30 November 2013

விரக்தியின் விளிம்பில்...




விரக்தியின் விளிம்பு நோக்கி விரையுந்தோறும்
வீசப்படுகிறது ஒரு பாசக்கயிறு.
விடுக்கப்படுகிறது ஒரு விநோத விளிப்பு!
மதியாமல் முன்னேகும் மனக்கயிற்றைக்
இழுத்துப் பிடித்துத் திணறடிக்கிறது ஒரு இறைஞ்சல்.

முரண்டும் திமிறியும் ஆக்ரோஷித்தும் ஆங்கரித்தும்
இளங்கன்று போலத்துள்ளியும் துவண்டும் எனப் 
பலவாறாய் முயன்றும்
பலனற்றுச் சோர்ந்துவிழுமொரு பொழுதில்
கைவிரித்து தன் தளைகளைக் கழற்றிவிட்டு
கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டே
கண்மறைந்து போகிறது 
வெறுமையின் கடைசித்தடமும்.

************************************** 


26 November 2013

என்றாவது ஒருநாள்…(ஆஸ்திரேலியக் காடுறை கதை 2)





நிலவொளி ஊடுருவிக்கொண்டிருக்கும் வாட்டில் மரத்தின் கீழே தங்கள் பழங்கதைகளைப் பேசியபடி இரவைக் கழித்துக்கொண்டிருந்தனர் இரு வழிப்போக்கர்கள். மிச்செலின் நண்பன் சற்றுமுன்தான் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றி சொல்லி முடித்திருந்தான். இப்போது மிச்செலின் முறைமிச்செல் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் புகைபிடித்தபடி சற்றுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். பின்பு சொல்ல ஆரம்பித்தான்.

ஒரு சின்னப்பெண் என்னை ஈர்த்திருந்தாள். அவள் என் தங்கையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவாள். உலகிலேயே மிக அழகான யுவதி அவளாகத்தான் இருந்திருப்பாளென்று நான் நினைக்கிறேன். அவளுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். அவள் என் தோள் உயரம் கூட வரமாட்டாள். அவளுடைய நீல நிறக் கண்களைப் போல் நீ வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. பளபளப்பான பொன்னிறக் கூந்தல் அவள் முழங்காலைத் தொடும். அதை உன்னுடைய இருகைகளுக்குள் அடக்கிவிட முடியாதுரோஜா, அல்லி மலர்களைப் போல் மென்மையான தேகம் அவளுக்கு.

அப்படிப்பட்டவள், கரடுமுரடான தோற்றம் கொண்ட, அவலட்சணமான, படிக்காத, நாகரிகமற்ற என்னை ஏறெடுத்தும் பார்ப்பாளென்று என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதனால் எப்போதும் அவள் வழியிலிருந்து விலகியும், அவளைப் பார்த்தால் சற்று விறைப்புடனும் நடந்துகொண்டேன்நான் அவள் பின்னால் அலைவதாக என்னைப் பற்றி மற்றவர்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் எனக்குத் தெரியும் அது நகைப்புக்கிடமான செய்தியாகிவிடும் என்பது. மற்றவர்களை விடவும் அவளே என்னைப் பார்த்து அதிகமாய் நகைக்கவும் கூடும்.
அவள் தானாகவே என்னிடம் வந்து பேசுவாள். என்னருகில் பலகையில் அமர்வாள். ஆனால் அவையெல்லாம் அவளுடைய இயல்பான சுபாவம் என்று நினைத்திருந்தேன். மேலும் ஒரு அவலட்சணமான அறிவிலியான என்மீது கொண்ட பரிதாபமும் காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்தேன்

நான் அந்தப் பெண்ணால் ஈர்க்கப்பட்டிருந்தேன், விளையாட்டல்ல, உண்மைதான். கற்பனையில் என் மனைவியாய் அவளை நினைத்து பெருமிதமும் அடைந்திருந்தேன். ஆனால் அதை அவளறியாமல் பார்த்துக்கொண்டேன். ஏனெனில் எனக்கு உறுதியாகத் தெரியும் அவள் அதைக் கேட்டால் சிரிப்பாள் என்று.

