Showing posts with label தேனீ. Show all posts
Showing posts with label தேனீ. Show all posts

12 March 2025

ஒவ்வொரு நாளும் புதிதாய்...

வசந்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே கொளுத்தத் தொடங்கிய வெக்கையின் தாக்கத்தை எழுதிய புலம்பல் பதிவோடு போனவளுக்கு, கோடை முடிந்து இதம் தரும் இலையுதிர்காலமும் தொடங்கிய பிறகுதான் வலையில் தலை காட்ட மனம் வாய்த்திருக்கிறது. 

கோடையின் கடுந்தாக்கம், பிரியத்துக்குரிய தாய்மாமனின் இழப்பு, புத்தாண்டின் தொடக்கத்திலேயே கவித்தோழி உமா மோகன் அவர்களின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி போன்ற சில காரணங்களால் எழுதுவதில் ஒரு வித அயர்ச்சியும் சுணக்கமும் ஏற்பட்டுவிட்டது. எழுத்தில்தான் மந்தமே தவிர வாழ்க்கை என்னவோ தன் போக்கில் படுவேகமாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

நெடும்பயணத்தில் சிறு இளைப்பாறல்

முதன்முதலாக தோழிகளோடு, சுமார் 2,000 கி.மீ. நீள சாலைவழி சாகசப் பயணம், மகளின் புதிய காரில் புதுப்புது இடங்களுக்கு சந்தோஷப் பயணம், மகளின் வளர்ப்புச் செல்லங்களும் அவற்றின் சேட்டைகளும், புதிய youtube சானல், புதிய கைத்தொழில், தோட்டச் சீரமைப்பு, தோட்டத்தின் புதுவரவுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களுக்குக் குறைவில்லாமல் கழிகின்றன நாட்கள்.  

பயணத்தில் சுவாரசியம் கூட்டிய இடங்களுள் ஒன்று

பச்சைப் புல்வெளியும் கரிய மாடுகளும்

இந்த வருடம் எதிர்பாராத மகிழ்ச்சியாக Australian native bees – Family planner-ல் நான் எடுத்த புகைப்படமும் சிறு இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவியற் தகவல்களையும் அறியத் தரும் Bee Aware of Your Native Bees  என்ற ஃபேஸ்புக் குழுமம் அதில் பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த planner-ஐ உருவாக்கியுள்ளது.

நாட்காட்டியின் முன் பக்கம்

நாட்காட்டியின் கடைசிப்பக்கம்

வித்தியாசமானவை, அரியவை, தரைவாழ் தேனீக்கள், தேன் கூடு, தேனடை, தேன் சேகரிப்பு, உறக்கம், குமிழ் விடுதல், மகரந்தச் சேர்க்கை என ஒவ்வொரு மாதத்திற்குமான பிரத்தியேகத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தேனீக்கள் படங்களுள் குமிழ் விடுதல் தலைப்பில் என்னுடைய ஒளிப்படம் தேர்வானது. காலண்டரா ப்ளானரா என்ற ஆலோசனையின்போது பலரும் ப்ளானர் என்று பரிந்துரைக்க, இறுதி வடிவம் ப்ளானர் (சரியான தமிழ்வார்த்தை இன்னும் பிடிபடவில்லை) என்று முடிவானது.


தகவல் பக்கம்

வழுவழுப்பான தாள்கள். ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தோடு பெரிய அளவிலான திட்டமிடலுடன் கூடிய நாட்காட்டி ஆஸ்திரேலியத் தேனீக்கள் மற்றும் சிறப்புத் தகவல்களோடு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி விலை 25 ஆஸ்திரேலிய டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறையும். நிறைய பேர் ஐம்பது, நூறு என்று வாங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் நாட்காட்டியில் என்னுடைய ஒளிப்படமும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்வும் பெருமிதமும் அளிக்கிறது.

நானும் ஒரு மூலையில்...

