16 March 2022

பூச்சி வீடும் புல் தூக்கிக் குளவியும்

தோட்டத்துப் பிரதாபம் - 25

உடலளவில் திடமில்லாது வாய்ப்பேச்சில் வீரம் காட்டுபவர்களை ‘புல் தடுக்கி பயில்வான்’ என்று கேலியாகச் சொல்வதுண்டு. பெரும்பாலும் குழந்தைகளைச் செல்லமாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது என்ன, புல் தூக்கிக் குளவி? நீங்கள் எவரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் எனக்குப் புதிய தகவல் இது.

படம் 1 - புல் தூக்கிக் குளவி 

வாயில் காய்ந்த புல் துண்டைக் கவ்விக் கொண்டு பறக்கும் இந்தக் குளவியைப் பாருங்கள். ஒரு குளவி எதற்காக புல்லைத் தூக்கிக்கொண்டு போகவேண்டும்? 

படம் 2 - பூச்சிகளின் வருகைக்கு முன் பூச்சி வீடு

முதலில் பூச்சி வீட்டைப் பற்றி சொல்லவேண்டும். வெகு நாளாகவே எனக்கு தோட்டத்தில் பூச்சி வீடு (insect house) வைக்கவேண்டும் என்று ஆசை. ஆஸ்திரேலியத் தேனீக்கள் பலவும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. ஐரோப்பியத் தேனீக்களைப் போல கூட்டுவாழ்க்கை வாழ்பவை அல்ல.  தேனீ இனத்தின் ஒவ்வொரு பெண் தேனீயும் கூடு கட்டி முட்டையிடக்கூடியது. அதற்கேற்ற இண்டு இடுக்குகள் இல்லாமற் போவதால் தேனீக்கள் அருகும் நிலை ஏற்படுகிறது என்றும் அதனால் பூச்செடிகளும் தேனீ விடுதிகளும் (bee hotel) அமைத்து தேனீக்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கித்தர வேண்டும் என்றும் அறிந்தேன்.

படம் 3 - தோட்டத்து மூலையில் பூச்சி வீடு

சில மாதங்களுக்கு முன்புதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு பூச்சி வீட்டை தோட்டத்தின் மூலையில் கட்டித்தொங்கவிட்டேன். ஐரோப்பியத் தேனீக்கள் அல்லாமல் நீல வரித் தேனீ (blue banded bee), இலைவெட்டுத் தேனீ (leaf cutter bee), முகமூடித் தேனீ (masked bee) என பல ஆஸ்திரேலியத் தேனீக்கள் தோட்டத்துக்கு வருகை புரிந்தாலும் பூச்சி வீட்டை எதுவுமே கண்டுகொள்ளவில்லை. எந்தத் தேனீயின் கண்ணிலாவது என் பூச்சி வீடு பட்டுவிடாதா என்று ஏக்கத்தோடு காத்திருந்தேன்.

படம் 4 - அறைகளைப் பார்வையிடும் புல் தூக்கிக் குளவி

ஒருநாள் ஏதோ ஒரு பூச்சி, பூச்சி வீட்டின் அறைகளை ஆராய்ந்துகொண்டிருந்தது. தேனீ என்று நினைத்து ஆர்வத்தோடு பார்த்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். அது ஒரு குளவி. சரி, சரி, பூச்சி வீடு என்று இருந்தால் தேனீயும் வரும், குளவியும் வரும். இதற்கெல்லாமா சஞ்சலப்படுவது? வந்தாரை வாழவைப்பதுதானே நமது பண்பாடு என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  

 
படம் 5 - கூடு கட்டத் தயாராகும் புல் தூக்கிக் குளவி

பூச்சி வீட்டின் (insect house) துளைகளை ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து நுழைந்து பார்வையிட்டுக்கொண்டிருந்த அந்தக் கருப்புக் குளவியை முதலில் பார்த்தபோது அதன் சிறப்பு என்னவென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சற்று நேரத்தில் எங்கோ போய் எதையோ தூக்கிக்கொண்டு வந்தது. இதென்ன, பல்லி வால் போல இருக்கிறதே என்று பார்ப்பதற்குள் சட்டென்று ஒரு துளையின் உள்ளே அதை இழுத்துக்கொண்டு போய்விட்டது. பிறகு குளவி மட்டும் வெளியே வந்தது. மறுபடியும் எதையோ நீளமாகத் தூக்கிக்கொண்டு வந்தது. அதே துளைக்குள் போனது. சற்றுநேரத்தில் குளவி மட்டும் வெளியில் வந்தது.
படம் 6 - புல் தூக்கிக் குளவியின் முதல் கூடு

என்னதான் நடக்கிறது என்று கேமரா கண்களைக் கொண்டு ஊன்றிப் பார்த்தபோதுதான் விஷயம் பிடிபட்டது. காய்ந்த புற்களைக் கொண்டு அது கூடுகட்டிக் கொண்டிருக்கும் விஷயம். உடனே தேடல் புத்தி தன் வேலையை ஆரம்பித்தது. ஆபத்பாந்தவனான கூகுளை நாடினேன். Sphecidae குடும்பத்தைச் சேர்ந்த இது grass-carrying wasp என்ற காரணப்பெயரால் குறிப்பிடப்படுகிறது என்று அறிந்து வியந்தேன். ஆஸ்திரேலிய வகையின் பெயர் Brown-legged grass-carrying wasp என்றும் உயிரியல் பெயர் Isodontia auripes என்றும் அறிந்தேன்.