நிலைமை இப்படியே போய்க்கொண்டிருக்கும்போதுதான் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு எல்லைப்பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் கட்டாயம் போயாகவேண்டிய சூழலிருந்தேன். ஏனெனில் என்னிடம் அப்போது பணமே இல்லை. மேலும் நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். அவள் வளையவரும் இடத்திலேயே நான் இருப்பது என்னை மேலும் சிரமப்படுத்தியது

நான் புறப்பட்ட இரவன்று அனைவரும் என்னை வழியனுப்ப புகைவண்டி நிலையத்துக்கு வந்திருந்தனர். அந்தப்பெண்ணும் வந்திருந்தாள். புகைவண்டி கிளம்பத் தயாராக இருந்தது. அவள் நிலையத்தின் கோடியில் இருளில் தனியாக நின்றிருந்தாள். என் தங்கை என்னை முழங்கையால் இடித்தும் கண்சாடை காட்டியும் எனக்கு எதையோ புரியவைக்க முயன்றாள். ஆனால் என்னால் அவள் குறிப்பைப் புரிந்துகொள்ள இயலவில்லை. முடிவில் அவள் சொன்னாள்,

போய் அவளிடம் பேசு, மரமண்டை, போய் ஏடியிடம் விடைபெற்றுக்கொள்

 அவள் சொன்னதால் பிறர் அறியாமல் நான் ஏடி நின்றிருந்த இடத்துக்குப் போனேன்.

 “சரி, நான் போய்வருகிறேன் மிஸ். ஏடி பிரவுன்கை கொடுத்தபடி சொன்னேன். “நான் மறுபடியும் உன்னைப் பார்ப்பேனா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் எப்போது திரும்பிவருவேன் என்பது கடவுளுக்குதான் தெரியும். என்னை வழியனுப்ப வந்ததற்கு நன்றி.”

அவள் வெளிச்சத்தில் முகத்தைத் திருப்பியபோதுதான் கவனித்தேன், அவள் அழுதுகொண்டிருப்பதை. அவள் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று அவள்ஜாக்..ஜாக்..’ என்று சொல்லிக்கொண்டே என் கைகளை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டாள்.”

மிச்செலின் குரல் அவனுடையதைப் போலவே இல்லை. மிச்செல் நிச்சலனத்துடன் நெருப்பின்மீது நிலைக்குத்திய கண்களுடன் இருந்தான்.

 “நீ அவளை அணைத்து முத்தமிட்டிருப்பாய் என்று நான் நினைக்கிறேன்என்றான் நண்பன் அவனைக் கவனித்தபடி.

 “நானும் அப்படி சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல விரும்பாத சில விஷயங்களும் இருக்கின்றனவேம்.. இப்போது கெட்டிலை சூடுபடுத்தி கொஞ்சம் தேநீர் அருந்தலாம் என்று நினைக்கிறேன்.”

 “என்றாவது ஒருநாள் நீ போய் அவளைத் திருமணம் செய்துகொள்வாயல்லவா?”

 “ஹூம்என்றாவது ஒருநாள்! அந்தநாள் என்று? நாம் எல்லோருமே சொல்லிக்கொண்டிருக்கிறோம்என்றாவது ஒருநாள்’. நான் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது என்னைப் பார். ஐந்து வருடங்கள் அங்குமிங்கும் அலையாய் அலைந்து கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக இங்கு நிலையாக இருக்கிறேன். இதை விட்டு வெளியேறும் அறிகுறி தெரியவில்லை. வேறொன்றுக்குப் போனாலும் இதுவரை உழைத்த உழைப்பினால் என்ன லாபம்

கையில் ஒரு பைசாவும் இல்லாமல் பையில் ஒரு கந்தைத்துணியும் இல்லாமல் நான் வீட்டுக்குப் போய் திருமணம் செய்வதென்பதை யோசித்துப் பார். பணப்பட்டுவாடா முடியாமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை. பணப்பட்டுவாடா செய்யும் நாளும் கடந்துவிட்டது. இந்தக் காலணிகளைப் பார். நகரத்தில் நாம் போய் நின்றால் நம்மை பரதேசி அல்லது பிச்சைக்காரர்கள் என்பார்கள்.