நான் பிறந்த ஏப்ரல் மாதத்தில் என் ஒளிப்படம் இடம்பெற்றிருப்பது தற்செயல் என்றாலும் பிறந்தநாள் பரிசாகப் பெற்றது போல் கூடுதல் மகிழ்ச்சி.

நத்துவும் மித்துவும் 

கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசானில் வெளியான என்னுடைய சிறுவர் நாவல் ‘நத்துவும் மித்துவும்’ தற்போது ஒலிவடிவம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வாழ்வுநல மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘மெய்ப்பொருள்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்ற பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து தினமொரு கதையை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த வரிசையில் பத்தாவது கதையாக என்னுடைய ‘நத்துவும் மித்துவும்’ சிறுவர் நாவல் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 40 நிமிட அவகாசம் எடுக்கும் இக்கதையை Spotify-இல் கேட்கலாம்.

நத்துவும் மித்துவும் ஒலி வடிவம்

‘நத்துவும் மித்துவும்’ கதையை எளிய மொழியில் மிக அழகாகச் சொல்லியிருக்கும் அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இணையப் படம் 1

1969-ஆம் ஆண்டு எரிக் கார்ல் என்ற அமெரிக்க சிறார் எழுத்தாளர் மற்றும் ஓவியரால் எழுதி வடிவமைக்கப்பட்டதுதான் The very hungry caterpillar என்ற உலகப் பிரசித்தி பெற்ற சிறார் படப் புத்தகம். புத்தகம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் ஐம்பது மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. 66 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான புத்தக வடிவமைப்புக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது. பல தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்களாக வெளியாகியுள்ளது. ‘உலகச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று’ என்ற சிறப்பைப் பெற்றது. கதையோடு கம்பளிப்புழு ஒவ்வொரு உணவையும் துளைத்துக் கொண்டு போவது போன்ற புத்தக வடிவமைப்பு கூடுதலாகக் குழந்தைகளை ஈர்ப்பது இன்னொரு சிறப்பு. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனின் வெப்பத்தால் முட்டையிலிருந்து பொரிந்து வருகிறது ஒரு குட்டிக் கம்பளிப்புழு. திங்கள் அன்று ஒரு ஆப்பிள் தின்கிறது. ஆனாலும் பசி அடங்கவில்லை. செவ்வாய்க் கிழமை இரண்டு பேரிக்காய் தின்கிறது. அப்போதும் பசியடங்கவில்லை. புதன் கிழமை மூன்று ப்ளம் பழங்களைத் தின்கிறது. அப்போதும் பசி அடங்கவில்லை. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களையும் வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுப் பழங்களையும் தின்கிறது. ஆனாலும் அடங்காப் பசியுடனேயே இருக்கிறது. 

இணையப் படம் 2

சனிக்கிழமையன்று அது சாக்லேட் கேக், ஒரு ஐஸ்க்ரீம், ஊறுகாய், பாலாடைக்கட்டி, சலாமி (பன்றிக்கறியால் ஆனது), லாலிபாப், செர்ரிப்பழக் கேக், சாஸேஜ் (இறைச்சி), கப் கேக் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடைசியாக ஒரு துண்டு தர்ப்பூசணியும் தின்கிறது. அன்று இரவு கடுமையான வயிற்றுவலி வந்து துடிக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு இலையை மட்டும் தின்கிறது. இப்போது அது குட்டிக் கம்பளிப்புழு இல்லை. குண்டுக் கம்பளிப்புழுவாக மாறியிருக்கிறது. அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைப் பின்னி கூட்டுப்புழுவாக மாறுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது. இதுதான் கதை. 

