ஆர்க்கிட் மலர்கள் (Orchids)
உலகின் மிகத் தொன்மையான தாவரங்களுள் ஆர்க்கிட் தாவரமும் ஒன்று. ஆர்க்கிட் தாவரங்கள் நிலத்திலும் வளரும், மரத்திலும் வளரும். பாறை இடுக்கிலும் வளரும். ஒரு ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பிக்கும் அளவுக்கு அதிசயத்தன்மைகள் நிறைந்த ஆர்க்கிட் மலர்க்குடும்பத்துக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான வாழ்வியல் வரலாறு இப்புவியில் உண்டு. அது கண்டறியப்பட்ட விதமே ஆச்சர்யமானது.
|
1. விதவிதமான ஆர்க்கிட் மலர்கள் |
சுமார் 15 மில்லியனுக்கு முந்தைய
ஆர்க்கிட் மகரந்தம் சுமந்த தேனீயின் புதைபடிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் ஆர்க்கிட்
தாவர இனம் சுமார் நூறு மில்லியன் ஆண்டுகள் தொன்மையானது என்று அறியப்பட்டுள்ளது.
மீப்பெரு கண்டமாக கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இருந்த காலத்திலேயே ஆர்க்கிட்
தாவர இனம் உருவாகியிருக்கலாம் என்றும் அதனால்தான் நீக்கமற அனைத்துக் கண்டங்களிலும்
ஆர்க்கிட் தாவரங்கள் காணப்படுகின்றன என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆர்க்கிட்
பூக்கள் அழகு மட்டுமல்ல, செழுமை, உறுதி மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக
விளங்குகின்றன. அன்பு, காதல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளின் தீவிர வெளிப்பாட்டுக்கு
ஆர்க்கிட் பூக்கள் பரிசாக அளிக்கப்படுகின்றன.
அண்டார்டிகா தவிர்த்து உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தன்மையிலும், இரண்டு மி.மீ. முதல் இரண்டரை மீ. வரையிலுமாக பூக்களின் அளவுகளிலும், சில மாதங்கள் முதல் நூறு வருடங்கள் வரையிலான செடிகளின் ஆயுட்காலத்திலும், சில மணி நேரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான பூக்களின் வாடா இயல்பிலும்... என பல்லாயிரக்கணக்கான வகைகள் ஆர்க்கிட் குடும்பத்தில் இயற்கை மற்றும் செயற்கை வழிகளில் உருவாகியுள்ளன. இப்போதும் கூட வருடத்துக்கு நூறு புதிய கலப்பின வகைகளாவது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாம் இனிப்புகளில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தும் வெனிலா எசன்ஸ் தயாரிக்கப் பயன்படும் வெனிலா மலரும் ஆர்க்கிட் மலரினம்தான். Orchid என்பதன் மூலவார்த்தையான orkhis கிரேக்க மொழியில் ஆணின் விதைப்பையைக் குறிக்கிறதாம். இதன் வேர்க்கிழங்குகளின் வடிவம் விதைப்பையை ஒத்திருப்பதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது. ஆர்க்கிட் செடியின் ஒரே ஒரு விதைநெற்றுக்குள் கோடிக்கணக்கான விதைகள் இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சில மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்கும் வீரியமுள்ளவை. இந்த விதைகளை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகவும் நுட்பமானவை.
பூக்கள் அறிவோம் தொடரின் தொடர்ச்சியாக, இப்பதிவில் அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் பற்றி அறிந்துகொள்வோமா? இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சிட்னி & வுல்லங்காங் தாவரவியல் பூங்காக்களில் 2018 முதல் தற்போது வரை அவ்வப்போது என்னால் எடுக்கப்பட்டவை.
111. லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்
குட்டிக் குழந்தைகளின் பாதணி போல அழகான பையுடன் வசீகரிக்கும் இந்த வகை ஆர்க்கிட் பூக்களுக்கு "Ladies slipper orchid" என்று பெயர். இவை பெரும்பாலும் உள்ளரங்க அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகின்றன. தேனெடுக்க வரும் பூச்சிகள் இந்தப் பைக்குள் விழுந்து எழுந்து தடுமாறி வெளியேறுவதற்குள் மகரந்தப் பொடிகளைத் தந்தும் பெற்றும் மகரந்தச் சேர்க்கையை வெற்றிகரமாக்கிவிடுகின்றன.
