குட்டித்தோட்டம் என்றாலும் வீட்டுத்தோட்டத்தின் அருமை இப்போது அதிகமாகவே தெரிகிறது. இதிலிருந்து கிடைக்கும் காய்கறி, கீரைகள் தயவால் ஊரடங்கு காலத்தில் வெளியில் போகாமல் வீட்டிலேயே ஓரளவு சமாளித்துக்கொள்ள முடிகிறது என்பதும் சிக்கனமாக இருக்கமுடிகிறது என்பதும் மிகப்பெரிய நிம்மதியும் சந்தோஷமும்.
கத்தரிக்காய்கள் இப்போதும் காய்த்துக்கொண்டிருக்கின்றன. பெரிய காய் என்பதால் ஒரு
காய் சமைத்தாலே ஒரு பொழுது ஓடிவிடும். தேவைப்படும்போது ஒரு காயை செடியிலிருந்து
பறித்து சமைத்துக் கொள்கிறேன். சென்ற வருடம் கத்தரிக்காய்கள் எக்கச்சக்கமாக காய்த்தபோது வற்றல் போட்டு வைத்துக்கொண்டதால் இப்போது நினைத்தவுடன் சட்டென்று ஒரு வத்தக்குழம்பு வைத்துவிடமுடிகிறது.
பயித்தங்காய்கள் கிட்டத்தட்ட காய்த்து முடியும் பருவத்தில் இருக்கின்றன. ஏற்கனவே காய்த்தவற்றை ஆசை
தீரும்வரை சாப்பிட்டு அனுபவித்தாச்சு. அதிகப்படியாக காய்த்தவற்றை கொடியிலேயே
முற்றவிட்டுப் பறித்து உரித்து விதைகளைக் காயவைத்து எடுத்துவைத்திருக்கிறேன்.
ஊறவைத்து தட்டைப்பயறு காரக்குழம்பு, சுண்டல் என பயன்படுத்தலாம். அடைக்கு ஊறப்போடும்போது கைப்பிடி சேர்த்து
ஊறப்போட்டு அரைக்கலாம்.
தேவைக்கு மேல்
காய்க்கும் பயத்தங்காய்களைப் பதப்படுத்திவைக்க வேறு என்ன செய்யலாம் என்று தேடியதில் Blanching
& Freezing முறை பற்றி
அறிந்தேன். இது காய்கறியில் உள்ள நொதியங்களை (enzymes) செயல்படவிடாமல் தடுக்கும் முறை. இம்முறையில்
பதப்படுத்தப்படும் காய்கறிகளை ஒரு வருடம் வரை ஃப்ரீஸரில் வைத்திருந்து
பயன்படுத்தமுடியும். மிகவும் எளிய முறைதான்.
1. காய்களைக்
கழுவித் துண்டுகளாக்கவேண்டும்.
2. கொதிக்கும்
நீரில் மூன்று நிமிடம் போட்டு எடுக்கவேண்டும்.
3. உடனேயே குளிர்ந்த
நீரில் இரண்டு மூன்று தடவை அலசி வடிகட்டவேண்டும்.
4. பேப்பர் டவலில்
நன்கு துடைத்துவிட்டு காற்று புகாதபடி ziplock கவர்களில் தேவைக்கேற்ற அளவுகளில் போட்டு Freezer-ல் பத்திரப்படுத்தவேண்டும். அவ்வளவுதான்.
முதல்முறை செய்திருக்கிறேன். இனிதான் பார்க்கவேண்டும் எப்படி இருக்கிறதென்று.
பரங்கிக்காய் கொடி
(இது முன்பிருந்த Kent pumpkin வகை இல்லை. Queensland Blue pumpkin என்னும் வேறு வகை) போன தடவை எக்கச்சக்கமாய்க் காய்த்தவற்றை (20-25 இருக்கலாம்) அக்கம்பக்கத்திலும் நட்புகளுக்கும் கொடுத்துத் தீர்த்தேன். அதற்கு மேலும்
காய்த்தவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.
பரங்கிக்காய்களை வெட்டாமல் ஈரப்பதமற்ற உலர்வான இடத்தில் பத்திரப்படுத்தினால்
மூன்று முதல் ஆறு மாதங்களுக்குக் கெடாமல் இருக்குமாம். இனி அதிகமாகக் காய்த்தால் கவலையில்லை. பத்திரப்படுத்திவைத்துக் கொள்ளலாம்.
புதினா அதிகமாக
விளைந்திருந்தபோது பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்திருக்கிறேன். துவையல், ரசம்,
புலவு, குருமா, பிரியாணி என முடிந்தவரை உணவில்
சேர்த்துக்கொள்கிறேன். வல்லாரைக்கீரை பறித்து நிழலில் காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். சூப், துவையல், பொடி என பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் லேகியம் கூட செய்துவைத்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய்
அதிகமாய்க் காய்த்தபோது பறித்துக் கழுவி காம்பைக் கிள்ளிவிட்டு ziplock கவரில் போட்டு freezer-ல் வைத்துவிட்டேன். கொஞ்சத்தை மோர்மிளகாய்
போட்டுவைத்திருக்கிறேன். அதற்கும் மேல் காய்த்த மிளகாய்களை பழுக்கவிட்டுப் பறித்து
காயவைத்து மிளகாய் வற்றலாக்கினேன். பிறகு வறுத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள பூண்டுமிளகாய்ப்பொடி
செய்து வைத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு மேல் வரும்.
எலுமிச்சை மரத்தில் முதல் காய்ப்பாக எண்ணி பத்துப் பழங்கள். மொத்தம் 2 கிலோ இருக்கின்றன. பாதியை ஊறுகாய் போட்டுவைத்திருக்கிறேன். பெரிய பழங்கள் என்பதால் இதுவே ஒரு வருடத்துக்கு வரும். மீதியை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி பத்திரப்படுத்த எண்ணியுள்ளேன். தேவைப்படும்போது தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கலந்தால் போதும், எலுமிச்சை ஜூஸ் தயார்.
தோட்டத்தில்
எதிர்பார்த்த விளைச்சலைக் கொடுக்காதவை வெங்காயமும், உருளையும்தான். முதலில் சுணக்கமாக இருந்த முள்ளங்கி கூட இப்போது பலன் தர ஆரம்பித்துவிட்டது.
வீடடைந்துகிடக்கும் இந்த நாட்களில் தோட்ட வளர்ப்பும் அதில் செலவழிக்கும் நேரமும்
உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகுந்த பயனைத் தருவதை அனுபவபூர்வமாய் உணர்கிறேன். தற்போது குளிர்காலம் என்பதால் குளிரில் முடங்கியபடி காத்திருக்கிறோம் வசந்தம் மற்றும் கோடையின் வரவுக்காக நானும் என் தோட்டமும்.
(பிரதாபங்கள் தொடரும்)