நத்துவும் மித்துவும் - கதைக் காட்சி

இந்தக் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டும் கீரைகள், மூலிகைகள் இவற்றின் நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் சொல்ல விரும்பியும் எழுதியதுதான் நத்துவும் மித்துவும் கதை. இதில் நத்து என்கிற நத்தையும் மித்து என்கிற கம்பளிப்புழுவும் ஒரு தோட்டத்து நண்பர்கள். முட்டையிலிருந்து பொரிந்துவரும் கம்பளிப்புழுவுக்கு எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது, எது எந்த ருசி, எது ஆபத்து, எங்கே, யாரிடம், எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தருகிறது நத்தை. மெதுவாக நகரும் காரணத்தால் தோட்டத்தின் மற்ற ஜீவராசிகளால் கேலி செய்யப்படும் நத்தை பிறகு எப்படி அவற்றின் ஆருயிர் நண்பனாக மாறுகிறது என்பதைச் சொல்லி கதையை முடித்திருக்கிறேன்.  

இணையப் படம் 3
என் குழந்தைகள் சிறு வயதில் Popeye show பார்த்த பிறகுதான் கீரை சாப்பிட ஆரம்பித்தார்கள். நாம் சொல்ல நினைப்பவற்றை கதைகள் மூலம் குழந்தைகளுக்குப் புரியவைப்பது எளிது என்பதை அறிந்திருந்ததால் இந்த நாவலை முயன்றேன். அதற்கு நல்ல பலன் தற்போது கிடைத்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஜகரண்டா மரத்தில் காலா பறவைகள்

தோட்டத்தின் புதுவரவுகள் என்று குறிப்பிட்டேன் அல்லவா? 2025 முதல்நாள் தோழிகளோடும் புதிய பூக்கன்றுகளோடும் சிறப்பாகத் தொடங்கியது. 

புதிய வரவாக நானும் இருக்கிறேன் என்று தலைகாட்டிப் போனார் பாம்பார் ஒருவர். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சட்டையை மட்டும் கழற்றிவைத்துவிட்டுப் போனவர் இப்போது தானே என் கண்முன் வந்து தன்னிருப்பை உறுதி செய்துவிட்டுப் போனார். கொல்லைப்புறக் கண்ணாடி வழியாக தோட்டத்தை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இவர் விருட்டென்று கடந்துபோனதைப் பார்த்தேன். பாம்பு போல் இருக்கிறதே, என்ன பாம்பாக இருக்கும் என்ற ஆர்வம் உந்த, கேமராவைத் தயார் செய்து கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியில் சென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் படம் எடுக்கும் ஆசை (அவர் படம் எடுக்காமல் இருக்கணுமே!) உந்த, போர்டிகோவில் நின்றபடி அவர் சென்ற திசையில் தேடினேன். இல்லை. வேறெங்கோ போய்விட்டார் போலும், என்று நினைத்து திரும்பி கதவை மூடப்போகும் வேளையில் போன வழியிலேயே அவர் திரும்பி வருகிறார். அடித்தது அதிர்ஷ்டம் என்று க்ளிக்கினேன். ஆனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. படபடப்பு வேறு. அவரோ  விருட்டென்று செடிகளுக்குள் சென்று மறைந்துவிட்டார். 

வால் மட்டும்தான் பிடிபட்டது

கன்னங்கரேல் என்ற உடலைப் பார்த்தபோதே இது red-bellied black snake-ஆகத்தான் இருக்கவேண்டும் என்று கணித்தேன். படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது என் கணிப்பு உறுதியானது. ஆக, புழு, பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், தோட்டப்பல்லிகள், நீல நாக்கு அரணை, நத்தை, சுண்டெலி, பெருச்சாளி, பூனை இவற்றோடு தோட்டத்தின் வருகையாளராக இப்போது இவரும் இணைந்துவிட்டார். :)))

 *****

2 May 2020

குயில் தேனீ

தோட்டத்துப் பிரதாபம் - 13

நியான் குக்கூ தேனீ

இந்தத் தேனீயின் பெயர் Neon cuckoo bee (Thyreus nitidilus). நியான் போல ஒளிரும் நீலம் மற்றும் கருப்பு வண்ணம் கொண்டது என்பதால் நியான் சரி. அதென்ன குக்கூ? நீங்கள் நினைப்பது சரிதான். காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமாய் முட்டையிடும் குயிலைப் போலவே இதுவும் பிற தேனீக்களின் கூடுகளில் திருட்டுத்தனமாய் முட்டையிடுவதால் குக்கூ என்னும் பெயர். தேனீக்களில் கூட குயில் தேனீக்கள் உண்டென்பதை அறிந்து வியப்பு மேலிடுகிறது.

