தோட்டத்துப் பிரதாபம் 30
|
1. தோட்டத்தின் முதல் மல்லிகைப் பூக்கள் |
கையளவு கையளவு மனசு - அதில்
கடலளவு கடலளவு கனவு
நித்தம் போராட்டம் ஆடுகின்ற மனசோடு ஒப்பிட்டால்
அம்மம்மா பூமி ரொம்பச் சிறுசு!
- கவிஞர் வைரமுத்து.
கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான்
- கவிஞர் யுகபாரதி
கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்
- ஔவை தனிப்பாடல்
மெட்ரிக் அளவைகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு நாம் பயன்படுத்திய அளவைகள் வேறு. மிகக் குறைந்த அளவிலான நீட்டல் அளவைகளையும் தூரத்தையும் கொள்ளளவையும் நேரத்தையும் நம்முடைய உடலுறுப்புகளைக் கொண்டே அப்போது மதிப்பிட்டிருக்கிறோம். உடலுறுப்புகள் ஆளுக்காள் மாறினாலும் கொஞ்சம் முன் பின் இருந்தாலும் பொதுவான அளவைகளாக அவை ஏற்கப்பட்டிருந்தன.
சிலருடைய சமையல் மிக அருமையாக இருக்கும். அளவு கேட்டால் எல்லாம் கண்ணளவு கையளவுதான் என்பார்கள். ஏட்டறிவை விடவும் அனுபவ அறிவே அவர்களை வழிநடத்துவதால் எடை பார்க்கும் கருவியோ, அளத்தல் கருவியோ தேவைப்படாமல் எளிதாய் அளவைக் கணிக்க அவர்களால் இயலும்.
உடலுறுப்பு சார்ந்த அளவைகளைக் கொண்டு அந்தக் காலத்தில் பல பழமொழிகள் உருவாயின. அவற்றுள் சில.
- கற்றது கையளவு கல்லாதது கடலளவு.
- ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
- உள்ளங்கை நெல்லிக்கனி போல.
- நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரி கொண்டு வெட்டலாமா?
- மெய்க்கும் பொய்க்கும் விரற்கடை தூரம்.
(விரற்கடை என்பது ஒரு விரலின் அகலம். நான்கு விரல்களையும் சேர்த்து வைத்தால் வரும் அளவு நான்கு விரற்கடை. பாம்பு கயிறு போன்றவற்றின் பருமனைக் குறிக்க விரல்களை அளவீடாகச் சொல்லும் வழக்கம் உண்டு.)
- எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத்தான்.
- எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.
(ஐந்து விரல்களையும் அகல விரித்து கட்டைவிரலின் நுனியிலிருந்து சுண்டுவிரலின் நுனி வரையிலான அளவு சாண்.)
- சாண் ஏறினால் முழம் சறுக்கல்.
- வெறுங்கை முழம் போடுமா?
- தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன? முழம் என்ன?
(நடுவிரல் நுனியிலிருந்து முழங்கை வரையிலான அளவு முழம். தொடுத்தப் பூக்களை பொதுவாக முழம் கணக்கில் விற்பார்கள். ஆனால் திருச்சியில் கண்ணிகளை எண்ணி நூறு இருநூறு என்ற கணக்கில் கொடுப்பார்கள். :) )
- இட்ட அடி சிவக்க எடுத்த அடி கொப்பளிக்க...
நடக்கும்போது ஒரு காலடிக்கும் மறு காலடிக்கும் இடைப்பட்ட தூரம் அடி. பத்தடி தூரத்தில் ஒரு பாம்பைப் பார்த்தேன் என்பார் தாத்தா.
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்?
என இப்பாடலில் கூந்தலின் நீளத்தைக் குறிப்பிட அடிக்கணக்கைப் பயன்படுத்துகிறார் கவிஞர் கண்ணதாசன்.
மூன்று அடி கொண்டது ஒரு கஜம். முன்பெல்லாம் புடவைகளை எட்டு கஜம் ஒன்பது கஜம் என்று கஜக் கணக்கில்தான் சொல்வார்கள்.
இப்போதும் சில திரைப்பாடல்களில் அஞ்சு கஜம் காஞ்சிப் பட்டு, எட்டு கஜம் சேலை கட்டு என்று வரிகள் ஆங்காங்கே காதில் விழுகின்றன. :)
ஓராள் உயரம், முழங்கால் அளவு, கணுக்கால் அளவு, இடுப்பளவு, மார்பளவு, கழுத்தளவு என ஒருவரின் சராசரி உயரத்தை உத்தேசமாக வைத்து அளவைகளைக் குறிப்பிடும் அனுமான முறையும் இருந்திருக்கிறது.
