17 August 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று. 



அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சிலபுள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில.. 

வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும். 

புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும்,  ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



9 August 2020

ஆஸ்திரேலியாவின் ரசனையான உணவுவகைகள்




எந்த நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் பிரசித்தமான உணவுவகையை ருசிபார்ப்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான உணவுவகைகளை சுவைக்க நிச்சயம் விரும்புவார்கள். லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா, டிம்டாம், ஆன்ஸாக் பிஸ்கட்ஸ், கங்காருவால் சூப் என ஆஸ்திரேலியாவின் உணவுரசனையை மெய்ப்பிக்கும் வகையில் நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு.

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் ஒன்றான வெஜிமைட் உருவான கதையைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்களின் உணவுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன முக்கியமான அடையாளம் வெஜிமைட். இதன் பிரத்தியேக உப்பும் கசப்பும் கலந்த சுவைக்கு அடிமையாகிப் போன ஆஸ்திரேலியர்கள் பலர். ஜாம், பட்டர் போல பிரெட்டில் தடவி சுவைக்கக்கூடிய வெஜிமைட் மது உற்பத்திக்கூடங்களில் பயன்படுத்தப்படும் brewer’s yeast எனப்படும் தேறல் நொதியையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் கொழுப்பு கிடையாது, சர்க்கரை கிடையாது. முழுக்க முழுக்க சைவ பதார்த்தம்.



இன்னும் இரண்டு வருடங்களில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கும் வெஜிமைட் ஏன் உருவானது தெரியுமா? முதலாம் உலகப் போர்க்காலத்தில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த Marmite சுவைத்துப் பழகிய ஆஸ்திரேலிய நாவுகளுக்கு அது இல்லாமை வெறுமையை உண்டாக்கியது. இந்த சமயத்தில் Fred Walker & Co. நிறுவனம் அதற்கு மாற்று தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. வேதியியலாளரும் உணவு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருந்த Cyril Percy Callister இடம் அதற்கானப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒரு சுவைக்கு பழகிய நாவுகளை மற்றொரு சுவைக்குப் பழக்கவேண்டுமே. முதலில் மக்களிடம் புதிய பொருளைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இந்த புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசுத்தொகையுடன் கூடிய பெயர் சூட்டும் போட்டியொன்று பொதுவில் நடத்தப்பட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு Fred Walker-ன் மகள் Sheilah விடம் விடப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தப் பெயர்தான் Vegemite.


பலதரப்பட்ட விளம்பரங்களுக்குப் பிறகும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் ஒருவேளை பெயர்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் Parwill என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதும் விற்பனை சரிவே. விற்பனையை அதிகப்படுத்த பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன. Kraft walker cheese உற்பத்திப் பொருட்களுடன் இலவச இணைப்பாக வெஜிமைட் கொடுக்கப்பட்டது. இது குறித்த கவிதைப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அமெரிக்க Pontiac கார்கள் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவில் வெஜிமைட் சேர்க்கப்பட்டது. இப்படியாக படிப்படியாக 1940 களின் பின்பகுதியில் பத்துக்கு ஒன்பது ஆஸ்திரேலிய வீடுகளில் வெஜிமைட் புழக்கத்துக்கு வந்தது.



இன்று பில்லியன் ஜார்கள் விற்பனையைக் கடந்து இன்னமும் அதிரடியாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது வெஜிமைட். காலத்தோடு இணைந்த விளம்பரம்தான் அதற்கு முக்கியக் காரணம் எனலாம். பன்னாட்டு கலாச்சாரம் பரவத்தொடங்கிய காலத்தில் 1983 வாக்கில் வெஜிமைட் என்ற பெயருக்குப் பதிலாக Multicultural என்ற பெயரைத் தாங்கி கீழே spread it around என்ற வாசகத்துடன் பன்னாட்டு மக்களையும் கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. 


சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாட்டுத் தொடரின்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ash Barty –க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவரை சிறப்பிக்கும் வகையிலும் Bartymite என்ற பெயர் தாங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. விற்றும் தீர்ந்தன.  

ஆஸ்திரேலியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை என்கிறார்கள் grease போன்ற இதன் நிறமும், வாடையும் பிரத்தியேக கடுஞ்சுவையும் பிடிக்காமல் போன அயல் நாட்டவர்கள். உங்களுக்கெல்லாம் அது ஒரு உணவுப்பொருள் மட்டுமே, எங்களுக்கோ அது உணர்வின் பொருள் என்கிறார்கள் இவர்கள். உண்மைதானே.



அடுத்தது Fairy bread. பெயரைச் சொன்னவுடனேயே ஆஸ்திரேலியக் குழந்தைகள் சப்புக்கொட்டும். இதுவும் ஆஸ்திரேலியக் கண்டுபிடிப்புதான். வழக்கமான white bread-ன் இருபுறமும் வெண்ணெய் அல்லது மார்கரின் தடவி அதன் மேல் hundreds and thousands எனப்படும் சர்க்கரைப்பாகில் செய்யப்பட்ட கடுகளவிலான குட்டிக்குட்டி வண்ண மணிகளைத் தூவினால் அதுதான் fairy bread.

