26 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (18)


படிக்காத, கிராமத்துப்பெண்; வெளியுலகம் அறியாப்பேதை. கணவனே உலகம் என்று அவன் காலடியையே சுற்றி சுற்றி வந்தவள். சுந்தரியை நினைக்க நினைக்க வித்யாவின் வேதனை அதிகமானது.

கோமதியம்மா தன்னால் இயன்ற அளவு சுந்தரிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

"சுந்தரி, நீ இனிமே தைரியமா இருக்கணும், போனவன நெனச்சுக் கவலப்படுறதில லாபமில்ல. குழந்தைய பாரு! இனிமே அதுக்காக நீ வாழ்ந்தாகணும். எவ்வளவோ பிரச்சனைகளத் தாண்டி இந்த வாழ்க்கை உனக்குக் கிடச்சிருக்கு! அத நீ வீணாக்கிடக்கூடாது. பிரபுவோட ஆசப்படி இந்தக் குழந்தைய வளத்து ஆளாக்கவேண்டியது உன் பொறுப்பு!"

அவள் தற்கொலைக்கு முயன்றுவிடுவாளோ என்று அவர் பயப்படுவது அவர் பேச்சில் நன்றாகத் தெரிந்தது. சுந்தரி என்ன நினைக்கிறாள் என்று தெரியாததாலேயே வித்யாவுக்கும் அந்தப் பயம் தொற்றியது.

விக்னேஷ் தன் கையாலாகாதத்தனத்தை எண்ணி, மருகிக்கொண்டிருந்தான். நண்பனின் மனைவிக்கும், அவள் பச்சிளம் சிசுவுக்கும் உதவமுடியாத நிலையை எண்ணி தன்னைத் தானே நொந்துகொண்டான்.

சுந்தரியோ மிகவும் உறுதியாய் இருப்பதுபோல் தெரிந்தது. காரணம் தெரியாமல் இந்த ஒருவாரகாலம் எதையெதையோ நினைத்துக் கவலைப் பட்டதைவிடவும், இன்ன காரணம் என்று தெளிவாய்த்தெரிந்தது மனதுக்கு நிம்மதி கொடுத்தது.

கணவன் வருவானா, மாட்டானா, ஏதேனும் சிக்கலில் மாட்டியிருக்கிறானா? என்ன மாதிரியான சிக்கல்? சிறைக்குச் சென்றுவிட்டானா? சித்திரவதைப்படுகிறானா? அவன் பெற்றோர் வந்து வலுக்கட்டாயமாய் அவனைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்களா? அவன் எங்கே என்ன துன்பப்படுகிறானோ?  என்றெல்லாம் உளைந்துகிடந்த மனதுக்கு, இனி அவன் வரப்போவதில்லை என்ற உறுதியான செய்தியும், அவனுடைய இறுதி யாத்திரை இனிதே நடந்தது என்ற செய்தியும் மருந்தாய் அமைந்தன.

அடிபட்டு அனாதையாகத் தெருவில் கிடக்காமல், நண்பனின் உதவியோடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். அவன் மனைவி பிரசவத்துக்கு துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளிடம் சொல்வது சரியல்ல என்று உணர்ந்து தவிர்த்திருக்கிறார்கள், நண்பர்கள். அவன் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் வராததால் தாங்களே முன்னின்று இறுதிச்சடங்கு செய்திருக்கின்றனர். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? மாறாய் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா? சுந்தரி மனத்தெளிவு பெற்றிருந்தாள்.

சுந்தரியைப் பார்க்க பிரபுவின் அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவராய் வந்து சென்றனர். அக்கம்பக்கத்திலிருந்தும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். இப்படி ஒவ்வொருவராய் வந்து அவளது நினைவுகளைக் கிளறிச் செல்வது சரியில்லைஎன்று கோமதியம்மா நினைத்தார். ஆனால் அவருக்கு அதைச் சொல்ல எவ்வித உரிமையும் இல்லாத பட்சத்தில் அமைதியாய் இருந்துவிட்டார்.

