24 September 2024

பத்தாயிரம் காலடிகளும் பறவை பார்த்தலும்



1. பூவைக் கொறிக்கும் காக்கட்டூ 

வசந்தகாலம் தொடங்கியதும் பறவைகள் புத்துணர்வோடு பறக்கப் புறப்பட்டது போல நானும் நடக்கப் புறப்பட்டுவிட்டேன். தினமும் நடப்பது சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த முறை புதிய உத்வேகத்தோடும் தினம் பத்தாயிரம் steps என்ற இலக்கோடும். என்னுடைய நடைவேகத்துக்கு பத்தாயிரம் காலடிகள் என்பது சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம். 

வசந்தகால ஒவ்வாமையால் நித்தமும் தொடர்தும்மலோடும் நீரொழுகும் மூக்கோடும் அவதிப்படும் எனக்கு இது பெரிய சவால்தான்.  நடைபயிற்சிக்குப் பிறகு வீட்டுக்குள் நடக்கும் நடை எப்படியும் ஒரு கி.மீ.ஐத் தொட்டுவிடும். மற்ற வெளிவேலைகளுக்காக நடக்க நேரும் நாட்களில் காலடிக் கணக்கும் கூடும்.  தூரக்கணக்கும் கூடும். இந்த மாதம் முதல் தேதியிலிருந்து இன்றுவரை நான் நடந்திருக்கும் தூரம் 176 கி.மீ. என்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 7.33 கி.மீ. என்றும் fitbit (மகள் உபயம்) புள்ளிவிவரம் காட்டுகிறது. தினமும் இவ்வளவு தூரம் நடந்தாலும் ஒரு நாள் கூட கால்வலி வரவில்லை என்பதே பெரிய நிம்மதி. 

3. ரோஸ் நிற க்ளோவர் பூ

நடைபயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பெரும் புத்துணர்வு தருவதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். கணவரை அலுவலகத்துக்குக் கிளப்பிவிட்டு, புலர்ந்தும் புலராத காலைநேரத்தில் புறப்பட்டேன் என்றால் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பும்போது சூரியன் சுள்ளென்று முகத்தில் அறையும். காலையில் நேரம் ஏதுவாக அமையாவிடில் மாலை. 

4. நடைசாலை

எந்த இடையூறும் இன்றி நடக்க விரும்புபவர்களுக்கு நெடுஞ்சாலைகளுக்கு இணையான, வாகன அனுமதியற்ற அகலமான நெடிய தார்ச்சாலைகள் பல ஊர்களையும் இணைக்கும் விதத்தில் இங்கிருப்பது பெரும் வரப்பிரசாதம். சீரான அந்தச் சாலைகளில் நடக்கலாம், ஓடலாம், சைக்கிள் ஓட்டலாம், நாய்களை அழைத்துச் செல்லலாம். அவ்வளவுதான். வேறெந்த வாகனத்துக்கும் அனுமதி கிடையாது. பராமரிப்பு வாகனம் மட்டும் எப்போதாவது வரும். அதுவும் பத்து கி.மீ. க்கும் குறைவான வேகத்தில். வாக்கிங், ஜாகிங், ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங் என பலர் எதிர்ப்படுவார்கள். தளர்ந்த நடையோடு அல்லது கைத்தடி உதவியோடு யார் துணையும் இன்றி தனித்து நடக்கும் முதியவர்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பாரா-சைக்ளிங் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கைவண்டிகளைப் படுவேகமாக ஓட்டிச்செல்லும் பந்தய வீரர்களைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். 


5. தனியே தன்னந்தனியே

சாலையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிழல் தரும் சவுக்கு, யூகலிப்டஸ், வாட்டில் மரங்களும், சிட் சிட் சிட் என்று புதர்ச்சிட்டுகள் ஒளிந்துபிடித்து விளையாடும் கம்பங்கோரைப் புதரும், வசீகரப் பூக்களோடும் இலைகளோடும் காட்சியளிக்கும் பெயர் தெரியாத செடிகொடிகளும் நடையை இலகுவாக்கும். வழியில் குறுக்கிடும் சிற்றோடையும் சாலையை ஒட்டிய இரண்டு பெரிய விளையாட்டு மைதானங்களும் கூடுதல் சுவாரசியம். 

