29 November 2011

தாய்மை


இடுப்பு நோகுதம்மா என்று
இயல்பாய்ச் சொன்னபோதும்,
துடித்துப் பதறித் தொடுக்கிறாள்,
தொடர்க் கேள்விக் கணைகளை!

வலிகளைத் தரம்பிரித்துச் சொல்லி,
வந்த வலி எந்த வலி என்கிறாள்;
பொய்யோ மெய்யோவென்று அறிய
பெருஞ்சீரகக் கஷாயம் தந்து,
பெரிதொரு ஆராய்ச்சி செய்கிறாள்!
மெய்யென்றறிந்த பின்னோ....
செய்வதறியாது கைபிசைந்துநிற்கிறாள்!

விண்ணென்று தெறிக்கும் வேதனையை,
விளக்கிச் சொல்ல இயலாது,
அம்மா, அம்மாவென அரற்றும் என்னை,
ஆதரவாய்த் தழுவிக் கொள்கிறாள்!

கூந்தல் அலசவும் அதுநாள்வரை
குளியலறைக்குள் அனுமதித்திராத அவளை,
கூடவே இருக்கச் சொல்லி,
கரம் பற்றிக் கொண்டபோது,
காணச் சகியாமல் கண்ணீரை உகுக்கிறாள்!

அன்றொருநாள் அவளுற்றதும்
இதே துயரம் என்றறிந்தபோதும்,
இன்றென் குறுக்குவலி பொறுக்காது,
முந்தானையால் முகம்பொத்திக் குலுங்குகிறாள்!

சுகமாய்ப் பிரசவிக்க வேண்டுமென்று,
குலதெய்வத்தை வேண்டுகிறாள்;
போதாதென்று கூடவே அழைக்கிறாள், அவள்
பார்த்தேயிராத பல தெய்வங்களை!

அப்பாவின் செல்லமென்று இருந்தவள்,
அம்மாவின் பெண்ணானேன்,
அழகிய என் தேவதை
அவதரித்தக் கணம் முதலாய்!

என்னிலும் பன்மடங்கு தவித்து,
வேதனையில் வியர்த்து நின்ற
என் அம்மாவின் ஆர்ப்பாட்டம் கண்டு
பரிகசிப்பது போல்
சின்ன இதழ் கோணி,
கன்னக் கதுப்பில் குழி விழ,
புன்னகைக்கும் மென்பூவைக் கையிலேந்தி,
என்ன பாடு படுத்திவிட்டாயடி,
என் பெண்ணை? என்று
செல்லமாய்க் கடிகிறாள்!

என்னவோ புரிந்ததுபோல்
அழுகைக்கு ஆயத்தமாய்
உதடு பிதுக்கும் மகளின் துன்பம்
காணப்பொறுக்காமல்,
முகம் திருப்பிக் கொள்கிறேன், நான்!