பெண் தேனீக்கள் முட்டையிட இடம் தேடி அலைய வேண்டாம், கூடு கட்ட வேண்டாம், முட்டையிலிருந்து வரும் புழுவுக்காக உணவு சேகரித்துக் கொண்டுவர வேண்டாம். செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வேறொரு தேனீ கட்டும் கூட்டுக்குள் திருட்டுத்தனமாய் புகுந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அவ்வளவுதான். மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா பார்த்துக்கொள்ளும்.  

நியான் குக்கூ தேனீ

ஆஸ்திரேலியாவின் தேனீயினம் பலவும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. பெண் தேனீக்கள் இண்டு இடுக்குகளிலும், மண்ணைத் துளைத்தும், சுவரின் துவாரங்களிலும் தங்கள் கூடுகளை அமைத்து முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக கூடவே தேனும் மகரந்தமும் வைத்து கூட்டின் வாயிலை மூடுகின்றன. Blue banded bee எனப்படும் நீலவரித் தேனீயும் அவற்றுள் ஒன்று. நியான் குக்கூ தேனீயின் நிறம் கிட்டத்தட்ட நீலவரித் தேனீயை ஒத்திருப்பதால் அவற்றை ஏமாற்றி தங்கள் வாரிசுகளை வளர்ப்பது அவற்றுக்கு சுலபமாக உள்ளது.  

ஏமாற்றப்படும் நீலவரித் தேனீ

பெண் நியான் குக்கூ தேனீ, பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிடும் இடங்களைப் பார்த்துவைத்துக் கொள்ளும். பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிட்டுவிட்டு, தேனும் மகரந்தமும் எடுத்துவர சென்றிருக்கும் சமயத்தில், பெண் நியான் குக்கூ தேனீ உள்ளே நுழைந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடும். இது எதுவும் அறியாத நீலவரித் தேனீ உள்ளே உணவை வைத்து துவாரத்தை மூடிவிடும். குயிலினத்தைப் போலவே இங்கும் முதலில் பொரிவது திருட்டுத்தனமாய் இடப்பட்ட முட்டைதான். முதலில் வெளிவரும் நியான் குக்கூ தேனீயின் லார்வா, உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாக உருமாறிக்கொள்ளும். சில நாள் கழித்து பொரிந்து வெளிவரும் நீலவரித் தேனீயின் லார்வா உணவின்றி இறந்துபோய்விடும். உரிய காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு நியான் குக்கூ தேனீயின் வாரிசு வெளிவந்து தன் வாழ்க்கையைத் தொடங்கும்.


நியான் குக்கூ தேனீ

இரண்டு வகை தேனீக்களுமே எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்றாலும் நீலவரித் தேனீயைப் படமெடுக்கக் கிடைக்கும் வாய்ப்பு நியான் குக்கூ தேனீயைப் படமெடுக்க கிடைப்பதில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் விருட்டென்று வந்துவிட்டு மறையும் இவற்றை ஒன்றிரண்டு படம் எடுப்பதற்குள்ளாகவே படாத பாடு பட்டுவிட்டேன். பல மாதங்களாக கேமராவுக்குள் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவரும் அதனை க்ளோசப்பில் படம்பிடிக்கும் வாய்ப்பொன்று அதிசயமாய்க் கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு பூங்கா ஒன்றில் கீழே உள்ள படங்களில் இருக்கும் தேனீயைக் கண்டேன். இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் எப்படி உட்கார்ந்திருக்கிறது? அங்கே பூ கூட இல்லையே? என்ற சந்தேகம் அருகில் சென்றதும் விலகியது. அது இறந்துபோயிருந்தது.  எப்படி அதன் உடல் காற்றினால் விழாமல் காய்ந்த குச்சியின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது இன்னமும் எனக்கு ஆச்சர்யம்தான். ஆய்வகங்களில் இறந்துபோன பூச்சிகளின் உடலை பதப்படுத்தி குண்டூசியால் குத்தி வைத்திருப்பார்களே, அது போல்தான் இருந்தது அந்தக் காட்சி. தோட்டத்துக்கு வரும் நியான் குக்கூ தேனீயை அருகில் படமெடுக்க முடியாமல் நான் படும் பாட்டைப் பார்த்து, இயற்கை எனக்காகவே செய்துவைத்திருக்கும் ஏற்பாடு போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படமெடுத்த பிறகுதான் ஒன்று கவனித்தேன். இது நியான் குக்கூ தேனீ போலவே இருந்தாலும் வரிகளுக்குப் பதிலாக இதன் உடலில் புள்ளிகள் இருந்தன. நியான் குக்கூ தேனி போலவே இதுவும் நீலவரித் தேனீயின் கூட்டைக் குறிவைப்பவைதாம். குயில் தேனீக்களுள் இன்னொரு வகையான chequered cuckoo bee (Thyreus caeruleopunctatus) தான் இது. 


