தோட்டத்துப் பிரதாபம் - 31
வசந்தகாலம் பிறந்துவிட்டது. செடி கொடி மரங்களில் கணுவுக்கு கணு கெம்பு வண்ணத்தில் புதிய தளிர்கள் துளிர்த்துவருகின்றன. என்னுடைய செல்லத் தோட்டம் கூட வசந்தகாலத்தின் புதிய தோற்றம் காட்டி அசத்துகிறது.
|
1. மாந்துளிர் |
|
2. கொய்யாத் துளிர் |
|
3. ஜாதிமல்லிக் கொடியின் செம்பழுப்புத் துளிர் |
|
4. அவகாடோ துளிர் |
மிதமான குளிர், மிதமான வெயில், இதமான காற்று இவற்றோடு பறவைகளின் பாடல்களும் சேர்ந்துகொள்ள ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான். காற்றில் கலந்திருக்கும் மகரந்தத்தூள் ஒவ்வாமை தரும் என்றாலும் ஆசை யாரை விட்டது? அலர்ஜி மாத்திரை போட்டுக்கொண்டே வசந்தகால அழகை அப்படி ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
எப்படா, குளிர்காலம் முடியும் என்று நாட்காட்டியைப் பார்த்திருந்தாற்போல வசந்தத்தின் முதல் நாளன்றே மரம் முழுக்கப் பூத்து மஞ்சளாடை போர்த்தி நிற்கின்றன தங்க வாட்டில் மரங்கள்.
|
5. வீட்டின் பின்புறம் உள்ள தங்க வாட்டில் மரங்கள் |
|
6. குண்டு குண்டாய்த் தங்க வாட்டில் மலர்கள் |
வசந்தகாலத்தைப் பூக்களோடு முதல் ஆளாக வரவேற்கும் வாட்டில் மரங்களைக் கொண்டாடும்விதமாக ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நாள் தேசிய வாட்டில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
|
7. தங்க வாட்டில் மலர்கள் |
காணுமிடமெல்லாம் வாட்டில் மரங்கள் காலம் தவறாமல் குப்பென்று பூத்துக் குலுங்குகின்றன. ஆஸ்திரேலியாவின் தேசிய மலர்களான கோல்டன் வாட்டில் மரங்களும் கூட்டமன்றா வாட்டில் மரங்களும் என இரண்டு வகையான வாட்டில் மரங்களும் எங்கள் வீட்டருகில் உள்ளன.
|
8. கூட்டமன்றா வாட்டில் மரம் |
|
9. எலுமிச்சை நிற கூட்டமன்றா வாட்டில் பூக்கள் |
எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் இந்த வீட்டுக்குக் குடிவந்தபோது பின்பக்கத்துச் சிற்றோடையை ஒட்டி மூன்றே மூன்று வாட்டில் மரங்கள்தான் இருந்தன. இப்போது விதைகள் விழுந்து முளைத்து கிட்டத்தட்ட பதினைந்து மரங்களாவது இருக்கும்.
மூன்றுமாத காலமாக குளிரில் முடங்கியிருந்த பறவைகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டன. நிலத்திலும் நீரிலும் வானிலும் என எங்கு பார்த்தாலும் இணைப் பறவைகள். வழக்கமாகக் கேட்கும் பறவை ஒலிகளோடு சில மாறுபட்ட ஒலிகளும் அவ்வப்போது செவியில் விழும். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ஏதேனும் புதிய பறவைகள் தோட்டத்திலோ தோட்டத்தை ஒட்டியுள்ள வாட்டில், யூகலிப்டஸ், ஜகரண்டா ஆகிய மரங்களிலோ காட்சி தரும்.
|
10. பின்பக்க வாட்டில் மரத்தில் மஞ்சள் வால் கருங்காக்கட்டூ குடும்பம் |
சில நாட்களுக்கு முன்பும் அப்படிதான், 'அய்யே... அய்யே...' என்று வித்தியாசமான பறவைச் சத்தம் கேட்டு கொல்லைப்பக்கம் வந்து பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு தடவை தாவரவியல் பூங்காவில் பார்த்த மஞ்சள் வால் கருங்காக்கட்டூ பறவைகள் கண் முன்னால் என் வீட்டின் கொல்லைப்புறத்தில்! அம்மா அப்பா குழந்தை என்று குடும்பமாக வந்திருந்தன. எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அவற்றின் முதல் வருகை இது. மேகமூட்டமாக இருந்ததால் தெளிவாகப் படமெடுக்க இயலவில்லை.