27 November 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (25)சுந்தரி தனக்கென்று அந்த வீட்டில் மட்டுமல்ல, நாகலட்சுமியின் மனதிலும் ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டாள். இப்போதெல்லாம் நாகலட்சுமிக்கு விக்னேஷை  விடவும் சுந்தரியின் தயவே அதிகம் தேவைப்பட்டது.
அந்தரங்கமாய் தன் உடல் வேதனைகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சுந்தரியும் அவருக்குத் தன்னாலான உதவிகள் செய்தாள்.
நாகலட்சுமிக்கு ஷவரில் குளிக்கப்பிடிக்காது. குவளையில் முகர்ந்து ஊற்றிக்குளிப்பதே விருப்பம். அவருக்கு வசதியாக முக்காலியொன்றில் வெந்நீர் அண்டாவை வைத்து அவர் நீரை முகர்ந்து ஊற்றிக்குளிக்க உதவினாள். மேற்கத்திய கழிவறையானாலும் ஒவ்வொருமுறையும் உட்கார்ந்து எழ அவர் பட்ட சிரமத்தை அறிந்து, பிடித்துக்கொண்டு எழ உதவியாக தலைக்குமேல் உறுதியான கயிற்றுப்பிடிமானம் ஒன்றை ஏற்பாடு செய்தாள். இத்தனை நாள் தங்களுக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே  என்று நாகலட்சுமியும் விக்னேஷும் அதிசயித்தனர்.  
சுந்தரி தன்னை ஒரு வேலைக்காரியாய் நினைத்திருந்தாலும், நாகலட்சுமி அவளைத் தன் மகளாய் தோழியாய் எண்ணத் தொடங்கியிருந்தாள்.  விக்னேஷுக்கு அம்மாவின் இந்த புதிய அவதாரம் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
சுபா, எந்நேரமும் விக்னேஷைப் பற்றியிருந்தாள். இதனால் நாகலட்சுமிக்கு கோபம் உண்டாகவில்லை என்பதும் விக்னேஷை ஆச்சர்யப்படுத்திய இன்னுமொரு விஷயம்.
இதற்கெல்லாம் காரணம் சுந்தரிதான் என்பது தெரியவந்தபோது, சுந்தரிக்கு மனமார நன்றி சொன்னான். இத்தனைக்காலம் தானும் மருந்து மாத்திரைகளும் செய்ய முடியாததை சுந்தரி இந்த ஒரு மாதத்தில் செய்துவிட்டாளே என்று வியந்தான்.
சுந்தரிக்கு நாகலட்சுமியின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதாயிருந்தாலும், அவள் இன்னமும் சற்று எச்சரிக்கையுடனேயே இருந்தாள். நாகலட்சுமியைக் கேட்காமல் குழம்புக்கு கறிவேப்பிலையும் கிள்ளிப்போடுவதில்லை என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள்.
நாகலட்சுமியே ஒரு கட்டத்தில் சலித்துக்கொண்டார்.
"என்ன பொண்ணு நீ? இதுக்கெல்லாமா என்கிட்ட அனுமதி கேப்பாங்க? இவ்வளவு நாள் பழகியிருக்கேல்ல....? நீயே முடிவெடுத்து செய்யி!"
சுந்தரிக்கு எதுவும் செய்யத் தெரியாமல் இல்லை. அந்த வீட்டில் சுந்தரியின் வருகையால் நாகலட்சுமியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாய் அவர் எண்ணிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.
நாகலட்சுமிக்கு தன்னால் வேலைகளை செய்யமுடியவில்லை என்ற சுயபச்சாதாபம் இருந்துகொண்டிருந்ததால், எல்லா வேலைகளையும் சுந்தரி செய்யும்போது அவருக்கு அந்த எண்ணம் தீவிரமாய் வந்துவிடக்கூடாது என்று பயந்தாள். அதனால் சுந்தரி வேலை செய்யும்போது, சுபாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் விருப்பமில்லாமலேயே அவரிடம் தந்தாள்.
சுபாவின் விஷயத்தில் முதலில் அவர் அவ்வளவாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நாளடைவில் சுபாவின், துறுதுறுப்பும், பொக்கைவாய்ச்சிரிப்பும் அவரைக் கவர்ந்துவிட்டன.
சுபா அப்போதுதான் குப்புற விழப் பழகியிருந்தாள். அதனால் எதிர்பாராத நேரத்தில் குப்புற விழுந்து மூக்கு அடிபட்டுத் துடிப்பாள். சிலசமயம் தொடர்ந்தாற்போல் கொஞ்ச நேரம் குப்புறப்படுத்திருந்துவிட்டு வலியெடுத்து அழுவாள். அவள் விழித்திருக்கும்போது, யாராவது ஒருவர் அவள் கூடவே இருந்து கண்காணிக்க வேண்டியிருந்தது. அதனால் சுந்தரி, எப்போதும்  நாகலட்சுமியின் அருகில்  தலையணைகளை பரப்பி அவளைப் படுக்கவைத்துவிடுவாள்.
படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கும் நாகலட்சுமியின் கவனத்தைக் கவர சுபா என்னென்னவோ பிரயத்தனங்கள்  செய்வாள்.
'ஆங்....ஊங்....' என்று ஏதோ பேசுவாள். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………’ என்று எச்சிலைத் தெளிப்பாள். 'கெக்க்கெக்க்க்' என்று தானே சிரிப்பாள். கையில் கிடைத்ததை வாயில் வைத்து வாயிலெடுப்பாள்.
நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலியொன்று  இருவரையும் பிணைக்கத் தொடங்கியது.
"சுந்தரி, விக்னேஷுக்கு விவா கலந்து கொடுத்திட்டியாம்மா?"
"குடுத்திட்டேம்மா....உங்களுக்குக் கொஞ்சம் பால் கொண்டுவரவா?"
"எனக்கெதுக்கு அதெல்லாம்? "
"அன்னைக்கு டிவியில டாக்டர் சொன்னாரில்ல...எலும்பு வலுவா இருக்கணும்னா தெனமும் பால் சேத்துக்கணும்னு! உங்களுக்குதான் அடிக்கடி மூட்டுவலி வருதே! பால் குடிச்சா சரியாயிடுமில்ல...."
நாகலட்சுமி சிரித்தார்.