|
2. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (1) |
|
3. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (2) |
|
4. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (3) |
|
5. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (4) |
|
6. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (5) |
|
7. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (6) |
|
8. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (7) |
லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் இனத்தில் ஐந்து பெரும் பிரிவுகள் உள்ளன. படத்திலிருப்பது, வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட். இது paphiopedilum பேரினத்தைச் சேர்ந்தது. வீனஸுக்கு நிகரான காதற்கடவுள் அப்ரோடிட் அவதரித்த இடத்தின் பெயர் paphos என்பதாகும். கிரேக்க மொழியில் pedilon என்றால் பாதணி என்று பொருள். இரண்டையும் சேர்த்து இவ்வழகிய பூக்களுக்கு paphiopedilum என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
|
9. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (8) |
பொதுவாக ஆர்க்கிட் பூக்களில் ஒரே ஒரு மகரந்தப்பை தான் இருக்கும். ஆனால் லேடீஸ் ஸ்லிப்பர் வகை ஆர்க்கிட் பூக்களில் இரண்டு மகரந்தப்பைகள் இருக்கும். இவற்றின் பூர்வீகம் இந்தியா, சீனா, தென்கிழக்காசிய நாடுகள் போன்றவை. இவற்றின் விநோதமான அமைப்பால் கவரப்பட்டு, தோட்ட ஆர்வலர்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
112. சிட்னி ராக் ஆர்க்கிட்
ஆஸ்திரேலிய ஆர்க்கிட் வகையான இது, சிட்னி சார்ந்த பகுதிகளில் காணப்படுவதாலும் உயரமான மலைகளிலும் பாறைப்பகுதிகளிலும் காணப்படுவதாலும் இது 'சிட்னி ராக் ஆர்க்கிட்' என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு cane orchid, rock lily என்ற பெயர்களும் உண்டு.
|
10. சிட்னி ராக் ஆர்க்கிட் (1) |
|
11. சிட்னி ராக் ஆர்க்கிட் (2) |
|
12. சிட்னி ராக் ஆர்க்கிட் (3) |
|
13. சிட்னி ராக் ஆர்க்கிட் (4) |
|
14. சிட்னி ராக் ஆர்க்கிட் (5) |
|
15. சிட்னி ராக் ஆர்க்கிட் (6) |
இதன் இலைகள் பன்னிரண்டு
வருடம் வரை வாடாதவை. ஒரு பூந்தண்டில் சுமார் இருநூறு பூக்கள் வரை பூக்கும். முதலில்
வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறும். இது Dendrobium பேரினத்தைச் சேர்ந்தது. இதன்
அறிவியல் பெயர் Dendrobium speciosum என்பதாகும். Speciosum என்றால் லத்தீனில் 'வசீகரமான' என்று பொருள். இவை தொங்குதொட்டியில் வளர்க்கவும் தோதானவை.
113. காக்ஷெல் ஆர்க்கிட்
பார்ப்பதற்கு வாய் திறந்திருக்கும் சிப்பி போன்றிருப்பதால் cockleshell orchid, clamshell orchid என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. Prosthechea பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. படத்தில் இருப்பது Prosthechea cochleata மலராகும்.
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த Belize நாட்டின் தேசிய மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. அங்கு இதன் பெயர் கருப்பு ஆர்க்கிட்.
|
16. காக்ஷெல் ஆர்க்கிட் (1) |
|
17. காக்ஷெல் ஆர்க்கிட் (2) |
|
18. காக்ஷெல் ஆர்க்கிட் (3) |
|
19. காக்ஷெல் ஆர்க்கிட் (4) |
நறுமணமிக்க இந்த வகை ஆர்கிட்
மலர்கள் மாதக்கணக்காக வாடாதவை என்பதோடு எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகாதவை என்ற
சிறப்பும் உடையவை. பூங்கொத்தின் பூக்கள் ஒரே சமயத்தில் பூக்காமல் ஒவ்வொன்றாகப் பூப்பதால் வருடம் முழுவதும் செடி பூக்களுடனேயே காட்சியளிக்கும். அதனாலேயே உள் அலங்காரச்செடிகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன.
114. போட் ஆர்க்கிட்
Cymbidium பேரினத்தைச் சேர்ந்த இவை ‘Boat orchids’ என்றழைக்கப்படுகின்றன. ‘cymba’ என்றால் லத்தீன் மொழியில் 'படகு' என்று பொருள். இந்தப் பேரினத்தில் சுமார் அறுபது சிற்றினங்கள் உள்ளன.