|
11. காய்க்கும் சமயத்தில் கூட்டமாக வரும் காலா காக்கட்டூகள் |
வாட்டில் மரத்தில் காய்கள் காய்த்திருக்கும் சமயம் கந்தகக் கொண்டை காக்கட்டூ, குட்டிக் கொரல்லா, நீளலகு கொரல்லா, காலா காக்கட்டூ என நான்கு வித காக்கட்டூ பறவைகள் கூட்டம் கூட்டமாக வரும். எந்நேரமும் ஒரே ஆரவாரமாக இருக்கும். ஆசை தீர வாட்டில் விதைப் பருப்புகளைக் கொறித்துத் தின்னும். காய்க்கும் காலம் முடிந்த பிறகு அவற்றின் வருகை குறைந்துவிடும். ஆனால் மொட்டு வைத்திருக்கும்போதே ஐந்தாவது காக்கட்டூவாக மஞ்சள்வால் கருங்காக்கட்டூ (Yellow-tailed black cockatoo) குடும்பத்தின் வருகை பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. 'க்ரா...க்ரா.. என்று அடித்தொண்டையில் தொடர்ச்சியாக கத்திக் கொண்டிருந்த குஞ்சுக்கு அம்மாவும் அப்பாவும் கக்கி இரையூட்டும் காட்சியும் காணக் கிடைத்தது.
|
12. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ (கண்வளையம் ரோஸ் நிறத்தில் இருப்பதால் பெண்)
|
|
13. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ (கண்வளையம் கருப்பாக இருப்பதால் ஆண்) |
|
14. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ தாயும் குஞ்சும் |
போன வாரம் ஒருநாள் காலை ஆறரை மணி அளவில் காச் மூச்சென்று நாய்சி மைனர் பறவைகளின் சத்தம் கேட்டது. எங்கள் ஏரியா தாதாக்களான அவை தங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் வேறெந்தப் பறவைகளையும் அனுமதிப்பதில்லை. கத்திக் கூப்பாடு போட்டு விரட்டிவிடும்.
|
15. எங்கள் ஏரியா தாதாக்களான நாய்சி மைனர்கள் |
பறவைகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! கழுகு போன்ற ஒரு பறவை கொல்லைப்புற ஜகரண்டா மரத்தில் அமர்ந்திருந்தது. கதவைத் திறக்கவெல்லாம் நேரம் இல்லை. அதற்குள் பறந்துவிட்டால்? சட்டென்று கேமராவை எடுத்து ஜன்னல் வழியாகவே படம் பிடித்தேன்.
|
16. ஜகரண்டா மரத்தில் பசிபிக் குயிற்பாறு (1) |
காலை வெயில் நேராக முகத்தில் அடிக்க, பறவையைக் கிளைகள் மறைத்திருக்க, ஒரு நல்ல படம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கிடைத்தவரை லாபம் என்று நான்கைந்து எடுத்ததில் இரண்டு மட்டும் தேறியது. அதற்குள் இந்த நாய்சி மைனர் தாதாக்கள் கூச்சல் போட்டு அதை அங்கிருந்து விரட்டி விட்டன.
|
17. பசிபிக் குயிற்பாறு (2) |
இதுவரை பார்த்திராத அப்பறவையின் படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது, அதன் பெயர் Pacific Baza என்று அறிந்துகொண்டேன். பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப் பெயர் பசிபிக் குயிற்பாறு. கொன்றுண்ணியான இப்பறவைக்கும் குயிலுக்கும் என்ன தொடர்பு? குயில் போன்று இதன் உடலிலும் பொரிகளும் வரிகளும் காணப்படுவதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது.
இன்னொரு நாள் வானத்தில் ஒரு விநோதக் காட்சி. அந்தர
த்தில் ஒரு பறவை ஒரே இடத்தில் சிறகடித்துக்கொண்டு வித்தியாசமான முறையில் பறந்து கொண்டிருந்தது. கழுகு போன்றுதான் தெரிந்தது. ஆனால் கழுகு, பருந்து போன்ற பறவைகள் சிறகை அசைக்காமல் விரித்த நிலையிலேயே வானத்தில் வட்டமிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதென்ன? கண்ணுக்குத் தெரியாத நூலில் கட்டித் தொங்கவிட்டதைப் போன்று அங்கே இங்கே நகராமல் சிறகுகளை மட்டும் மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருக்கிறது. பொம்மையா? பறவைக் காற்றாடியா? புதிய வகை ட்ரோனா? குழப்பத்துடன் முடிந்தவரை ஜூம் செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று இறக்கை விரித்து என் தலைக்கு மேலே பறந்துபோனபோது குழப்பம் தீர்ந்தது. பறவைதான். |
18. அந்தரத்தில் சிறகடிக்கும் கருந்தோள் பருந்து |
|
19. கருந்தோள் பருந்து |
Black-shouldered kite எனப்படுகிற ஆஸ்திரேலியக் கருந்தோள் பருந்துதான் அது. கொன்றுண்ணிப் பறவையான அது வெகு தொலைவில் நிலத்தில் இருக்கும் இரையை நோட்டமிடும் உத்திகளுள் ஒன்றுதான் அந்தரத்தில் ஒரே இடத்தில் பறப்பது (hovering) என அறிந்து வியந்தேன்.
சில மாதங்களுக்கு முன்பு பெண் மாங்குயில் (Olive-backed Oriole) ஒன்று ஜகரண்டா மரத்தில் சற்றுநேரம் அமர்ந்து பறந்தது. இவ்வளவு தூரம் என்னைத் தேடிவந்த அப்பறவையை விட்டுவிடுவேனா என்ன? அதையும் படம்பிடித்தாயிற்று.
|
20. ஆலிவ் முதுகு மாங்குயில்- பெண் |
தோட்டத்துப் பறவைகள் வரிசையில் புதிதாய்ப் பறவைகள் இணைவது ஒரு பக்கம் இருக்க, இரண்டு மூன்று நாட்களாக வீட்டு வாசலில் பசிபிக் கருப்பு வாத்து (Pacific Black Ducks) இணையைப் பார்க்கிறேன்.
|
21. நடுத்தெருவில் நிற்கும் வாத்து |
|
22. நடைபாதையில் நடந்துசெல்லும் வாத்து |
வாகன நடமாட்டம் உள்ள தெருவில் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருக்கின்றன. குடியிருப்புப் பகுதியில் அவற்றுக்கு என்ன வேலை என்றுதான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அடுத்ததாக, டேவிட் அட்டன்பரோவின் நிகழ்ச்சியில் சிலாகிக்கப்பட்ட புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அடிக்கடி கொல்லைப்புற வாட்டில் மரத்தில் அவற்றைப் பார்க்கிறேன். தேன்சிட்டை விடவும் சிறிய அச்சிட்டுகளை அவ்வளவு அருகில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
|
23. புல்லுருவிச் சிட்டு - ஆண் |
|
24. புல்லுருவிச் சிட்டு - பெண் |
அதென்ன புல்லுருவிச் சிட்டு? இவற்றைப் பற்றி அறிந்தபோது வியப்பின் உச்சத்துக்கே சென்றேன். பதிவு நீளமாகிவிடும் என்பதால் அவற்றைப் பற்றியும் நான் நடைப்பயிற்சியின்போது பார்க்கும் வேறு சில பறவைகளைப் பற்றியும் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.
|
25. என்னைத் தேடிவரும் பறவைகள் |
பறவை பார்க்க வெளியில் எங்கும் போகவேண்டாம், அதிகம் மெனக்கெட வேண்டாம், தோட்டத்தில் தினமும் சற்றுநேரம் செலவழித்தாலே போதும், ஏகப்பட்டப் பறவைகளைப் பார்த்து ரசிக்கமுடியும், அவற்றின் பாடலைக் காது குளிரக் கேட்கமுடியும், அவற்றின் வாழ்க்கைமுறையைக் கூர்நோக்கி அறிய முடியும் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை!
(பிரதாபங்கள் தொடரும்)
படங்களுடன் பதிவு எங்களுக்கும் உற்சாகமூட்டிப்போகிறது..தொடர வாழ்த்துகள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
Deleteஇயற்கையின் படைப்பில் எத்தனை எத்தனை அழகும் அதிசயமும். பறவைகள் குறித்த படங்களும் தகவல்களும் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteபறவைகளின் வருகையும் , பூத்து குலுங்கும் மரங்களும் பார்க்க அழகு.
ReplyDeleteதோட்டத்தில் பறவைகளை பார்த்து கொண்டு அதன் ஒலிகளை கேட்டுக் கொண்டு இருந்தாலே போதும் மனம் அமைதி அடையும்.
உண்மைதான் மேம். தோட்டமும் பறவைகளும்தான் என்னுடைய stress busters. மனம் எவ்வளவு பாரமாக இருந்தாலும் கொஞ்சநேரம் தோட்டத்தில் இருந்தால் எல்லா பாரமும் குறைந்து மீண்டும் உற்சாகமாகிவிடுவேன்.
Delete