அவள் கையிலிருந்த குழந்தையையும் கழியையும் புல்தரையில்
வைத்துவிட்டு கன்றின்
கயிற்றைத் தளர்த்தினாள். கன்றும் பசுவும்
பக்கம் பக்கமாய் படுத்திருந்தன.
அவள் ஒவ்வொருநாளும்
ஒரு புதிய இடத்தைத் தேர்ந்தெடுத்து கன்றைக் கட்டினாள். கன்றைக் கட்டிப்போடுவது அவசியமாயிருந்தது. இல்லையெனில் அது தன் தாயுடன் அந்த பரந்தவெளியில் தன் விருப்பத்துக்குத் திரிந்து தொலைந்துவிடக்கூடும். அதைத் தேடிக்கண்டுபிடிப்பதிலேயே மொத்த நேரமும்
போய்விடும். கையில் குழந்தை வேறு. ஒருவேளை பசு அவளை அந்தப் பரந்தவெளியில் முட்டவந்தால்
கையில் குழந்தையுடன் என்ன செய்வாள்?
அவளோ நகரத்துப் பெண், பசுவைக் கண்டாலே பயம். ஆனாலும் பசுவுக்கு அது தெரிந்துவிடக்கூடாது
என்பதில் கவனமாக
இருந்தாள்.
கன்றினை
பட்டியில் அடைக்கும்போது பசு எழுப்பும் கண்டனக் கதறல் கேட்டு முதலில் பயந்தோடிக் கொண்டிருந்தாள். அவளது அச்செயல் அந்தப் பசுவையும் கன்றையும்
திருப்திப்படுத்தியது.
ஆனால் அவள் கணவனை ஆத்திரங்கொள்ளச்
செய்தது. அவளை தகாத வார்த்தைகளால் ஏசினான். அவளை நோக்கி முன்னேறும் பசுவை கழியைச் சுழற்றியும், கடுமையான வார்த்தைகளால் மிரட்டியும், எதிர்கொண்டு திரும்பி ஓடச்செய்யுமாறு அவளைக்
கட்டாயப்படுத்தினான்.
அவன் சொன்னபடி செய்துவிட்டு, வெளிறிய முகத்துடன் திரும்பி வந்தவளைக் கண்டு
சிரித்தபடி சொன்னான்,
“இதுதான் ஒரே வழி!”
பல விஷயங்களில்
அவன் அந்தப் பசுவை விடவும் மோசமானவனாக இருந்தான். பசுவை வழிக்குக் கொண்டுவருவதற்கான விதிகள்
அந்த மனிதனுக்கும் ஒருவேளை பொருந்துமோ என்று அவள் நினைப்பதுண்டு. ஆனால் அந்தப் பசுவிடத்தில் கூட பிரச்சனை
உண்டாக்கிக்கொள்வதில்
அவளுக்கு விருப்பமில்லை.
அன்று
வழக்கத்தை விடவும் ஒருமணி நேரம் முன்னதாகவே கன்றினைக் கொட்டிலில் அடைத்தாள். அன்றைய பொழுது முழுவதும் மன சஞ்சலத்துடனே
வளையவந்தாள். அன்று திங்கட்கிழமை என்பதும் அவளுக்கும்
அவள் குழந்தைக்கும்
ஒரே துணையான அவள் கணவன்
இனி வாரக்கடைசியில்தான்
மறுபடியும் வீட்டுக்கு
வருவான் என்பதும் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன என்பதும் அக்கம்பக்கத்தில் கிட்டத்தட்ட
ஐந்து மைல் தூரத்துக்கு ஆளரவம் கிடையாது என்பதும் அவள் கவலைக்கு முக்கியக் காரணங்கள். அவன் பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள
ஒரு ரோமக்கத்தரிப்பு நிலையத்தில் ரோமக்கத்தரிப்பாளனாய் பணிபுரிந்தான். அன்று விடியற்காலையில்தான் பணியிடத்துக்குப் புறப்பட்டு சென்றிருந்தான்.
அவள் குடியிருந்த வீடு முன்பொரு சமயம் சாராயக்கடையாய் இருந்தது. பல வழிப்போக்கர்கள் அவ்வழியே அடிக்கடி வந்துபோனதன் காரணமாய் அந்த வீட்டின் முன்னால்
ஒரு வழித்தடம் உருவாகியிருந்தது.
அவளுக்கு குதிரையில்
வரும் மனிதர்களைப் பற்றி பயமேதுமில்லை. ஆனால்
நகரத்திலிருந்து பெரும் போதையுடன் முதுகுச்சுமை சுமந்து வரும் வழிப்போக்கர்களிடத்தில் பேரச்சம்
கொண்டிருந்தாள்.
