5 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(14)

                                  
நாகலட்சுமியிடம் ஒரு மெல்லிய இழையிலான மாற்றம் தெரிந்தது. விக்னேஷ் சொல்வதை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அவ்வப்போது வெளியிடங்களுக்கு அம்மாவும் பிள்ளையும் சென்றுவந்தனர். அம்மாவுக்கு அதிகம் அலைச்சல் கொடுக்காத, அவரை அயரவைக்காத இடங்களாகத் தேர்ந்தெடுத்தான் விக்னேஷ். ஆபிஸில் லோன் போட்டு கார் வாங்கினான். நினைக்கும்பொழுதில், நினைக்கும் இடத்துக்கு அம்மாவை அழைத்துச்செல்ல அது ஏதுவாக இருந்தது.

ஆனாலும், நாகலட்சுமி, மகனின் திருமணப்பேச்சை மட்டும் எடுக்காமல் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். அதுவே விக்னேஷுக்கு வசதியாகவும் இருந்தது. அவர் பாட்டுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யத்துவங்கிவிட்டால் வித்யாவின் நிலை.....? அதனால் அவன் திருமண விஷயத்தில் அம்மா கட்டிக்காக்கும் பொறுமைக்கு மனதளவில் நன்றி சொன்னான்.

வித்யாவை முன்பு போல் இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. அம்மாவுடன் வெளியில் செல்லும் காரணம் இவனுக்கு. அக்காவும் அவள் குழந்தைகளும் புனேயிலிருந்து வந்து வீட்டில் தங்கியிருப்பதால் அவர்களுடன் நேரத்தைச் செலவிடும் நிர்ப்பந்தம் வித்யாவுக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு கடற்கரை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

கடற்கரைக் காற்று இதமாக வீசினாலும், விக்னேஷ், வித்யா இருவரின் மனநிலையும் அதை ரசிக்கும்படி இல்லை. விக்னேஷின் பிரச்சனைக்கு வித்யாவால் ஓரளவு நிம்மதி கிடைத்திருந்த நேரத்தில், வித்யாவுக்கு அவள் அக்கா உருவில் புதுப்பிரச்சனை துவங்கியிருந்தது.

"விக்கி, வீட்ல ஒரே பிரச்சனை! எப்ப பாத்தாலும் அழுகை, புலம்பல்தான்! அத்தானுக்கு வேற பெண்ணோட தொடர்பு இருக்காம். ரொம்ப வருஷமா இருக்காம். அது இவளுக்கு இப்பதான் தெரியவந்ததாம். நேரடியாய்க் கேட்டுட்டாளாம். அவர், ஆமாம், அதுக்கென்ன இப்போங்கறாராம். உன்னோட வாழ்ந்தவரைக்கும் போதும்னு குழந்தைகள அழைச்சுட்டு கிளம்பி வந்துட்டா. அப்பாவுக்கும் எனக்கும் என்ன பண்றதுன்னு புரியலை. அப்பா அடுத்தவாரம் புனே போறார். பேசினாதான் அவர் என்ன சொல்றாருன்னு தெரியும்."

"உங்க அத்தான் மேல் தப்பிருக்காதுன்னு நினைக்கிறியா?"

"அப்படியும் இருக்கலாமில்லே....எங்க அக்காவுக்கு வாய் அதிகம், எல்லாத்தையும் எடுத்தோம், கவுத்தோம்னு பேசற டைப். அவ சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலையே!"

"நீ சொல்றதுதான் சரி. எதையும் ஆராயாம ஒரு முடிவுக்கு வரது சரியில்லைதான்! உங்கப்பா நல்ல செய்தியோடு வருவார்னு நம்புவோம்!"

"சரி, இப்ப எங்க அத்தை...அதான் உங்கம்மா எப்படி இருக்காங்க?"

"ம். நல்ல முன்னேற்றம் தெரியுதுப்பா. சாப்பாட்டில மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துகிட்டா போதும், இன்னும் சீக்கிரமா தேறிடுவாங்க."

"எப்படியோ...எல்லாப் பிரச்சனையும் சீக்கிரமா தீர்ந்து நம்ம கல்யாணம் நடந்தாப் போதும்னு இருக்கு எனக்கு!" 

"அவ்வளவு அவசரமா உனக்கு?"

"ஏன், உங்களுக்கு அவசரமில்லையா?    பிரபுவப் பாருங்க, எவ்வளவு சந்தோஷமா இருக்கார்னு, எனக்கு அவங்க ரெண்டுபேரையும் பார்த்தாலே கல்யாண ஆசை வந்திடுது."