இறந்துபோன நியான் குக்கூ தேனீ

இறந்துபோன நியான் குக்கூ தேனீ 

குக்கூ தேனீக்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்பட்டாலும் நியான் குக்கூ தேனீக்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலும் காடுகளிலும், புதர்வெளிகளிலும் வசிக்கின்றன. இதன் உயிரியல் பெயர் Thyreus nitidulus என்பதில் உள்ள nitidus என்பதற்கு லத்தீனில் 'பளபளப்பான' என்று பொருள். உண்மையில் பளபளப்பான நீலநிறத்தில் காணப்படும் இவற்றை, பறக்கும் நிலையிலும் சட்டென்று நம்மால் அடையாளம் காணமுடியும் என்பது இவற்றின் சிறப்பு.

&&&&&

(பிரதாபங்கள் தொடரும்) 

4 September 2019

ஞிமிறென இன்புறு


தோட்டத்துப் பிரதாபம் - 6

துளசிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

ஞிமிறென இன்புறு. இதன் முழுப்பொருளையும் எங்கள் தோட்டத்துத் தேனீக்களைப் பார்த்துதான் அறிந்துகொண்டேன். அன்றலர்ந்த மலர்களில் அமர்ந்தும் பறந்தும் கிடந்தும் சுழன்றும் என்னவொரு ஆனந்தத் தாண்டவம். தோட்டம் உயிர்பெற்று வந்துவிட்டதைப் போன்ற தோற்றம் காட்டி கிறுகிறுக்கச் செய்யும் ரீங்காரம். குளவிகள் அளவுக்கு இவற்றிடம் ஏனோ எனக்கு அவ்வளவு பயம் இல்லை. வெகு அருகில் சென்று அவற்றுக்குத் தொல்லை தரா எச்சரிக்கையோடு மேக்ரோ ஒளிப்படம் கூட எடுக்கிறேன். தானுண்டு தன் வேலையுண்டு என்று அவை பாட்டுக்கு இயங்குகின்றனவே தவிர, என்னைத் திரும்பியும் பார்ப்பதில்லை. 

தேனீக்கள் என்று பொத்தாம்பொதுவாகத்தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். பிறகுதான் அவற்றுள் பல வகை எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்ற உண்மை உணர்ந்தேன்.  

கத்தரிப்பூவில் நீலவரித்தேனீ

தேனீக்கள் பற்றி சொல்வதற்கு முன் ஒன்று சொல்லவேண்டும். நான் முன்பே சொன்னது போல தோட்டக்கலையில் எனக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது. தோட்டம் வளர்ப்பது என்று முடிவு செய்தபின் அதுவும் காய்கறித் தோட்டம் என்றான பின், அது குறித்த தேடல் துவங்கியது. எனக்கு எதிலாவது ஆர்வம் என்று கணவருக்குத் தப்பித்தவறி தெரிந்துவிட்டால் போதும், உடனே அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கத் தொடங்கிவிடுவார். அப்படிக் கிடைத்த புத்தகங்களிலும் இணையதளங்களிலும் பார்த்துப் பார்த்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். சிலவற்றை செயல்படுத்தினேன்.