இன்றும் ஒருவன் அவள் வீட்டுப் பக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
இவளிடம் வந்து உண்பதற்கு ஏதாவது தருமாறு கேட்டான். அவளது பச்சிளம்குழந்தை பசியால் பொறுமையிழந்து அவளது ஆடை மறைத்த மார்பின்மேல் தன்
சின்னஞ்சிறு முஷ்டியால் அடிப்பதைப் பார்த்த அந்த மனிதனின் பார்வையும் பல்லிளிப்பும்
அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை விடவும் அச்சந்தருவதாய் இருந்தன. அவள் அவனுக்கு ரொட்டியும் இறைச்சியும் கொடுத்தாள். கணவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளே படுத்திருப்பதாக சொன்னாள். அவள் தனியளாய் இருக்கும் நாட்களில் அனைவரிடமும்
இதையே சொல்லிவந்தாள்.
வீட்டின் பின்புறம்
தனித்து இருந்த சமையலறையிலிருந்து வீட்டினுள் படுக்கையறைக்கு சென்று தன் கணவனிடம் ஏதோ
கேட்பது போலவும் அவனிடமிருந்து பதில் பெறுவதுபோலவுமாக முடிந்தவரைக்கும் குரலை மாற்றிப்
பேசினாள்.
ஆஸ்திரேலிய
காடுறை வீடுகளின் பொதுவமைப்பு
போன்றே அவளுடைய ஒரே
ஒரு படுக்கையறை கொண்ட அந்த வீட்டுக்குப் பின்புறம் சற்றுத்தள்ளி சமையலறை தனித்து அமைந்திருந்தது. அந்த வழிப்போக்கன் அவளுடைய சமையலறையில் தன்
கெட்டிலை சூடுபடுத்திக்கொள்ள அனுமதி கேட்டான். ஆனால் அவள் அவனை உள்ளே அனுமதிக்காமல் தானே
அவனுக்கு தேநீரைத் தயாரித்துக் கொடுத்தாள். அவன் அதை சமையலறைக்குப் பக்கத்திலிருந்த
விறகுக் குவியலின் மீது அமர்ந்தபடி குடித்தான். அவன் அந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தான். அந்த வீட்டின் பலகைச் சுவர்களுக்கு மத்தியில்
பல இடங்களில் விரிசல்கள் இருந்தன.
அவன் அவளிடம் கொஞ்சம்
புகையிலை கேட்டான்.
அவள் தன்னிடம் எதுவுமில்லை என்றாள். அவன் அதைக் கேட்டு இளித்தான். விறகுக்குவியலுக்குப் பக்கத்தில் களிமண்ணாலான
ஒரு உடைந்த புகைக்குழாயை
அவன் பார்த்திருந்தான்.
வீட்டுக்குள் ஒருவேளை
ஒரு ஆடவன் இருப்பானாகில்…
அவனிடத்தில் கட்டாயம்
புகையிலை இருக்கவேண்டுமே.
அடுத்து அவன் அவளிடம்
கொஞ்சம் பணம் கேட்டான்.
காடுறையும் பெண்கள் கையிருப்பில் ஒருபோதும் பணம் வைத்துக்கொள்வதில்லை என்பதையும்
அவன் அறிந்திருப்பான்.
ஒருவழியாய்
அவன் கிளம்பினான்.
அவன் போவதை அவள் பலகையிடுக்கின்
வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கால்மைல் தூரம் சென்றதும்
அவன் நின்று திரும்பி அந்த வீட்டைப் பார்த்தான். தன் முதுகுச்சுமையை சரிசெய்வது போன்ற பாவனையுடன் சில நிமிடங்கள்
அவன் அங்கேயே நின்றிருந்தான்.
பின் ஏதோ யோசித்தவனாய் இடப்பக்கம் திரும்பி ஓடைச்சரிவை
நோக்கி நடக்கலானான்.
அவளது வீட்டை சுற்றி
வளைத்தாற்போல் ஓடைப்பாதை இருந்தது. சரிவில்
இறங்கியதும் அவன் கண்ணைவிட்டு மறைந்துபோனான். பல மணி நேரங்களுக்குப் பிறகு புகையின் அறிகுறிகள்
தோன்றவே அவள் கவனித்தபோது அந்த வழிப்போக்கனின் நாய், ஓடையில் தண்ணீர் குடிக்க வந்த ஆடுகளை துரத்திக் கொண்டிருப்பதையும் அந்த மனிதன் அழைத்ததும்
குழைந்துகொண்டு ஓடிவந்ததையும் அவள் பார்த்தாள்.
