20 July 2015

பூவாமல் காய்க்கும் ஆலின் ஜாலம்!



அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலின் பொருள் புரியும்வரை அப்பாடலில் வரும் காய்கள் அத்திமரக்காயும் ஆலமரக்காயும் என்றுதான் வெகுகாலம் நினைத்திருந்தேன். கண்டு பூப்பூக்கும் காணாமல் காய் காய்க்கும், அது எது என்றால் வேர்க்கடலை என்றும் கண்டு காய் காய்க்கும் காணாமல் பூப்பூக்கும், அது எது என்றால் அத்தி என்றும் விடுகதைகளுக்கு விடை சொல்லிப் பழகிய நாம் அதற்கு மேல் அவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்திருப்போமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டிவரும். 

அத்தி மட்டுமல்ல Ficus என்ற தாவர குடும்பத்துள் வரும் ஆல், அத்தி, அரசு போன்ற சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மரங்கள் அனைத்தும் காணாமல் பூப்பூக்கும் மரங்கள்தாம். அதெப்படி காணாமல் பூப்பூக்க முடியும்? அப்படிப் பூக்கமுடியுமென்றால் அவற்றை பூவாத மரங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? நமக்கு சந்தேகங்கள் எழுவது நியாயமே.

பழந்தமிழ்ப் பாடல்களில் பூவாத மரங்கள் பற்றிய பாடல்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் ஔவையின் நல்வழி சொல்லும் பாடலொன்று…

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரேதூவா
விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

(ஒரு மரத்தின் கடமை காய்த்துக் கனிந்து விதை தந்து அடுத்த சந்ததியை வளர்ப்பது. அத்தகு கடமையை பூக்காமலேயே கூட செய்யும் மரங்களும் உண்டு. அதைப்போல சிலருக்கு இன்னதை செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்களாம். நீர்பாய்ச்சி நிலத்தை வளப்படுத்தி உரமிட்டு தூவும் விதைகளுள் சில விளையாமல் போவதுண்டு. அதைப்போல அறிவிலிகளிடத்தில் ஒரு பொறுப்பைக் கொடுத்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்தாலும் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பொறுப்பை நிறைவேற்றும் சாதுர்யம் இருக்காதாம்.)

பூக்காமல் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் எப்படி காய் மட்டும் உருவாகிறது? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதைவிடவும் ஆச்சர்யம் பல காத்திருக்கிறது. வாருங்கள்.


இந்த ஆல் அரசு அத்தி மரங்களில் எல்லாம் திடீரென்று காய்க்க ஆரம்பிக்கும். உண்மையில் அவை எல்லாம் காய்கள் அல்ல.. காய்கள் மாதிரி... நூற்றுக்கணக்கான பூக்களை உள்ளடக்கிய அந்தக் காய்ப்பைக்குள் ஆண்பூ பெண்பூ இரண்டுமே உருவாகின்றன. பெண்பூவில் நெட்டை குட்டை இருவகைகள் உண்டு. சரி. உள்ளே பூத்து என்ன பயன்? மகரந்தச் சேர்க்கைக்கு வழி? அதற்குதான்  ficus வகை மரங்களை மட்டுமே சார்ந்து வாழக்கூடிய fig wasps எனப்படும் ஸ்பெஷல் குளவிகள் இருக்கின்றனவே.

மகரந்தம் சுமந்த உடலோடு பறந்துவரும் பெண்குளவி நேராக காய்க்குள் நுழைகிறது. அதற்கென்றே வாசல் வைத்தது போல் காயின் கீழ்ப்பகுதியில் மிக நுண்ணிய துவாரம் இருக்கிறது. உள்ளே போன குளவி குட்டை பெண்பூக்களில் முட்டைகளை இடுகிறது. மகரந்த சேர்க்கையும் அப்போது நடைபெறுகிறது. நெட்டை பெண்பூக்களில் விதைகள் உருவாகின்றன. குட்டை பெண்பூக்களில் குளவியின் லார்வாக்கள் உருவாகின்றன. கூடு போன்ற அமைப்புகளில் வளரும் அவை சூலகத் திசுக்களைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுக்களாகின்றன.