வித்யா மேலும் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவும் பகலும் சுந்தரி கூடவே இருந்தாள். இரவில் கண் விழித்துக் குழந்தையைப் பார்த்துக்கொண்டாள். அக்காவின் குழந்தைகளைப் பார்த்துக்கொண்ட அனுபவம் கைகொடுத்தது. விக்னேஷ் விடுப்பில் இருந்தாலும், பகலில் வந்து தேவையானவற்றைச் செய்துவிட்டு இரவு வீடு திரும்பிவிடுவான்.

சுந்தரி தெளிவாய் இருப்பது அவளுடைய நடவடிக்கைகளில் புலப்பட்டது.

அவள் உடலும் சற்று தேறிவந்தது. எழுந்து நடமாடத் தொடங்கியிருந்தாள். குழந்தையை அடிக்கடி மடியில் வைத்துக்கொண்டு உற்சாகத்துடன் கொஞ்சினாள்.

"என் செல்லக்குட்டி....என் அம்முக்குட்டி......என் ராஜாத்தி......என் பவுனு....சக்கரக்குட்டி....அம்மா பாரு....அம்மா பாரு..... இனிமே அப்பா அம்மா எல்லாம் நான் தான்....அப்பா வேணுமின்னு அடம்புடிக்கக் கூடாது....சரியா.....சமத்து.....நான் சொல்லுறதெல்லாம் புரியிதா....சிரிக்கிறே....சிரி....சிரி....."

வித்யா சுந்தரியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னக்கா..?"

"சுந்தரி! இவ்வளவு சீக்கிரம் நீ உன் மனசை தேத்திக்குவேன்னு நான் எதிர்பார்க்கலை. எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு, சுந்தரி...."

"அக்கா! திடீர்னு சொல்லியிருந்தீங்கன்னா  என்னாயிருக்கும்னு எனக்கே தெரியலை. இதை நான் முன்னாடியே கொஞ்சம் யூகிச்சிருந்ததாலயோ என்னமோ என்னால இந்த அதிர்ச்சியை ஏத்துக்க முடியுது. ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு என் உள்மனசு சொல்லிச்சு. ஆனா....என்னன்னு புரியல. இப்ப தெளிவாயிடுச்சி.இனிமே கலங்கமாட்டேன்.  அவரோட ஆச என்ன தெரியுமாக்கா? நான் எப்பவும் சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கணும்கிறதுதான். அத நான் நிறைவேத்த வேணாமா, சொல்லுங்க அக்கா.."

இந்த சின்னப்பெண்ணுக்குள் இத்தனை மனத்துணிவா? வியந்துபோய் அமர்ந்திருந்தாள், வித்யா.

"அக்கா, அவரு ஆசப்படியே பொம்பளப்புள்ள பிறந்திருக்கு. அவரிருந்து எப்படி வளப்பாரோ, அப்படி வளத்து, அதப் பாத்து சந்தோஷப்படுறதுதானக்கா புத்திசாலித்தனம்?"

வித்யா புன்னகைத்தாள். இனி இந்தப் பெண்ணுக்கு தன் பாதுகாப்பு தேவையில்லை என்று உணர்ந்தாள். இவள் எந்தத் தவறான முடிவுக்கும் போகமாட்டாள் என்பது உறுதியாய்த் தெரிந்தது. அன்றே கோமதியம்மாவிடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
 
அவள் புறப்படத்தயாரானபோது விக்னேஷ் வந்தான்.

"வீட்டுக்கு புறப்பட்டுட்டேன்னு வீட்டுக்காரம்மா சொன்னாங்க!"

"ஆமாம்பா, சுந்தரி கொஞ்சம் நார்மல் நிலைக்கு வந்தாச்சு. நானும் வீட்டுக்குப் போய் நாலஞ்சு நாளாகுது. அப்பா புனே போய்ட்டு வந்துட்டாராம். போன்ல எதையும் கிளியரா சொல்லமாட்டேங்கறாரு. என்ன பிரச்சனைன்னு தெரியல.வீட்டுக்குப் போனாதான் தெரியும்."

"சரி, நீ கிளம்பு! நானும் வரவா?"

"வேணாம், விக்கி, இன்னொருநாள் வாங்க!"

வித்யா போய்விட்டாள்.

விக்னேஷ் தொட்டிலுக்கு அருகில் வந்து நின்று குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு அது ஒரு பொம்மைபோல் தெரிந்தது. அகலக் கண்களை விழித்து, கைகால்களை உதைத்துக்கொண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்கப்பெறாத பிரபுவை எண்ணி நெஞ்சம் விம்மியது.கண்கள் கலங்கின.