கணவன் பணிசெய்யுமிடத்துக்குச் சென்று
அவனுடனேயே தானும் குழந்தையும் தங்குவது பற்றிப் பலமுறை யோசித்திருக்கிறாள். தனியளாய் இருப்பதன் பிரச்சனைகளையும்
ஆபத்துகளையும் குறித்து ஒருமுறை துணிவுடன் அவள் கணவனிடம் எடுத்துரைத்தபோது அவன் அவளைத்
திட்டுவதும் இகழ்வதுமாக இருந்தான். அவள்
தன்னைப்பற்றித் தானே பெருமை கொள்ளவேண்டிய
அவசியமில்லை என்றான். அவளை இழுத்துக்கொண்டு ஓடிப்போக ஒருத்தரும் தயாராக
இருக்கமாட்டார்கள் என்று கேலி செய்தான்.
இருள்
கவியுமுன்பே அவள் இரவுணவைத்
தயாரித்து சமையலறை
மேசையின் மேல் வைத்தாள்.
அதன் அருகில் அவள்
தாயின் நினைவாக தான் வைத்திருந்த ஒரு பெரிய உடையலங்கார ஊசியையும் வைத்தாள். அது ஒன்றுதான் அவளிடத்தில் இருந்த ஒரே விலைமதிப்பற்ற
பொருள். சமையலறையின் கதவை நன்றாக விரியத்
திறந்துவைத்துவிட்டு,
வீட்டிற்கு உள்ளே சென்று பின்புறக்கதவைத் தாழிட்டாள். தாழ்ப்பாளுடன் சில இரும்புப் பொருட்களையும்
கத்தரிக்கோல் போன்றவற்றையும் சொருகிவைத்தாள். அதன்பின்னால் மேசையையும் முக்காலிகளையும்
நிறுத்தி முட்டுக்கொடுத்தாள்.
முன்பக்கக் கதவுக்குப்
பின்னால் நீண்ட கைப்பிடி உள்ள மண்வெட்டியை அதன் வெட்டுவாய் தரையில் உள்ள பலகையிடுக்கில்
பொருந்துமாறு நிறுத்தினாள்.
அது சாய்ந்துவிடாமலிருக்க
இருபுறமும் சிறிய கழிகளை ஊன்றி நிறுத்தினாள். சன்னல் துவாரங்கள் கப்பல் சாளரங்களை விடவும்
சிறியனவாய் இருந்தன.
அதனால் அவளுக்கு அவற்றைப்
பற்றி பயங்கொள்ளும் அவசியமிருக்கவில்லை. அவள்
பெயருக்கு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு ஒரு கோப்பை பாலைப் பருகினாள். கணப்பில் தீமூட்டவில்லை. இருட்டிய பிறகும் மெழுகுவர்த்தி எதையும்
ஏற்றவில்லை. இருளிலேயே தவழ்ந்து குழந்தையுடன்
படுக்கைக்குச் சென்றாள்.
எது அவளை
எழுப்பிற்று? அவள் தூங்க விரும்பியிராதபோதும்
தூங்கியிருந்தது வியப்பாயிருந்தது. தகரத்தாலான
மேற்கூரை இரவில் சுருங்குவதால் ஏற்பட்ட சத்தமாக இருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் அந்த சத்தம் வழக்கமானதாய் இல்லை. ஏதோ ஒன்று அவள் இதயத்தைப் பலமாய்த் துடிக்கச்செய்தது. ஆனாலும் அவள் அமைதியாக படுத்திருந்தாள். அவள் குழந்தையை இரு கரங்களாலும் அணைத்துக்கொண்டு
வேண்டலானாள், “செல்லமே… என் செல்லமே… விழித்துக்கொள்ளாதே…”
நிலவொளி
வீட்டின் முன்புறத்தில் விழுந்து பலகையிடுக்கின் வழி நுழைந்திருந்தது. அவளிருந்த பக்கத்தின் பலகைச்சுவரின் இடைவெளி
திடீரென்று மறைந்து இருளானது.
நாயிடமிருந்து கண்டன
உறுமல் ஒன்று வெளிப்பட்டது.
அந்த மனிதன் விருட்டென்று
திரும்பிச் சென்றான்.
சற்று நேரத்தில் நாயின்
எலும்பு முறியும் அளவுக்கு எதனாலோ அதைத் தாக்கும் பலத்த சத்தமும், அது ஊளையிட்டுக்கொண்டு நான்குகால் பாய்ச்சலில்
ஓடுவதும் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டன. பலகைச்
சுவரின் ஒவ்வொரு இடைவெளியையும் அந்த நிழல் மறைத்துப் போனதை அவள் கவனித்துகொண்டிருந்தாள். அந்த மனிதன் வெளியிலிருந்து ஒவ்வொரு இடைவெளியின்
வழியாகவும் உள்ளே பார்க்கமுயல்வதை சத்தங்களின் மூலம் அவள் தெரிந்துகொண்டாள். ஆனால் அவனால் என்ன பார்க்கமுடிகிறது என்று
அவளுக்குத் தெரியவில்லை.