தொலைவைக் குறிப்பிடும்போது கூப்பிடுதூரம் என்பார்கள். ஒருவர் அழைத்தால் அந்த அழைப்பொலி கேட்கும் தூரம் என்பது அழைப்பவரின் குரலையும் அக்கம்பக்கத்து ஒலி இடையூறுகளையும் பொறுத்தது. ஆளுக்காள் மாறக்கூடியது என்றாலும் பொதுவான அளவீடாகவே கணிக்கப்பட்டது.
கூப்பிடு தூரம், கல்லெறி தூரம் போன்று கண் காணா தூரம் என்ற அளவீடும் அப்போது புழக்கத்தில் இருந்திருக்கிறது.
கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக் காயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணின் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
கொம்புள்ள ஆடு மாடுகளிடமிருந்து ஐந்து முழ தூரமும் குதிரையிடமிருந்து பத்து முழ தூரமும் யானையிடமிருந்து ஆயிரம் முழ தூரமும் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதையே தொழிலாகக் கொண்ட தீயவர்களிடமிருந்து அவர்களுடைய கண் காணா தூரத்திற்குச் சென்று இருப்பதே நன்மை பயக்கும் என்கிறது இந்த நீதிவெண்பா.
கொள்ளளவு
குறைந்த அளவு கொள்ளளவிலும் உடற்பாகங்கள் இடம்பெறுவதுண்டு. சில இப்போதும் புழக்கத்தில் உள்ளன.
- சிட்டிகை (கட்டைவிரல் நுனிக்கும் ஆட்காட்டி விரல் நுனிக்கும் இடைப்பட்ட பகுதியில் அள்ளப்படும் அளவு)
- கைப்பிடி (விரல்களை மூடும்போது கைப்பிடிக்குள் அடங்கும் அளவு. புடிச்ச புடி என்பது பேச்சுவழக்கு.)
- ஒரு கை அளவு (விரல்களை மடக்கி கையைக் கிண்ணம் போல ஆக்கும்போது அதற்குள் அடங்கும் அளவு)
- மிடறு (ஒரு முறை பருகும் திரவத்தின் அளவு)
- கவளம் (ஒரு முறை விழுங்கும் உணவின் அளவு)
நேரம்
கண் இமைக்கும் நேரம், சொடக்குப் போடும் நேரம் என்ற உடற்பாகங்கள் சார்ந்த நேர அளவைகளையும் கேட்டிருப்போம்.
*****
எதற்கு இப்போது இதையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். தோட்டத்துக் காய்களையும் பூக்களையும் பழங்களையும் படம் பிடிக்கும்போது அவற்றின் அளவைக் கவனத்தில் கொள்ள நான் பெரும்பாலும் என்னுடைய இடக் கையைத்தான் ஒப்பீடாகப் பயன்படுத்துகிறேன். ஏன் இடக்கை? வலக்கையில்தான் கேமராவோ மொபைலோ இருக்கிறதே! எவ்வளவு பெரிசு என்ற பிரமிப்பைக் காட்டவும் எவ்வளவு சின்னது என்ற வியப்பைக் காட்டவும் உடனடி ஒப்பீட்டளவாக கையையும் விரல்களையும் விட்டால் வேறென்ன சரியாக இருக்கும்?