முக்கியமாய் மகரந்தச்சேர்க்கை. அம்மா, அம்மாச்சி, மாமி என்று எல்லாரும்தான் தோட்டம் வளர்த்தாங்க. என்ன செய்வாங்க? விதைகளை நடுவாங்க, பதியன் போடுவாங்க, கொடியாயிருந்தா பந்தல் கட்டுவாங்க, தண்ணீ ஊத்துவாங்க, பலனை அனுபவிப்பாங்க. பூச்சி வந்திடுச்சா, வேப்பெண்ணெய், உப்பு அல்லது சாணித்தண்ணியைக் கரைச்சுத் தெளிப்பாங்க, அப்படியும் போகலைன்னா அந்தச் செடியை அப்படியே பிடுங்கிப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரிந்து செய்தாங்க. தோட்டத்துக்கு தேனீ வருதா இல்லையா, வந்தாலும் மகரந்தச் சேர்க்கை நடக்குதா இல்லையா, வரலைன்னா அதைத் தோட்டத்துக்கு வரவைக்கிறதுக்கு என்ன பண்ணனும் என்றெல்லாம் கவலைப்பட்ட மாதிரியோ, யோசித்தமாதிரியோ கூட தெரியலை. ஆனால், இன்றைக்கு?

மகரந்தச்சேர்க்கை என்கிற விஷயமே நாமாக செயற்கைமுறையில் (hand pollination method) செய்தால்தான் உண்டு என்பது மாதிரியான போதனைகள், செய்முறைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள். பறங்கிக்காய் விஷயத்தில் நானும் அப்படியான மாயைக்குள் சிக்கிய கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தற்சமயம் என் தோட்டத்தில் ஒலிக்கும் தேனீக்களின் ரீங்காரம் என் முந்தைய பேதைமையை எள்ளி நகைப்பதுபோலவே தோன்றுகிறது. அயல்மகரந்தச்சேர்க்கையை நம்பியிருக்கும் பூக்களை மட்டுமல்லாது, தன்மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் கத்திரி, தக்காளி போன்றவற்றையும் ஒரு வேலையும் செய்யவிடாமல் சோம்பேறியாக்கிவிட்டன என் தோட்டத்துத் தேனீக்கள்.

கத்தரி, சூரியகாந்தி, துளசி. பறங்கி, தக்காளி,
வெள்ளரிப் பூக்களில்
ஐரோப்பியத் தேனீக்கள் (European honey bees)

முதலில் ஐரோப்பியத் தேனீக்கள்தான் அதிகமாக வந்தன. பிறகு பார்த்தால் ஆஸ்திரேலியத் தேனீக்களும் வர ஆரம்பித்தன. ஐரோப்பியத் தேனீக்கள் என்று நான் குறிப்பிடுவது நாம் தேனீ என்று பொதுவாகக் குறிப்பிடும் தேனீக்களைத்தான். 1822-ல்தான் இவை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காரணம்? வேறென்ன, தேன்தான். ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளால் தேன் இல்லாமல் வாழ முடியவில்லை. அது மட்டுமல்ல, அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள், பேரிக்காய் உள்ளிட்ட பழமரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற இத்தேனீக்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலியத் தேனீக்கள் தேன் சேகரிக்காதவை என்பதோடு புதிதாய் அறிமுகமான தாவரவினங்களுக்கு அவை பழகவில்லை என்பதும் காரணம்.
  