முட்டையிட்ட பெண்குளவி என்னாகும்? அவ்வளவுதான்.. அதன் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடும். ஏனெனில் அது உள்ளே நுழைவதற்கான முயற்சியில் தன் இறக்கைகளை இழந்திருக்கும். 




முட்டைகள் ஒரே நேரத்தில் இடப்பட்டாலும் முதலில் வெளிவருவதென்னவோ இறக்கையற்ற ஆண் குளவிகள்தாம். அவற்றின் வாழ்நாள் இலட்சியம் இரண்டே இரண்டுதாம். கூட்டிலிருந்து ஊர்ந்துவெளிவரும் இவை நேராக பெண்குளவிகளின் கூடுகளைத் தேடிச்சென்று பெண்குளவிகள் கூட்டுக்குள் இருக்கும்போதே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. வாழ்நாள் இலட்சியத்தில் ஒன்று முடிந்துவிட்டது. அடுத்து கருவுற்ற பெண்குளவிகள் வெளியில் பறந்துபோவதற்கான வழியை உருவாக்கிக் கொடுப்பது. அதற்காக காயின் உட்புறச்சதையைக் கொறித்துக் கொறித்து வழியுண்டாக்கிக் கொடுக்கின்றன. வந்த வேலை முடிந்ததும் மடிந்துபோகின்றன அனைத்தும். அதனால்தான் அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் உள்ளே பூச்சிகளும் புழுக்களுமாக இருக்கிறது.

கூட்டைவிட்டு பெண்குளவிகள் வெளிவரும் முயற்சியின்போது அங்கிருக்கும் ஆண்பூக்களிலுள்ள மகரந்தம் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்கிறது. ஏற்கனவே ஆண்குளவிகள் உருவாக்கி வைத்திருக்கும் பாதை வழியே பெண்குளவிகள் அனைத்தும் வெளியேறி அடுத்த மரத்தை நோக்கிப் போகின்றன.

பெண்குளவியின் கதை மீண்டும் துவங்குகிறது. சில பெண்குளவிகள் முட்டையிடுவதற்காக அடுத்த மரங்களைத் தேடி பல மைல்கள் தூரம்கூட பறந்துசெல்கின்றன என்பது ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. ஒரு ஊசியின் காது துவாரத்துள் நுழைந்துவெளிவரக்கூடிய அளவில் சுமார் 1.5 மி.மீ நீளமே உள்ள இந்த குளவியின் இரண்டுநாள் வாழ்க்கையில் அவ்வளவு தொலைவைக் கடப்பதென்பது மாபெரும் சாகசப் பயணம்தானே! 




ficus வகை மரங்களுக்கும் இந்த fig wasps-களுக்குமான நோக்கம் ஒன்றுதான். இரண்டுக்கும் தங்கள் வம்சம் விருத்தியாகவேண்டும். அதற்காக பரஸ்பரம் இரண்டும் உதவிக்கொள்கின்றன. ஆறுகோடி வருடங்களுக்கும் மேலாக தொடரும் அந்த பந்தத்தில் தற்சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மாற்று மகரந்தச்சேர்க்கை முயற்சிகளாலும் விரிசல்கள் விழ ஆரம்பித்துள்ளன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் வீழாதிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. 

(படங்கள் உதவி இணையம்)

13 July 2015

ஆல் போல் தழைத்து...


