29 October 2020

பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்

 தோட்டத்துப் பிரதாபம் - 19




பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகு ணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில் 
பாம்புமெலு மிச்சம் பழம்

இது கவி காளமேகப்புலவரின் சிலேடைப் பாடல். தேன்பொழியும் சோலைகளை உடைய திருமலைராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் என்கிறார்.

பாம்புமிகுந்த விஷத்தை உடையதாயிருக்கும்; பித்தனாகிய சிவனின் முடிமேல் இருக்கும்; காற்றைப் புசிக்கும்; உடல் பருக்கும்; மேலெழுந்து படமெடுத்து ஆடும்; சினமுடையதாகும்.

எலுமிச்சம்பழம்பெரியவர்களிடத்து மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டு கை சேரும்; பித்தர்கள் தலையில் தேய்க்கப்படும்; (ஊறுகாய்க்காக) அரியப்படும்; உப்பு அதன் மேல் தூவப்படும்; அதன் சாறு பட்டால் எரிச்சல் உண்டாகும்.

எவ்வளவு அழகான சிலேடைப்பாடல்! இரண்டுமே நம் தோட்டத்தில் உண்டு என்றாலும் இரண்டாவதைப் பற்றியதுதான் இன்றைய என் பிரதாபம்.

 

மெயர் எலுமிச்சைகள்

படத்தில் இருப்பவை எங்கள் தோட்டத்தின் முதல் ஈட்டு எலுமிச்சம்பழங்கள். பத்துப் பழங்களும் மொத்தமாய் இரண்டு கிலோ இருந்தனபடத்தில் ஒன்பதுதானே இருக்கிறது, இன்னொன்று எங்கே? என்று தேடாதீர்கள். முதல் பழம் சாம்பிள் பார்ப்பதற்காக முதலிலேயே பறித்தாகிவிட்டது. பழத்தின் அளவைப் பார்த்தவுடன் இதென்ன எலுமிச்சம்பழமா? ஆரஞ்சுப்பழமா? என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றும். தவறில்லை. ஏனெனில் இவை மெயர் எலுமிச்சை (Meyer lemon) வகையைச் சேர்ந்தவை. நார்த்தைக்கும் மேண்டரின் ஆரஞ்சுக்கும் (citron and mandarin) பிறந்த பிள்ளையாம். இதன் தாயகம் சீனா. புளிப்பும் இனிப்புமான இதன் சுவை சாதா எலுமிச்சையின் சுவையை விடவும் சற்று வித்தியாசமானது. ஊறுகாயை விடவும் பழரசத்துக்கு மிகவும் ஏற்றது. 

எலுமிச்சை மரம்

எலுமிச்சைதான் என்று உறுதி செய்தாலும் அடுத்த சந்தேகம் வரும், இவ்வளவு சின்ன மரத்தில் இவ்வளவு பெரிய சத்தான சாறு நிறைந்த பழங்கள் எப்படி? இரசாயன உரம் காரணமோ? இல்லவே இல்லை. என் தோட்டத்துக்கு அன்றும் இன்றும் என்றும் உரமென்றால் இயற்கை உரம் மட்டுமே. காய்கறிக்கழிவுகள், இரண்டு மாதங்களுக்கொரு முறை தொழு உரம், மாதமொரு முறை மீன் அமிலம் அவ்வளவுதான். ஒருவேளை பூச்சிகளே அண்டவில்லையோ? அதனால்தான் இவ்வளவு செழிப்பான காய்களோ என்று நினைப்பீர்கள். அதுவுமில்லை. சிட்ரஸ் மரங்களை அண்டாத பூச்சிகளே இல்லை. வழக்கமாய் சிட்ரஸ் வகைகளைத் தாக்கும் எல்லா பூச்சிகளும் எல்லா நோய்களும் எங்கள் தோட்டத்து எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அவை அத்தனையும் சமாளித்து, அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கின்றன என்பதே அவற்றின்பால் எனக்கு அதீதமான பிரியத்தைக் கொடுக்கிறது.