பழைய ஃபோல்டர்களைப் பார்த்தபோது இந்தப் படங்கள் யாவும் வெகு சுவாரசியமாக இருந்தன. ஏன் இவற்றைத் தொகுத்து ஒரு பதிவாகப் போடக்கூடாது என்று தோன்றியது. அதனால் தோட்டத்துப் பிரதாபம் வரிசையில் இன்று இவை. 😊
|
2. கட்டைவிரல் நகத்தை விடவும் சிறிய சவ்சவ் பெண் பூ |
|
3. கட்டைவிரல் நகம் அளவே உள்ள பூச்சி |
|
4. பாம்புச் சட்டைக்கும் அளவெடுத்தாச்சி - இரண்டு விரற்கடை அகலம்தான் |
|
5. விரல் நீளமுள்ள பெரிய அந்துப்பூச்சி |
|
6. புல்லின் பூக்கள் - எள்ளை விடவும் சிறியவை |
|
7. சுண்டைக்காய் அளவிலான குட்டித் தக்காளிகள் |
|
8. நீல அனிச்சம் பூ - கட்டைவிரல் நகத்தில் கால்வாசிதான் இருக்கும் |
|
9. அசுவுனிப் பூச்சியின் உடலில் முட்டையிடும் அசுவுனிக்குளவி |
|
10. முழுநெல்லிக்காய் அளவிலான குட்டித் தக்காளிகள் |
|
11. முழ நீளமுள்ள பாகற்காய் |
|
12. தோட்டத்தில் கிடைத்த, பறவை முட்டை ஓடு |
|
13. உள்ளங்கையை விடவும் அகலமான கற்பூரவல்லி இலைகள் |
|
14. சுட்டுவிரல் மேல் வந்தமர்ந்த குட்டிப் பொறிவண்டு |
|
15. மூக்குத்தி அளவிலான புளியாரைப் பூ |
|
16. நகக்கண் அளவே உள்ள பொறிவண்டு |
|
17. கிடாரங்காய் அளவில் எலுமிச்சம்பழம் |
|
18. கையளவுக் கிண்ணத்தில் குட்டித் தக்காளிகள் |
|
19. சல்லடையாகிப் போன கொய்யா இலைச் சருகு |
|
20. இதய வடிவில் பெரிய குண்டு கத்தரிக்காய் |
|
21. லேடீஸ் ஃபிங்கர்ஸை விடவும் பெரிய வெண்டைக்காய்கள் |
|
22. மூக்குத்தி அளவிலான குட்டி குட்டி லாவண்டர் பூக்கள் |
|
23. நகத்தளவே நீளமுள்ள ஆஸ்திரேலியாவின் அழகுக் கரப்பான்பூச்சி |
|
24. மிகச் சன்னமான பாசித் தாவரங்கள் |
|
25. கைக்கொள்ளாத அளவில் கனத்தக் கத்தரிக்காய் |
|
26. யானைக் காதை விடவும் பெரிய சேம்பிலை |
|
27. ஆரஞ்சு வண்ண அனிச்சம் பூ |
கீழே இருப்பவை கொசுறு
ஒரு பூங்காவில் எடுக்கப்பட்டவை.
|
28. பூத்துக் குலுங்கும் விஸ்டரீயா கொடி |
|
29. உதிர்ந்து கிடந்த ஒரு விஸ்டரியா பூவைக் கையிலேந்தியபோது |
|
30. வண்ணத்துப்பூச்சியொன்று கையில் அமர்ந்து இளைப்பாறியபோது |
*****
(தோட்டத்துப் பிரதாபங்கள் தொடரும்)
கையளவு - தகவல்களையும் படங்களையும் ரசித்தேன். தொடரட்டும் தோட்ட உலா.
ReplyDeleteஉடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteபடங்களும் தகவல்களும் ரொம்பவே ரசித்தேன்.
ReplyDeleteநீல நிற ஆரஞ்சு நிற அனிச்சம் மலர், புளியாரைப் பூ , விஸ்டரியா பூ இவை எல்லாம் ஏதோ காதில் அணியும் கம்மல்கள் போன்று அழகு! பூக்களைப் பார்த்துதானே மனிதர்கள் வடிவமைக்கிறார்கள்!!!
அந்தக் கொத்து லாவண்டர் பூக்கள் தொங்கட்டான் போலவும், கெத்தாய் கொத்து கொத்தாய் தொங்கும் விஸ்டரியாவும் மனதைக் கவர்கின்றன. கூடவே வண்ணத்துப் பூச்சி, வண்டு பாம்புச் சட்டை!!! எல்லாமே.
கீதா
ஆஹா... வர்ணனையிலேயே உங்கள் ரசனை தெரிகிறது. மிக்க நன்றி கீதா.
Deleteஎன் கருத்து வந்ததோ?
ReplyDeleteகீதா
இப்போதுதான் பப்ளிஷ் பண்ணினேன். நன்றி தோழி.
Deleteஅனைத்து படங்களும் அருமை.
ReplyDeleteகையளவு என் மகன் வீட்டிலும் பூக்கிறது மல்லிகை.
வெயில் ஆரம்பித்த போது நிறைய பூத்தது.
அனிச்சமலர்கள் அழகு.
சிறு வண்ணத்துப்பூச்சி, சிறு வண்டை நானும் படம் எடுத்து இருக்கிறேன்.
நம் தோட்டத்தில் காய்த்த காய்கறிகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பகிர்ந்த பாடல்களும் , செய்திகளும் அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம். மகன் வீட்டிலும் மல்லிகை பூப்பது மகிழ்ச்சி. இங்கும் கோடைக்காலத்தில்தான் நிறைய பூக்கிறது.
Delete