அண்டைவேர்கள்

விழுதுகள்

அடிபெருத்த ஆலமரம்


"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது திருமணங்களின்போது பெரியவர்களால் வழங்கப்படும் ஆசி. கிராமப்புறங்களில் ஆற்றோரங்களில் வளர்ந்திருக்கும் ஆலமரத்திலிருந்து சடைசடையாய்த் தொங்கும் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்களைப் பார்த்திருப்போம். மாடு கன்று ஈன்றவுடன் அதன் நஞ்சுக்கொடியை பால்மரமான ஆலமரத்தில் கட்டிவைப்பார்கள். அப்போதான் மாடு நிறைய பால் கறக்கும் என்பது மக்களிடம் இன்றளவும் உள்ள நம்பிக்கை.

மேலே உள்ள படங்களில் காணப்படுவது ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஆலமர வகைகளுள் ஒன்றான Moreton bay fig (Ficus macrophylla). இது 15 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கிளைகளில் துவங்கி நிலம் தொட்டு விழுந்தால் அதை விழுது (aerial roots) என்கிறோம். அடித்தண்டில் உருவாகி அகலமாய்ப் பரப்பி அண்டக்கொடுத்தால் அவற்றை அண்டைவேர் (buttress roots) என்கிறோம். இந்த அண்டைவேர்கள் மதில்சுவரைப் போன்று ஓராள் உயரத்துக்கு எழும்பி நிற்பதைப் பார்த்தால் வியப்புதான் வருகிறது. 

ஒவ்வொரு உயிரினமும் தன்னினம் தழைக்க எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவற்றுள் ஆல் தழைக்க மேற்கொள்ளும் முயற்சிகளனைத்தும் அசரவைக்கும் முயற்சிகள். தூண்களையும் சாரங்களையும் தானே உருவாக்கி தன்னைத்தானே தாங்கிநிற்கும் ஆலமரத்தின் சாதுர்யம் ஒரு அதிசயம் என்றால் பூவாமல் காய்க்கும் மர்மமும் ஒரு அதிசயம்தானே? அதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போமா?

8 July 2015

அல்பைனோ (albino)


அல்பைனோ வல்லபி 


மரபணுக்கோளாறால் நிறமிகள் செயலிழந்து உருவாகும் அல்பினிசம் (albinism) என்னும் வெண் தோல்நோய் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக அளவில் பதினேழாயிரம் பேர்க்கு ஒருவர் என்ற விகிதத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதை நோய் என்பதை விடவும் குறைபாடு என்பதே சரி. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வெளிறிக் காணப்படும் மக்கள் அல்பைனோ என்று குறிப்பிடப்படுகின்றனர். 

மகாபாரதக் கதையில் வரும் பாண்டுவும் ஒரு அல்பைனோ மனிதர்தான். பாண்டு என்றால் வடமொழியில் வெளிறிய நிறமுடையவன் என்று பொருள். அவர் ஏன் அப்படி வெளிறிய நிறமுடையவராய்ப் பிறந்தார் என்பது பலரும் அறிந்த கிளைக்கதை. அந்தக் கதைகளுக்குள் நாம் இப்போது போகப்போவதில்லை. பொதுவாக அல்பைனோ பற்றிப் பார்ப்போம்.

அல்பைனோக்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் சிறிய சிராய்ப்பும் பெரிய அளவில் பாதிப்புண்டாக்கும். தோல் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பார்வைக்குறைபாடு, செவிப்புலன் குறைபாடு போன்றவற்றுக்கு ஆட்படும் அவர்களுடைய வாழ்நாள் மற்றவர்களைக் காட்டிலும் மிகக் குறுகியதே.

மனிதர்களைப் போல விலங்கு, பறவைகளிலும் அல்பைனோக்கள் உண்டு. வழக்கமான நிறத்தை இழந்து வெண்ணிறத்தில் காணப்படும் அவை மிகவும் அரிதாகவே காணப்படும். வெள்ளைப்புலி, வெள்ளைமயில் எல்லாம் இப்படிப்பட்டவையே. ஒருவன் வெள்ளைக்காக்காவைப் பார்த்தேன் என்று சொன்னால் அவனை பொய்யன் என்று இகழவோ பைத்தியம் என்று இழிக்கவோ வேண்டிய அவசியமில்லை. அவன் சொல்வதிலிருக்கும் உண்மை ஏற்கப்படக்கூடியதே.

ஆஸ்திரேலியாவில் 20,000 –க்கு ஒன்று என்ற விகிதத்தில் அல்பைனோ கங்காருகள் காணப்படுகின்றன. நிறமிக்குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் தவிரவும் அல்பைனோ விலங்குகளுக்கு இன்னுமொரு பிரச்சனை உண்டு. அது எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. வெள்ளை வெளேரென்று இருப்பதால் எதிரியின் கண்களிடமிருந்து தப்புவதென்பது கூடுதல் சவாலான விஷயம்.

லில்லி

மேலே உள்ள படங்களில் காணப்படுவது ஒரு அல்பைனோ வல்லபி. கங்காரு இனத்தில் சிறியவை வல்லபிகள். இரண்டாண்டுகளுக்குமுன் வனவிலங்குப் பூங்கா ஒன்றில் செங்கழுத்து வல்லபிக்குப் பிறந்துள்ள இந்த அரிய வெண்வல்லபிக்குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பொதுமக்களிடையே ஒரு சர்வே நடத்தப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பல பெயர்களுள் லில்லி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு சூட்டப்பட்டுள்ளது.     

4 July 2015

ஒண்டவந்த பிடாரிகள் – இறுதிப்பகுதி (தொலையும் தனித்துவம்)


மண்ணின் சொந்த விலங்குகள் பறவைகள் தாவரங்கள் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கு தங்கள் வாழுமிடத்தின் இயற்கை சார்ந்த புரிதல் இருப்பது சூழலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். குறைந்தபட்சம் சூழல் கெடாமல் பாதுகாக்க உதவும்.

மைனா
நாய்ஸி மைனர்

உதாரணத்துக்கு noisy miner  என்ற பறவையை எடுத்துக்கொள்வோம்.  ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணின் பறவையான அது, கிட்டத்தட்ட நம்மூர் மைனாவைப் போன்ற உடல் அமைப்பும் நிறமும் கொண்டது. மைனாவோ அந்நியநாட்டுப் பறவை மட்டுமல்லாது  சொந்த மண்ணின் பறவைகளை வாழவிடாமல் செய்யும் ஒரு ஆக்கிரமிப்புப் பறவைபார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் உற்றுக் கவனித்தால் இரண்டு பறவைகளுக்குமான வேறுபாடு தெரியவரும். அந்த வேறுபாட்டை அறியாத பலர்  சொந்த மண்ணின் பறவையை வாழவைப்பதாக நினைத்து மைனாக்களுக்ககு இடமளித்தும் உணவளித்தும் வீடுகளில் வளர்த்தும் அவற்றின் எண்ணிக்கை பெருக வழிசெய்கிறார்கள். பொதுவாக செல்லப் பிராணிகள் அல்லாத எந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது ஆஸ்திரேலிய சட்டம். Noisy miner பறவைகளோ கூச்ச சுபாவமுடையவை. ஆனால் மைனாக்கள் மனிதர்களுடன் சகஜமாக பழகவல்லவைஆக்கிரமிப்புப் பறவையான மைனாக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு சொல்லவேண்டுமா?

ஆஸ்திரேலியா  தனித்துவமிக்க அழகானதொரு  தீவு. தனித்துவமிக்க பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் மனிதர்களும் வாழ்ந்துகொண்டிருந்த நாடு.  பூர்வகுடி மனிதர்களின் வாழ்வியலின் தனித்துவம் இப்போது பல பகுதிகளில் காணாமற்போய்விட்டது. தனித்துவமிக்க மக்களே காணாமல் போனபிறகு  அவர்களுடைய வாழ்வியலின் தனித்துவம் பற்றிப் பேச என்ன இருக்கிறது? இருக்கும் மிச்ச சொச்ச வாழ்க்கைமுறைகளும் ஆங்காங்கே வேடிக்கைக் கூத்தாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிவிட்டன.  ஈமு நடனமும் டிஜிரிடூ இசையும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் கலைகளாகிவிட்டன.

டிஜிரிடூ வாசிக்கும் பூர்வகுடி பெரியவர்

இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்கள்ஆனால் தங்களுக்கென்று இருந்த கலாச்சார பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து அல்லது மறக்கடிக்கப்பட்டு, இன்று காலத்தின் ஓட்டத்தோடு தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். படிப்படியாய் பூர்வகுடி இனம் தங்கள் தனித்துவத்தை இழந்துவருவது போல் இங்கு வாழ்ந்துகொண்டிருந்த தனித்துவமிக்க உயிரினங்களும் தங்கள் தனித்துவம் இழந்து வாழலாம்அல்லது காலப்போக்கில் அயலக உயிரினங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மடிந்துபோகலாம். டைனோசார்கள் வாழ்ந்த காலங்களை கற்பனையாய்த் திரையில் காண்பது போல கங்காருக்களையும், கோவாலாக்களையும் வருங்கால சந்ததிக்கு திரையில் காண்பிக்கும் நிலை வரலாம். டோடோக்களையும் யானைப்பறவைகளையும் போல தரைவாழ் கிளியையும் ரீஜன்ட் தேன்சிட்டையும் படத்தில் காட்டி விளக்க நேரலாம்.  அப்படியொரு நிலைமை உண்டாகக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்துக்கொள்ளவேண்டும். சூழல் பற்றிய விழிப்புணர்வை நம்மிடையே பெருக்கவேண்டும்.

ஆஸ்திரேலியாவைப் போன்று அவசரப்பட்டு இயற்கைக்கு எதிராக எடுத்த முடிவுகளின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் உலக நாடுகள் ஏராளம். இனிமேலும் இதுபோன்ற சூழலுக்கு ஒவ்வாத முறையற்ற அறிமுகங்களை மேற்கொள்ளாமல் இருக்க ஆஸ்திரேலியாவின் இன்றைய அவதியை உதாரணமாகக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அல்லவா

(இப்போதைக்கு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். மீண்டும் இத்தலைப்பு தொடர்பான தகவல்கள் கிடைக்கும்போது தொடர்வேன். இதுவரை தொடர்ந்து வாசித்தும் கருத்திட்டும் ஆதரவளித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)

1 July 2015

படம் இங்கே கவிதை எங்கே?

வல்லமை இணைய இதழில் வாரந்தோறும் நடைபெற்றுவரும் படக்கவிதைப்போட்டி பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். நான் எடுத்த புகைப்படமொன்று இந்த வாரத்துக்கானப் போட்டிக்கென  வல்லமையின் பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கவிதையை வரும் சனிக்கிழமை (04-07-15)க்குள் எழுதி இங்கு சென்று பதிவு செய்யுங்கள்.  

படப்போட்டி (19) -க்கான படம் இதோ..



தமிழறிஞரும் வசீகரமான பேச்சாளரும் செழுமையான மரபுக்கவிஞருமான கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், வல்லமையில் இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டியின் நடுவர் ஆவார். கவியார்வமுள்ள யாவரும் பங்கேற்கவும் பாராட்டு பெறவும் என் இனிய வாழ்த்துகள். 

போட்டிக்கான இப்படம் ஆஸ்திரேலிய சீன நட்புறவின் அடையாளமாக சிட்னி நகரில் அமைக்கப்பட்டுள்ள சீனத்தோட்டத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தேர்ந்தெடுத்த சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் மிக்க நன்றி.

&&&&

(படக்கவிதைப்போட்டி (19) -இன் முடிவு இங்கே.)