31 October 2019

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்

தோட்டத்துப் பிரதாபம் - 7

தோட்டத்து விளைச்சல்

கத்தரிக்காய் சாப்பிடுவதென்பது எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. எனக்காகவே அம்மா மீன் குழம்பில் தக்காளிக்காய் போடுவாங்க என்று சொன்னேன் அல்லவா? இலவச இணைப்பாக கத்தரிக்காய், மாங்காய் போடுவதுண்டு. கத்தரிக்காய் எனக்கே எனக்கு மாத்திரம். கத்தரிக்காய் கேட்டு அடம்பிடித்து ஆத்தாவிடம் மொத்து வாங்கிய கதையைக் கேட்டாலே உங்களுக்குத் தெரிந்துவிடும் கத்தரிக்காய் எனக்கு எவ்வளவு இஷ்டம் என்பது.

பள்ளியில் என்னைச் சேர்க்கும் வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். முதல் பேத்தி என்பதால் பயங்கர தாத்தா செல்லம். அப்போது எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கலாம். அன்று வீட்டில் மீன்குழம்பு. மதிய உணவுக்காக தாத்தா வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். "பாப்பா சாப்பிட வாம்மா" என்று அழைத்து அவரது தட்டில் பரிமாறப்பட்ட மீனை முள் நீக்கி வாஞ்சையுடன் எனக்கு ஊட்ட, நான், "எனக்கு மீனு வேணாம், கத்திரிக்காதான் வேணும்" என்றேன். கொடுப்பதைச் சாப்பிடாமல் அந்த வயதில் எத்தனை நாக்கு ருசி பாருங்க! எல்லாம் தாத்தா கொடுக்கிற இடம்தான்!

மீன்குழம்புக்குத் தயாராக.. 

அடுத்த நொடியே தாத்தாவிடமிருந்து ஆணை பறந்தது. "யாரங்கே, உடனடியாய் என் பேத்திக்குக் கத்தரிக்காய் சமைத்துக் கொடுங்கள்" கிட்டத்தட்ட அப்படிதான் ஆனது நிலைமை. அணைக்கப்பட்டிருந்த விறகடுப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு... அவசர அவசரமாய் ஒரு கத்தரிக்காய் எங்கிருந்தோ வருவிக்கப்பட்டுநாலைந்து துண்டமாய் நறுக்கப்பட்டு... உப்பு சேர்த்து அவிக்கப்பட்டு... பின் குழம்பிலிடப்பட்டு... இவ்வாறாக பல பாடுபட்டு இறுதியாக என் நாவுபட்டு... தன் பிறவிப்பயனை அடைந்தது அன்று ஒரு கத்தரிக்காய்!

கத்தரிக்காய் வேகும்வரை பணிக்குத் திரும்பாமல் 'இன்னுமா வேகல? இன்னுமா வேகல?' என்று ஆத்தாவையும் கத்தரிக்காயையும் ஒருசேர மிரட்டிக்கொண்டிருந்தார் தாத்தா.

தாத்தா வேலைக்குப் போனபிறகு ஆத்தா என் கன்னத்தில் இடித்து, "ஏண்டி, மீனு வேணாம்னு கத்திரிக்கா கேட்டே, வீட்டுல இருந்துச்சி, ஆக்கித் தந்தாச்சி, கத்திரிக்கா இருக்கையிலே மீனு கேட்டா என்னாடி பண்ணியிருப்பாரு உங்க தாத்தா? தூண்டிலை எடுத்துகிட்டு ஏரிக்கரையப் பாக்கப் போயிருப்பாரோ? போனாலும் போவாரு, சொல்லமுடியாது" என்று அலுத்துக்கொண்டார். அந்த ருசி என்னவோ இன்று வரை மாறவே இல்லை.

கத்தரிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

கத்தரிப்பூவில் ஆஸ்திரேலியத் தேனீ


வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேயினித்த மோரும் திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.

என்று ஔவையையே தன் பெருமை பாடவைத்த கத்தரிக்காய்க்கு முன் நான் எம்மாத்திரம்? 

