தோட்டத்துப் பிரதாபம் - 19
பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும்அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகு ணமாம்தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்புமெலு மிச்சம் பழம்
இது கவி காளமேகப்புலவரின் சிலேடைப் பாடல். தேன்பொழியும் சோலைகளை உடைய திருமலைராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் என்கிறார்.
பாம்பு
– மிகுந்த விஷத்தை உடையதாயிருக்கும்; பித்தனாகிய சிவனின் முடிமேல் இருக்கும்; காற்றைப் புசிக்கும்; உடல் பருக்கும்; மேலெழுந்து படமெடுத்து ஆடும்; சினமுடையதாகும்.
எலுமிச்சம்பழம்
– பெரியவர்களிடத்து
மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டு கை சேரும்; பித்தர்கள் தலையில் தேய்க்கப்படும்; (ஊறுகாய்க்காக) அரியப்படும்; உப்பு அதன் மேல் தூவப்படும்; அதன் சாறு பட்டால் எரிச்சல் உண்டாகும்.
எவ்வளவு
அழகான சிலேடைப்பாடல்! இரண்டுமே நம் தோட்டத்தில் உண்டு என்றாலும்
இரண்டாவதைப் பற்றியதுதான் இன்றைய என் பிரதாபம்.
மெயர் எலுமிச்சைகள் |
எலுமிச்சை மரம் |
எலுமிச்சைதான் என்று உறுதி செய்தாலும் அடுத்த சந்தேகம் வரும், இவ்வளவு சின்ன மரத்தில் இவ்வளவு பெரிய சத்தான சாறு நிறைந்த பழங்கள் எப்படி? இரசாயன உரம் காரணமோ? இல்லவே இல்லை. என் தோட்டத்துக்கு அன்றும் இன்றும் என்றும் உரமென்றால் இயற்கை உரம் மட்டுமே. காய்கறிக்கழிவுகள், இரண்டு மாதங்களுக்கொரு முறை தொழு உரம், மாதமொரு முறை மீன் அமிலம் அவ்வளவுதான். ஒருவேளை பூச்சிகளே அண்டவில்லையோ? அதனால்தான் இவ்வளவு செழிப்பான காய்களோ என்று நினைப்பீர்கள். அதுவுமில்லை. சிட்ரஸ் மரங்களை அண்டாத பூச்சிகளே இல்லை. வழக்கமாய் சிட்ரஸ் வகைகளைத் தாக்கும் எல்லா பூச்சிகளும் எல்லா நோய்களும் எங்கள் தோட்டத்து எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அவை அத்தனையும் சமாளித்து, அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கின்றன என்பதே அவற்றின்பால் எனக்கு அதீதமான பிரியத்தைக் கொடுக்கிறது.
ஆரஞ்சு பூக்கள் |
காரணம் என்னவாக இருக்கும்? நான் அதன்மேல் வைத்த நம்பிக்கையா? சில வாரங்கள் முன்பு gall wasp முட்டையிட்டிருந்த கிளைகளை கவனித்து வெட்டி எறிந்த அக்கறையா? ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்க மறந்து, காலாவதியாகிப்போன கோழிக்கறியை குப்பையில் தூக்கிவீசாமல் இந்த ஆரஞ்சு மரத்துக்கடியில் குழிதோண்டி புதைத்த ரகசியமா? எப்படியோ, என் ஆரஞ்சு மரம் தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்குப் பயணிக்கத் தயாராகிவிட்டது. பூத்திருக்கும் அத்தனையும் காயானால் நிச்சயமாய் கிளை தாங்காது, மரம் தாங்காது. எனினும் சோகையானாலும் சூல்கொண்ட மகளைப் பார்த்துப் பூரிக்கும் தாய்போல நானும் பூரித்து நிற்கிறேன். இனி போதுமான சவரட்சணைகள் செய்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
மாண்டரின் குறுமரம் |
மாண்டரின் குள்ள வகை. இன்னும் காய்க்கத் துவங்கவில்லை என்றாலும் கிளைவிட்டு இலைவிட்டு செழிப்பாக இருக்கிறது. இந்த வருடம் அதுவும் பூத்திருக்கிறது என்பதே ஆனந்தம். தோட்டத்துக்குள் நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு பூவாசம். தேனீக்களுக்கோ பெரும் கொண்டாட்டம்.
எலுமிச்சைப்பூவில் தேனீ |
இந்த வருட மழை இன்னொரு கொண்டாட்டம். கடந்த மூன்று வருடங்களாக மழை இல்லாமல் காய்ந்து கிடந்த பூமிக்கு இவ்வருட மழை புத்துயிரூட்டியுள்ளது. தோட்டத்துச்செடிகளும் மரங்களும் உற்சாகத்தோடு துளிர்விட, உன்னை வளரவிடுவேனா பார் என்று படையெடுத்து வந்திறங்குகின்றன பற்பல பூச்சிகள். அவை என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.
(பிரதாபங்கள் தொடரும்)
ஆகா...!
ReplyDeleteசிலேடைப் பாடலுடன் சிறப்பு...!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteமுயற்சிக்குப் பலன் கிடைத்தது என்றறியும்போது ஏற்படும் ஆனந்தத்துக்கு ஈடிணையில்லை.
ReplyDeleteஉண்மையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteவெள்ளைக்காரன் இதுதான் மையம் என்று வைத்து மொத்த இந்திய நிலத்தையும் அளக்க ஆரம்பித்தான்.
ReplyDeleteஉலகின் மிகப்பெரிய மத மாற்றத்தை அம்பேத்கர் இங்குதான் நிகழ்த்திக் காட்டினார்.
இவ்விரு பெருமைகள் உடைய நாக்பூர் நகரம் ஆரஞ்சு பழங்களுக்கும் பெயர்பெற்ற ஊர். நாக்பூர் இரயில் நிலையம் கடந்தால், ஆரஞ்சு பழத்தை வைத்து அவ்வளவு பொருட்கள் செய்து விற்பனை செய்வதைக் காணலாம்.