ஆஸ்திரேலியத் தேனீக்களில் ராணி, வேலைக்காரி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே இல்லத்தலைவிகள்தான். ஒவ்வொன்றும் தனித்து வாழ்பவை. தோதான இடம் பார்த்து (பெரும்பாலும் செங்கல் துவாரங்கள், மரத்துளைகள், களிமண் தரையிடுக்குகள் போன்றவை) முட்டையிடுவதும் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கான உணவைத் தேடி சேகரித்து வைப்பதும் பெண் தேனீக்களின் வேலை. இனப்பெருக்கம் முடிந்தவுடன் ஆண் தேனீக்களும் முட்டையிட்டு முடிந்தவுடன் பெண் தேனீக்களும் இறந்துவிடுகின்றன.

சூரியகாந்தி, தக்காளி, கத்தரி, வெள்ளரிப் பூக்களில்
நீலவரித்தேனீக்கள் (Blue banded bees)

நீலவரித்தேனீ (Blue banded bee) – காரணப்பெயர் என்பது பார்த்தாலே தெரியும். கருப்பும், நீலமும் வரிவரியாய் இதன் உடலில் காணப்படும். நீலமலர்கள்தான் பெருவிருப்பம் இத்தேனீக்களுக்கு. நீலமலர்கள் கிடைக்காத பட்சத்தில் பிற வண்ண மலர்களிடம் தேனெடுக்கும். இரவு நேரங்களில் ஆண் நீலவரித்தேனீக்கள் பல ஒன்றுகூடி மரக்கிளைகளிலோ, கம்பிகளிலோ தொங்கியபடி உறங்கும். பெண் தேனீக்கள் தனித்தனியாக இண்டு இடுக்குகளில் உறங்கும். நீலவரித்தேனீக்கள் buzz pollination எனப்படும் அதிர்வு மகரந்தச்சேர்க்கை முறையில் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன. 

தன்மகரந்தச்சேர்க்கை செய்யக்கூடிய சில பூக்களுக்கு காற்று லேசாக வீசினால் கூட போதும். சட்டென்று மகரந்தம் விடுபட்டு மகரந்தச்சேர்க்கை எளிதாய் நடைபெற்றுவிடும். ஆனால் சில பூக்களில் அவ்வளவு எளிதில் மகரந்தம் விடுபடுவதில்லை. இந்த தேனீக்கள் பூவைக் கால்களால் பற்றியபடி பலத்த அதிர்வுகளை உண்டாக்கி மகரந்தத்தாதுவை விடுவிக்கச் செய்கின்றன. ஆஸ்திரேலியாவின் உணவுப்பயிர் விளைச்சலில் சுமார் 30% நீலவரித்தேனீக்கள் மூலமாகவே நடைபெறுகிறது என்பதிலிருந்து இத்தேனீக்களின் முக்கியத்துவம் விளங்கும். 

வெட்டுப்பட்ட இலைகள்

அடுத்து இலைவெட்டித்தேனீ. தற்செயலாகத்தான் கவனித்தேன், மிளகாய்ச்செடியின் இலைகள் சிலவற்றின் ஓரத்தில் நகத்தால் கிள்ளி எடுத்தது போல அழகாய் அரைவட்ட வடிவ ஓட்டைகள். இப்படி அழகாய் அளவாய் வெட்டப்பட்டு இருந்தால் அது நிச்சயம் இலைவெட்டித் தேனீயின் வேலையாகத்தான் இருக்கும் என்று புரிந்தது. இன்னும் கையும் களவுமாகப் (படம்) பிடிக்கவில்லை என்றாலும் கானுயிர் ஆய்வாளர் திரு.ப.ஜெகநாதன் அவர்களின் உயிரி தளத்தில் வாசித்திருந்த இலைவெட்டித் தேனீக்கள் குறித்த பதிவு உறுதிப்படுத்தியது.