"நல்ல பொண்ணு! இது பால் குடிச்சு சரி பண்ற நோயில்ல. மூட்டு தேஞ்சுபோயிடுச்சி. ஆபரேஷன் பண்ணி செயற்கை மூட்டுப் பொருத்தணும். லட்சரூபா ஆகும். எல்லாம் அனுபவிக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு."
"அப்படியா? ஆபரேஷன் பண்ணிதான் சரியாவுமா?"
"ஆமாம்! ஆபரேஷனுக்கப்புறம் குனிய நிமிர முடியும்கிறாங்க, கீழ கூட உக்கார முடியுமாம்."
"அப்ப பண்ணிக்க வேண்டியதுதான?"
"பண்ணிக்கலாம், பாழாப்போன சர்க்கரை வியாதி இல்லைனா...."
நாகலட்சுமி சலித்துக்கொண்டார்.
"கவலப்படாதீங்கம்மா! சீக்கிரம் குணமாகி நல்லா நடமாட ஆரம்பிச்சிடுவீங்க."
சுந்தரி அவரைத் தேற்றினாள்.
"ஹும்! அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்.
தைலத்தை எடுத்து அவர் கால்களில் தடவி நீவ ஆரம்பித்தாள். நாகலட்சுமி மறுக்கவில்லை. அப்போதைக்கு அவருக்கு அவளது உதவி தேவைப்பட்டது.
நாகலட்சுமியின் கால்களை தன் மெல்லிய கரங்களால் அழுந்தப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள், சுந்தரி. விக்னேஷ் பிடிப்பதற்கும் இவள் பிடிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. விக்னேஷ் எவ்வளவு மெதுவாகப் பிடித்தாலும் அதில் லேசான முரட்டுத்தனம் வெளிப்படும். இவளிடம் அது இல்லாததால் இதமாக இருந்தது.
நாகலட்சுமிக்கு சுந்தரியைப் பார்க்க பாவமாய் இருந்தது. இந்தப் பெண் தன் அன்பால் என்னை வசியம் செய்துவிட்டாளே? இவளுடைய களங்கமற்ற அன்புக்கு ஈடாய் நான் எதைத்தான் தருவது? விக்னேஷ் சொன்னதுபோல் இவளுக்கும் குழந்தைக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத்தருவதே என்னால் முடிந்த கைம்மாறு!
சுந்தரி, நீ எனக்கு மகளாய் பிறந்திருக்கவேண்டியவள்! உன்னைத் தவறாய் நினைத்த என்னை மன்னிச்சிடு, அம்மா!
நாகலட்சுமியின் மனம் சுந்தரியின் காலடியில் கிடந்து மன்றாடியது.
ஆனால் சுந்தரியின் மனமோ பிரபுவின் நினைவுகளில் தஞ்சமடைந்திருந்தது. இப்படிதான் அவனும் அவளுக்கு இதமாகக் கால்பிடித்துவிடுவான்.
மாதம் ஏற ஏற, வயிற்றின் பாரம் தாங்காமல் கால்வலி வந்து மிகவும் சிரமப்பட்டாலும், அவள் அதை வெளியில் சொல்லமாட்டாள். பிரபு தூங்கியதும் அவனைறியாமல் தைலம் எடுத்துத் தானே தடவிக்கொள்வாள். வாசம் உணர்ந்து விழித்துவிடுவான். பின் என்ன? அவள் தடுக்கத் தடுக்க, அவள் தூங்கும்வரை அவளுக்குக் கால்பிடித்துவிடுவான்.
எத்தனை அன்பு வைத்திருந்தான்? இவ்வளவு சீக்கிரம் போவோம் என்று தெரிந்துதான் இருந்த கொஞ்ச நாளிலேயே திகட்டத் திகட்ட அன்பைப் பொழிந்தானோ? அந்த அன்புக்கு ஈடே கிடையாது. னி ஒருவர் என் வாழ்வில் அதே அன்பைத் தரவே முடியாது.
பிரபுவின் நினைவுமின்னல் தாக்கியதும், சுந்தரி நிலைகுலைந்துபோனாள். சட்டென்று விழிகள் கண்ணீரை உகுத்தன. நாகலட்சுமி திடுக்கிட்டார்.
"என்னம்மா, சுந்தரி?"
"ஒண்ணுமில்லைம்மா...அவர் நெனப்பு வந்திடுச்சு!"
"சுந்தரி, உன் வேதனையை என்னால் முழுசாப் புரிஞ்சுக்க முடியுதும்மா....நானும் ஒரு காலத்தில் உன் நிலையில் இருந்தவதான். என்னைப் பத்திதான் உனக்கு சொல்லியிருக்கேனே! ஆனா.... நீ தைரியமான பொண்ணு!  நீயே இப்படி கலங்கலாமா? கவலைப்படலாமா? "
"உங்க ஆதரவு இருக்கிறவரைக்கும் நான் கவலைப்படமாட்டேன்மா!"
கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துசென்றாள்.
அடுத்தநாளே சுந்தரியின் கவனம்  நாகலட்சுமியின் உணவு விஷயத்தில் நிலைகொண்டது. விக்னேஷுக்குப் பிடித்தது, நாகலட்சுமிக்கு ஏற்றது என சமையலில் இருவிதம் செய்தாள். நாகலட்சுமிக்கென்று செய்யும் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், தேங்காயையே கண்ணில் காட்டாமல், உப்பின் அளவைக் குறைத்து என்று ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தாள்.
இனிப்பு செய்தாலும் இரண்டாகச் செய்தாள். செயற்கை சர்க்கரை இட்டு நாகலட்சுமிக்கென்று தனியே செய்தாள். இதனால் சுந்தரிக்கு வேலை இரட்டிப்பானாலும், அலுப்பில்லாமல் செய்தாள்.
சுந்தரி பட்ட பாட்டுக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாதாந்திர ரத்தப் பரிசோதனையின் முடிவைப் பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார். "என்ன மாயாஜாலம் செஞ்சீங்க?" என்றார்.
நாகலட்சுமி சுந்தரியைக் கைகாட்ட, டாக்டர் அவளைப் பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுப் பொருத்திவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாகலட்சுமி சுந்தரியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார்.
******************************************************************************
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
-----------------------------------------
தொடர்ந்து வாசிக்க