பொதுவாக கடைகளில் சரியான தட்பவெப்பத்தில் முறையான பராமரிப்போடு, விற்பனைக்கென பொத்திப் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட் பூந்தொட்டிகளையும் ஆர்க்கிட் பூங்கொத்துகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இயற்கைச்சூழலில் காற்று, மழை, புழுதி, வெயில், பூச்சித்தாக்குதல் எல்லாவற்றையும் தாங்கி, மண்ணில் வளர்ந்து கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் காட்சியளிக்கும் ஏராளமான போட் ஆர்க்கிட் செடிகளைப் பூங்காவில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
|
20. போட் ஆர்க்கிட் (1) |
|
21. போட் ஆர்க்கிட் (2) |
|
22. போட் ஆர்க்கிட் (3) |
|
23. போட் ஆர்க்கிட் (4) |
|
24. போட் ஆர்க்கிட் (5) |
|
25. போட் ஆர்க்கிட் (6) |
|
26. போட் ஆர்க்கிட் (7) |
|
27. போட் ஆர்க்கிட் (8) |
|
28. போட் ஆர்க்கிட் (9) |
|
29. போட் ஆர்க்கிட் (10) |
|
30. போட் ஆர்க்கிட் (11) |
போட் ஆர்க்கிட் செடிகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை. கொத்துக் கொத்தாகப் பூக்கும் இவற்றின் அழகு காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
திருமணத்துக்கான மலர் அலங்காரங்களிலும் பூங்கொத்துகளிலும் இவை பெரிதும் இடம்பிடிக்கின்றன. செடியில் இருந்தால் பல வாரங்களுக்கு வாடாமல் அன்றலர்ந்த மலர் போலவே காணப்படுவது இவற்றின் சிறப்பு. உள்ளரங்கத்திலும் வெளியிலும் வளரும் தன்மை இவற்றின் இன்னொரு சிறப்பு.
படகு ஆர்க்கிட் பூக்கள் காதல், அழகு, செழுமை, வனப்பு போன்றவற்றின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றன. ஆர்க்கிட் மலர்களைப் பரிசாகப் பெறுவதென்பது நற்பேறாகவும் வளமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
|
31. போட் ஆர்க்கிட் (12) |
|
32. போட் ஆர்க்கிட் (13) |
|
33. போட் ஆர்க்கிட் (14) |
|
34. போட் ஆர்க்கிட் (15)
35. போட் ஆர்க்கிட் (16) |
அழகு மட்டுமல்லாது, ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தோடு மிகத்
தொன்மையான தொடர்புடைய படகு ஆர்க்கிட், சீனா, ஜப்பான் போன்ற தென்கிழக்காசிய நாடுகளின் கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரிய மருத்துவத்
தாவரமாகவும் விளங்குகிறது.
******
டான்சிங் லேடி ஆர்க்கிட், பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட், மோத் ஆர்க்கிட், கைட் ஆர்க்கிட் என இன்னும் சில வித்தியாசமான ஆர்க்கிட் மலர்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்)
அழகான மலர்களின் அணிவகுப்பு. பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Deleteஓக்கிட் பூக்கள் பற்றிய அரிய பல தகவல்களை உங்கள் படங்களோடு சேர்த்து அறியக் கிடைத்தமையை இட்டு மிக்க மகிழ்ச்சி கீதா.
ReplyDeleteஎன் தாயாரின் பிரிவின் போது தூரத்தில் இருந்து வர முடியாமல் போன என் சினேகிதி ஒருத்தி வெள்ளை நிற - நீங்கள் குறிப்பிட்டிருக்கிற - போட் ஓக்கிட் மரச் செடி ஒன்றை - அழகான கண்ணாடி தொட்டிக்குள் பூக்களோடும் இலைகளோடும் உயிரோடு இருக்கிற செடியாக அதனை ஒரு முகவர் மூலம் அனுப்பி வைத்திருந்தாள்.
என் வேலையின் மேலிடத்தில் இருந்தும் என் மேலாளர் தாயாரை வைத்தியசாலையில் பார்க்க வந்திருந்த போது ஓக்கிட் செடி ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். அதில் பூக்கள் இல்லாத படியால் அது என்னவகை என்று தெரியவில்லை.
என்னிடம் இது வரை ஓக்கிட் செடிகள் இருந்ததில்லை. இதனை எப்படிப் பராமரிப்பது என்றும் தெரிந்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கூகுளில் பார்த்து பராமரிப்பு முறைகள் சிலவற்றை அறிந்து கொண்டேன். மேலும் சிலவற்றை என் தங்கையிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இவற்றுக்கு வளமான சுவாத்திய நிலை தேவை போலும். நமக்கு இப்போது குளிர்காலம் என்பதால் வீட்டுக்குள்ளே வானத்தைப் பார்த்தபடி இருக்குமாறு வைத்திருக்கிறேன். அவைகளுக்கு தண்ணீரும் அதிகம் பிடிக்காது என்று அறிகிறேன். கூடவே சூரிய வெளிச்சம் நேரடியாக படுவதும் பிடிக்காதாம். என் செடி பூக்களோடும் மொட்டுக்களோடும் இருந்த மாதிரியே இருக்கின்றன. அவை வளருமா? சுவாத்திய நிலைமைகள் பொருத்தமாக இருக்கிறதா என்று ஒன்றையுமே அறிய முடியவில்லை.
உங்களுடய அடுத்த பதிவில் அவைகளை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிய தகவல்களையும் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் கீதா. சரியான நேரத்தில் ஓக்கிட் பற்றிய உங்கள் பதிவு படங்களோடு என்னை வந்தடைந்திருக்கின்றது.
மிக்க மகிழ்ச்சி; மிக்க நன்றி கீதா. ஆவலோடு உங்கள் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன்.
ஆர்க்கிட் பற்றிய உங்கள் பகிர்வுக்கு மிகவும் நன்றி யசோ. வெள்ளை மலர்கள் எப்போதுமே மனதுக்கு அமைதியும் இதமும் அளிப்பவை. மாதக்கணக்கில் வாடாத ஆர்க்கிட் மலர்கள் என்றால் அவை தரும் மனவமைதியை சொல்லவே வேண்டாம். அதுவும் அன்பின் பரிசாக என்னும்போது கூடுதல் நிறைவும் மகிழ்வும் இருக்கும்.
Deleteஆர்க்கிட் செடிகள் பராமரிப்பு என்பது சற்று கவனக்கூடுதலான விஷயம்தான். ஆரம்பத்தில் சிரமம் போல் தோன்றினாலும் அனுபவம் பெற்றுவிட்டால் அவ்வளவு எளிதாகிவிடும் என்று தோன்றுகிறது. யாமினியின் அடுக்களை ஜன்னலில் அழகழகாய்ப் பூத்துக் காட்சியளித்த ஆர்க்கிட் பூக்களும் பூங்காவில் வெட்டவெளியில் மண் தரையில் மற்ற செடிகளைப் போலவே வளர்ந்து பூத்துக் கிடந்த ஆர்க்கிட் பூக்களுமே அதற்கு சாட்சி.
ஆர்கிட் மலர்களை பற்றிய விவரங்கள் அருமை கீதா .
ReplyDeleteபடங்கள் அழகு. அவை தரும் மகிழ்ச்சி, அன்பு, காதல், மருத்துவ பயன்கள் அனைத்தும் அருமை.
மலர் மருத்துவம் என்று செய்கிறார்கள்.
மலர்களை பார்ப்பது மகிழ்ச்சி, அவை அன்பானவர்களால் அளிக்கபடும் போது மேலும் மகிழ்ச்சி. இறைவன், இயற்கையின் படைப்பில் மலர்கள் பல அற்புதங்களை செய்கிறது.
மேலும் தெரிந்து கொள்ள வருகிறேன். ஆர்கிட் மலர்களை கண்டால் அதன் பேர்கள் நினைவுக்கு வரும்.
வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி கோமதி மேம். மலர் மருத்துவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். மலர்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாலே போதும், மன சஞ்சலம் போக்க வேறு மருந்துகள் வேண்டாம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். :))
Deleteஆறாண்டு காலத்தில் எடுத்து சேமித்த அழகிய படங்களுடன் அளித்துள்ள தகவல்கள் யாவும் அருமை. ஆர்க்கிட் வகைகளின் பெயர்களும் அதற்கான காரணங்களும் சுவாரஸ்யம். நன்றி கீதா.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. எழுதவேண்டும் எழுதவேண்டும் என்று எண்ணி எண்ணி இறுதியில் ஒருவழியாக எழுதிவிட்டேன். :)))
Deleteஅழகும் வண்ணங்களும் வகைகளும் வனப்பு மிகு தோற்றங்களும் கண்கொள்ளாக் காட்சிகள்.... இவற்றை எல்லாம் கமறாவுக்குள் சிறைப் பிடித்து அவற்றினைப் பற்றி ஆராய்ச்சி செய்து பெயர்களையும் அவற்றின் வாழ்க்கையையும் கண்டு பிடித்து சிக்கனமான சொற்களில் சுவையாக எங்களுக்கும் அவற்றை அறியத்தந்தமைக்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை கீதா.
ReplyDeleteமிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
இயற்கையின் அழகையும் அதிசயத்தையும் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும்போது பன்மடங்காகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யசோ.
Delete