படம் 7 - நான்காவது கூடு கட்டப்படுகிறது 

பொதுவாக புல் தூக்கிக் குளவிகள் வட அமெரிக்காவைச் சேர்ந்தவை என்றும் வீடுகளின் ஜன்னல் சட்டங்களில் (storm window frames) வைக்கோல் திணிக்கப்பட்ட இவற்றின் கூடுகள் சர்வ சாதாரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த வகைக் குளவிகள் இருப்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரியவில்லை என்பது நான் இதைப் புகைப்படமெடுத்து ஆஸ்திரேலியப் பூச்சிகள் குழுமத்தில் பகிரும்வரை எனக்கும் தெரியவில்லை.

படம் 8 - காய்ந்த புற்களால் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்

புல் தூக்கிக் குளவி, மற்றக் குளவிகளைப் போல மண் அல்லது அரக்கால் கூடு கட்டி முட்டையிடுவதில்லை. சிறிய துவாரங்களுக்குள்தான் முட்டையை இடுகிறது. கூடவே முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கான இரையையும் வைக்கிறது. இவற்றை மற்ற பூச்சிகளிடமிருந்தும் குளவிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டாமா?  அதனால்தான் மெனக்கெட்டு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக் கொண்டுவந்து திணித்து துவாரத்தின் வாயிலை அடைத்து வைக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய பூச்சிக்கு எவ்வளவு புத்திசாலித்தனம்!

அது மட்டுமல்ல, பொதுவாக குளவிகள் முட்டையிட்ட பின் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கு உணவாக புழுக்களை வைத்து கூட்டை மூடும். சில குளவிகள் சிலந்திகளை வேட்டையாடி உணவாக வைக்கும். ஆனால் இந்த புல் தூக்கிக் குளவி, தன் லார்வாவுக்கு மரவாழ் வகை வெட்டுக்கிளிகளைப் பிடித்துவந்து தன் விஷத்தால் அதை செயலிழக்கவைத்து உயிரோடு உணவாக வைக்குமாம். ஆச்சரியம் கூடுகிறதல்லவா?

நான்கைந்து நாள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா, அம்மா தயாராக வைத்துவிட்டுப் போயிருக்கும் இரையைத் தின்று வளர்ந்து பெருத்து, கூட்டுப்புழுவாகி பிறகு குளவியாகி கூட்டை உடைத்து வெளியில் வரும். குளவியான பிறகோ இதன் உணவு பூக்களின் தேன் மட்டுமே.

படம் 9 - புல் தூக்கிக் குளவியின் ஐந்தாவது கூடு கட்டப்படுகிறது

கடந்த ஒரு மாத காலமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஓயாத சுறுசுறுப்போடு ஒற்றை ஒற்றைப் புல்லாகக் கொண்டுவந்து கூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்தக் குளவி. பூச்சிவீட்டின் நான்கு அறைகளில் கூடுகளைக் கட்டி முடித்துவிட்டு தற்போது ஐந்தாவது அறையில் கூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது இந்த சின்னஞ்சிறு குளவி.

கண்ணிமைக்கும் நேரத்தில் வருவதும் போவதுமாக இருப்பதால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை.

படம் 10 - ஆஸ்திரேலிய மண்குளவி

பூச்சி வீட்டின் மற்றொரு குடியிருப்பாளர் Australian hornet (Abispa ephippium) எனப்படும் மண்குளவி. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட எந்தக் குளவியும் Hornet எனப்படும் கடுங்குளவி வகைக்குள் வராது என்ற போதும் எப்படியோ இந்த மண்குளவிக்கு தவறுதலாக இப்பெயர் இடப்பட்டுவிட்டது. 

படம் 11 - மண்குளவி இடத்தைத் தேர்வு செய்கிறது

இதுவும் பூச்சி வீட்டின் நான்கு அறைகளில் மண்கூடு கட்டி முட்டையிட்டு முடித்துவிட்டு இப்போது ஐந்தாவது அறையில் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. 

படம் 12 - சேற்று மண்ணைத் திரட்டும் மண்குளவி

படம் 13 - புழுவைக் கவ்விச் செல்லும் மண்குளவி

பூச்சி வீட்டுக்குக் கீழேயே சேற்று மண் இருக்கிறது. நாலு எட்டுப் பறந்தாலே புழுக்கள் கிடைத்துவிடுகின்றன. அதனால் அதிக மெனக்கெடல் இல்லாமல் வேலை சீக்கிரமாகவே முடிந்துவிடுகிறது இந்தம்மாவிற்கு.

படம் 14 - கூட்டின் வாசலை மண்ணால் மூடுகிறது

பார்க்கலாம், இன்னும் வேறு யார் யாரெல்லாம் வருகை தரவிருக்கிறார்கள் இந்த வாடகை வீட்டுக்கு என்று.  


படம் 15 - பூச்சி வீடு தற்போது