21 November 2011

உருகிக்கொண்டிருக்கிறேன்...


இறுகிக்கிடக்கிறேன் என்பதாலேயே 
உணர்வற்றுக்கிடப்பதாய் உள்ளர்த்தம் கொள்கிறாய்!
முகமெதிர்கொள்ள விரும்பாது,
முன்னிலையில் நில்லாக்காரணத்தால்
முதுகெலும்பில்லாதவளென்றே
ஏறி மிதித்தென்னை  ஏளனம் செய்கிறாய்!

நினைவில் வைத்துக்கொள்,
ஆவியாய்ப் போனாலும் ஆயுள் நீடிக்கும்
நீரைப் போன்றவளே நானும்!
பனியாய் உறைந்திருக்கிறேன்  இன்று!
பாறையாய் அன்று!

உமிழும் சுடுசொற்களால்
பெரும் உக்கிரம் பெற்று
உருகிக்கொண்டிருக்கிறேன் உள்ளே!
வலிந்து உதைக்கும் பாதங்களை
வெடுக்கென்று பற்றியிழுத்து
உள்வாங்கும் நாளொன்று உருவாகுமுன்னே
தாக்குதல் விடுத்து
தற்காத்துக்கொண்டு ஓடிவிடு!

(நன்றி: வல்லமை)