அடுத்தது பாவ்லோவா. ரஷ்யாவின் பிரபல பாலே நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த அன்னா பாவ்லோவா Imperial Russian Ballet நிறுவனத்தின் முதன்மைக் கலைஞராக இருந்தவர். அவர் தனித்து ஆடும் The Dying Swan என்னும் நடனத்தை சுமார் 4000 தடவைக்கு மேல் மேடையேற்றியிருக்கிறார் என்பதும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்று உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பாலே நடனக் கலைஞர் என்பதும் அவரது பெருமைகளுக்குச் சான்று. பிரசித்தமான பாலே நடனக்கலைஞரான அன்னா பாவ்லோவாவுக்கும் ஆஸ்திரேலியாவின் பிரசித்த கேக்கான பாவ்லோவாவுக்கும் என்ன தொடர்பு? அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த கேக்குக்கு பாவ்லோவா என்று பெயரிடப்பட்டதாம். 


முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன்ஃப்ளார், கேஸ்டர் ஷூகர், வினிகர் வனிலா எஸன்ஸ் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கேக் போன்ற இனிப்பு வகையான இதற்கு மேலே க்ரீமும் பழங்களும் வைத்து அலங்கரிக்கப்படுகிறது. 1935 -ல் The Advocate பத்திரிகையிலும் தொடர்ந்து 1937-ல் The Australian Women’s Weekly இலும் பாவ்லோவா கேக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. நியூசிலாந்தோ பாவ்லோவா கேக் தங்களுடைய கண்டுபிடிப்பு என்றும் அது தாங்கள் வைத்த பெயர் என்றும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தங்களுடையவை என்று உரிமை கோரும் பட்டியலில் அடுத்து வருவது லாமிங்டன். ஸ்பான்ஞ் கேக் அல்லது பட்டர் கேக் துண்டுகளை உருக்கிய சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து உலர்தேங்காய்த்தூளில் புரட்டியெடுத்தால் அதுதான் லாமிங்க்டன். இதற்கு பின்னாலிருக்கும் கதை வெகு சுவாரசியம்.


1896 முதல் 1901 வரை குவீன்ஸ்லாந்தின் கவர்னராக இருந்தவர் லார்ட் லாமிங்க்டன். அவருடைய முதன்மை சமையல் பணியாளராக இருந்தவர் Armand Galland என்பவர். ஒருமுறை லார்ட் லாமிங்க்டனை சந்திக்க வந்திருந்த எதிர்பாரா விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய சூழலில் முதல்நாள் செய்த வனிலா ஸ்பான்ஞ் கேக்கைத் துண்டுகளாக்கி சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து மேலே உலர்தேங்காய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறினார் என்றும் விருந்தினர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போய் செய்முறை வாங்கிச் சென்றார்கள் என்றும் அதனாலேயே லார்ட் லாமிங்க்டன் பெயரால் இது லாமிங்க்டன் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஒரு கதை உள்ளது. அதெல்லாம் இல்லை, வெலிங்க்டன் என்று எங்கள் தலைநகரின் பெயரால் நாங்கள் உருவாக்கிய இனிப்பை ஆஸ்திரேலியர்கள் லாமிங்க்டன் என்று பெயர் மாற்றி தங்களுடையது என மார்தட்டுகிறார்கள் என்று மறுக்கிறார்கள் நியுசிலாந்துக்காரர்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் லாமிங்க்டனைக் கொண்டாடுவோம் என்று சொல்லி ஜூலை 21 ஆம் நாளை தேசிய லாமிங்க்டன் தினமாக அறிவித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டோம் நாம். கூடவே lammo என்ற செல்லப்பெயரையும் சூட்டிவிட்டோம். 


 
இவை தவிர ஆன்ஸாக் பிஸ்கட்டுகள் குறித்த வரலாற்றை முந்தைய பதிவிலேயே பார்த்தோம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ANZAC பிஸ்கட்கள், உணவுப்பொருள் என்பதையும் மீறி அதற்குள் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைப்பாடும் போர்வீரர்களுக்கான நினைவஞ்சலியும் என்றென்றும் தனித்துப் பிரித்தெடுக்க இயலாதவை.

ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்த உணவுக்கலாச்சாரத்தைப் பேணும்போது பன்னாட்டு கலாச்சாரத்தை மையமாய்க் கொண்ட ஆஸ்திரேலியா, பன்னாட்டு கலாச்சார உணவுவகைகளோடு காலங்காலமாய் தம் உணர்வுகளோடு பின்னிவரும் தனித்த உணவுக்கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பது போற்றத்தக்க ஒன்றல்லவா?  




8-6-20 அன்று SBS Tamil  வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. ஒலிவடிவத்தைக் கேட்க இங்கு சொடுக்கவும். 

(படங்கள் உதவி இணையம்)