"என்ன அண்ணே...பாப்பா என்ன சொல்றா....?"

சுந்தரியின் குரல் கேட்டு விக்னேஷ் அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"என்ன அண்ணே, இது? நானே மனசத் தேத்திகிட்டேன், நீங்க இன்னும் அழுதுகிட்டு? நீங்க எல்லாரும் இருக்கிற நம்பிக்கையிலதான் நான் வாழ்ந்துகிட்டிருக்கேன். இல்லைன்னா...எப்பவோ போய்சேர்ந்திருப்பேன்."

"சுந்தரி....என்னம்மா நீ....?"

"பின்ன என்னண்ணே? தைரியம் சொல்லவேண்டிய நீங்களே மனச விடலாமா? அப்புறம் நான் எப்படி தைரியமா இருக்க முடியும்?"

"இல்லம்மா....இனிமே கலங்கமாட்டேன்! தைரியமா இருப்பேன்!"

"அண்ணே…....உங்க கிட்ட……. ஒரு விஷயம் பேசணும்!"

சுந்தரி தயங்கித் தயங்கிச் சொல்ல, விக்னேஷ் என்ன சொல்லப்போகிறாளோ,பக்கத்தில் வித்யாவும் இல்லையே என்று நினைத்துக்கொண்டான்.

"அண்ணே....அக்கா இருக்கும்போதே பேசணும்னு நெனச்சேன். ஆனா அக்கா திடீர்னு வீட்டுக்கு கெளம்பிட்டாங்க....அண்ணே...அது வந்து....வந்து.....என்னய……..ஊருக்கு திருப்பி அனுப்பிடாதீங்க அண்ணே...."

சுந்தரி திடும்மென்று இப்படிச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"அது...அது....." அவன் தடுமாறுவதைக் கண்டு அவள் மிரண்டாள்.

"அண்ணே....உங்கள கெஞ்சி கேக்கறேன் அண்ணே.....நான் இங்கியே ஏதாவது வீட்டுவேல பாத்தாவது என் குழந்தய வளத்துக்கறேண்ணே....அங்க போனா.... எனக்கு அவப்பேரைத் தவிர வேற என்ன கெடைக்கும்? இந்தக் குழந்தய நிம்மதியா வளக்கமுடியுமாண்ணே என்னால? எத்தன நாள் வெட்டியா உக்காந்து சாப்புடமுடியும்? அங்க இருந்தாலும், ஏதாவது வேல செஞ்சாதானே வயித்தைக் கழுவமுடியும்? அத இங்கியே செய்யிறேனே! என் வேதனையாவது மிச்சமாவும். எங்க வீட்டுக்காரு ஆசப்படி சிரிக்கிறேனோ, இல்லயோ....அழுகாமயாவது இருப்பேன்ல...."

கரம் குவித்து கண்ணீருடன் அவன்முன் நின்றவளைப் பார்த்து என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்தன், விக்னேஷ்.

ஐயோ! ஊரில் இவளை வரவேற்க யாருமில்லை என்பது தெரியாமல் இருக்கிறாளே! உண்மையைச் சொல்லிவிடவேண்டியதுதான். ஊருக்குப் போக அவளுக்கு விருப்பமில்லை. அதனால் உண்மையைச் சொல்வதால் ஒன்றும் கெட்டுவிடப்போவதிலை. அதே சமயம், இவளுடைய உதவி இருந்தால்தான் இவள் பெற்றோரைக் கண்டுபிடிக்கவும் முடியும். அவர்கள் எங்கு போயிருப்பார்கள் என்று ஓரளவு ஊகிக்க முடியும். விக்னேஷ் துணிந்து அவளிடம் சொன்னான்.

"சுந்தரி, நீ விரும்பினாலும் உங்க ஊருக்குப் போகமுடியாதும்மா!"

"ஏன், அண்ணே?"