15 November 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (24)

"அம்மா, பசிக்குதும்மா!"
"அம்மா......"
அஜயும் அஷ்வத்தும் கெஞ்சிக்கொண்டு இருந்தனர்.
"அம்மா....மணி எட்டாவுதும்மா....அம்மா...ப்ளீஸ்!"
"சனியன்களா....ஒரு புக் படிக்க விடறீங்களா, ஒரு சீரியல் பாக்க விடறீங்களா...உங்களையெல்லாம் உங்கப்பாகிட்டயே விட்டுட்டு வந்திருக்கணும், அந்தாளு என்னடான்னா நீ போறதா இருந்தா இந்த சனியன்களையும் கூடவே கூட்டிட்டுப் போயிடுன்னு என் தலையில் கட்டிட்டாரு.....இப்ப அங்க நிம்மதியா எவளோடயாவது கூத்தடிச்சிட்டிருப்பாரு....நான் தான் உங்களோட மாரடிச்சிகிட்டிருக்கேன்!"
நண்பரைப் பார்த்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த பலராமன் வேணியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்.
"வேணி! வாயை அடக்கு! குழந்தைங்க முன்னாடி என்ன பேசறதுன்னு கூடவா தெரியாது?"
பலராமன் கோபாவேசமாய்க் கத்தினார். வேணி எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. அவள் முனகியவாறே மீண்டும் தன் கவனத்தை புத்தகத்தில் பதித்தாள்.
"தாத்தா....பசிக்கிது, தாத்தா....ஸ்கூல் விட்டு வந்ததில இருந்து எதுவுமே சாப்பிடலை. கிச்சன்லயும் எதுவும் இல்ல. ஏதாவது சாப்பிடக்குடுங்க தாத்தா...."
பலராமன் அடுக்களைக்குச் சென்று பார்க்க, காலையில் வித்யா செய்துவிட்டுப்போனதுடன் அதது அப்படியே கிடந்தது. வித்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பது புரிந்தது. பாவம், அந்தப் பெண்! இந்த வயதில் எத்தனைப் பொறுப்பாய் நடந்துகொள்கிறாள்! அலுவலகத்திலும் வேலை செய்துகொண்டு, வீட்டிலும் வேலை செய்துகொண்டு.... போதாக்குறைக்கு இப்போது அக்காவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைக்கவேண்டியிருக்கிறது. சமையல் மட்டுமா? சாமான் தேய்ப்பது, துணிமணி துவைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்கிறாள்.
நீ கொஞ்சம் உதவக்கூடாதா என்று வேணியைக்கேட்டால், வேலைக்கு ஆள் வைத்துக்கொள் என்கிறாள். வேலைக்கு ஆள் வைக்கத் தெரியாமலா இருக்கிறோம்? கூடுமானவரை செலவுகளைக் குறைக்கவேண்டும் என்றுதான் வித்யாவே எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்கிறாள். நான் கூடமாட வேலை செய்யவந்தால் நெஞ்சுவலியைக் காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள்.
இவளோ, விருந்துக்கு வந்ததுபோல் வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கொண்டும், தூங்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்கிறாள். குறைந்தபட்சம் குழந்தைகளின் தேவையையாவது நிறைவேற்றலாம் அல்லவா? அதற்கும் லாயக்கில்லை. இப்படிப் பட்ட பெண்ணுடன் எந்தப் புருஷன்தான் குடித்தனம் நடத்த முடியும்? ஏன் இப்படி மாறினாள்? எத்தனை அனுசரணையாய் அன்பாய் இருந்தவள், இன்று தான் பெற்ற குழந்தைகளின் பசியைத் தீர்க்கவும் வழியில்லாமல் எரிந்தெரிந்து விழுகிறாளே!
வித்யாவை ஏன் இன்னும் காணவில்லை? இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!
"அஜய்! சித்தி இன்னும் வரலையா?"
"சித்தி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டாங்களாம். வர லேட்டாவும்னு போன் பண்ணினாங்க, தாத்தா!"
"சரி, என்கூட வாங்க, வெளியில் போய் சாப்பிடலாம்!"
இதற்குமேல் வித்யா வந்து சமைப்பதென்றால் அதுவரை குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள். அதுவுமில்லாமல் வித்யாவுக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என்று நினைத்தவர், வரும்போது இரு பெண்களுக்கும் ஏதாவது பார்சல் வாங்கிவந்துவிடலாம் என்று பேரன்களை அழைத்துக்கொண்டு உணவகம் செல்ல முடிவு செய்தார்.