 

மெயர் லெமன், வேலன்சியா ஆரஞ்சு, மாண்டரின் ஆரஞ்சு இரண்டு வருட மரங்களாக மூன்றையும் வாங்கி ஒரே நேரத்தில்தான் தோட்டத்தில் நட்டுவைத்தோம். ஏனோ எலுமிச்சையும் மாண்டரினும் வேர் பிடித்துக்கொண்ட அளவுக்கு வேலன்சியா ஆரஞ்சு வேர் பிடிக்கவில்லை. வைத்த நாளிலிருந்து அப்படியே இருந்த அது கொஞ்சம் கொஞ்சமாய் இலைகளையும் உதிர்த்துவிட்டு குச்சியாய் நின்றது. 'இது அவ்வளவுதான்' என்றார் கணவர். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேன் நான். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நானே ஆச்சர்யப்படும் விதமாய் அடுத்த ஒரு மாதத்திலேயே துளிர் வைத்து தான் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபித்தது. அதற்குப் பிறகும் கொப்பும் கிளையுமாகத் தழைத்து வளரவில்லை என்றாலும் பசுமையாய்த் தன்னிருப்பைக் காட்டிக்கொண்டே இருந்தது. இதோ, இப்போது முதன்முறையாக கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கிறது.


ஆரஞ்சு பூக்கள்

காரணம் என்னவாக இருக்கும்? நான் அதன்மேல் வைத்த நம்பிக்கையா? சில வாரங்கள் முன்பு gall wasp முட்டையிட்டிருந்த கிளைகளை கவனித்து  வெட்டி எறிந்த அக்கறையா? ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்க மறந்து, காலாவதியாகிப்போன கோழிக்கறியை குப்பையில் தூக்கிவீசாமல் இந்த ஆரஞ்சு மரத்துக்கடியில் குழிதோண்டி புதைத்த ரகசியமா? எப்படியோ, என் ஆரஞ்சு மரம் தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்குப் பயணிக்கத் தயாராகிவிட்டது. பூத்திருக்கும் அத்தனையும் காயானால் நிச்சயமாய் கிளை தாங்காது, மரம் தாங்காது. எனினும் சோகையானாலும் சூல்கொண்ட மகளைப் பார்த்துப் பூரிக்கும் தாய்போல நானும் பூரித்து நிற்கிறேன். இனி போதுமான சவரட்சணைகள் செய்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மாண்டரின் குறுமரம்

மாண்டரின் குள்ள வகை. இன்னும் காய்க்கத் துவங்கவில்லை என்றாலும் கிளைவிட்டு இலைவிட்டு செழிப்பாக இருக்கிறது. இந்த வருடம் அதுவும் பூத்திருக்கிறது என்பதே ஆனந்தம். தோட்டத்துக்குள் நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு பூவாசம். தேனீக்களுக்கோ பெரும் கொண்டாட்டம்

எலுமிச்சைப்பூவில் தேனீ



இந்த வருட மழை இன்னொரு கொண்டாட்டம். கடந்த மூன்று வருடங்களாக மழை இல்லாமல் காய்ந்து கிடந்த பூமிக்கு இவ்வருட மழை புத்துயிரூட்டியுள்ளது. தோட்டத்துச்செடிகளும் மரங்களும் உற்சாகத்தோடு துளிர்விட, உன்னை வளரவிடுவேனா பார் என்று படையெடுத்து வந்திறங்குகின்றன பற்பல பூச்சிகள். அவை என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம். 


(பிரதாபங்கள் தொடரும்)

13 October 2020

வா வா வசந்தமே

தோட்டத்துப் பிரதாபம் - 18


Pic 1

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

Pic 8

Pic 9

Pic 10

Pic 11

Pic 12

Pic 13

Pic 14

Pic 15

Pic 16
 
Pic 17

Pic 18

Pic 19

Pic - 20