என்னுடைய பால்யத்தில் இவற்றின் இலைக்கூடுகளை நிறையப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கதவு ஜன்னல் இவற்றின் நாதங்கித் துவாரங்களை அடைத்தபடி இருக்கும். வெளியில் அவசரமாக கிளம்பும் சமயம், தாழ் போடமுடியாமல் நாதங்கித் துவாரத்தை ஏதோ தடுக்கும். என்னடா என்று பார்த்தால் இந்த இலைக்கூடுகள் இருக்கும். நானும் தம்பியும் குச்சியால் தோண்டி வெளியில் போடுவோம். குழிவான தொன்னைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் சொருகிவைத்தது போல காய்ந்துபோன இலைகள் அடுக்கடுக்காய் சொருகியிருக்கும். இலைவெட்டித் தேனீக்கள் குறித்து அறியும் வரை அதுவும் ஒரு வகைக் குளவிக்கூடு என்றே நினைத்திருந்தேன்.


 இணையப்படம்

இலைவெட்டித் தேனீக்கள் இலைகளை வெட்டி எடுத்துப் போய் துவாரங்களில் சொருகி உள்ளே ஒரு முட்டையிடும்
. அதிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக தேனும் மகரந்தமும் சேர்த்துவைத்து பிறிதொரு இலைத் துண்டத்தால் மூடும். (குளவிகளைப் போல இவை புழுக்களை உணவாக வைப்பதில்லை) அதன் மேலே மற்றொரு முட்டையிட்டு அதற்கும் உணவு வைத்து மூடும். இப்படி இடத்துக்குத் தகுந்தாற்போல எட்டு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடும். முடிவில் பல அடுக்கு இலைகளை வைத்து பசை அல்லது களிமண் உதவியோடு நன்றாக மூடிவிடும். முட்டைகளிலிருந்து பொரிந்துவரும் லார்வாக்கள் உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாகி பூக்கள் மலரும் வசந்தகாலத்தில் கூட்டையுடைத்து வெளியே வந்து வாழ்வைத் துவக்கும்.


இலைவெட்டித் தேனீக்கள் (Leaf cutter bees)

ஆஸ்திரேலியாவின் இலைவெட்டித்தேனீக்கள் பெரும்பாலும் தரைக்குள் சிறிய துவாரங்களில் கூடு கட்டி முட்டையிடுகின்றன. மற்ற ஆஸ்திரேலியத் தேனீக்களைப் போலவே இவையும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. நீலவரித்தேனீக்கள் போலவே இவற்றிலும் ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடனும் பெண் தேனீக்கள் முட்டையிட்டு முடிந்தவுடனும் மடிந்துவிடுகின்றன.

இலைவெட்டித் தேனீக்கள் பொதுவாக யாரையும் கொட்டுவதில்லை. கையால் பிடித்தால் அல்லது தவறுதலாக மிதித்துவிட்டால் கொட்டும். ஆனால் அது மற்ற தேனீக்கடி, குளவிக்கடி போல வலி அவ்வளவு கடுமையாக இருக்காதாம். அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Bee hotel -இணையப்படம்

ஆஸ்திரேலியத் தேனீக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும், வரவை அதிகரிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வீடுகளின் வெளிப்புறத்தில் செங்கல் இடுக்குகள், மண் தரை, மூங்கில் குழாய் துவாரங்கள் போன்ற இடங்களை முட்டையிட ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்கின்றன. அவ்வாறான இடங்கள் இல்லாத பட்சத்தில் bee hotel எனப்படும் வெவ்வேறு அளவிலான துளைகளோடு கூடிய மூங்கில் குழாய்கள் கொண்ட அமைப்பை தோட்டங்களில் பொருத்தி வசதி செய்து கொடுக்கலாம், திண்ணையும் இரவாணமும் இல்லாத வீடுகளைக் கட்டி சிட்டுக்குருவிகளைக் கண்ணாடி ஜன்னலில் மோதவிட்டு சாகடித்துக் கொண்டிருந்த நாம், தற்போது விழிப்புணர்வு பெற்று அட்டைப் பெட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டு அவற்றுக்குக் கூடமைக்கும் வசதி செய்து தருகிறோமே அது போல. தனித்து வாழும் தன்மையுள்ள ஆஸ்திரேலியத் தேனீக்கள் பலவற்றுக்கும் கூடுகட்டி இனம் பெருக்க இந்த bee hotel பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

(பிரதாபங்கள் தொடரும்)