அவள் தான்
மட்டும் தனித்தில்லை என்பதை அவனுக்குணர்த்தும் வண்ணம் எதையாவது செய்து அவனை ஏமாற்ற
எண்ணினாள். ஆனால் அதே சமயம் குழந்தை விழித்துக்கொள்ளக்கூடாதே
என்றும் பயந்தாள்.
இப்போது குழந்தை விழித்துக்கொண்டால்தான்
அதிக ஆபத்து என்று உணர்ந்தவளாய் மறுபடியும் வேண்ட ஆரம்பித்தாள், “என் கண்மணி, விழித்துவிடாதே.. அழுதுவிடாதே….”
அவன் கள்ளத்தனமாய்
ஊர்ந்துகொண்டிருந்தான்.
அவள் அறையிலிருந்த
சின்னஞ்சிறு சன்னலை ஆராயும் எண்ணத்தோடு வராந்தாவில் அவன் நடந்தான். அவனது காலடி அதிர்வுகளின் மூலம் அவன் தன்
பூட்ஸ்களை கழற்றிவைத்திருக்கிறான் என்பதை அவள் அறிந்துகொண்டாள். பிறகு அவன் அறையின் மறுபக்க முனைக்குச் சென்றான். அவன் அடுத்து என்ன செய்யவிருக்கிறான் என்பது
அனுமானிக்கமுடியாததாய் இருந்தது.
அவன் அவள் கண்பார்வையில்
இருக்கும்போது அவளால் அவனைப் பார்க்கவும் கண்காணிக்கவும் முடிந்ததால் அதுவே அவளுக்குப் பாதுகாப்பானதாக
இருந்தது. அவள் அவனது செயல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் குழந்தை விழித்துவிடுமோ என்ற பயம்
அவளை ஆட்கொண்டிருந்தது.
அப்போதுதான் அவளுக்கு
ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
அவன் நின்றுகொண்டிருக்கும்
பக்கத்துப் பலகையொன்று சில நாட்களுக்கு முன்பு நீளத்திலும் அகலத்திலும் சுருங்கிப்போய்
விழுந்துவிட்டிருந்தது.
அதை ஒரு மரச்சட்டத்தை
இடையில் தாங்கக் கொடுத்து சும்மா
நிறுத்தியிருந்தாள். அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது? அந்த எண்ணமே அவளை மேலும் பீதிக்குள்ளாக்கியது. அவள் குழந்தையை இறுக்கமாய் மார்போடு அணைத்தபடியே
படுக்கையை விட்டு மெல்ல எழுந்தாள். அவள்
கத்தியை எடுப்பது பற்றி யோசித்தாள். ஆனால்
இருகரங்களும் குழந்தையை பாதுகாப்பாய் அணைத்திருந்தன. அதனுடைய சின்னஞ்சிறு பாதங்களையும் அதன் வெண்ணிற
கவுன் மறைத்திருந்தது.
குழந்தை சின்னச் சிணுங்கலும் இன்றி அவளிடத்தில் இருந்தது. அவள் அதை அலுங்காமல் அப்படியே வைத்திருக்க
விரும்பினாள். அவள் சத்தமின்றி அவன் பார்வையில்
படாதபடி அறையின் எதிர்மூலைக்குச் சென்றாள். அங்கிருந்து அவளால் அவனைப் பார்க்கவும் கேட்கவும்
முடிந்தது. அவன் ஒவ்வொரு பலகையாக ஆராய்ந்துகொண்டிருந்தான். வெறுமனே நிறுத்தியிருந்த பலகைக்கு வெகு அருகில்
வந்துவிட்டான்.
முடிவில் அதைக் கண்டுபிடித்தும்விட்டான். அவன் கத்தியால் பலகைச்சுவரைத் தாங்கிக்கொண்டிருந்த
மரச்சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாய் அறுக்க ஆரம்பித்தான்.