"இங்கே பாரு, வித்யா, காதலிக்கிறதில் இருக்கிற சுகம் கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்காது."

"ஆகா! ரொம்ப அழகுதான்! சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்கிற மாதிரி இருக்கு.”

"எங்க, புளிக்குதான்னு பாக்கறேன்"

என்று கூறிக்கொண்டே வித்யாவின் கரத்தை எடுத்து முத்தமிட முனைய, அவள் வெடுக்கென்று இழுத்துக்கொண்டு,

"ஏதேது? ரொம்பத் தேறிட்டீங்க, போலயிருக்கு!" என்று அழகு காட்டினாள்.

"ஏய்! நீதானே சொன்னே?"

"ஆமாம், சொன்னேன், சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு... நேரமாச்சு, எழுந்திரிங்க,போகலாம்!"

இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதுபோல் வித்யா கிளம்பத்தயாராக, விக்கி பரிதாபமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

"என்னைப் பாத்தா உனக்கு பாவமாயில்லையாப்பா?"

"இல்லவே இல்லை. அம்மாகிட்ட சத்தியம் பண்ணிட்டு வந்து என்கிட்ட என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு? கிளம்புங்க, நீங்க வரலைன்னா நான் போறேன்!"

"நீ போனதுக்கப்புறம் எனக்கென்ன வேலை? இரு, நானும் வரேன்!"

இருவரும் கடற்கரை மணலைத் தட்டிவிட்டு எழுந்து செல்லும் அழகை பின்புறத்திலிருந்து அலைகள் ஒன்றையொன்று முட்டி மோதியவண்ணம் கரைக்கு வந்து ரசித்துச் சென்றன.

கையில் செருப்பைப் பிடித்துக்கொண்டு மணலில் கால் புதைய ரசித்து நடந்தவளைத் தானும் ரசித்தபடியே உடன் நடந்த விக்னேஷை அவன் செல்போன் அழைத்தது.

"ஹலோ. விக்னேஷ்தான்! சொல்லுங்க!"

"....என்....என்ன.......என்ன....."

அதிர்ச்சியில் உறைந்து நின்றவனின் கையிலிருந்து போன் நழுவி விழ......வித்யா பதட்டமடைந்தாள்.

"என்ன விக்கி? யாரு? என்னாச்சு?"

“……………………”

"என்னப்பா? என்னாச்சு?"

"ஐயோ........பிரபூ......."

வித்யா அவனை உலுப்ப, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவன், சட்டென்று மடிந்து அமர்ந்து அழத்துவங்க, எதுவும் புரியாமல் வித்யா தவிப்படைந்தாள்.

கீழே விழுந்த கைபேசியை எடுக்க......தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்பது புரிந்தது.படபடப்புடன் பேசினாள்.

"ஹலோ.....நான் விக்னேஷோட ஃபிரெண்ட் பேசறேன்! அவர்...அவர் பேசற நிலையில் இல்லை. என்ன விஷயம், சொல்லுங்க!"

"அய்யய்யோ...எப்போ......எந்த ஹாஸ்பிடல்?"

விவரம் சொன்னதும், "நாங்க உடனே வரோம்!" வைத்துவிட்டாள்.

விக்னேஷின் அருகில் சென்று அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவன் கண்ணீர் அவள் மார்பை நனைக்க,  அவள் விழிவழிநீரோ. அவன் உச்சந்தலையை நனைத்தது.

அவ்வழியே சென்ற குடும்பம் ஒன்று  இது ஒரு காதல் நாடகமென்று நினைத்து தூ என்று தூற்றிச் சென்றது. வித்யா எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன செய்வது என்பதில் இருந்தது அவள் கவனம்.

அவள் மனக்கண்ணில் சுந்தரி வந்துபோனாள். நிறைமாத கர்ப்பிணி! எப்படித்தாங்குவாள் இந்த இடியை? பெற்றவரை...உடன்பிறந்தவனை...ஊரை...உறவுகளை....எல்லாம் விட்டுவிட்டு நீயே தஞ்சம் என்று வந்தவளை நிராதரவாய் தவிக்கவிட்டுச் சென்றவன்மேல் கோபம் வந்தது. அப்படி என்ன அவசரம் அவனுக்கு? இத்தனைச் சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் பிரியவேண்டிய நிர்ப்பந்தம் என்ன? காலன் அவனுக்கு கார் வடிவத்திலா வரவேன்டும்?