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்
கூடவே வீட்டு மோர்மிளகாயும்

புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்த பூதன் என்பவன், ஒரு சமயம் ஔவைக்கு அளித்த விருந்தானது இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கதாம். அப்படி என்ன பெரிய விருந்தாம்? வழுதுணங்காய் என்றால் கத்திரிக்காய். வரகரிசிச்சோறும் கத்திரிக்காய்ப் பொரியலும் மோரும்தான் அந்த விருந்து. பசியோடிருப்பவர்க்கு மனமுவந்து அளிக்கும் உணவு எளியதாய் இருந்தாலும் அதற்கு இந்த உலகும் ஈடில்லைதானே

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும் எப்படியிருக்கும்? சாப்பிட்டுப் பார்த்தாலென்ன என்ற ஆசை வந்துவிட்டது. வழுதுணங்காய் கைக்கெட்டும் தூரத்தில் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறது. வரகரிசி

வரகரிசி

கிடைக்குமோ கிடைக்காதோ என்று நினைத்தேன். அதுவும் கடையில் கையெட்டும் தூரத்தில் கிடைத்தது. வாங்கி வந்து ஆக்கி ருசித்தாயிற்று. ஔவை சும்மா சொல்லவில்லை, சொர்க்கம்தான்.

ஏழெட்டு கிலோ இருக்கலாம்

இவர்கள் எங்க வீட்டுக் கருப்பழகிகள். புரியவில்லையா? Black beauty எனப்படும் கத்தரியினம். ஒவ்வொன்றும் சுமார் அரைக்கிலோ இருக்கும். இவ்வளவு பெரிதாகும் என்று எனக்கு முதலில் தெரியவே இல்லை. ஓரளவு வளர்ந்தவுடனேயே பறித்து சமைத்துவிடுவேன். கத்தரிக்காய்கள் பிஞ்சு விட்டிருந்த சமயம் கணவரும் நானுமாக மூன்று வாரங்களுக்கு ஒரு திடீர்ப் பயணம்.  வெண்டைகளின் காய்ப்பும் உச்சத்தில் இருந்த நேரம். தவிர்க்கமுடியாத பயணம் என்பதால் தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்காத மகனைக் கெஞ்சி வாரமொருமுறையாவது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தேன். சரி சரி என்றான். ஊரிலிருந்து எப்போது பேசினாலும் 'மழை பெய்யுதும்மா.. மழை பெய்யுதும்மா' என்பான். எனக்கோ ஆச்சர்யம். நான் இருக்கும் வரை மழைக்கான சிறு அறிகுறி கூட தென்படவில்லை. என் தோட்டத்துச் செடிகளை வாழ்வித்த இயற்கைக்கு நன்றி சொல்லி ஆனந்தித்தேன்.

அறுநூறு கிராம்

ஊரிலிருந்து திரும்பியது இரவு நேரம் என்பதால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு விடியக் காத்திருந்தேன். விடிந்ததும் விடியாததுமாக தோட்டத்துக்கு ஓடிப்போய்ப் பார்த்தால், என் கண்களையே நம்ப முடியவில்லை. கத்தரிக்காய்கள் எல்லாம் குண்டு குண்டாய்க் காய்த்து, செடிகள் பாரந்தாங்காமல் எல்லாம் தரையோடு தரையாய்க் கிடந்தன

குண்டு கத்தரிக்காய்

ஒவ்வொன்றும் அரைக்கிலோ தேறும். சில காய்கள் மழைநீரிலேயே ஊறிக்கிடந்து அழுகிவிட்டிருந்தன. எல்லாவற்றையும் பறித்துவிட்டு செடிகளுக்கு முட்டுக்கொடுத்து நிமிர்த்துவைத்தேன்அன்றைக்குப் பறித்தவை மட்டுமே ஏழெட்டு கிலோ இருக்கலாம்

முற்றவே இல்லை

கத்தரிக்காய்கள் நிச்சயம் முற்றியிருக்கும் என்று நினைத்து ஒன்றை அரிந்து பார்த்தால், அங்கேயும் ஓர் ஆச்சர்யம். முற்றலுக்கும் முந்தைய பருவத்தில் இருந்தது. எல்லாவற்றையும் அரிந்துபார்த்தேன். ஒன்றும் சோடைபோகவில்லை. உடனே உப்புநீரில் அரை அவியலாய் அவித்தெடுத்து வற்றல் போட்டு பத்திரப்படுத்திவிட்டேன்.