"அப்பா! எனக்கும் அப்படியே ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாங்க! நீங்க பாட்டுக்கு உங்கவேலை முடிஞ்சதுன்னு அப்படியே வந்திடாதீங்க!" என்றாள், வேணி.
பலராமன் விரக்தி மேலிட சிரித்துக்கொண்டே சொன்னார்,
"நான் உன்னை மாதிரி இல்லைம்மா...பெத்தபிள்ளைகள் எப்படிப் போனாலும் கவலைப்படாம இருக்க! என் குழந்தைகளை நான் என்னைக்கும் பட்டினி போடமாட்டேன்மா! கதவைச் சாத்திக்கோ! வாங்கடா பசங்களா!"
எத்தனைக்கெத்தனை வித்யாவால் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தாரோ, அத்தனைக்கத்தனை வேணியால் துன்பமும், துயரமும் அடைந்தார். வருடத்துக்கு ஒருமுறை வரும்போதும் எந்த வேலையும் செய்யாமல் இப்படிதான் இருந்தாள் என்றாலும் அப்போது அது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை. இப்போது எதிர்காலமே பிரச்சனையில் இருக்கும்போது இவள் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது எவ்வளவு வேதனையைக் கொடுக்கிறது!
கையில் பிடித்திருக்கும் பேரன்களைப் பார்த்தார். இரண்டுங்கெட்டான் வயதில் இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களிடம் வேணி இப்படி வரம்பு மீறி வார்த்தைகளை விடலாமா? வளர்ந்தபின் தங்கள் தாயை மதிப்பார்களா?
சரி, புருஷன் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம், இவள் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க முற்படவேண்டாமா? உன் துணை இல்லாமல் என்னால் என் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்று அவன்முன் வாழ்ந்துகாட்டவேண்டாமா? கொஞ்சமாவது அக்கறையோ, பொறுப்போ இல்லாத பெண்ணை என்னவென்று சொல்வது? நான் இருக்கும்வரை பிரச்சனையில்லை. நான் போய்விட்டால்.....?
வித்யாவால் எத்தனை நாளுக்கு வேணியின் பாரத்தைத் தாங்க இயலும்? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமையவேண்டாமா? வித்யாவை நினைத்ததும் விக்னேஷ்  நினைவுக்கு வந்தான்.
என்ன பையன் அவன்? அம்மாவின் மனமும் நோகக்கூடாது, காதலியையும் கைப்பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்படி முடியும்? இரு குதிரையில் சவாரி செய்ய முடியுமா? அவனை நம்பிக்கொண்டு வித்யாவும் காத்திருக்கிறாள். ஒருவேளை அவன் அவனுடைய தாயின் சொற்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நேரிட்டால்....வித்யாவின் நிலை? அவள் காத்திருப்பு எல்லாமே வீணாகிவிடுமே!
ஐயோ....நான் பெற்ற இரு பெண்களின் மணவாழ்வும் இப்படியா நசித்துப்போகவேண்டும்? நான் என்ன செய்வேன்? ஐய்யோ......
நெஞ்சில் யாரோ ஏறி மிதிப்பதுபோல் வலித்தது. பிள்ளைகளைப் பிடித்திருந்த கைகளை உருவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய, பிள்ளைகள் பதறினர்.
"தாத்தா....... தாத்தா...... ஐயோ யாராச்சும் வாங்களேன்.... எங்க தாத்தா கீழ வுழுந்திட்டாரு...."
கூடிய கூட்டத்தில் இருந்த தெரிந்தவர்கள் மூலமாக வித்யாவுக்கும், வேணிக்கும் தகவல் சொல்லப்பட, வித்யா உடனேயே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போனிலேயே ஏற்பாடு செய்தாள். விக்னேஷுக்கும் தகவல் சொல்லிவிட்டு நேராய் மருத்துவமனை வந்துசேர்ந்தாள்.
"இது ரெண்டாவது அட்டாக்! நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், அவரைத் தனியா எங்கேயும் வெளியில் அனுப்பாதீங்க, ரொம்ப கவனமா இருங்க.மாத்திரையெல்லாம் தவறாம சாப்பிடணும், முக்கியமா எதை நினைச்சும் கவலைப்படாம இருக்கணும்!"
டாக்டர் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார். ஆனால்...கேட்பது யார்? கவலைப்படாதீர்கள் என்றால் கேட்டால்தானே? வித்யாவுக்கு இந்த சூழலிலும் அப்பாவின்மேல் கோபம் வந்தது. எதற்காக இந்தவேளையில் வெளியில் போகவேண்டும்? காலையிலிருந்து வீடு தங்கவே இல்லையாம். யாரோ நண்பரைப் பார்க்கப் போயிருந்தாராம். மாலைதான் வந்தாராம். வந்ததும் பேரன்களை அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றாராம்.