6. அண்டங்காக்கை

7. அத்திப்பறவை - ஆண்

8. மின்கம்பத்தில் சிரிக்கும் குக்கபரா

9. க்ளோவர் பூக்களைக் கொறிக்கும் காலா இணை

காலைவேளையில் அமைதியாய்க் காணப்படும் பச்சைப் பசேலென்ற மைதானத்தில் புல்வெளியைக் கிளறிப் புழுக்களைத் தேடும் மேக்பை, மேக்பை லார்க், புறா, மைனா, கொண்டைப்புறா, அண்டங்காக்கை, காக்கட்டூ, காலா என ஏராளமான பறவைகளைப் பார்க்க முடியும். 

அலகு கோதும் அன்றில் பறவைகளும், வழி மறிக்கும் வாலாட்டிக் குருவிகளும், தாழப் பறந்து வித்தை காட்டும் தைலாங்குருவிகளும், க்ளோவர் பூப்படுகையை மொய்க்கும் தேனீக்களும்  ஓடி ஓடி அவற்றைப் பிடித்துத் தின்னும் மேக்பைகளும், புதருக்குள் தலைநீட்டியும் குனிந்தும் பாம்போவென பயமுறுத்தும் நீல நாக்கு அரணைகளும், காற்றில் புரளும் சருகுகளைப் போல் கூட்டமாய் தரையமர்ந்து பறக்கும் செம்புருவச் சிட்டுக்களும், ஓடையில் குஞ்சுகளோடு நீந்தும் தாழைக்கோழிகளும், நாமக்கோழிகளும், வாத்துகளும் நாரைகளும் கண்ணுக்கு விருந்து என்றால் அடித்தொண்டையால் ஆ...ஆ... என்று ராகம் போட்டு இழுக்கும் அண்டங்காக்கைகளின் அழைப்பும், குக்கபரா பறவையின் கெக்கெக்கே எனும் சிரிப்பும், முகங்காட்டாத குயிலின் ஏக்கக் கூவலும், கீச்சான்களின் கொஞ்சலும், மேக்பை லார்க் பறவைகளின் டீ...வீ... டீ...வீ... என்னும் டூயட்டும், புதர்ச்சிட்டுகளின் சிட் சிட்டும், நாமக்கோழிகளின் கீச்சொலியும், அன்றில் பறவைகளின் கொம்பூது குரலும், காக்கட்டூக்களின் கர்ண கடூர விளிப்பும் என பறவைகளின் கலவையான ஒலி காதுக்கு விருந்து. மாலை நேரமெனில்  பொன்னொளிரும் கதிரும் வண்ணஜாலம் காட்டும் வானமும் கூடுதல் அழகு. 

10. பிங்க் நிற வானம்

11. ஆரஞ்சு வண்ண வானம்

12. பொன்சரிகையென மேகங்கள்

13. தகதகக்கும் மாலைக்கதிர்

14. செவ்வந்தி மாலைப்பொழுது

எதிர்ப்படுவோரில் பெரும்பான்மையானோர் காதில் earphone இருக்கும். எனக்கும் பாட்டுக் கேட்டுக்கொண்டு நடக்கப் பிடிக்கும் என்றாலும் காலைநேரப் பறவைகளின் ஒலி அதை விடவும் செவிக்கினிமை. பறவைகளின் ஒலிகளை இனம் பிரித்து அது என்ன பறவை என்று கண்டுபிடிப்பது எனக்குப் பிடித்த விளையாட்டு. சில புதிய ஒலிகளைக் கேட்கும்போது அது எந்தப் பறவையாக இருக்கும் என்று ஆர்வம் மேலிடும்.  

15. அத்திப் பறவை ஜோடி

16. White-plumed Honeyeater

17. செம்புருவச் சிட்டுகள்

18. மஞ்சள் ராபின்

நடை வழியில் புதிய பறவைகளைப் பார்த்தால் என்னை அறியாமலேயே நடை தடைபட்டுவிடும். கையிலிருக்கும் மொபைலால் முடிந்தவரை படம் எடுப்பேன். படமெடுக்க முடியவில்லை என்றால் நின்று பார்த்து ரசித்துவிட்டு வருவேன்.  பறவை கூர்நோக்கலும் உண்டு. 

‘ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’ என்றொரு சொலவடை உண்டல்லவா?  நான் ரசித்த காட்சிகளுள் சில...