கத்தரி வற்றல்

குளிர்காலத் துவக்கத்தில் காய்ப்பும் குறைந்துவிட்டது. செடிகளில் பூச்சித்தொற்றும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. குளவிகளையும் பொறிவண்டுகளையும் காணவில்லை. குளிர்காலம் முடியும்வரை அவற்றின் வருகை குறைவாகத்தான் இருக்கும் என்பதால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் வழியில்லை. நன்றாக இருந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டியெறிந்துவிட்டேன். அந்த ஒன்றும் கூட முடிந்தவரை ஒன்று இரண்டு என காய்த்துக்கொண்டு என் கத்தரிக்காய் ஆவலை அவ்வப்போது பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. விதைக்காக சில காய்களைப் பழுக்கவிட்டிருக்கிறேன்.

கத்தரிப்பழம்? 

கத்தரிக்காய் காய்க்காவிட்டாலும்தான் என்ன, அதுதான் கத்தரி வற்றல் கைவசம் இருக்கிறதே. அடுத்த சீசன் வரை அசத்திவிடலாம்.

(பிரதாபங்கள் தொடரும்)


  

30 comments:

 1. தாத்தாவின் கட்டளையும், பாட்டியின் செயல்பாடும் பேத்தியின் செல்லமும் ரசிக்க வைத்தது.

  மழை பெய்து கொண்டு இருந்தது என்றீர்கள், வற்றல் போட வெயில் வந்து விட்டத?
  நல்லது.
  படங்கள், இலக்கிய பகிர்வு எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி மேடம்.

   \\மழை பெய்து கொண்டு இருந்தது என்றீர்கள், வற்றல் போட வெயில் வந்து விட்டத?\\ அதையேன் கேக்கறீங்க? வெயில் போதுமானதாக இல்லை. வற்றல் போடாமலும் இருக்கமுடியாது. பாதி வெயிலில் காயவைத்து மீதியை அவனில் (oven) காயவைத்து என்று ஒருவழியாகிவிட்டது. எப்படியோ வீணாகாமல் பத்திரப்படுத்தியது மகிழ்ச்சி.

   Delete
 2. கத்திரிக்காய் பிரதாபம் சுவை என்றால் தாத்தாவின் அன்பும், பாட்டியின் செல்ல அலுத்தலும் கவிதை. வாசித்ததும் மனதில் மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி பாண்டியன். குழந்தைக்கால நினைவுகள் சில ஞாபகத்தில்.. சில சொல்லியறிந்தவை.. எத்தனைக்காலம் ஆனாலும் மறக்கவியலாத மகிழ்வலைகள்.

   Delete
 3. பிரதாபம் ரசனை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி மாதேவி.

   Delete
 4. சுவையான பகிர்வு. கத்தரிக்காய் அவ்வளவாகப் பிடிக்காது - அதுவும் வதக்கினால்! கூட்டு வகை எனில் ஓகே!

  சுவையான குறிப்பு. வரகரிசி இங்கே கிடைப்பது கடினம். தமிழகம் வரும்போது செய்து தரச் சொல்ல வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. கத்தரிக்காய் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை என்ற விஷயம் எனக்கு ஆச்சர்யம். கத்தரியிலும் பல வகை உள்ளதால் ருசி மாறலாம் என்று நினைக்கிறேன். வரகரிசியில் பொங்கல் கூட செய்தேன். மிகவும் நன்றாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 5. வழுதுணங்காய்..கத்தரிகாயின் பெயர் என இப்போத தெரிகிறது. அதன் மீது அவ்வளவு காதலால்தான் உங்களை ஏமாற்றாமல் காய்த்து விட்டிருக்கு. போன இடத்தில் உங்க மனமெல்லாம் இங்குதான் போல. பார்க்கவே அழகா இருக்கு ப்ளக் பியூட்டி.
  அவ்வளவாக விதையில்லாமல் சதைபிடிப்பாக இருக்கு.
  கத்தரி வற்ரல் கைகொடுக்கும். இனி நீங்க திரும்ப ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். சம்மர் வருகிறது.
  அழகான எழுத்து நடை.அருமையான தோட்டத்து(பிரதாபம்) பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தேடலில்தான் எனக்கும் வழுதுணங்காய் பற்றித் தெரிய வந்தது ப்ரியா.
   \\அதன் மீது அவ்வளவு காதலால்தான் உங்களை ஏமாற்றாமல் காய்த்து விட்டிருக்கு \\ மிக மிக உண்மை ப்ரியா.

   இப்போது வசந்தகாலம் என்றாலும் வெயில் தொடங்கிவிட்டது. விதைகள் போட்டிருக்கிறேன். :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.

   Delete
 6. உங்களின் பதிவு உங்கள் கத்தரிக்காய் போல ருசிகரமாக இருந்தது. அன்பான தாத்தாவின் செல்லப்பேத்தியின் கதை மிகுந்த சுவாரஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

   Delete
 7. கத்தரிக்காய் எனக்கு பிடித்த காய். என் வீட்டில் எப்போது ஸ்டாக் வைத்திருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. நீங்களும் கத்தரிப்பிரியர் என்றறிந்து மிகவும் மகிழ்ச்சி. :)))

   Delete
 8. என்னது நீங்கள் மீன் குழம்பு எல்லாம் வைப்பீங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  ReplyDelete
  Replies
  1. ஏஏஏம்ப்ப்பா... இவ்வளவு சந்தேகம்? நல்லாவே வைப்பேன். :))) ஆஸ்திரேலியாவுக்கு எப்ப வரீங்கன்னு சொல்லுங்க.. செய்துதரேன்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 9. கத்தரிக்காய் மகிமை நன்றாக இருக்கிறது கீதா.

  இந்தக் கத்தரிக்காய் பற்றி படித்த போது அண்மையில் வாசிக்கக் கிட்டிய ’செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய்’ என்று ஒரு புதுமையான கட்டுரை வடிவில் அமைந்த நூல் ஒன்றை பற்றிச் சொல்ல வேண்டும். அவுஸ்.வாழும் விவசாயத்துறை பேராசிரியர். ஆசி.கந்தராஜா அவர்கள் அதனை வெளியிட்டிருக்கிறார். விபரணக்கட்டுரையாகவும் அதே நேரம் கதை என்று சொல்லப்படத்தக்க பாங்கிலும் சரியான விஞ்ஞான விபரங்களை உள்ளடக்கிய பாங்கிலும் அமைந்த ஒரு வித்தியாசமான தொகுப்பு அது!

  தமிழுக்கும் புதிய பாணி.

  படித்தால் பல சுவாரிசமான பயனுள்ள தகவல்கள் அதில் உள்ளன. உங்களுக்கும் அப் புத்தகம் கிடைக்க ஆவன செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அட... இப்படியொரு நூலா? பெயரே வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதே.. காத்திருக்கிறேன். அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 10. அட! கத்தரிக்காய் பற்றிய புகழ் ஓங்கட்டும்! நல்ல நினைவலைகள் இல்லையா?! கீதா?

  கேரளத்திலும் வழுதுணங்கா/வழுதணங்கா என்றுதாந் சொல்லுவாங்க...குறிப்பாக நீட்ட பச்சைக்கத்தரியை.

  நீங்க சொல்லியிருக்கும் இந்தப் பெரிய கத்தரி பெரிதாக இருந்தாலும் முற்றவே முற்றாது கீதா. அரைக்கிலோ தேறும்...இது ஒரு வகை. இங்கு நிறையக் கிடைக்கிறது. இதை அடுப்பில்/க்ரில்லில் சுட்டு தோல் நீக்கி துவையல், கத்தரி கொத்ஸு, வட இந்திய பெய்ங்கன் க்ரேவி என்று நிறைய செய்யலாம். அந்தச் சுட்டுச் செய்யும் மணம் அலாதியாக இருக்கும்.

  உங்கள் வீட்டுக் கத்தரிக்காய் ரொம்ப அழகாக இருக்கு. வரகரிசி சோறு ஆஹா இங்கு நான் அடிக்கடிச் செய்வதுண்டு. எங்கள் வீட்டிலும் கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும் எல்லோருக்கும்.

  நல்ல பதிவு. கூடவே ஔவையின் பாடல் விளக்கம் என்று தகவலும் தந்ததற்கு மிக்க நன்றி. அனுபவிச்சுப் பாடியிருக்காங்க!!!

  சுவையான பதிவு!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. \\கேரளத்திலும் வழுதுணங்கா/வழுதணங்கா\\ ஓ.. புதிய தகவல்.
   \\அடுப்பில்/க்ரில்லில் சுட்டு தோல் நீக்கி துவையல், கத்தரி கொத்ஸு, வட இந்திய பெய்ங்கன் க்ரேவி என்று நிறைய செய்யலாம். அந்தச் சுட்டுச் செய்யும் மணம் அலாதியாக இருக்கும்.\\ நானும் சுட்டு துவையல் அரைப்பேன். பைங்கன் கிரேவி இனிதான் செய்து பார்க்கவேண்டும்.

   வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 11. இந்த பெரிய கத்திரிக்காய் eggplant என்று சொல்வார்கள். இது வட்டமாக வெட்டி பஜ்ஜி போடலாம். ஐயா கந்தசாமி அவர்கள் செய்முறைப்படி சுட்ட கத்திரிக்காய் துகையல் செய்யலாம். அல்லது பஞ்சாபி சமையல் ஆன பைங்கொன் பர்தா செய்யலாம். டெல்லியில் கத்தரிக்காய் தேங்காய் சைசில் பார்த்திருக்கிறேன். ஒன்று ஒன்றரை கிலோ வரும். 
  https://www.cookwithmanali.com/baingan-bharta/

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. பஜ்ஜி, துவையல் செய்திருக்கிறேன். பைங்கன் பர்தா என்னவென்று பார்க்கிறேன்.

   \\டெல்லியில் கத்தரிக்காய் தேங்காய் சைசில் பார்த்திருக்கிறேன். ஒன்று ஒன்றரை கிலோ வரும்\\ ஓ... ஒரு கத்தரிக்காயை வைத்து விருந்தே சமைக்கலாம் போல.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயக்குமார்.

   Delete
 12. தாத்தாவின் அன்பு மனதை வருடியது. பாட்டியின் அலுத்துக் கொண்டதில் அவரது பாசம் தெரிந்தது.

  கத்திரிக்காய்கள் நீங்கள் எதிர்பாராமல் பெரிதாக வளர்ந்து உங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. வற்றல் போட்டு சேமித்துக் கொண்டது சமயோஜிதம்.

  பிரதாபங்கள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. வேயினித்த மோரும்- ஒரு சந்தேகம் - வேநுரைத்த மோரும் என்பதாக படித்த ஞாபகம். நல்ல பதிவு. எங்கள் வீட்டில் கத்தரிக்காயை தணலில் சுட்டு, தோலை நீக்கி ; வெங்காயம்; பச்சைமிளகாய்; பழப்புளி; உப்பு சேர்த்து பிசைந்து தருவார்கள். அருமை, மிக வேகமாகத் தயாரிக்கமுடியும். இதைக் கத்தரிக்காய்ச் சம்பல் என்போம்.

  ReplyDelete
 14. Anonymous19/7/23 09:17

  அருமை

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.