அப்பாவை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றினாலும், தொடர்கண்காணிப்புக்காக அங்கேயே  அனுமதித்திருந்தனர்.
சிறுவர்கள் இருவரும் பயந்துபோய் நின்றிருந்தனர். வேணி ஒரு பெஞ்சில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வித்யா குழந்தைகளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். விக்னேஷ் வந்தது அவளுக்கு பெரும் உதவியாய் இருந்தது. அவனிடம் குழந்தைகளை அழைத்துப்போய் சாப்பிட ஏதாவது வாங்கித் தரசொன்னபோது இளையவன் அவசரமாய்  மறுத்தான்.
"வேணாம், சித்தி, இப்ப எங்களுக்குப் பசியில்ல சித்தி."
"சித்தி, எங்களாலதான தாத்தாவுக்கு இப்படி ஆச்சி?" அஜய் அழத்துவங்க அஷ்வத்தும் சேர்ந்துகொண்டான்.
"உங்களால எதுவும் இல்ல. தாத்தாவுக்கு வயசாயிடுச்சி. வயசானா இப்படிதான் அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். அதை நினைச்சு நீங்க சாப்பிடாம இருக்கிறதில அர்த்தமில்ல. மணி பத்தாகுது! இந்நேரத்துக்கு என்ன கிடைக்கும்னு தெரியல. கிடைக்கிறதை சாப்பிட்டு வாங்க! விக்கி, எனக்கு ரெண்டு வாழைப்பழம் மட்டும் வாங்கிட்டு வாங்க, வேற எதுவும் வேணாம்!"
சரியென்று அவர்கள் கிளம்பியவேளை, வேணியையும், விக்னேஷுடன் அனுப்பிவைத்தாள்.
வித்யா, அப்பாவின் கவலைக்கு தானும் ஒரு காரணமோ என்று பயந்தாள். வேணியின் பிரச்சனைக்கு தன்னால் ஏதாவது தீர்வு காணமுடியுமா என்று யோசித்தாள். அவள் கணவனுடன் பேசி, விவாகரத்து செய்யும் எண்ணத்தை மாற்றினாலும், தொடர்ந்து வேணியுடன் நிம்மதியான வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகமே! குழந்தைகள் முன் பெற்றவர்கள் தினமும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அவர்களின் மனநிலை முற்றிலுமாய் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே அஜய், அஷ்வத் இருவரும் தங்கள் தாய் தகப்பன்போல் சண்டையிட்டு மிமிக்ரி செய்து காட்டி, அப்பாவை வேதனைப்படுத்தினார்கள்.
தன்னால் பிரச்சனை என்றால் தன்னை மாற்றிக்கொள்ளலாம். தன்னை சுற்றியுள்ளவர்களால் தனக்குப் பிரச்சனை என்னும்போது என்ன செய்ய முடியும்? அக்காவின் பிரச்சனை தீரவேண்டுமானால் அக்கா மாறவேண்டும், விக்கியின் பிரச்சனை தீரவேண்டுமானால் அவன் அம்மா மாறவேண்டும். அப்பாவின் பிரச்சனை தீர அவர்தான் மனம் வைக்கவேண்டும். தன் உடல்நிலையில் கவனம் வைக்கவேண்டும். இவர்கள் அனைவரின் பிரச்சனையால் தான் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? வித்யாவுக்கு துக்கம் பொங்கிவந்தது. தூரத்தே அனைவரும் வருவதைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்தினாள்.
"சித்தி, இந்தாங்க!" வாழைப்பழங்களையும், பிஸ்கட் பொட்டலத்தையும் அவளிடம் கொடுத்தனர்.
"விக்கி, எல்லாரையும் வீட்டில விட்டுட்டு நீங்களும் வீட்டுக்குப் போங்க! நான் அப்பாவைப் பாத்துக்கறேன். நீங்க மட்டும் காலையில் வந்து பாத்திட்டுப் போங்க, அநேகமா நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்!"
"சரி, வித்யா! தைரியமா இரு! ஏதாவது தேவைன்னா எனக்கு போன் பண்ணு!"
வித்யா அவர்களை அனுப்பிவைக்க மருத்துவமனையின் வாசல் வரை வந்தபோது, வேணி ரகசியமாய் அவள் காதோரம் சொன்னாள், "ஏய், உன் ஆளு சூப்பர்டீ!"
வித்யாவுக்கு அவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது. அப்பா மரணத்தின் வாயிலுக்கு சென்று பிழைத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு மகளின் எண்ணம் எங்கு வேரூன்றியிருக்கிறது? ச்சீ! இவளை இவள் கணவன் பிரிய நினைப்பது சரிதான் என்று தோன்றியது.


பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.
--------------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

4 November 2011

கரையோர விருட்சம்தூக்கமும் விழிப்புமற்ற அரைமயக்கத்தின் கிறக்கத்தில்
முனகியபடியே மெல்லத் தவழும் என்னைச்
செல்லமாய்த் தழுவி நிற்கும்
கரையோரப் பெருவிருட்சமொன்றின்
கவிழ்ந்த கொப்புகளை முத்தமிட்டுக்கொண்டே
அம்மரத்தின் வேர்களை வருடி நடக்கிறேன்.

ஒரு நிலையில் நிற்க எனக்கு சம்மதமில்லை.
நெளிந்தும், வளைந்தும், ஊர்ந்தும்
அதன் கைகளுக்கு அகப்படாமல்
விளையாட்டாய் நழுவிக்கொண்டே இருக்கிறேன்.

அம்மரத்தின் மீதான உரிமைப்போர்
எனக்கும் பறவைகளுக்கும் எப்போதும் உண்டு.
என்னால் வளர்ந்ததால் எனக்கே சொந்தமென்று நானும்,
எச்சத்தால் விளைந்ததால்
தமக்கே சொந்தமென்று பறவைகளும்
பேசும் நியாயத்துக்கு மரம் பதிலளித்ததே இல்லை.
பறவைகளின் கீச்சிடல்களுக்கும்,
என் கிச்சுகிச்சு மூட்டலுக்கும் ஒத்திசைவாய்
நாற்புறமும் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்தது.

வேர்களை வருடி வருடி அதன் பாதங்களை
பலமிழக்கச் செய்துவிட்டதைப்பற்றி
மரம் அலட்டிக்கொள்ளவில்லை.
பறவைகள் அதன் தலையிலமர்ந்து
தாங்கள் கண்டறிந்த ரகசியத்தைப் பதறிப் பதறி
அதன் காதுகளில் சத்தமாக ஓதிக்கொண்டிருந்தன.
மரம் அப்போதும் கண்மூடி,
பெரும் ரசனையில் ஆழ்ந்திருந்தது.

அரவங்கள் அடங்கியிருந்த ஒரு உச்சிப்பொழுதில்
தன் இறுதிப் பிடிப்பையும் இழந்துவிட்டப் பெருமரத்தை
சத்தமின்றிப் பெயர்த்தெடுத்துச் சென்று
 பொத்தென்று வீழ்த்தினேன் பேரருவியில்.

அந்தியில் அடைக்கலந்தேடிவந்தப் பறவைகள்
அலறித்துடித்தபடியே என்னிடம் கேட்கின்றன,
காணாமற்போன மரத்தைப் பற்றி!

அங்க அடையாளங்கள் சொல்லுங்கள்,
எங்கேணும் கண்டால் சொல்கிறேன்
என்றேன் வெகுநிதானமாய்!!