போனவன் போய்விட்டான். இனி சுந்தரியின் எதிர்காலம்? என்ன பாவம் செய்தாளென்று இவ்வளவு பெரிய தண்டனை?
கேள்விகள் வித்யாவைக் குடைந்தன.

ஒருவாறாக விக்னேஷைத் தேற்றி மருத்துவமனை வந்தாயிற்று.

அங்கே மேலெல்லாம் ரத்தக்கறையுடன் ராஜாராம் நின்றிருந்தான். பிரபுவின் அலுவலக நண்பன். உறவினரைப் பார்க்க அவ்வழியே சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறினான். பிரபுவின் பேரில்தான் தவறென்றான். எதற்கு அப்படியொரு அசுரவேகத்தில் பைக்கை ஓட்டிவந்தான் என்பது புரியவில்லை என்றான். தூக்கி எறியப்பட்டவனை குற்றுயிரும், குலையுயிருமாய் தான் தான் மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும், வரும்போதே உயிர் பிரிந்துவிட்டதாகவும் கூறி அழுதான்.

விக்னேஷ் இன்னமும் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தான். ஒரே நண்பன். எல்லா நற்குணங்களுக்கும் சொந்தக்காரன். நெஞ்சத்துணிவு மிக்கவன். எத்தனைக் கனவுகளோடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தான்....எல்லாமே கனவுகளாகவே போய்விட்டதே...... சுந்தரி......ஐயோ..... சுந்தரியை எப்படித் தேற்றுவது? அவள் எப்படித் தாங்குவாள்? அந்த அப்பாவிப் பெண்ணுக்கு இது தெரியுமா?

இன்னும் அவளிடம் சொல்லவில்லை என்றான் ராஜாராம். அவளிடம் இந்தத் துக்கத்தை எப்படிச் சொல்வது? தாங்குமா அவளது சின்னஞ்சிறு இதயம்? அதிர்ச்சியில் ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால்...... 

'சுந்தரியின் பெற்றோர் ஊரைவிட்டுப் போன செய்தியையே அவளிடம் சொல்லவேண்டாமென்றாயே பிரபு! இப்போது நீ திரும்பி வரவே முடியாத இடத்துக்குப் போய்விட்டாய் என்ற செய்தியை நான் எப்படி அவளிடம் சொல்வேன்? அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாயே..... இனி அவள் காலமெல்லாம் கண்ணீர் விடுவதை நாங்கள் காணநேருமே! கை, கால் இழந்து முடமாகவேனும் அவள் கண்முன் வளையவந்திருக்கக் கூடாதா? இப்படியா கண்மூடித் திறப்பதற்குள் கண்மறைந்து போகவேண்டும்? பிரபு...என் உயிர் நண்பா....என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாயே.....'

விக்னேஷின் உள்மனம் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்தது.

 தொடரும்...

************************************************************************************************
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

மு. உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

7 comments:

 1. கதைசொல்லிச் செல்லும் பாங்கு நிஜமாக
  நடப்பதனை விவரித்துச் சொல்வதைப் போலவே
  இருப்பதால் பிரபுவின் மரணம் கொஞ்சம்
  திடுக்கிடவைக்கிறது.பிரபுவின் மரணம் நிஜம்தானா?

  ReplyDelete
 2. கதை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது..

  ReplyDelete
 3. படபடப்புத்தான் படிக்கப் படிக்க..

  ReplyDelete
 4. @ Ramani,

  பின்னூட்டத்துக்கு நன்றி ரமணி சார். நிஜ வாழ்விலும் சில மரணங்கள் சிலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடுகிறதே. இந்தக் கதையின் பின்னணியிலும் ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. கதையின் முடிவில் அதைப் பற்றிச் சொல்கிறேன். தொடர்ந்து வருவதற்கு நன்றி.

  ReplyDelete
 5. @ வேடந்தாங்கல் - கருன்,

  தொடர்வதற்கு நன்றி கருன்.

  @ ரிஷபன்,

  கருத்துக்கு நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 6. அலைகளை ரசித்துதான் வார்த்தைகள் அமையும்.உங்க பதிவில்தான் அலைகள் கதாபாத்திரங்களை ரசித்துவிட்டு செல்வதாக படித்து வியப்புற்றேன்.அருமையா எழுதுறீங்க.அடுத்த பகுதிக்கு ஆர்வமாக உள்ளேன்.

  ReplyDelete
 7. @ thirumathi bs sridhar,

  சின்ன விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ரசித்ததோடு, அதைப் பாரட்டிய உங்களுக்கு என் அன்பு நன்றி ஆச்சி. தொடர்ந்துவருவதற்கும் நன்றி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.