இன்னும்
சில நிமிடங்களில் குரூரமிக்க கண்களுடனும், எச்சில் வழியும் வாயுடனும், பளபளக்கும் கத்தியுடனும் அந்தக் காமாந்தகன்
உள்ளே நுழைந்துவிடுவான் என்பதை அறிந்தபோதும் அவள் செய்வதறியாது குழந்தையை தன்னோடு
சேர்த்து இறுகப் பற்றியபடியே அசைவற்றுப் பார்த்திருந்தாள். பலகையின் ஒருபக்கம் அசைந்துகொடுத்துவிட்டது. மறுபக்கத்தையும் அறுத்துவிட்டு உள்ளே வரவேண்டியதுதான். அறுத்தவுடன் அவன் அந்தப் பலகையைப் பிடிக்காவிடில்
அது வெளிப்பக்கம் தானே விழுந்துவிடும். அவன்
கத்தியால் அறுக்கும்போது இழுத்துவிடும் மூச்சையும், சுவரோடு அவனுடைய உடை உராயும் சத்தத்தையும்
கூட அவளால் துல்லியமாகக் கேட்கமுடிந்தது. ஏனெனில்
அவள் பெரும் நிசப்தத்துடன் நிச்சலனமாய் நின்றிருந்தாள். அவள் தன் நடுக்கத்தையும் கட்டுப்படுத்திக்
கொண்டிருந்தாள்.
அவன் வேலையை
நிறுத்தியது ஏனென்று அவளுக்குத் தெரியவில்லை. அவளோ அவன் கண்களுக்குத் தென்படாதபடி இருளில்
மறைந்து நிற்கிறாள்.
அப்படியே அவன் அவளைப்
பார்த்தாலும் அவன் பயப்படப்போவதில்லை. ஆனாலும்
அவன் எதோவொரு எச்சரிக்கை உணர்வோடு அங்கிருந்து விலகிச்சென்றான். ஒருவேளை அந்தப் பலகை வெளிப்பக்கம் விழக்கூடும்
என்பதை அவன் கணித்திருக்கலாம்.
ஆனாலும் அவனுடைய செயல்
அவளை வியப்பில் ஆழ்த்தவே வேறு காரணம் இருக்கலாமென்ற எண்ணத்தில் முன்னோக்கி நகர்ந்து
கூர்ந்து கவனித்தாள்.
ஆ! அது என்ன சத்தம்?
“கவனி! கவனி!” அவள் தன் மனத்திடம் சொன்னாள். இதுவரை துடிப்பற்றிருந்த இதயம் தாறுமாறாய்த்
துடிக்க ஆரம்பித்து அவள் செவிகளைக் கூர்ந்து கேட்கவிடாமல் செய்தது. அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கிவரத்தொடங்கியது. அவளை ஆசுவாசப்படுத்தும்வண்ணம் அவளை நோக்கிவரும்
ஒரு குதிரையின் குளம்படி ஓசைதான் அது என்று கண்டுகொண்டாள். அவள் அதை உறுதிசெய்யுமுன்பே குளம்போசை அவளை நெருங்கிவிட்டிருந்தது. “கடவுளே… கடவுளே.. கடவுளே..” அவள் கத்திக்கொண்டே கையில் குழந்தையுடன்
முன்பக்கக் கதவை நோக்கி ஓடி மூர்க்கமாய் தாழ்ப்பாளையும் அதற்கு முட்டுக்கொடுத்திருந்த
இரும்பு சாமான்களையும் நீக்கினாள்.
ஒருவழியாய்
அவள் வெளியேறிவிட்டிருந்தாள்.
சற்றுதூரத்தில் குதிரையில்
ஒருவன் போவதைப் பார்த்தவள் பித்துப்பிடித்தவள்
போல் அவன் பின்னாலேயே
கத்திக்கொண்டு ஓடினாள்.
கடவுளின் பேராலும்
தன் குழந்தையின் பேராலும் ஆணையிட்டபடி அவனை நிற்கச்சொல்லி அவன் பின்னாலேயே சூறைக்காற்றின் வேகத்தில் பறந்துகொண்டுபோனாள். ஆனால் அவர்களுக்கிடையிலான தூரம் அதிகரித்துக்கொண்டே
போனது. அவள் ஓடைச்சரிவை அடைந்தபோது அவளுடைய
பிரார்த்தனைகள் அனைத்தும் பலத்த வீறிடல்களாய் மாறிப்போயின. அதுவரை அங்கே பதுங்கியிருந்த, அவளை பயமுறுத்திய அந்த காமாந்தகன் தன் கைகளை
நீட்டி அவளைப் பிடித்தான்.
அவள் போராடுவதையும்
அபாயக்குரல் எழுப்புவதையும் நிறுத்திவிட்டால் அவனுக்கு சாதகமாகிப்போய்விடும் என்பதை
அவள் அறிந்திருந்தாள்.