உண்மையில் நமக்கும் அவர்களுக்கும்தான் பெரிதாய் என்ன வித்தியாசம்? நான் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். எனக்கே தெரிகிறது. அதற்கான பலனைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லைஒருவேளை உணவுக்காக அங்கும் இங்கும்  ஓடியோடிக்கொண்டிருக்கிறோம். வயதாகும்வரைநம்மைப் பற்றிய சிரத்தைக்குறையும்வரைஉடல் அழுக்கடையும்வரைஇந்த ஓட்டம் தொடரும். இன்னும் வயதாகும்இன்னும் சிரத்தைக் குறையும்இன்னும் அழுக்கடைவோம். இப்படியே இந்த மண்ணுக்கும் புழுதிக்கும் வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவோம்

இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஒரு நாயைப் போல போகுமிடமெல்லாம் நம்மோடு வருகிறது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட இந்த முதுகுப்பை. அது இல்லாவிடில் சுமையற்றத் தோள்களும் எதையோ இழந்தது போலான தவிப்பும் நம்மை இயல்பாயிருக்க விடுவதில்லை

இந்த வேலை முடிந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்குமா என்கிற கவலையையும் விட்டுவிட்டோம். ஒரு நாடோடியைப் போல சுற்றித்திரிகிறோம். ஒரு மனிதனின் இதயமிருக்கும் இடத்தில் ஒரு எருதின் ஆன்மா இருக்கும்வரை வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும்.

நமக்கென்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? நேற்று இந்தப்பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? எவர் பார்வையிலும் படாமல் லிக்னம் புதர்ச்செடிகளின் நடுவே பிணமாய் அழுகி நாறிக் கிடந்திருப்போம். ஒருவேளை யாராவது நம்மைப் பார்க்கநேர்ந்தாலும் அவர்கள் தங்கள் பயணத்தைக் கைவிட்டுவிட்டு உலகுக்கு நம்மைப் பற்றித் தகவல் தெரிவிக்க விழையப்போவதில்லை. ச்சே.. என்ன உலகம் இது!”

சங்கடப்படுத்தும் அமைதியின் நடுவே அவன் புகைபிடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டான். தன் புகைக்குழாயிலிருந்து சாம்பலைத் தட்டியவாறே ஆயாசத்துடன் சொன்னான்.

ஹூம்இன்று நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். இப்போது படுக்கைக்குப் போவது நல்லதென்று நினைக்கிறேன். நாளை இந்த வறண்ட நிலத்தில் நீண்டதொரு பயணம் நமக்கிருக்கிறது.” 

அவர்கள் முதுகுச்சுமையாய் சுருட்டிவைக்கப்பட்டிருந்த படுக்கையை மண்ணில் விரித்துப் படுத்தனர். போர்வையால் போர்த்திக்கொண்டனர். நிலவொளியும் காற்றும் அவனை தூங்கவிடாமல் விழித்திருக்கச் செய்வதை விரும்பாத மிச்செல், ஒரு காலிகோ துணியை எடுத்து முகத்தை மூடிக்கொண்டான்.

*********************************************************************************
(மூலம்: ஹென்றி லாசன் எழுதிய ‘Some Day’ என்னும் ஆங்கில ஆஸ்திரேலியக் காடுறை கதை)


 படம்: நன்றி இணையம்