விக்னேஷ் விவரம் சொல்ல, சுந்தரி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். பிரபு வந்து அவர்களிடம் பெண் கேட்டபோது, அவமானப்படுத்தி அனுப்பியதில்தான் அவர்கள் மேல் இவளுக்குக் கோபம். மற்றபடி அவளை எந்தக்குறையுமில்லாமல்தானே வளர்த்தார்கள்! கஞ்சி ஊற்றியபோதும், வயிறு நிறைந்ததே! ஆடம்பரமாய் துணிமணி வாங்கித்தராவிட்டாலும், அரைகுறையாய் அலையவிடவில்லையே!

அம்மாவும் அப்பாவும் அவள்மேல் எத்தனை அன்பு வைத்திருந்தார்கள்? தம்பி அவளிடம் எவ்வளவு பாசம் காட்டினான்?

இனி அவர்களை எல்லாம் எப்போது பார்ப்பேன்? அடியும் உதையும், அவமானமும் பெற்று, பிறந்து வளர்ந்த ஊரைவிட்டுப் போகும்போது எப்படி வயிறெரிந்து போனார்களோ, அந்தப்பாவம்தான் தன்னை இப்படி நிர்க்கதியாக்கிவிட்டதோ?

ஹும்! இனிமேல் அவர்களை எண்ணிப் புலம்பி என்ன பயன்? கண்ணுக்குள் வைத்துப் பார்த்த கணவனே போய்விட்டான்! இனி மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு ஆவதென்ன?

"சுந்தரி! என்னை மன்னிச்சிடும்மா...பிரபுதான் சொல்லவேண்டாம்னு...."

"பரவாயில்லைண்ணே...என்ன கண்கலங்காம வச்சுக்கணும்னு எத்தனப்பேரு பாடுபட்டிருக்கீங்க...இந்த உலகத்துல எத்தனப்பேருக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கும்?"

சுந்தரி சிரித்தாள். இத்தனைத் தெளிவாய் இருப்பவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான்.

சுந்தரி அறியாமல்,  சிறுதொகையை சுந்தரி மற்றும் குழந்தையின் செலவுக்காக கோமதியம்மாவின் கைகளில் திணித்து விடைபெற்றான்.

தொடரும்...

************************************************************************************
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

மு. உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானை, தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
-------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

21 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(17)


சுந்தரி இனி என்ன செய்வாள்? அவளைப் பெற்றவர்களின் கால்களில் விழுந்தாவது அவளை அவர்களிடமே சேர்ப்பித்துவிடலாம் என்றால் அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.

நண்பர்கள் அனைவரும் பண உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் சுந்தரியின் தற்போதைய அத்தியாவசியத் தேவை ஆறுதலும், ஆதரவும். அதைத்தரக்கூடியவர்களாய் விக்னேஷும், வித்யாவும், கோமதியம்மாவும் இருந்தனர்.

சுந்தரியின் எதிர்காலம் குறித்து, மூவரும் கலந்து ஆலோசித்தனர்.

"விக்கி, சுந்தரியை எங்க வீட்டில் தங்கவைக்கிறது ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா வீட்டில் எங்க அக்கா இருக்கா. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவ எடுத்தெறிஞ்சு பேசற டைப். இப்ப அவளோட எதிர்காலமும் கேள்விக்குறியா இருக்கிறதால அவ போக்கே மாறிட்டுவருது. குழந்தைகளைக் காரணமில்லாம போட்டு அடிக்கிறா. என்மேலயும் அப்பா மேலயும் எரிஞ்செரிஞ்சு விழறா. அவளுக்கு ஒரு தீர்வு ஏற்படறவரைக்கும் சுந்தரியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறது சாத்தியமில்ல. வெந்த புண்ணில வேல் பாய்ச்சுறமாதிரி எங்க அக்கா ஏதாவது சொல்லி இவளைக் காயப்படுத்திடுவாளோன்னு பயமா இருக்கு. நான் சொல்றதப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். ஐயாம் வெரி ஸாரிப்பா!"

"நீ ஏன் திவ்யா வருத்தப்படறே? நீ சொல்றதில் இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது. என் நிலைமையும் அப்படிதான்! எங்க அம்மா கொஞ்சம் அனுசரிச்சுப் போறவங்களா இருந்தா பரவாயில்ல. அவங்களும் பட்டுனு ஏதாவது பேசிடுவாங்க. இந்தப் பொண்ணு மனசுடைஞ்சு போயிடும். அதான் எனக்குப் பயமா இருக்கு. நல்லது செய்யறதா நினைச்சிட்டு அவளுக்கு கெடுதல் செய்திடக்கூடாதில்ல...."