அதனால் முடிந்தவரையில்
வெகு சத்தமாக கூக்குரல் எழுப்பமுயன்றாள். ஆனால்
அது அந்த மனிதன் அவளது கழுத்தை நெறிக்கும்போது எழுந்த அவளது இறுதி மரண ஓலமாக அமைந்துபோனது. அகோர ஒலியால் திடுக்கிட்டு விழித்த காட்டுப்பறவைகள்
கூச்சலிட்டுக்கொண்டே குதிரைமனிதனின் தலைக்கு மேலாய் பறந்துபோயின.
* * * * *
“அடக்கடவுளே! நிச்சயம் அது
ஒரு டிங்கோவின் வேலையாகத்தான் இருக்கும். இதுவரை எட்டு ஆடுகளைக் கொன்றிருக்கிறது. ஓடைச்சரிவில் இன்னுங்கூட இருக்கலாம். இது அநேகமாய் ஒரு பெண்ணாடும் அதன் குட்டியுமாக இருக்கலாம்.. நான் உறுதியாக சொல்கிறேன். அந்த குட்டி உயிருடன்தான் இருக்கும்.” தனக்குத் தானே சொல்லிக்கொண்ட
எல்லைக் காவலாளி கைகளை
கண்களுக்கு குடைபிடித்தபடி வானில் வட்டமிட்டுப் பறக்கும் காகங்களைப் பார்த்தான். அவை தரைக்குப் பக்கமாய் வருவதும் சள்ளென்று
எழும்பி மேலே பறப்பதுமாய் இருந்தன. அதைக்கொண்டுதான்
ஆட்டுக்குட்டி உயிரோடு இருக்குமென்று அவன் கணித்தான். டிங்கோ கூட சில சமயங்களில் ஆட்டுக்குட்டிகளை
ஒன்றும் செய்வதில்லை.
ஆம். அந்த ஆட்டுக்குட்டி உயிருடன்தான் இருந்தது. ஆட்டுக்குட்டிகளைப் போலவே அதற்கும் விடிந்தபிறகு
தன் தாயை அடையாளம் தெரிந்திருக்கவில்லை. அது
உயிரற்ற உடலில் கதகதப்பாயிருந்த தாயின் முலைகளில் பாலருந்திவிட்டு, தன் சின்னஞ்சிறு சிரத்தை அம்மார்பில் சாய்த்துப்
படுத்து விடியும்வரை நன்றாக உறங்கிவிட்டிருந்தது. விழித்தெழுந்தபோது வீங்கி உருக்குலைந்துபோயிருக்கும்
தாயின் முகத்தைக்கண்டு பயந்தழுது அங்கிருந்து ஊர்ந்துபோக முயன்றது. ஆனால் தாயின் கரங்கள் இன்னமும் அதன் கவுனை
இறுகப் பற்றியிருந்தன.
தூக்கக்கலக்கத்தில்
குழந்தையின் தலையும் உடலும் ஆடிக்கொண்டிருந்தன. காகங்கள் தாயின் அகலத்திறந்திருந்த விழிகளைக்
கிட்டத்தட்ட நெருங்கிவிட்டிருந்தபோது எல்லைக் காவலாளி அங்கு வந்துசேர்ந்தான்.
“ஏசுவே!” அவன் கண்களை மூடிக்கொண்டான். எப்படி அந்த சின்னஞ்சிறு குழந்தை அவன் கரங்களுக்குத்
தாவிக்கொண்டு வந்தது என்பதையும் அதன் கவுனை, இறந்துகிடப்பவளின் கைகளிலிருந்து கிழித்து விடுவிக்க எவ்வளவு
பிரயத்தனப்பட்டான் என்பதையும் அதன்பிறகு அவன் கதைகதையாய் சொன்னான்.
* * * * *
அது தேர்தல்
சமயம். வழக்கம்போலவே பாதிரியார் ஒரு வேட்பாளரைத்
தேர்ந்தெடுத்திருந்தார்.
நிலச்சுவான்தாரர்களுக்கிடையில்
செல்வாக்கு பெற்ற ஒருவரே அவரது தேர்வு என்பது தெள்ளத்தெளிவு. அந்தக் காரணத்துக்காகவே பீட்டர் ஹென்னஸி
தன் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை,
வழமையான அந்த இறைமரபுக்கு
எதிராக வேறொருவருக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருந்தான். அதுமுதல் அவன் சஞ்சலத்துடனும் அமைதியின்றியும்
காணப்பட்டான். நள்ளிரவில் அடிக்கடி விழித்துக்கொண்டான். விழிக்குந்தோறும் அறையின் தடுப்புப்
பலகை வழியாகவோ கதவின் கீழாகவோ முணுமுணுவெனும் அவன் தாயின் பிரார்த்தனையைக் கேட்கநேர்ந்தது. தடுப்புப் பலகை வழி கேட்கநேர்ந்தால் அவன்
தாய் படுக்கையிலிருந்தபடி பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் கதவின் கீழாக
கேட்கநேர்ந்தால் அவளுடைய அறைமூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பீடத்திலிருக்கும் குழந்தை
ஏசுவுடனான கன்னிமேரியின் சிலையின் முன்னால் மண்டியிட்டுப் பிரார்த்திக்கொண்டிருக்கிறாள்
என்றும் அவன் அறிவான்.
“மரியே..
கர்த்தரின் மாதாவே! என் மகனைக் காப்பாற்று… அவனை பாவத்திலிருந்து மீட்பி!”
மாலைவேளையில்
பண்ணையில் கறக்கும் பாலை வடிகட்டி ஊற்றும் வேளையிலும் அவள் வாய் முணுமுணுக்கும், “கருணை மாதாவே! கர்த்தரின் பெயரால் அவனைக் காப்பாற்று!” அவளுடைய முதிய முகத்தின் வேதனையைக் காணுந்தோறும்
காலையுணவு கசந்துபோனது.
அவளைத் தவிர்க்கும்பொருட்டு
அவன் இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தான். தேர்தல் தினத்துக்கு முந்திய மாலை அவளிடம்
சொல்லிக்கொண்டு விடைபெறவும் துணிவில்லாமல் ஒரு கோழையைப் போல் ரகசியமாக குதிரையை ஓட்டிக்கொண்டு
வெளியேறினான்.
அவனுடைய
வாக்கினைப் பதிவு செய்ய நகரம் நோக்கி கிட்டத்தட்ட முப்பது மைல்கள் பயணிக்கவேண்டியிருந்தது. நீண்டு
விரிந்த பரந்த சமவெளிப்பாதையில் குதிரையை உற்சாகமாய் ஓட்டியபடி விரைந்தான். வசந்தகால வானத்து வெண்மேகங்களைப் போல் நிலவொளியில்
மிளிரும் பருத்திப் புதர்கள் காட்சியளிக்க, குளம்புகளில் மிதிபடும் குளோவர் பூக்களின்
நறுமணம் அவன் நாசியைத் துளைக்க,
அந்த இரவின் அழகு அவனுடைய
கற்பனைக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. ஆனால்
அவனுடைய எண்ணம் முழுவதும் தற்போதைய புரட்சியான செய்கையே ஆக்கிரமித்திருந்தது. அவன் கிளம்பிச் செல்வதை வேதனையுடன் பார்த்திருந்த
அவன் தாயின் முகம் இடையிடையே மின்னலாய்த் தோன்றி மறைந்தது. இப்போது அவள் பிரார்த்தித்துக் கொண்டிப்பாள்
என்று அவன் உறுதியாக எண்ணினான்.
“மரியே…
கர்த்தரின் மாதாவே!” தன்னையறியாமலேயே தாயின் செபத்தைத் தானும்
சொன்னான். சட்டென்று இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு
ஒரு பலவீனமான குரல் அவனை கடவுளின் பெயரால் உரக்க அழைப்பது கேட்டது.
“கர்த்தாவே!
கர்த்தாவே! கர்த்தாவே!” அக்குரல் அழைத்தது. ஒரு உண்மையான கிறித்துவனான அவன் திரும்பிப்
பார்க்குமுன் சிலுவைக்குறி இட்டுக்கொண்டான். பைப்-கிளே பகுதியின் மங்கிய இருளில் கையில்
குழந்தையைப் பற்றியபடி வெண்ணிற உடையணிந்த ஒரு உருவத்தைப் பார்த்தான். அனைத்து இறைமரபு சார்ந்த நம்பிக்கைகளும்
சடக்கென்று விழித்துக்கொள்ள,
அவனுடைய மூளை அங்குமிங்கும்
ஊசலாடத் துவங்கிற்று.
பள்ளத்தாக்கின் பால்நிலவொளி
அவனுக்கு மோட்சத்தின் ஒளியாகவும்,
அந்த வெள்ளை உருவம்
குருதியும் சதையுமாயல்லாது,
அவன் தாய் பிரார்த்தித்த
கன்னிமேரியும் குழந்தை ஏசுவுவாகவுமே தோன்றியது. மீண்டும் ஒரு உண்மையான கிறித்துவனாய் தன்னை
உணர்ந்து குதிரையின் விலாவில் உதைத்து இன்னும் துரிதமாய் விரைந்துசெலுத்தினான்.
அவனுடைய
தாயின் பிரார்த்தனைகள் செவிமடுக்கப்பட்டன. பீட்டர் ஹென்னஸி முதல் ஆளாய் தன் வாக்கைப்
பதிவுசெய்தான்
– பாதிரியாரின் வேட்பாளருக்காய்!