காட்சி 1:

தினமும் குறிப்பிட்ட இடத்தில் தகரப்பெட்டியைத் தரையில் இழுப்பது போன்று க்ரா... க்ரா... என்றொரு பறவைச் சத்தம் கேட்கும். அது என்ன பறவை என்று எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் பார்க்க முடியவில்லை. மனதுக்குள் அந்தச் சத்தத்தை அப்படியே பதிய வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து இணையத்தில் ஒவ்வொரு பறவைச் சத்தமாகக் கேட்டு ஒப்பிட்டுப் பார்ப்பேன். அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

19. சிவப்பு வாட்டில் பறவை (1)

20. சிவப்பு வாட்டில் பறவை (2)

ஒருநாள் நான் போகும் வழியில் இருந்த தாழ்வான மரக்கிளையில் அமர்ந்து கண்ணுக்கு முன்னால் அப்பறவை கத்தியபோதுதான் ‘ஓஹோ... இவங்கதானா அந்த கரகரப்ரியா’ என்று ஆச்சர்யப்பட்டேன். ஏனென்றால் ஆளுக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒல்லிப்பிச்சானாய் தவிட்டுக்குருவி அளவில் இருந்த வாட்டில் பறவைதான் அது. ஏற்கனவே பல முறை அப்பறவையைப் பார்த்திருந்தபோதும் படம் பிடித்திருந்தபோதும், அதன் குரல் இதுதான் என்று சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். 

காட்சி 2:

மரம் முழுக்கப் பூக்களோடு இருந்த தங்க வாட்டில் மரத்தில் ஒரு கந்தகக் கொண்டை காக்கட்டூ ஜோடி பறந்து வந்து அமர்ந்தது. அமர்ந்த நொடியிலிருந்து கிளைகளில் கொத்துக் கொத்தாய் பூத்திருந்த பூக்களை கொத்தோடு அலகால் கொய்து கீழே வீசியெறிந்துகொண்டிருந்தன. மரத்தின் கீழே ஓடிக்கொண்டிருந்த ஓடையெல்லாம் பூக்கள்.

21. பூக்கொய்யும் காக்கட்டூ (1)

22. பூக்கொய்யும் காக்கட்டூ (2)

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த பாடலில் சரிதா பூக்களை வரிசையாகத் தண்ணீரில் ஓடவிட்டக் காட்சி கண்முன் ஓடியது. கூடவே புலமைப்பித்தனின் இந்த பாடல் வரிகளும்.  

பொய்கை என்னும் நீர்மகளும்

பூவாடை போர்த்திருந்தாள்

தென்றலெனும் காதலனின்

கைவிலக்க வேர்த்து நின்றாள்

வெடுக் வெடுக் என்று கொத்துப் பூக்களைப் பிடுங்கி நீரில் எறியும் காக்கட்டூகளின் செயல் புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும். ஆனால் அவற்றின் பொழுதுபோக்கே இப்படி மரத்தின் இலைகளையும் பூக்களையும் கொத்துக்கொத்தாய்ப் பிடுங்கி எறிவதுதான் என்று தெரிந்ததால் குழந்தைகளின் குறும்பை ரசிப்பதுபோல் ரசித்தேன். 

காட்சி 3:

ஐந்து குஞ்சுகளுக்கு இரையூட்டிய நான்கு பெரிய  நீலத்தாழைக்கோழிகளைப் பார்த்தேன். யார் அம்மா, யார் அப்பா, யாருடைய குஞ்சுகள் என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் நான்கும் மாறி மாறி இரையெடுத்து குஞ்சுகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தன. 

23. நீலத்தாழைக்கோழிகளும் குஞ்சுகளும் 

24. வாத்து இணை

தாழைக்கோழிகள் ஒரு ஈடு அடைகாத்து குஞ்சு பொரித்தவுடன் அம்மா, அப்பா, முந்தைய ஈட்டைச் சேர்ந்த அண்ணன், அக்கா என்று மொத்தக் குடும்பமும் அந்தக் குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்க்கும் என்று அறிந்தபோது வியந்தேன். இரையூட்டுவது மட்டுமல்ல, அடைகாப்பதைக் கூட முந்தைய ஈட்டுக் குஞ்சுகள் பகிர்ந்துகொள்ளும் என்பது பறவை உலகின் மற்றுமொரு ஆச்சர்யம்.

