17 December 2017

கண்டதும் கேட்டதும் ரசித்ததும்...

எங்கள் இல்லத்தைச் சுற்றி 
நான் கண்ட, கேட்ட மற்றும் ரசித்த காட்சிகள் 
இங்கே உங்கள் பார்வைக்கும்... 


மழைக்கால மாலைப்பொழுதொன்றில் 
எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் காட்சியளித்த 
இரட்டை வானவில்கள். :) 
இவ்வளவு நெடிய வானவில்லைக் கண்டது 
இதுவே முதல்முறை.. 

நீதானா அந்தக்குயில்...


கூகூ….கூ...வென வசந்தகாலத்தின் இறுதியில் வேனிற்காலத்தின் துவக்கத்தில் அதிகாலைப் பொழுதுகளில் குயிலின் கீதம் கேட்பது வரம். கண்ணை மூடிக்கொண்டால் சென்னையிலோ.. திருச்சியிலோ இருப்பேன். ஊரில் இருந்தபொழுது ஒருமுறை கூட குயிலைப் பார்க்க வாய்த்ததில்லை. குரல் மட்டும் கேட்கும். எங்காவது தூரத்து மரத்திலிருந்து விருட்டென்று கூவிக்கொண்டே பறந்துபோகும்போது சிலநொடிகள் பார்த்ததுண்டு. இங்கேயும் நித்தமும் பாடும் குயிலைத் தேடிச் சோர்ந்துபோனேன். வீட்டைச் சுற்றி மரங்கள். எந்த மரத்திலிருந்து பாட்டு வருகிறது என்று உறுதியாய்த் தெரியவில்லை. இன்று காலையில் தற்செயலாகப் பார்க்கிறேன், எதிர்வீட்டு ஈச்சைமரத்தில் ஈச்சம்பழக்கொத்தை வேட்டையாடியபடி சோடிக்குயில்கள். நம்ம ஊரில் பார்க்க முடியாத குயிலை அதுவும் சோடியாக இப்படி ஆஸ்திரேலியாவில் பார்ப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆண்குயில் வந்து ஈச்சம்பழக்கொத்தில் அமர்கிறது. ஐந்தாறு பழம் தின்கிறது. பறந்து வேறிடம் அமர்ந்துகொள்கிறது. பெண்குயில் வருகிறதுஐந்தாறு பழம் தின்கிறது.. பறந்து வேறிடம் அமர்ந்துகொள்கிறது. இரண்டும் இப்படி வெகுநேரம் ரிலே ரேஸ் போல மாறி மாறித் தின்னும் அழகை சன்னல்வழி ரசித்துக் கொண்டிருந்தேன். படம் எடுக்க ஆசையாக இருந்தாலும் எதிர்வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்துவிட வாய்ப்பிருக்கிறதே என்று தயக்கமாக இருந்தது. இறுதியில் தயக்கத்தை ஆசை வென்றுவிடஇதோ நான் ரசித்த அக்காட்சிகள்...


பெண்குயில்
(Australasian koel female - Eudynamys cyanocephalus)

ஆண்குயில்
(Australasian koel male - Eudynamys cyanocephalus)

இரண்டும் மாறி மாறி நடத்திய ஈச்சை வேட்டை 


தோட்டப்பூக்களிடம் ஒரு வேண்டுகோள்

இளஞ்சிவப்பு வண்ணம் இப்போதும் எனக்கு விருப்பம்தான். மறுக்கவில்லை.. அதற்காக அந்நிறத்தில் மட்டுமே மலர்வேன் என்று அடம்பிடிப்பதென்ன என் தோட்டத்துப் பூக்களே… :)

தோட்டத்தில் மலர்ந்த முதல் ரோஜா

மலர்ந்தும் மலராத க்ளாடியோலி மொட்டு (Gladioli bud)

க்ளாடியோலி (Gladioli)

ரோஜா வடிவம் வேறு வண்ணம் ஒன்று.. 

வசந்தத்தை வரவேற்ற முதல் லில்லி மலர்

அழகு லில்லி மலர்கள்..
 
பால்சம் பூக்கள் (Balsam flowers)

வசந்தத்தை விடைகொடுத்து அனுப்பிய கடைசி லில்லி
  
கொளுத்தும் வெப்பம் தாங்காது
கருகித்துவளும் பால்சம் பூக்கள்

புல்லாங்குழல் பறவைக்குப் புது அங்கீகாரம்

எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் விருந்தினர்

ஆஸ்திரேலியாவின் இந்த வருடத்துக்கான (2017) பறவை தெரிவில் காசோவரி, காக்கட்டூ, குக்கபரா, லயர்பேர்ட் உள்ளிட்ட 50 பறவைகள் இருந்தன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இவ்வருடப் பறவையாக பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆஸ்திரேலிய மேக்பை தெரிவு செய்யப்பட்டுள்ளது. விடியலைத் தன் இன்குரலால் கட்டியம் கூறும் இந்தப் புல்லாங்குழல் பறவைக்கு இவ்வங்கீகாரம் கூடுதல் சிறப்பு. (பி.கு. - நான் வாக்களித்த சிரிக்கும் குக்கபராவுக்கு மூன்றாமிடம்.)




நான் ரசித்தவற்றை என்னோடு இணைந்து ரசித்த 
உங்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.