"குழந்தை இல்லைன்னாலும் இப்போதைக்கு ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கவச்சிட்டு அடிக்கடி வந்து பாத்துக்கலாம். இப்போ கைக்குழந்தையோட நிக்கிறா. என்ன செய்யறதுன்னே புரியலை."

இடையில் கோமதியம்மா குறுக்கிட்டார்.

"சரிதான், ரெண்டுபேரும் என்ன பேச்சு பேசிகிட்டிருக்கீங்க? அந்தப்பொண்ணுக்கு ஏன் வேற போக்கிடம் தேடிகிட்டிருக்கீங்க? நான் இல்லையா? அத கண்ணா வச்சிப் பாத்துக்க மாட்டனா?  ஏதோ அந்தப் பொண்ண அதப் பெத்தவங்ககிட்ட அனுப்பப்போறீங்கன்னுதான இவ்வளவுநாள் நினைச்சுகிட்டிருந்தேன். அவங்க ஊரவிட்டுப் போனகத எனக்குத் தெரியாதே!  அம்மா. வித்யா! நீ கவலைய வுடு. சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க? நல்ல புள்ளங்க, போங்க!  அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க!"

எவ்வளவு பெரிய விஷயம்! எத்தனை இயல்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய உயர்ந்த மனதுடன் தன் தாயை ஒப்பிட்டு விக்னேஷ் நாணித்தலைகுனிந்தான். வித்யாவுக்கும் தன் இயலாமையை எண்ணி வெறுப்பாய் இருந்தது.

சொந்தமில்லாத நிலையிலும், தன் வீட்டில் தங்கவைத்து ஆதரவளிப்பதுடன், சுந்தரியை தன் மகளைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததைக்கண்டு இருவர் நெஞ்சமும் இளகியது. விக்னேஷ் கண்கள் கலங்க, அந்தம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.

"என்னங்க, தம்பி, இதப்போய் பெரிசு பண்ணிட்டு?"

அவர் கூச்சத்துடன் விலகிநின்றார்.

மருத்துவமனையிலிருந்து சுந்தரியை அழைத்துக்கொண்டு அவள் இருந்த வீட்டுக்கே வந்துசேர்ந்தனர். கோமதியம்மா முன்பே வந்திருந்து ஆரத்தி கரைத்து தயாராக வைத்திருந்தார். பிரபுவின் மரணம் பற்றித் தெரிந்திருந்ததால் தெருவே கூடி நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தது.

சுந்தரியை அவசரமாக கைத்தாங்கலாய் மாடிக்கு அழைத்துவந்துவிட்டாள், வித்யா. கோமதியம்மா குழந்தையை ஏந்தி பின்னால் வந்தார். விக்னேஷ் அவருக்குப் பின்னால் சாமான்களையும், பைகளையும் எடுத்துக்கொண்டு மாடியேறினான். மாடிக்கு வந்து குழந்தையைப் பார்த்த கோமதியம்மாவின் கணவர், அதன் தலை தொட்டு ஆசி செய்தார்.

வித்யா படுக்கையைத் தயார் செய்து சுந்தரியை அதில் படுக்கச் சொன்னாள். மரத்தொட்டில் ஒன்றை, விக்னேஷ்  வாங்கித் தயாராகவைத்திருந்தான். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினார், கோமதியம்மா.

இப்போது விஷயத்தை சுந்தரியிடம் சொல்லியே ஆகவேண்டும். இனியும் காலம் கடத்துவது அழகில்லை. யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுபோல் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

வயதில் பெரியவரும், அனுபவமுதிர்ச்சி உடையவருமான கோமதியம்மாதான் முன்வந்தார்.

படுத்திருந்த சுந்தரியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சுந்தரி மறுபுறம் திரும்பி, சத்தமின்றி அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி தன் முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்தார். இதமாய் அவள் தலையை வருடினார்.

"அம்மா, சுந்தரி! இப்படி ஓயாம அழுதுகிட்டிருந்தா என்ன அர்த்தம்? குழந்தையப் பாரு! அதப் பாத்தாலே போதுமே! எல்லாக் கவலயும் பறந்திடுமே!"