அடுத்து
அவன் பாதிரியாரைப் பார்க்கச் சென்றான். ஆனால்
அவர் வாக்காளர்களைத் திரட்டச் சென்றிருந்தார். ஆசீர்வதிக்கப்பட்ட காட்சியைக் கண்டதன் பயனாய்
மதுவிடுதியின் பக்கம் செல்வதைத் தவிர்த்துவிட்டு, நோன்பு நோற்பவனைப்போல்
நகரமக்களிடமிருந்து விலகி,
புறநகர்ப்பகுதிகளில்
மணிக்கணக்காய் சுற்றித்திரிந்துகொண்டிருந்தான். செய்த தவறுக்குத் தண்டிக்கப்பட்டு மனம்வருந்தி
திருந்திய குழந்தையொன்று அதன்பின் அன்பின் அரவணைப்புக்காகக் காத்திருப்பது போன்று அவன்
நெகிழ்வுடனும் சிறு பரவசத்துடனும் இருந்தான். இறுதியாக, அந்திசாயும் பொழுதில், கல்லறை வளாகத்தில் பயபக்தியுடன் அவன் நின்றிருந்தபொழுது, தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் பெயரைப்
பறைசாற்றியபடி உரத்த கோஷங்கள் அவன் செவியை வந்தடைந்தன. பாதிரியாருக்குச் சாதகமான முடிவுதான் அது.
பீட்டர்
ஹென்னஸி மறுபடியும் பாதிரியாரைத் தேடிச்சென்றான். வேலைக்காரன் அவனை வாசக அறைக்கு அழைத்துச்சென்றான். இருக்கைக்கு எதிரில் ஒரு பெரிய படம் மாட்டப்பட்டிருந்தது. வேலைக்காரன் விளக்கின் ஒளியை அதிகரித்ததும்
அந்தப் படத்தை நன்றாகப் பார்க்கமுடிந்தது. மறுபடியும் மரியாள் குழந்தை ஏசுவோடு தலைசாய்த்தபடி அவனைப் பார்த்திருந்தாள், ஆனால் இம்முறை அமைதியாகவும் கனிவாகவும். மெலிதாய்த் திறந்திருந்த உதடுகளில் இளகிய கருணைமிக்கப் புன்னகை அரும்பியிருந்தது. வழுவிய ஆனால்
பிரியமான குழந்தையை மன்னிக்கும் தாய்மையின் ஒளி கண்களில் பிரகாசித்தது.
அவன் மண்டியிட்டு
வணங்கினான். “கடவுளே… கடவுளே!” மன்றாடலோடு வெளிப்பட்டது பெருமிதமிக்கதொரு
கேள்வி, “கடவுளே…
நான் தேர்ந்தெடுக்கப்பட்டவனா?”
சிலிர்ப்பும்
வியப்புமாய்ப் பார்த்துநின்ற பாதிரியார் கேட்டார், “என்ன விஷயம், பீட்டர்?”
அவன் மிகுந்த
பணிவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி அவரிடம் அப்படியே எடுத்துரைத்தான்.
“அடக்கொடுமையே! நீ அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்பொருட்டு நிற்கவேயில்லையா? நீ என்ன செவிடா?” பாதிரியார் கத்தினார்.
* * * * *
ஓடைச்சரிவுக்கப்பால்
பல மைல் தூரத்தில் ஒருவன் தன்னுடைய பழைய தொப்பியை மீண்டும் மீண்டும் தண்ணீரில் விட்டெறிந்துகொண்டிருந்தான். அவனுடைய நாய் அதைக் கவ்விக்கொண்டுவந்து, அவனிடம்
தான் பிடிபட்டுவிடாதபடி எச்சரிக்கையுடன் அவனுக்கெதிரில் சற்றுமுன்னால் வைத்தபடியிருந்தது. அவன் நாயின் வாயிலும் கழுத்திலும் பரவியிருந்த
ஆட்டு இரத்தத்தை கழுவிச் சுத்தப்படுத்தவே நாயைப் பிடிக்க விரும்பினான். ஏனெனில் குருதியைக் காணுந்தோறும் அவனுள்
நடுக்கமுண்டாகிக் கொண்டிருந்தது.
* * * * *
மூலக்கதை
(ஆங்கிலம்) – The chosen vessel (1896)
மூலக்கதை
ஆசிரியர் – Barbara Baynton (1857 – 1929)
தமிழாக்கம்
– கீதா மதிவாணன்
(பிரான்சிலிருந்து
வெளியாகும் 'நடு' இணைய இதழ் 8-ல் வெளியானது)
(படங்கள் உதவி - இணையம்)
(படங்கள் உதவி - இணையம்)