காட்சி 4:

மதர் ஆஃப் மில்லியன்ஸ் (Bryophyllum species) என்றொரு முள்ளில்லாக் கள்ளிவகைத் தாவரம். மடகாஸ்கரைச் சேர்ந்தது. ஒரு செடி இருந்தாலே போதும். அதன் இலை நுனிகளிலிருந்து புதிய செடிகள் உருவாகி அந்த இடத்தையே வியாபித்துவிடும்.  பெயர்க்காரணம் இப்போது புரிந்திருக்குமே. இதற்கு சரவிளக்குச் செடி என்ற காரணப்பெயரும் உண்டு. மற்ற தாவரங்களை வளரவிடாத காரணத்தால் ஆஸ்திரேலியாவில் இது களைச்செடி. ஆனால் அதன் பூக்கள் அவ்வளவு அழகு. எப்போதும் புதர்களுக்கு மத்தியில் ஏராளமாகப் பூத்திருக்கும். ஒரு படமாவது அருகில் இருந்து பிடிக்கவேண்டும் என்று வெகுநாளாக ஆசை.  இத்தனை வருடங்களாக நிறைவேறவில்லை. 


25. சரவிளக்குப் பூக்கள் (1)

26. சரவிளக்குப் பூக்கள் (2)

போன வாரத்தில் ஒருநாள் இன்ப அதிர்ச்சியாக நடைபாதையை ஒட்டி சில செடிகள். ஒன்றில் மட்டும் பூக்கள். எனக்காகவே  பூத்திருப்பது போல் தோன்றியது. என் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இப்போதைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய செடிகள்தான் பார்த்தேன். இனிவரும் காலத்தில் அந்த இடத்தையே அவை ஆக்கிரமித்துவிட வாய்ப்பு அதிகம். 

காட்சி 5:


27. வெள்ளை க்ளோவர் பூக்கள்

27. ரோஸ் நிற க்ளோவர் பூ

க்ளோவர் பூக்களை மொய்க்கும் ஈக்களும் தேனீக்களும் ஒரு பக்கம். அவற்றை இரையாய்க் கொள்ளும் அரணைகளும் பறவைகளும் இன்னொரு பக்கம் என க்ளோவர் பூக்கள் பூத்திருக்கும் இடமே உயிர்ப்புடன் இருக்கும். இதுவரை வெள்ளை நிற க்ளோவர் பூக்களைத்தான் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக ரோஸ் நிற க்ளோவர் பூவைப் பார்த்தேன். க்ளோவர்தானா என்று இணையத்தில் பார்த்து உறுதிசெய்துகொண்டேன்.

*****

28. வழியில் வசீகரிக்கும் அழகுப் பூக்கள்

சின்ன வயதில் தாத்தாவோடு பள்ளிக்கூடம் போகும்போது (வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம்) இப்படிதான் ஆடு, மாடு, பன்றி, குதிரை, கோழி, வாத்து, மைனா, கொண்டலாத்தி, ஓணான், உடும்பு என வழியில் பார்ப்பதையெல்லாம் நின்று ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.  

‘பராக்கு பாக்காம வாங்க, ஸ்கூலுக்கு நேரமாச்சு, மணியடிச்சிடுவாங்க’ என்று தாத்தா அதட்டி அதட்டி இழுத்துச் செல்வார். இப்போது என்னைப் பார்த்தால் என்ன சொல்வார் என்று நினைத்துப் பார்த்தேன். 'இன்னும் நீ அப்படியேதான் இருக்கியாம்மா?' என்று கேட்டுச் சிரிப்பார். எனக்கும் சிரிப்பு வந்தது. 

*****



8 comments:

  1. நடை நல்லது. உங்கள் நடைப்பயணங்களில் கிடைக்கும் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு. படங்களும் தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வியலும் யதார்த்தமும் கூடிய உங்கள் நடை அனுபவங்களையும் மிகவும் ரசிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  2. Anonymous27/9/24 14:38

    நடை ரொம்ப ரொம்ப நல்லது. எங்கள் ஊரில் பூங்காக்கள் இருக்கின்றன வீட்டருகிலும் எனவே பயமில்லாமல் நடக்க முடியும். ஆனால் பூங்காக்களில் பறவைகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. எனக்கு நீங்கள் சொல்லியிருக்கும் சாலை போன்றதில் நடக்க அதுவும் இப்படிப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படம் பிடித்துக் கொண்டே ஒலிகளைக் கேட்டுக் கொண்டே நடக்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

    காட்சி ஒன்றின் விவரணம் செம. ரொம்ப ரசித்தேன். இங்கு ஏரிக்கரையில் நான் நடப்பதுண்டு அப்படி நடந்தப்ப சில நீர்ப்பறவைகளையும் பிடித்திருக்கிறேன் நீல நிற தாழைக் கோழி, தாழைக் கோழி, நீர்க்காக வகைகள் பெலிக்கன்கள், நாரை என்று ஆனால் பதிவுதான் போடாமல் வைத்திருக்கிறேன். நாமக்கோழியின் கூடு, அது கூடு கட்ட குச்சி எடுத்து நீந்துவது, லிட்டில் கிரேப், சம்புநாரை நாணலிடையே கட்டியிருக்கும் கூட்டிலிருந்து தன் குஞ்சுகளை மாலை நேரத்தில் மறு கரைக்கு அழைத்துச் செல்வது அந்த அழகு சொல்லி முடியாது, எல்லாம் எடுத்தும் இன்னும் பகிரவில்லை. ஆனால் படங்கள் இத்தனை தெளிவாக என் கேமராவில் வராது.

    மிக அழகான படங்கள். ரசனையான விவரிப்பும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்களும் என்னைப் போலவேதானா? நீங்கள் ரசித்த அந்த அழகுக் காட்சிகளைப் பதிவாக்குங்கள். படங்கள் தெளிவாக இல்லையென்றால் என்ன? பதிவு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும். நாமக்கோழியும் தாழைக்கோழியும் கூடு கட்டும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நானும் அவற்றை வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறேன்.

      Delete
  3. நடைப் பயிற்சி அனுபவங்களும், கண்டு ரசித்தக் காட்சிகளின் பகிர்வும் மிக அருமை.

    வாகனமற்ற சாலைகள்.. நினைக்கவே நன்றாக உள்ளது. குடியிருப்பினுள் நடைப் பயிற்சி செல்கையில் வாகனம் எதிர் வந்ததால் எனக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர் இப்போது அருகிலிருக்கும் தென்னந்தோப்பைச் சுற்றி அமைந்த (அடல் பிகாரி வாஜ்பாய்) பூங்காவிலேயே மாலை நேரங்களில் நடைப் பயிற்சிக்குச் செல்கிறேன். அங்கும் சில காட்சிகளை மொபைலில் படம் எடுப்பதுண்டு. ஒரு பதிவாக எப்போதேனும் பகிர்ந்திடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எந்த இடையூறும் இல்லாமல் நடக்க பூங்காக்கள்தான் ஒரே வழி. அங்கேயும் அதிகமான ஆட்கள் நடமாட்டம் இருந்தால் சற்று சிரமமாக இருக்கும். ஆனால் வாகனங்கள் குறித்த பயம் இல்லாமல் நிம்மதியாக நடக்கலாம். நீங்கள் ரசித்த மற்றும் படமெடுத்தக் காட்சிகளை நாங்களும் ரசிக்கப் பகிருங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன்.

      Delete
  4. நடைப்பயிற்சியில் பறவைகளின் ஒலி யை கேட்டுக் கொண்டே நடப்பது அருமையான அனுபவம்.
    பறவைகளில் அலைபேசியில் எடுத்து இருப்பது அருமை.

    நீங்கள் பறவைகளின் பேரை கண்டுபிடித்து போடுவது அருமை.
    இந்த முறை எனக்கு அட்லாண்டாவிலும், அரிசோனாவிலும் பறவைகளை பார்க்க முடியவில்லை, வெயில் காரணத்தால் வருகை நேரம் மாறி விடுகிறது.

    சிட்டுக்குருவியும், தேன் சிட்டும் மட்டும் தட்டுப்படுகிறது.
    பதிவு அருமை.
    நடை நல்லது கால்வலியால் அதிகம் நட்காமல் இருக்கிறேன், நடந்தால் நல்லது வலி குறையும் என்கிறார்கள். ஊருக்கு போன பின் நடையை தொடர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. விதம் விதமாகப் பறவைகளைப் படம்பிடித்துப் போடுவீர்களே, இப்போது காணவில்லையே என்று நினைத்தேன். வருகை நேரம் மாற்றம்தான் காரணமா?
      நடந்தால் கால் வலிக்கும் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் நடந்தால்தான் கால்வலி போகும் என்கிறார்கள் மருத்துவர்கள். :)

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.