப்பு விலகி அசலின் மீது படிந்துபோனது.
1943-ல் பிறந்து 20 வயதில் நடிக்கத்
தொடங்கிய கல்பனா, தொடர்ந்து பத்து வருடங்கள் கன்னடத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்திருக்கிறார்.சுமார் 80 திரைப்படங்களில் நடித்திருக்கும் கல்பனா மூன்று முறை சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். நதியா போல உடை, ஆபரணங்களில் மாறுபட்ட தோற்றம் காட்டி அந்நாளைய Fashion Icon – ஆகவும் திகழ்ந்திருக்கிறார். வாய்ப்புகள் மெல்லக் குறைய பிற்பகுதியில் குறைந்த பட்ச மாத வருமானத்துக்காக நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
திரைப்பட வாய்ப்புகளின் சரிவு, பொருளாதாரப் பிரச்சனைகள்,
சொந்த வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள், மணவாழ்வில் ஏற்பட்ட தோல்வி,
உடல்நலக்குறைவு என பலதரப்பட்ட காரணங்களால் கல்பனா நிஜ வாழ்க்கையிலும்
மன அழுத்தத்துக்கு ஆளாகி, 36-வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
மற்றெல்லா அபூர்வ நட்சத்திரங்களைப் போலவே மினுங்குதாரே என்னும் அந்த ஒளிர்நட்சத்திரமும்
தன் வாழ்வை அற்பாயுளில் முடித்துக்கொண்டு வானேகியது மிகப்பெரும் துரதிர்ஷ்டம்.
&&&&&&&&
(படங்கள் உதவி - இணையம்)