30 April 2012

மானம் பாத்த பொழப்பு





மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நாம்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே
காத்திருக்கேன்.


23 April 2012

இரவல் வண்ணச்சிறகுகள்



வான் தொட விழையும்
வன்மரங்களின் கிளைகளினூடே
வழிந்தொழுகும் வெய்யில் மழை
ஆங்காங்கே நனைக்குமொரு
அடர்வனந்தனிலே....

அடைக்கலமாயிருந்தன,
ஆயிரமாயிரம் பறவைகள்!

அன்பால் ஆக்கிரமித்திருந்த அவை
என்றுமே அடுத்தவர் நலம்நாடின.
அவர்தம் புகழ்பாடின.
அங்கே கரையலும், அலறலும், அகவலுமே
அங்கீகரிக்கப்பட்ட இன்சங்கீதமே.

பட்சிகளின் கலந்திசையால் ஈர்க்கப்பட்டு
இளைப்பாறிச் செல்லும் எண்ணத்துடன்
வனம் புகுந்தது ஒரு வண்ணப்பறவை!

அழகில் அது
அதிகபட்சத்தைக் கண்டிருந்தது.
அது பாடிய பாடலோ
இனிமையின் உச்சத்தைக் கொண்டிருந்தது.

வந்திறங்கிய பறவையின்
வசீகரம் கண்டு வாய் பிளந்தன,
பழைய பறவைகள்!
வசமிழந்து சொக்கி நின்ற
வனப்பறவைகள் கண்டு
சூழ்ச்சியிலிறங்கியது சுந்தரப்பறவை!

தன் கானம் ஒன்று மட்டுமே
கானகமெங்கும் எதிரொலிக்கும்வகையில்
கவின்மிகு யுத்தி செய்தது.


இறகுகளில் வழியும்
இறுமாப்பின் வண்ணங்களை
பிச்சைக்காசென இறைத்துவிட்டு
பிறிதோர் கானகம் புகுந்தது.

பட்சி பறந்து சென்ற பாதை பார்த்தே
பிரமித்து நின்ற பறவைகள் யாவும்,
சிந்தியிருந்த வண்ணங்களை எடுத்து
சிறகுகளில் பூசிக்கொண்டன.

அன்றிலிருந்து....
கானகத்தின் சொந்தப்பறவைகளுக்கு
தங்கள் கானம் மறந்துபோயிற்று.
எழுப்பிய சிறுவொலியும் 
எதிரொலியால் அடிபட்டுப்போனது.

சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
வானம் பார்த்து வாழத்தொடங்கின,
வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!

12 April 2012

வெட்கமறியா வெக்கை



ஆசை மட்டுமல்ல,
வெக்கையும் வெட்கமறியாதுபோலும்.
அறிந்திருந்தால்….

மதிலுக்குள்ளும், மாடியிலும்
வழக்கமற்ற வழக்கமாய்
மேலாடை துறந்துலாத்தும் ஆடவரையும்,

தார்ச்சாலையோரத் தர்பூசணிச்சாறு வழியும்
முழங்கைதனை நாவால் வழித்திடும்
நாசூக்கு மறந்த நங்கையரையும்,

மனமுதிர்த்த மதியா வாயிலானாலும்
மரமுதிர்த்த நிழலில் நின்றிளைப்பாரும்
திரைமனங்களின் சில மறைமுகங்களையும்,

வரவேற்பறைக் காத்திருப்பின் புழுக்கத்தில் நெளிந்து
மின்விசிறிப் பொத்தான் தேடி
முன் அனுமதியின்றி சொடுக்கும் கரங்களையும்
காணவிட்டு வேடிக்கை காட்டுமா?

8 April 2012

எப்படியோ ஏறிவிட்டேன்...





மலைமுகட்டில் எழுந்த
மனமுரசும் உற்சாகக் கூப்பாடுகள்
அங்குமிங்கும் எதிரொலித்தபடியே
அடிவாரம் வந்தடைந்திருந்தன...

ஆர்வத்தை மிகைப்படுத்தி
அண்ணாந்துநோக்கவைக்கும்
ஆரவாரக் களிப்புகள் யாவும்

உயரங்கள் எப்போதும் எனக்கு
உச்சபட்ச பீதியுருவாக்குமென்னும்
உண்மையை மறக்கச்செய்ய....

அனிச்சையாய் துளிர்த்தெழுந்தது,
அல்ப ஆவலாதியொன்று!

உச்சியினின்று தளும்பி வழிந்து
உயிர் நனைத்த சிநேகத்தின்
உடனே ஏறிவாவென்னும்
உளப்பூர்வ அழைப்புகளையும்
இறங்கும்வரை உறுதுணையாயிருப்போமென்னும்
உருக்கமான உறுதிமொழிகளையும்
உடும்பெனப் பற்றியபடியே
விடுவிடுவென்று பயணிக்கத் துவங்குகின்றன
என் பாதங்கள், பழகாத பாதைதனில்!

ஏற்றக்கோணத்தில் மலைமுகடு மறைந்து
மனமுகடுகள் மட்டுமே இலக்காக....
இலகுவில் எட்டிவிட்டேன்....

சிகரம் தொட்டுவிட்ட இறுமாப்புடன்
இறுகியணைத்து உரமேற்றும் கரங்களைத்
தேடுகின்றன, என் தோள்கள்!

அவர்களோ....
நாப்பிறழ்ந்த நம்பிக்கைமொழிகளை
காற்றில் பறக்கவிட்டபடியே
என்னை மறந்து
ஏதேதோ பேசியபடி
இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.