"அம்மா....அவரு....என்ன விட்டுட்டு எங்கம்மா போனாரு?"

"அம்மாடி, மனசத் தேத்திக்கோம்மா.....பிரபுதம்பி இப்ப
 நம்மகூட இல்லம்மா...ஆனா……. அதுதாம்மா ஒனக்குப் பொண்ணா வந்து பொறந்திருக்கு!"

கோமதியம்மா வாயில் துணியை வைத்து பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்.

"கோமதி, அந்தப் பொண்ண தேத்தச்சொன்னா நீ அழுதுகிட்டு இருக்கே!"

அவரது கணவர் அவரைக் கடிந்தார்.

இப்போது அனைவரது பார்வையும், அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள், என்ன சொல்லப்போகிறாள் என்பதிலேயே இருந்தது. சுந்தரியோ எழுந்து மெளனமாய் தலை குனிந்து  அமர்ந்திருந்தாள்.அவள் கண்களிலிருந்து சொட்டுசொட்டாக நீர் படுக்கையை நனைத்தது.  இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

கோமதியம்மாவைப் பார்த்து,

"அம்மா! என்ன நடந்துன்னு எனக்கு மறைக்காம சொல்லுங்க, எதுவா இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன். இப்படி மூடி மறைச்சுப் பேசாதீங்க!"

சுந்தரியின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அனைவருமே வியந்தனர். விக்னேஷுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. தன் அப்பா இறந்த அதிர்ச்சியில் அம்மாவுக்கு சித்தப்பிரமை உண்டானது பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஐயோ...இவளுக்கும் அப்படி ஏதாவது.....

"சொல்லுங்கம்மா…………….! அக்கா....நீங்க சொல்லுங்க, அண்ணே…....நீங்களாவது சொல்லுங்க..."

சுந்தரியின் மனோதிடத்தை வித்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும், இது அவளுக்கு மகிழ்வைத் தந்தது. இப்போது அவள் எதையும் தாங்கும் நிலையில் இருக்கிறாள். இப்போது சொல்வதுதான் சரி.

வித்யா எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள். பிரபுவின் இறுதிக் காரியத்தைத் தாங்களே செய்ததற்கு அவளிடம் மன்னிப்புக் கோரினாள்.

சுந்தரி வெறுமையாய் சிரித்தாள்.

"நான் இருந்திருந்தா என்னக்கா செஞ்சிருப்பேன்? அப்பவும் எனக்கு நீங்க எல்லாரும்தான் உதவியிருக்கணும். இந்த அளவுக்கு என்மேல் பாசத்தோடயும், அக்கறையோடவும் கவனிச்சுகிட்ட உங்களுக்கு எப்படி பதிலுதவி செய்யப்போறேன்னு தெரியலைக்கா…………..  அம்மா……....நீங்க பெத்தப் பொண்ணா இருந்தாகூட இப்படி செஞ்சிருப்பீங்களான்னு தெரியல...எங்கேயிருந்தோ வந்த எனக்காக நீங்க செஞ்சதைப் பாக்கும்போது காலமெல்லாம் நான் உங்களுக்கு சேவை செஞ்சாலும் போதாதுன்னு தோணுது. எனக்காக....நீங்க இத்தனபேர் இருக்குற நம்பிக்கையில தான் என் வீட்டுக்காரு என்ன விட்டுட்டுப் போயிட்டாரு போலயிருக்கு....."

சுந்தரி அடக்கமாட்டாமல் அழுதாள். இதுவரை அடக்கிவைத்திருந்த துயரம்  அத்தனையும் வடியுமளவுக்கு ஓவென்று அழுதாள். அவளைத் தேற்றப்போன வித்யாவை தடுத்துவிட்டார், கோமதியம்மா. அவள் வாய்விட்டு அழுவது ஒன்றே அவள் மனப்பாரம் குறைய வழி என்று அனைவரும் கலங்கிய மனதுடனும் கண்ணீர் சிந்தும் விழிகளுடனும், அவள் ஓயும்வரை காத்திருந்தனர்.

நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது. 

தொடரும்...

***********************************************************

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

மு. உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
-----------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு